வெள்ளி, 16 டிசம்பர், 2011


தீர்ப்பு

ஒரு
விடுமுறை நாளின்
மழை ஓய்ந்த ….
மாலைப் பொழுது

நகர வாழ்வின்
நரக ஓட்டங்களற்ற ஓய்வு

சிரிப்பும் களிப்புமாய்
சிற்றுண்டி இடையே சிறு சர்ச்சை
“யார் முதலில் சாப்பிட்டது?”

நாட்டாமை செய்ய
நயமாய் முன் வந்தது
நான்கு வயது பெண் குழந்தை.

அப்பாவின் காதருகே
தளிர்க்கரம் குவித்து
செவ்விதழ் விரித்து
திருவாய் மலர்ந்தது
”அப்பா நீ தான் ஃபர்ஸ்ட்”

அதேபோல் அம்மாவிடமும்
“அம்மா நீ தான் ஃபர்ஸ்ட்”

அண்ணாவிடமும் கூட …
“அண்ணா நீ தான் ஃபர்ஸ்ட்”

இறுதியாய்…
தன் காதருகே
தளிர்க்கரம் குவித்து
தீர்ப்பைத் திருத்திச் சொன்னது
“நான் தான் ஃபர்ஸ்ட்”
         
               எஸ்.பிரேமலதா

புதன், 14 டிசம்பர், 2011

சேமிப்புக்குப் பரிசு சயனைடு குப்பியா?


        
தேர்பவனியின் போது தேர்ச் சக்கரங்களுக்கு அருகில், சிலர் கட்டைகளுடன் சேர்ந்தே வருவதைக் கவனிக்க முடியும். தேரின் வேகத்தைக் கட்டுப் படுத்துவதற்காகத் தான் அந்த ஏற்பாடு. இல்லையென்றால் தேர் கட்டுப் பாட்டை இழந்து, வீதியில் இருப்போருக்கும், மேலே இருப்பவர்களுக்கும் பெரும் சேதாரத்தை விளைவிக்கும். அது போலத் தான் மக்களை முழுமையாக நேசிக்காத ஆட்சியாளர்கள், தங்களை சேமநல அரசு என்று சொல்லிக் கொண்டாலும், அந்த அரசைக் கட்டுப் படுத்தும் ஏற்பாடுகள் மிக அவசியம். தற்போதைய மத்திய அரசை ஆளும் ஐ.மு.கூ 2 அரசினைக் கட்டுப் படுத்தும் ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை. அதன் விளைவு தான் இரக்கமற்ற முறையில், பெட்ரோல் மற்றும் உணவுப் பொருள் விலை உயர்வுகள், தொடர்ந்து அரங்கேறுகிறது. வருங்கால வைப்பு நிதியைப் பராமரிக்கும் பொறுப்பைத் தனியாரிடம் ஒப்படைக்கவும், அந்நிய மூலதனத்தை இத்துறையில் அனுமதிக்கும் மசோதாவை முன்மொழியப் போவதாக தற்போதைய அறிவிப்பும் இருக்கிறது
.
முன்னாள் நிதியமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, ப. சிதம்பரம் ஆகியோர் முயற்சித்து செய்ய முடியாது போன விஷயத்தை, பிரனாப் முகர்ஜி செய்து முடிக்க எத்தனிக்கிறார். இந்தியாவைப் பொருத்த வரை 1952 ல் இருந்து வருங்கால வைப்பு நிதி திட்டம் அமலாகி வருகிறது. உலகின் பல நாடுகளில் நூற்றாண்டு காலமாக அமலாகி வந்தாலும், இந்தியாவில் 60 ஆண்டுகால பாரம்பரியம் தான் இந்த துறைக்கு இருக்கிறது. வளர்ந்த பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவான சதத்திலான மக்கள் பிரிவினரே ஓய்வூதியம் பெறும் வாய்ப்புக் கொண்டோராக உள்ளனர்.

சுமார் 5 கோடி தொழிலாளர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின், சேமிப்புத் தொகையாக வருங்கால வைப்பு நிதி இருக்கிறது. பல கோடிக்கணக்கில் உள்ள அணிதிரட்டப் படாத தொழிலாளருக்கு சொந்தமான நிதியும் வைப்பு நிதி கணக்கில் உள்ளது. இதன் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் தொகை தொழிலாளர்களின் பணமாக பாதுகாக்கப் பட்டு வருகிறது. இத் தொகை வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால், மிகப்பெரியதாகும். தாரளமயமாக்கல், தனியார் மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கைகளின் தாக்கத்தினால், மேற்படி தொழிலாளர் மற்றும் நடுத்தர மக்களின் பணத்தின் மீது அந்நிய முதலீட்டாளர்கள் கண் வைத்து ஆக்கிரமிக்க காத்திருக்கின்றனர். இதை உலக வங்கி மற்றும் பல கமிட்டிகளின் செயல் பாடுகள், அறிவிப்புகள் மூலம் அறியமுடியும்.

பொது மக்களின் சராசரி ஆயுட் காலம் அதிகரிக்கிற போது, வருங்கால வைப்பு நிதி மூலமான ஓய்வூதியம் வழங்குவதன் காலமும் நீடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இது குறித்து ஆய்வு செய்யத் துவங்கிய உலக வங்கி, ஓய்வூதியத்தைக் குறைப்பதற்கான ஆலோசனையை வடிவமைத்தது. அதில் மூன்று முக்கியமான அம்சங்கள் இடம் பெற்றிருந்தது.

ஒன்று ஏழ்மையைப் போக்குவதற்காக வரி வருவாயில் இருந்து அரசு நிர்வகிக்கும் கட்டாய ஓய்வூதியத் திட்டம். இரண்டு ஓய்வு காலத்திற்கான சம்பள சேமிப்புகளைத் தனியார் நிர்வாகத்திற்கு  உட்படுத்தும் கட்டாய ஓய்வூதியத் திட்டம். மூன்று வயது முதிர்ந்த காலத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பெறுவதற்கான ஆவல் கொண்டவர்களுக்கான சுய விருப்ப கூடுதல் ஓய்வூதியத் திட்டம்.

முதல் பரிந்துரையைக் கண்டுகொள்ளாத மத்திய அரசு, தனியார் மற்றும் அந்நிய முதலீட்டிற்கான ஏற்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. சமீபத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகள், வருங்கால வைப்பு நிதியை அரசே பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஒன்று அமெரிக்கா உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் மிகப் பெரும் சரிவை ஏற்படுத்திய பங்குச் சந்தை வணிகம். இதன் மூலம் உலகமே மிகப் பெரும் பொருளாதார மந்த நிலையை சந்தித்து அதிலிருந்து மீள இயலாது நீடித்து நிற்கும் நிலை. 

இரண்டு கிங்ஃபிஷர் விமான சேவை நிறுவனம். இந்திய பொதுத் துறையைச் சார்ந்த 13 வங்கிகளில் 5630 கோடி ரூபாயையும், தனியார் துறையைச் சார்ந்த 4 வங்கிகளில் 582 கோடி ரூபாயும் கிங்ஃபிஷர் நிறுவனம் கடன் பெற்றுள்ளது. திவால் கணக்கு காட்டியுள்ள நிலையில் இது வராக் கடனாக பராமரிக்கப்படலாம். தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் நிறுவனத்திற்கும், இதர பல நிறுவனங்களுக்கும் இதுபோல் கடன் இருக்கிறது. ஏற்கனவே இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு வரவேண்டிய கடனை, வராக்கடன் பட்டியலில் வைத்து, சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருப்பதாக பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர்கள் பலமுறை அறிக்கை வாசித்து இருக்கிறார்கள்.

ஆனாலும் கூட இந்திய வங்கிகள் 2008 உலக பொருளாதார நெருக்கடி காரணமாக, எந்த சேதாரத்தையும் சந்திக்க வில்லை. இதற்கு காரணமாக பிரதமரும், அன்றைய நிதி அமைச்சரும், திட்டக் கமிஷன் துணைத்தலைவரும், சோனியா காந்தியும் குறிப்பிட்டது, ”இந்திய வங்கித் துறை பொதுத்துறை வசம் இருப்பதே” என்பதாகும்.  அமெரிக்க வங்கிகளே திவால் என்கிற கடலில் தத்தளிக்கிற போது, தடுமாற்றமே இல்லாமல் சென்றது இந்திய பொதுத்துறை வங்கிகள் என்ற பெருமை, நமது நாட்டிற்கு இருக்கிறது. கடந்த காலத்தில் வங்கித்துறையில், அந்நிய முதலீட்டிற்கு முயற்சி செய்ததும், அதை இடதுசாரிகள் தடுத்ததும் மறுக்க முடியாத உண்மை.

அமெரிக்க வங்கிகள் பொருளாதார மந்தத்திற்கு வழிவகுக்க பிரதான காரணம், அந்த நாட்டில் வங்கிகள் பங்குச்சந்தையில் மட்டும் தீவிரம் காட்டியதாகும். வருங்கால வைப்பு நிதியை, அடமான கடன் பத்திரங்களில் முதலீடு செய்து, பங்குச்சந்தை வர்த்தகத்தில் பயன் படுத்தியதே ஆகும். விளைவு அந்த நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் பொருளாதார இழப்பிற்கு ஆளாகினர். அவர்களின் முதிய வயதில் கிடைக்க வேண்டிய ஓய்வூதியத்திற்கு பெரும் தடங்கல் வந்து சேர்ந்தது. எனவே தான் அவர்கள் வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டத்தை இரண்டு மாத காலமாக நடத்தி வருகின்றனர்.

இதன் பாதிப்பு ஐரோப்பாக் கண்டத்திலும் தீவிரம் பெறுவதற்கும் இதுவே அடிப்படைக் காரணமாகும். இப்போராட்டத்தில் இன்னொரு பகுதியினரும் இணைந்திருப்பது கவணிக்கத் தக்கது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் சேர்ந்தவர்கள் தான் அந்தப் பகுதியினர். அமெரிக்க காப்பீட்டு குழுமம் என்ற நிறுவனம் உள்ளிட்ட, காப்பீட்டு நிறுவனங்களிலும் காப்பீட்டுத் தொகை செலுத்தியவர்கள் ஆவர். காப்பீடு இருந்தும் மருத்துவச் சிகிச்சைக்கு பலமாதங்கள் காத்திருக்க வேண்டிய அவலம் உருவானதே அவர்களும் போராட்டத்தில் இணைவதற்குக் காரணம். காப்பீட்டுப் பத்திரங்களைக் கூட பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுத்தியவர்கள் தான், உலக நிதி சந்தையில் கோலோச்சும் தனியார்கள்.

இவ்வளவிற்குப் பிறகும், இந்திய அரசு, ஓய்வூதியத் திட்டத்தில் அந்நிய மூலதனத்தை அனுமதிக்கும் மசோதாவை முன்வைக்கப் போவதாக அறிவித்து இருப்பது, ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு ஒப்பானது. கொடிய நோய்களில் இருந்தும், இயற்கை இடர்பாடுகளில் இருந்தும் தப்பிய இந்திய முதியோர்களுக்கு சயனைடு குப்பியைப் பரிசாகத் தருவது போன்றது. இதற்கான துணிச்சல்  மத்திய அரசுக்கு வரக் காரணம், ஆட்சிக்  கூட்டணியில் இருப்போர் பலவீனமானவர்களாக இருப்பது என்றால் தவறல்ல.

தி.மு.க தலைவர்கள் 2ஜி வழக்குகளில் தடுமாறுகின்றனர். சி.பி.ஐ சோதனைகளில் இருந்து தப்புவதற்காக ஆதரிக்கும் மனப்பான்மையைக் கொண்டிருக்கும் உ.பி  மாநிலக் கட்சிகள். அமைச்சரவையில் இடம் இருந்தால் போதும் என்ற நிலையில் இருக்கும் தேசீய மாநாட்டுக் கட்சி மற்றும் தேசிய வாத காங்கிரஸ். மிரட்டுவதற்கு வசதியானதாக காங்கிரஸ் இருப்பதைப் பயன்படுத்தும் திரிணாமுல் காங்கிரஸ். பொருளாதாரக் கொள்கைகளில் இவர்களுக்குள் எந்த வேறுபாடும் இருந்ததில்லை. எனவே ஐ.மு.கூ 2 என்கிற அரசை எந்த பொருளாதாரக் கொள்கைகளின் மீதும் கட்டமைக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. குறைந்த பட்ச பொதுத் திட்டம் கூட தேவைப் பட்டிருக்கவில்லை.

எனவே மேற்படிக் கட்சிகள் ஓய்வூதியத் துறையில் அந்நிய முதலீடு என்ற மசோதாவை எதிர்ப்பார்கள் என்று, இந்திய நடுத்தர வர்க்கமும், தொழிலாளர்களும் எதிர்பார்ப்பதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை. 2004 ல் இருந்து 2009 வரை இருந்த ஐ.மு.கூ 1  அரசு ஓய்வூதிய தாரர்கள் மீது அல்லது மக்கள் மீது தாக்குதல் தொடுக்கும் கடுமையான  பொருளாதாரக் கொள்கைகளை எளிதாக பின்பற்ற இயலவில்லை. காரணம் இடது சாரிகள் 63 பேர் வெளியில் இருந்து ஆதரவு என்பதன் மூலம் செய்த கண்காணிப்பாகும்..

பிரதமர் மன்மோகன் சிங் தான் நினைக்கிற பொருளாதார கொள்கைகளை இடதுசாரிகளிடம் விவாதிக்காமல் முன்வைக்க முடியாத நிலை இருந்தது. ஒருகட்டத்தில் நான் அடிமையைப் போல் நடத்தப் பட்டேன் என்று புலம்புகிற அளவிற்கு மன்மோகன் சிங் தள்ளப் பட்டார். எந்த இடத்திலும் இடதுசாரிகள் தங்களின் குடும்ப உறுப்பினர் அல்லது கட்சிக் காரரின் தேவைக்காக பிரதமரை நிர்பந்திக்க வில்லை. அப்படி பிரதமரும் குற்றம் சாட்ட முடியாது.

எனவே இன்றைய இந்திய பொருளாதாரக் கொள்கைகளை மக்களுக்கு சாதகமாக மாற்றாவிட்டாலும், தாக்குதல் தொடுக்காமல் இருக்க வேண்டுமானால் ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்துகிற சக்திகள் பாராளுமன்றத்தில் வலுப்பெற வேண்டும். இல்லையெனில் நம் கழுத்துகளில் கட்டப்படும் சயனைடு குப்பிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
நன்றி: தீக்கதிர் 10 நவம்பர் 2011

புதன், 7 டிசம்பர், 2011



   அங்காடித் தெருவில் அல்லாடும் தொழிலாளர்!!

தீபாவளி கொண்டாட்டம் முடிந்த இரண்டு நாளில், நீதிமன்றத் தலையீடு காரணமாக, சி.எம்.டி.எ கட்டுமான வரம்பு மீறுதல் குற்றச்சாட்டுக்கு ஆளான, 25 கடைகளை தி.நகர் ரங்கநாதன் தெருவில் சீல் வைத்து உள்ளனர். ஆட்சியாளர்கள் எந்த நோக்கத்தில், யார் நலனில் அக்கறை கொண்டு செயல் படுகிறார்கள் என்பதெல்லாம், நாம் அறிந்த செய்தி. இருந்த போதும் முன்னுக்கு வந்துள்ள கேள்விகள் குறித்து தொழிற் சங்க இயக்கங்கள் மட்டுமே கூடுதலாக விவாதிக்க முடியும்.

முதல் கேள்வி நீதிமன்றம் தலையீடு செய்து இருக்காவிட்டால், மாநில அரசு, சி.எம்.டி.எ, மின்வாரியம், குடிநீர் வாரியம் ஆகியோர் என்ன செய்திருப்பார்கள்? நிச்சயமாக, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், விருப்பத்திற்கு கொள்ளையடிக்க, மேற்படிக் கடைக் காரர்களுக்கு அனுமதியளித்து இருப்பார்கள். இரண்டு, அங்கு விதிமீறல் நடந்த உண்மையை ஏன் இவ்வளவு நாட்களாக கண்டு கொள்ளவில்லை. பல அடுக்கு மாடி, உரிய காற்றோட்டம் இல்லாமை, விபத்து நடந்தால் நெரிசல் ஏற்படாமல் மக்களை காக்கும் ஏற்பாடு  போன்ற தேவைகளை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? குறிப்பாக பண்டிகை நாட்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தடுக்க என்ன கண்காணிப்பு வசதி செய்யப் பட்டிருந்தது? மூன்று அங்கு, அளவிற்கு அதிகமான கூட்டம் சேருகிறது, இதன் காரணமாக, பொருள் வாங்க வருகிற பெண்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப் பட்ட பெண்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர், எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற போராட்ட குரல்களை, ஒரு போதும் கண்டு கொள்ளவில்லை. நுகர்வோரின் பாதுகாப்பு கருதி அரசு ஏன் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வில்லை?

நான்கு, மேலே குறிப்பிட்ட நிறுவனங்கள் அனைத்தும், ஏறத்தாழ ஒரு கொத்தடிமை முறை கொண்ட தொழிலாளர்களைக் கொண்டிருக்கிறது, என்ற குற்றச்சாட்டாகும். 6 கடைகளில் மட்டும் சுமார் 9 ஆயிரம் தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர், என்ற செய்தி அரசுக்குத் தெரியுமா? தெரியாதா? இது இன்றைய பெரும் தொழிற்சாலைகளுக்கு இணையான எண்ணிக்கை. இத்தகைய தொழிலாளர்கள் மீது, உழைப்புச் உரண்டலையும், பாலியல் சுரண்டலையும் இக்கடை உரிமையாளர்கள் நிகழ்த்துகிறார்கள் என்பதைப் புகாராக அளித்த போதும் ஏன் நடவடிக்கைகள் எடுக்கப் பட வில்லை. அங்காடித் தெரு திரைப் படம் வெளிவந்த நாட்களில் தொழிலாளர் நிலை குறித்து பல்வேறு விவாதங்கள் தலைதூக்கியது. ஆனாலும் ஒரு சோதனை நடவடிக்கையைக் கூட அரசோ அல்லது தொழிலாளர் துறையோ ஏன் மேற்கொள்ளவில்லை?

ஐந்து, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947ன் படி, தமிழ் நாடு அரசு நியமித்த ஆய்வாளர் மேற்படி கடைகள் மற்றும் நிறுவனங்கள் குறித்து ஆய்வுகள் நடத்தியது உண்டா? ஆம் எனில் அதன் மீது ஏதாவது நடவடிக்கைகளை தொழிலாளர் துறை மேற்கொண்டுள்ளதா? இந்த சட்டத்தின் படி மாலை 7 மணிக்கு மேல் தொழிலாளர்கள் பணிபுரியக் கூடாது என இருந்தாலும், சட்ட விதி பின்பற்றப் படுவதில்லை என்பது மாநில அரசுக்கும் தொழிலாளர் துறைக்கும் தெரியுமா? ஒருவேளை 7 மணிக்கு மேல் தொழிலாளியின் தேவை இருக்கிறது எனில், வேலை வாங்கப்படும் தொழிலாளிக்கு கூடுதல் பணி நேரம் என்ற முறையில் இரட்டிப்பு சம்பளம் தரப் படுகிறதா? இது போன்ற விவரங்கள் சேகரிக்கப் பட்டிருக்க வாய்ப்பே இல்லை. அப்படி சேகரித்து இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப் பட்டதில்லை.

ஆறு, இக்கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, நோய்க்கால விடுப்பு, ஆண்டு விடுமுறை போன்ற சட்டத்தின் படியான வாய்ப்புகள் வழங்கப்பட்டதா? என்பது தெரியாது. அப்படித் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பான தொழிற்சங்கம் அமைக்கும் சூழல் மேற்படித் தொழிலாளர்களுக்கு இல்லை. வரம்பை மீறுகிற போது வேடிக்கை பார்த்த அரசு, அந்த நிறுவனங்களில் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாங்கப்பட்ட விதத்தையும் வேடிக்கை பார்த்தது. நீதிமன்ற உத்தரவு மூலம் தெருவில் நிற்கும் தொழிலாளர்களையும் வேடிக்கைப் பார்க்கிறது. உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல், தொழிலாளர்கள் அவலத்தை அனுபவித்து வருகின்றனர்.

வரம்பு மீறிய கட்டிடங்களில் தொழிலாளர்கள் லிஃப்ட் வசதியை அனுபவிக்க முடியாது. படிகளில் பலமுறை மேலும் கீழுமாக நடக்க வேண்டும். இன்று கடைகள் மூடப்பட்டு வாழ்க்கைத் தேவைக்காக, வேலை வேண்டுமே என்ற முறையில், கடை கடையாக நடக்கின்றனர். வேலையில் இருந்த போதும் நடை. வேலையில்லாத நிலையிலும் நடை. தொழிலாளர்களில் பெரும் பான்மையோரின் குடும்பப் பின்னனியை அங்காடித் தெரு திரைப்படம் அப்படியே வெளிப்படுத்தி இருந்தது. குடிக்கு அடிமையான அப்பா, அப்பா கைவிட்ட குடும்பம், அப்பா மறைந்த நிலையில் குடும்பத்தின் வறுமை, இரண்டுக்கும் மேல் பெண் குழந்தைகள் உள்ள குடும்பம், தொழில் நொடிந்து பிழைக்க வழி இல்லாத குடும்பம், விவசாய நஷ்டத்தினால் வறுமைக்கு ஆளான குடும்பம் என பலவகைகளில் தங்களின் இளமைப் பருவத்தை தொலைத்தவர்கள் தான் தொழிலாளர்களாக, சீல் வைக்கப் பட்டக் கடைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள். வறுமை மற்றும் சாதி அடையாளங்களைக் காட்டி உழைப்பைக் கொள்ளையடிக்கும் சூழல் இந்தியாவில் அதிகம் என்றாலும், சென்னை தி. நகரில் மிக அதிகமாக இருந்தது.

இன்று கடைகள் மூடப்பட்ட நிலையில் கடை உரிமையாளர் சங்கத்தைச் சார்ந்தவர்கள், கடைகளை மீண்டும் திறக்காமல் சம்பளப் பட்டுவாடா செய்ய இயலாது என்கின்றனர். இவர்கள் தான் சட்டத்தின் காரணமாக “பிரதி மாதம் 5 ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப் படும்” என எழுதி வைப்பவர்கள். கடை மூடலுக்கும் கொடுக்கப் படவேண்டிய சம்பளத்திற்கும் என்ன சம்மந்தம்?. தொழிலாளர்களின் உழைப்பு இல்லாமல், மேற்படிக் கடைகளின் விஸ்தரிப்பு இந்த அளவிற்கு நடைபெற்றிருக்குமா? பல ஆண்டுகள் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு போதுமான விடுமுறை கூட கொடுக்காத நிலை இருந்தது. சீல் வைக்கப் பட்ட இந்த காலத்தினை விடுமுறையில் ஏன் கழித்துக் கொள்ளக் கூடாது. கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் அத்தியாயம் 7 பிரிவு 34ல் என்னென்ன காரணங்களுக்காக சம்பளம் பிடித்தம் செய்யலாம் என்பது குறிப்பிடப் பட்டிருக்கிறது. அதில் சொல்லப் பட்ட எந்த காரணங்களும் பொருந்தாத நிலையில், தொழிலாளருக்கான கடந்த மாதச் சம்பளம் உடணடியாக, கொடுக்கப் படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

சீல் வைக்கச் சென்ற அதிகாரிகள், நுகர்வோர் வருவதற்குள் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் எனத்திட்டமிட்டு செயல் பட்டதாக தெரிவித்தனர். கடைகளை மூடினால், 20 ஆயிரம் தொழிலாளர்கள் என்ன ஆவார்கள் என்பது பற்றி ஏன் சிந்திக்கவோ, செயல்படவோ இல்லை. இந்தியாவில் டன்லப் டயர் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள், ஆலைமூடலை சந்தித்த போது, மேற்கு வங்கத்தில் இருந்த இடது முன்னணி அரசு, இந்தியாவில் முதல் முறையாக தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க உத்திரவிட்டது. தமிழ்நாடு அரசு அது போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு பெண் தையல் தொழிலாளி கடை மூடப்பட்டதால், தனக்கு ஒரு நாளைக்கு கிடைத்து வந்த 450 ரூபாய் சம்பளம் நின்று விட்டது. குழந்தைக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தும் காலம் வந்து விட்டது என்ன செய்வது எனத் தெரியவில்லை என்று புலம்பியிருக்கிறார். இது போல் முகம் தெரியாத தொழிலாளர் கூட்டம் வாடிக் கொண்டிருக்கிறது. மற்றொரு புறம், சீல் வைக்கப் பட இருக்கும் விவரம் தெரியாமல் தைக்கக் கொடுத்த துணியை வாங்க இயல வில்லையே என நுகர்வோரின் ஒரு பகுதியினர் புலம்புகின்றனர்.      

இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு மாநில அரசு செயல்பட வேண்டும். முதலில் சீல் வைக்கப் பட்ட கடைகள் திறக்க இயலாது என்பதை நீதி மன்ற தீர்ப்பு தெளிவு படுத்தி இருக்கிறது. திறக்க வேண்டுமானால் வரம்பு மீறல்களை, இடிப்பதன் மூலம் சரி செய்யப் பட வேண்டும். இது குறித்து அரசு காலதாமதம் செய்யாமல் உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி முடிவு காண வேண்டும். அடுத்து இதுவரை சென்னையில் கோயம்பேடு, மூர் மார்க்கட் தவிர வேறு எதுவும், சிஎம்டிஎ திட்டமிடலால் உருவாக்கப் படவில்லை. இன்றைய தி. நகரோ, புரசைவாக்கமோ, எம்.சி.ரோடு ராயபுரமோ, தானாக உருவானது தான். மேல் நடுத்தர வர்க்கத்திற்கான ஸ்பென்ஸர், சிட்டி செண்டர், ஸ்கை வாக், எக்ஸ்பிரஸ் அவென்யூ போன்ற பிரமாண்ட மால்கள் அளவுக்கு இல்லை யெனினும், மாநில அரசு திட்டமிட்ட மார்க்கட் பகுதிகளை உருவாக்க மாநகராட்சி மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நுகர்வோரின் துணிகள் உள்ளிட்ட பொருள்களைத் திருப்பித் தர நடவடிக்கை எடுக்கப் படவேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தின் தலையீடு என்ற பெயரில் தொழிலாளர் மீது நடத்தும் மற்றும் ஒரு தாக்குதலாக மட்டுமே சீல் வைப்பு கருதப் படும்.

நன்றீ: சிஐடியு செய்தி. டிசம்பர் 2011