எல்லா காலத்திலும் எதிர் குரல் இருந்திருக்கிறது. அந்த குரல் ஒடுக்கப்பட்டோ, அழிக்கப் பட்டோ அடக்கப்படுவது வழக்கம். வெறும் எதிர்ப்பு மட்டும் போதாது, சமூக அமைப்பு முறை மாறாமல், பாட்டாளிகளின் குரல் எதிரொலிக்காது, என்ற தன்மையில் வடிவமைத்தது, கம்யூனிஸ்ட் இயக்கம். உலகில் சோவியத் யூனியன் தொழிலாளி வர்க்க புரட்சி மூலம் ஆட்சி மாற்றமாக, கட்டமைக்கப்பட்ட போது, பெண்கள், தொழிலாளர் ஆகிய பாட்டாளிகள் சமநீதியும், அதிகாரமும் பெற முடிந்தது. அது உலகம் முழுவதும் தியாகப் பற்றி எரிந்தது, என்பதே உண்மை. இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷார், சோவியத்தில் இருந்து யார் வந்தாலும், அவர்களை கண் கொத்தி பாம்பாக உளவு பார்த்தது. இன்று வரை இந்தியாவில், அடக்கப்பட்டாலும், ஒடுக்கப்பட்டாலும், அவதூறு செய்யப்பட்டாலும், காட்டிக் கொடுக்கப்பட்டாலும், உயிர்த்தெழும் ஈர்ப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது, கம்யூனிஸ்ட் இயக்கம். அதன் நூற்றாண்டு துவங்கி இருப்பதே புதிய எழுச்சியை, ஆவேசத்தை தந்திருக்கிறது, என்றால் மிகையல்ல.
சுரண்டலுக்கு எதிரான போராட்டத்துடன், காலனியாதிக்க எதிர்ப்பை இந்திய மண்ணில் நிலை நிறுத்திய பெருமை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உண்டு. இது வெளிநாட்டு கருத்து அல்ல. ஒவ்வொரு நாட்டிலும் சுரண்டப்படும் வர்க்கம் தன்னை விடுவித்து கொள்ள நடத்தும் போராட்டத்தின் கருத்தாயுதமாக இருக்கிறது கம்யூனிஸம். இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான விடுதலை போராட்டம், முதலில் அரண்மனை, மன்னர்களின் படை பட்டாளங்கள், அடுத்ததாக படித்த மேட்டுக்குடி மக்கள், பங்கேற்பாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் கடந்து எளிய மக்களான விவசாயி, பழங்குடியினர், தொழிலாளி, மாணவர் மற்றும் இதர பகுதி மக்களை, விடுதலை தாகத்துடன் போராட்ட களத்தில் இறக்கியது கம்யூனிஸ்ட் கட்சி.
தோற்றம் மற்றும் தாக்கம்:
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை உருவாகி நூறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். இன்றைய உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட் நகரில், 1920 அக்டோபர் 17 அன்று, முதல் கம்யூனிஸ்ட் கட்சி கிளை உருவானது. எம்.என். ராய், எவ்லி ராய் டிரென்ட், அபானிராய் முகர்ஜி, ரோஸா ஃபிட்டிங்காவ், முகம்மது அலி, முகம்மது சாபி மற்றும் எம்.பி.டி.ஆச்சார்யா ஆகியோரை கொண்ட முதல் கிளையின் செயலாளராக, முகம்மது சாபி தேர்வானார். கிளை உருவான தகவல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு கிடைத்த உடன் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. பெஷாவர் வழக்குகள் 4 முறை கம்யூனிஸ்ட்டுகள் மீது தாக்கல் செய்யப்பட்டது. இதன் காரணமாக கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் தலை மறைவாக செயல்பட வேண்டியிருந்தது.
கம்யூனிஸ்ட் கட்சி கிளை உருவான பின்னர் தான் முழு சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானம் காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டது. சௌக்கத் உஸ்மானி என்ற இளைஞர் மேற்படித் தீர்மானத்தை முன்மொழிய, அடிப்படையாக இருந்தது, லண்டனில் அவருக்கு ஏற்பட்ட கம்யூனிச தொடர்பாகும். கம்யூனிஸ்ட் கட்சியின் தாக்கம், முழு விடுதலை, என்பதுடன் தொழிலாளர் உரிமைகளையும் பேச தூண்டியது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தனது கிளையை துவக்கியது ஒரு நிகழ்வு என்றால், மற்றொரு புறம் இந்தியாவில், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) உருவானது மற்றொரு நிகழ்வு. 1920 அக்டோபர் 31 ல் உருவானது AITUC. இதை லாலா லஜபதி ராய், ஜோசப் பாப்டிஸ்டா, என்.எம். ஜோஷி, திவான் சாமன் லால், முசாபர் அகமது மற்றும் சிலரும் உருவாக்கினர். பின்னாளில் முசாபர் அகமது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவராக உருவெடுத்தவர் ஆவார்.
தமிழகத்தில், 1918, ஏப்ரல் 13ல் உருவான முதல் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கத்தை தோற்றுவித்தவர்கள், திரு.வி.கல்யாணசுந்தரம், பி.பி. வாடியா ஆகியோர். இதிலும் கம்யூனிஸ இயக்கத்தின் தாக்கம் இருப்பதை உணர முடியும். திரு.வி.க தான் நடத்திய நவசக்தி இதழில் கம்யூனிசம் குறித்தும், ரஷ்ய புரட்சி, தொழிலாளர்களுக்கு அளித்த விடுதலை மற்றும் உரிமைகள் குறித்தும் எழுதியுள்ளார். 1923ல் இந்திய கம்யூனிச இயக்கத்தின் பிதாமகன்களில் ஒருவராக கருதப்படும், ம. சிங்காரவேலர் சென்னையில் மே தினத்தை கொண்டாடிய வரலாறு மகத்தானது. இவரும் சென்னை நகரின் தொழிலாளர் போராட்டங்களுக்கு தலைமையேற்று வழி நடத்தியவர் என்பது நாம் அறிந்த உண்மை.
விடுதலையும், தியாகமும்:
இந்திய விடுதலைப்போர், விவசாயி, தொழிலாளி, பழங்குடி மக்கள், கப்பல்படை மாலுமிகள் என்ற சாதாரண மக்களின் முழக்கமாக மாற்றப்பட்டது. இதில் கம்யூனிஸ்ட்டுகள் பெரும் பங்கு ஆற்றினர். இளைஞர் குழுக்கள் ஆங்காங்கு கலகங்கள் செய்தது. அவர்களுக்கு சமூக மாற்றத்தின் மீது, குறிப்பாக சோசலிசத்தின் மீது, மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது. பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோர் இந்திய விடுதலைப்போரில் இளைஞர்களின் அடையாளமாக உள்ளனர். அவர்களுடன் சிறையில் அடைக்கப்பட்டு, விசாரணையை எதிர்கொண்டவர் அஜாய்கோஷ் இவர் பின்னாளில் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். அதேபோல், இவர்களுடன் இருந்த சிவவர்மா, பண்டிட் கிஷோரிலால் போன்றவர்களும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பங்களிப்பு செய்தனர். வங்காளத்தில் சிட்டகாங் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் பங்கெடுத்த இளைஞர்கள், கனேஷ்கோஷ், கல்பனாதத் ஆகியோரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பின்னாளில் இணைந்து போராடியவர்களே.
பகத்சிங் போன்றோர் தூக்கிலிடப்பட்ட பின், மற்றவர்கள் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டவர்கள், ஏராளம். மிகக் கொடிய அடக்குமுறை சித்திரவதை செய்யக்கூடியதாக அந்தமான் சிறை அறியப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு இருந்து என்னை விடுவித்தால், நான் பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருப்பேன் என ஒருமுறை இருமுறை அல்ல, தான் சிறையில் அடைக்கப்பட்ட 12 ஆண்டுகளில் 7 முறை மண்ணிப்புக் கேட்டு கடிதம் எழுதியவர் தான் வி.டி.சவர்க்கார். சிறையில் இருந்து, மண்ணிக்கப்பட்டு விடுதலையான பின், 1923 ல் இந்துமகாசபா அமைப்பில் இனைந்து பணியாற்றியதுடன், இந்துத்துவா அரசியல் கோட்பாடு குறித்த புத்தகத்தையும், எழுதினார். அதற்காக தான், பாஜக ஆட்சியாளர்கள் சவர்க்கருக்கு, பாரத ரத்னா விருது வழங்க துடிக்கின்றனர். ஆனால் பின்னாளில் கம்யூனிஸ்ட்டுகளாக மாறிய அந்தமான் சிறைவாசிகளான, கனேஷ்கோஷ், சதீஷ் பக்ரஷி, ஹரேகிருஷ்ண கோனார் மற்றும் சுபோத்ராய் உள்ளிட்டோர், விடுதலை போராட்டத்தை கைவிடவோ, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கருணையை எதிர்பார்க்கவோ இல்லை. மாறாக மிகக் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்தனர் என்பதே வரலாறு.
அதுமட்டுமல்ல, இந்தியாவில், தேபாங்கா விவசாயிகளின் எழுச்சி, வோர்லி பழங்குடி மக்களின் எழுச்சி, புன்னப்புரா - வயலார் விவசாயிகளின் மாபெரும் போராட்டம், தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டம், தமிழகத்தில், கிழக்கு தஞ்சை மாவட்டத்தில் நடந்த விவசாய மக்களின் போராட்டம், கோவை, மதுரை, நெல்லை மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு காரணமாக கம்யூனிஸ்ட்டுகளே இருந்தனர். இப்போராட்டங்களே, விடுதலையை துரிதப்படுத்தியது. பிரிட்டிஷாருக்கு அச்சம் தந்தது. தமிழகத்தில் பி.ராமமூர்த்தி, ஜீவானந்தம், பி.சீனிவாசராவ், கேடிகே தங்கமணி, வி.பி.சிந்தன், கே. ரமணி, பாப்பா உமாநாத், ஆர். உமாநாத், என்.சங்கரய்யா ஆகியோரின் பங்களிப்பை வரலாறு இருட்டடிப்பு செய்ய முடியாது. நில உரிமை, கல்வி உரிமை, சமூக உரிமை, கூலி உரிமை ஆகியற்றிற்கு இதுவே அஸ்திவாரம் என்பதையும் அறிவோம்.
காங்கிரஸ் இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம், வகுப்பு வாதம் ( அது இந்துமகாசபை அல்லது ஆர்.எஸ்.எஸ் இயக்கம், முஸ்லீம் லீக்) என்ற மூன்று நீரோட்டங்கள் இந்திய விடுதலைப்போரில் பிரதிபலித்தாலும், இந்திய விடுதலைக்கு பின் இந்தளவு நாம் வளர்ந்திருக்கிறோம் என்றால் அதற்கு காரணம், காங்கிரஸ் தலைமையிலான முதலாளித்துவ ஆட்சியமைப்பும், அதற்கு எதிராக களம் கண்ட பிரதான எதிர்கட்சியுமான, கம்யூனிஸ்ட் இயக்கமும் தான். வகுப்புவாத அமைப்புகள் நாட்டை பின்னோக்கியே இழுத்தனர் என்பதே உண்மை. இன்றும் கூட வகுப்புவாதம் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆட்சி, காங்கிரஸ் காலத்தில் வழங்கிய மனித உரிமைகளையும், மக்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகளையும், பறித்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி பின்பற்றிய கொள்கைகளை விடவும் வேகமாக ஜனநாயகத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சவர்க்கார் குறிப்பிட்டது போல், ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமாக, பாஜக ஆட்சிக் கொள்கை அமைந்துள்ளது.
நேருவும், பாஜகவும்:
நேரு இந்தியாவின் முதல் பிரதமர் பொறுப்பு வகித்தவர். கம்யூனிஸ்ட்டுகள் எதிர் கட்சியாக விளங்கினர். பொதுத்துறை நிறுவனங்களை அரசு தனது கட்டுப்பாட்டில் வளர்ப்பது என்ற முடிவு, அன்றைக்கு தனியாரிடம் அத்தகைய பெரும் தொகை இல்லை. எனவே அன்றைய காங்கிரஸ் ஆட்சி அரசு முதலீட்டில், பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியது. மீண்டும் நவகாலனியாதிக்கத்திற்கு இந்திய ஆட்சியாளர்கள் இரையாகிற போது, இந்த பொதுத்துறைகளை இந்திய மற்றும் பன்னாட்டு பெரு முதலாளிகளுக்கு அடமானம் வைப்பதை பார்க்கிறோம்.
கம்யூனிஸ்ட்டுகள் எதிர்கட்சியாக இருந்ததும், தொடர் போராட்டங்களும் பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கான உரிமை போராட்டங்களை நடத்தினர். பலசட்டங்களை உருவாக்க இந்த போராட்டம் பயன்பட்டது. இத்தகைய போராட்டங்களில் கம்யூனிஸ்ட்டுகள் நேரு ஆட்சியால், தெலுங்கானா அடக்குமுறை, சிறைவாசம், சேலம் சிறையில் துப்பாக்கி சூடு போன்ற மிகக் கொடிய தாக்குதலுக்கும் ஆளாகி தான், சில உரிமைகள் பெற முடிந்தது. மேலும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் ஏற்பட்ட பிளவு, அதைத் தொடர்ந்து வந்த இந்திரா தலைமை, அவசரகால சட்டம் மூலமான அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. மேற்கு வங்கம், கேரளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மார்க்சிஸ்ட்டுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஆனாலும் மூன்று மாநிலங்களில் ஆளும் சக்தியாக இடது ஜனநாயக முன்னணி மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் உருவெடுத்தது.
இன்று கார்ப்பரேட் ஆதரவு, தாராளவாத கொள்கை கோலோச்சியிருக்கிறது. இதில் பாட்டாளிகளும், விவசாய மக்களும், சிறு, குறு நில உடைமையாளர் மற்றும் உற்பத்தி உடைமையாளர் ஆகியோர் பெரும் பாதிப்பிற்கு ஆளாகிவருகின்றனர். இதை எதிர்த்த போராட்டங்களை கம்யூனிஸ்ட் இயக்கங்கள் கூட்டாக நடத்தி வருகின்றன. பொருளாதார சுரணடலை மக்கள் உணர்ந்து போராடுவதை தடுப்பதற்காக, வகுப்புவாத அரசியலும் மேலோங்கி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, விடுதலை போராட்டம் முடிந்து, சுதந்திர இந்தியாவை கைப்பற்ற நினைத்த வகுப்புவாதத்திற்கு, தற்போது, ஏகாதிபத்தியமும், இந்திய பெருமுதலாளிகளும் வாய்ப்பு உருவாக்கி, ஆட்சியை பாதுகாத்து வருகிறனர். பாஜக அரசு கார்ப்பரேட் பெரு நிறுவனங்களைப் பாதுகாத்து வருகிறது.
எனவே கம்யூனிஸ்ட்டுகளின் எழுச்சியே, இந்த மாறுபட்ட சுரண்டலுக்கும், பாட்டாளி வர்க்கத்தினைப் பாதுகாக்கவும் கூடியது ஆகும். அதற்கான அரசியல், சிந்தாந்த பயிற்சியை இன்றைய தலைமுறைக்கு வழங்குவதே, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூறாண்டும். கற்போம், போராட்டதிற்கு புதிய உந்துவிசையை மேம்படுத்துவோம்.