வியாழன், 16 ஜனவரி, 2020

Strike 2020

இது 18 வது வேலைநிறுத்த அறைகூவல். தொழிலாளி வர்க்கம், வேகமாக பாய்ந்து வரும் முதலாளித்துவ தாராளவாத கொள்கைகளை எதிர்த்து நிற்கும், மற்றுமொரு அவதாரம். ஜனவரி 8 2020ல், மிரமிக்க வைக்கும் வகையில், இந்தியா முழுவதும், தொழிலாளர்கள் தயாராகி வருகின்றனர். 2019 ம் ஆண்டின் நிறைவு பகுதி, மதசார்பற்ற மக்களும், மாணவர்களும், பெரும்பான்மையான அரசியல் இயக்கங்களும் கூட்டாக போராடிவரும் களமாக மொத்த இந்தியாவும் மாறியுள்ளது. இங்கு அடையாளங்களின் பெயரில், ஒடுக்கவோ, பிரிக்கவோ அனுமதியோம் என்ற முழக்கமே விண்ணுயர்ந்து நிற்கிறது. பெரும்பான்மை மக்கள் பல்வேறு கட்சிகளுக்கு வாக்களித்திருந்தாலும், பாஜகவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். தொழிலாளி வர்க்கம் மோடி தலமையிலான பாஜக ஆட்சியில் நடத்தும் நான்காவது பொது வேலை நிறுத்தம் இது. பெரும்பான்மையான மக்கள் சிறுபான்மையான முதலாளிகளுக்கு எதிராக, முதலாளித்துவத்திற்கு எதிராக நடத்தும் போராட்டங்களின் சங்கமம் இந்த வேலை நிறுத்தம். 

பொருளாதார சுரண்டலின் உச்சம்:

வாகண உற்பத்தி தேக்கம், மாருதி 32 சதம் உற்பத்தி குறைவு, வணிக வாகணங்கள் பெரும் தேக்கம், அசோக் லேலேண்ட், டாடா ஆகிய நிறுவனங்களில் லே ஆப், ஆட்குறைப்பு, காண்ராக்ட் தொழிலாளர் வீட்டுக்கு அனுப்பபட்டனர். டி.வி.எஸ் சுமார் 27 ஆயிரம் நீம் (NEEM) தொழிலாளர்களை உருவாக்கினாலும், வேலைப் பறிப்புக்கு ஆளாகியுள்ளனர். சுமார் 3 லட்சம் பேர், இப்போதைக்கு வேலை இழந்துள்ளனர். இன்னும் தொடர வாய்ப்புள்ளதாக ஆரூடங்கள். சிறு குறு தொழில்கள் முடக்கம். தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரம் சிறு தொழில்கள் மூடப்பட்டதாகவும், 5 லட்சம் தொழிலாளர் வேலை இழந்ததாகவும் அமைச்சரே சட்ட மன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ள நிலமை. இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் பெரும் சரிவு. இப்படியாக செய்திகள் நீண்டு செல்கின்றன. 

மோடியும், நிர்மலா சீத்தாராமனும் சொல்வது போல், இந்திய பொருளாதாரம் உடனடியாக, 5 டிரில்லியன் டாலராக உயர வாய்ப்பில்லை என, சர்வ தேச நிதி முனையத்தின் அதிகாரி கீதா கோபிநாத் நிலமையின் தீவிரத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அப்படி வளர வேண்டுமானால், இந்தியாவின் ஆண்டு வளர்ச்சி சராசரியாக 10.5% என்ற நிலையை அடைய வேண்டும். அதற்கு இந்திய மக்களின் வாங்கும் சக்தி உயர வேண்டும், என கீதா கோபிநாத் கூறியுள்ளதை கேட்கும் காதுகள் மோடி அரசில், எந்த அமைச்சருக்கும் இல்லை. 

இப்போதும், மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தாமல், முதலாளிகளின் பதுக்கும் சக்தியை உயர்த்தும் வேலையில், மோடி ஆட்சி ஈடுபட்டுள்ளது. சுமார் 2.20 லட்சம் கோடி ரூபாய் என்ற பிரமாண்டமான தொகையை பாஜக ஆட்சியாளர்கள், பெரு முதலாளிகளுக்கு சலுகையாக வழங்கியுள்ளனர். இதற்கு அரசின் சேமநல நிதியாக இருந்த ரிசர்வ் வங்கி பணம் ரூ 1.75 லட்சம் கோடியை தாராளமாக வழங்கியுள்ளது. வங்கிகள் மூலம் தற்போது சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்துள்ளனர். விரல்விட்டு எண்ணும் முதலாளிகள் மீதே மோடி ஆட்சியின் பரிவு, பாசம் உள்ளது. 

கீதா கோபிநாத் போன்ற பொருளாதார வல்லுனர்கள் கூறுவது போல், வாங்கும் சக்தி உயர, பெரும்பான்மையான மக்களின் பொருளாதாரம் உயர வேண்டும். அரசு முதலாளிகளுக்கு அளித்த சலுகையை, பொதுமக்களின் நலனுக்கான பொதுச் செலவினத்தை அதிகரிப்பதன் மூலமே செய்திருக்க முடியும். கிராமப் புற வேலை உறுதிச் சட்டம் தீவிரப்படுத்தப்படுவது, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் பண்ப்பயன்களை விரைவு படுத்துவது, போராடும் தொழிலாளர்களின் கூலி உயர்வை ஆதரிப்பது ஆகியவை தான் மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தும். இதன் மூலம் இந்திய பொருளாதாரத்தின் சுழற்சி சரியான திசையில் செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் மோடியின் தலைமையிலான ஆட்சி இதற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. 

அண்மையில் பாஜக அரசு நிறைவேற்றிய சம்பளம் குறித்த சட்டத் திருத்தம், வாங்கும் சக்தியை குறைக்கும் வகையில் உள்ளது. போராடி பெற்ற தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. இரண்டாவது முறையாக பதவி ஏற்ற 100 நாள்களில், தனியார் மயத்தை தீவிரப்படுத்துவது, தொழிலாளர் சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்துவது, தொழில் வளத்திற்காக நில வங்கிகளை உருவாக்குவது, என செயல்பட்டு வருகிறது பாஜக ஆட்சி. 

எழுச்சி மிக்க போராட்டங்கள்: 

திணிக்கும் விசத்தை, தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என மமதையுடன் பாஜக அரசு இருப்பதை, எதிர்த்த போராட்டங்கள் தீவிரம் பெற்று வருகிறது. தனியார் நிறுவனமான மாருதி உள்ளிட்ட நிறுவனங்கள் உற்பத்தி முடங்கி திணறுகிற போது, அரசின் பொதுத்துறை நிறுவனங்களை அதே தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் பெற்றுள்ளன. பாரத் பெட் ரோலியம், ஏர் இந்தியா ஆகியவை தனியாருக்கு வழங்க அனுமதிக்கப்பட்டதை எதிர்த்த வேலைநிறுத்தம் அண்மை உதாரணம். ராணுவ தளவாட உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீடுகளுக்கு எதிரான வேலை நிறுத்தங்கள், சுரங்கங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்த வேலை நிறுத்தங்கள், வங்கிகள் இணைப்பிற்கு எதிரான வேலை நிறுத்தங்கள் ஆகியவை தொழிலாளி வர்க்கத்தின் வீரியத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆங்காங்கு மையம் கொண்டிருக்கும் இத்தகைய காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள், பெரும் புயல் காற்றாக மாறும் நாள் தான் ஜன 8. 

போராடுவோரை தேச விரோதி என்ற முத்திரை குத்தி வரும் பாஜக ஆட்சி, தேசத்தையே விற்றுக் கொண்டிருக்கிறது, என்பதை அம்பலபடுத்த வேண்டியுள்ளது. கொள்கை ரீதியிலான விவாதத்தை கார்ப்பரேட் ஊடகங்களும், அரசும் அங்கீகரிக்கவில்லை என்றாலும்,  நடக்க இருக்கும் பொது வேலை நிறுத்தம் தேசம் காக்கும் போர் என்பதை பறை சாற்ற வேண்டியுள்ளது. குறைந்த பட்ச ஊதியம் 18 ஆயிரம் என்பதை சட்டமாக்குவது, தேசத்தில் வாங்கும் சக்தியை அதிகரிக்கும். ஆட்குறைப்பு தடுக்கப்பட்டு, காண்ட் ராக்ட் மற்றும் பயிற்சித் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவது, வேலைவாய்ப்பை பெருக்கும், வாங்கும் சக்தியை உயர்த்தும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ. 3000 என உயர்த்துவது சமூக பாதுகாப்பை மேம்படுத்தும், வாங்கும் சக்தியை அதிகரிக்கும். இந்த வகையில் உற்பத்தி முடக்கத்திற்காக அல்ல, உண்மையில் தேசத்தின் தலைநிமிர செய்வதற்காக, தொழிலாளி வர்க்கம் வேலைநிறுத்தம் செய்வது அவசியமாகிறது.

வேலை நிறுத்தங்களே உரிமைகளை அளித்தது:

இன்றைய தொழிலாளர்கள் 8 மணி நேர வேலைக்கு காரணமான மே தினம் கொண்டாடுகிறோம். குறைந்த பட்ச சட்டம் என ஏதோ ஒன்று இருக்கிறது. சில நலத்திட்டங்கள் செயல்படுகிறது என்றால் அதற்கு காரணம் வேலை நிறுத்தங்களே. தொடர் போராட்டங்களே. தொடர்ந்து போராடாமல் உரிமைகள் பாதுகாக்கப்படுவதில்லை. நூறாண்டுகளுக்கும் மேலாக போராடி, அங்குலம் அங்குலமாக பெற்ற உரிமைகளை, சட்டம் இயற்றி, ஒரேநாளில் பலியிடுவது, பொருத்து கொள்ள முடியாதது என்பதை, அரசுக்கு பலமாக உணர்த்த வேண்டும். அதற்கு மிகச் சிறந்த வடிவம் வேலை நிறுத்தமே. 

தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவில் துவங்கி 30 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 17 வேலைநிறுத்தங்கள் தொழிலாளர்களின் எதிர்ப்பை மட்டும் வெளிப்படுத்தவில்லை. அரசுக்கு ஸ்பீட் பிராக்கராக விளங்கியுள்ளது. இப்போது பெரும் சுவராக நின்று, முன்னேற முடியாத அளவிற்கு தடுக்கும் வலிமையை தொழிலாளி வர்க்கம் உருவாக்க வேண்டியுள்ளது. தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட பொது வேலைநிறுத்தம், அதை சாதிக்கும். ஒவ்வொரு வேலைநிறுத்தத்தின் போதும் பங்கேற்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்வு அதை வெளிப்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஊற்றெடுத்துள்ள போராட்டங்களை பொதுவேலை நிறுத்தம் என்ற பெருவெள்ளம் ஒருங்கிணைக்கட்டும். அணிதிரள்வோம், வெற்றி பெறுவோம்….



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக