வியாழன், 16 ஜனவரி, 2020

Jawaharlal Nehru University

அடக்குமுறை இங்கெங்கு என இல்லாமல், திரும்பும் திடையெல்லாம், என்பதாகியுள்ளது. பாஜகவின் ஆட்சி அறிவுலக மக்கள் மீது, பெரும் கோபம் கொண்டு அடக்க முயற்சிக்கிறது. குறிப்பிட்ட சமூகத்தின் மீது இருந்த வெறுப்பு, வளர்ந்து, குறிப்பிட்ட நிறுவனங்களின் மீதான வெறுப்பாக மாறியுள்ளது. ஏற்கனவே புனேவில் இருக்கும், திரைப்படம் கல்லூரி, அடுத்து, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அதைத் தொடர்ந்து அலிகார் உச்லிம் பல்கலைக் கழகம் ஆகியவை இலக்காக இருந்தது. இதில் படிக்கும் மாணவிகளும் தாக்குதலுக்கு ஆளாகினர். எதிர்ப்பும் வலுத்தது. இப்போது தலைநகர் டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் திட்டமிட்டு தாக்கப்படுகிறது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்:

1969 ல் உருவாக்கப்பட்ட மத்தியப்பல்கலைக்கழகம். இங்கு 8500 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் 5200 பேர் ஆராய்ச்சி மாணவர்கள். உலகில் உள்ள அனைத்து ஜனநாயக சிந்தனைகளும் கொண்ட வளாகமாக இந்தியாவில் இயங்கி வருகிறது. காங்கிரஸ் ஆட்சி இந்த பல்கலைக் கழகத்தை, நேருவின் மறைவை தொடர்ந்து உருவாக்கி இருந்தாலும், இங்கு இடதுசாரி சிந்தனையாளர்களே அதிகம் இருந்தனர். பிரகாஷ் காரத், சீத்தாராம் யெச்சூரி, சுகாஷினி அலி, போன்றவர்கள் உள்ளிட்டு, எராளமான தலைவர்கள் மாணவர் இயக்கப் பணியாற்றிய வளாகம். இளம் தலைவர்களான கண்ணையா குமார், விஜுகிருஷ்ணன் ஆகியோர் அண்மை காலத்து உதாரணங்கள். புகழ் பெற்ற பேராசிரியர்களான, ரொமிலா தாப்பர், பிரபாத் பட்நாயக், உத்சா பட்நாயக், கே. என். பணிக்கர், சி.பி. சந்திர சேகர், ஜெயதிகோஷ், இந்த வரிசை நீளமானது. அண்மையில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர், அபிஜித் பானர்ஜி இந்த பல்கலைக் கழக மாணவர் தான். பொருளாதாரம், வரலாறு, அரசியல் மற்றும் சில துறைகள் உலக புகழ் பெற்ற அறிஞர்களை உருவாக்கியுள்ளன. 

பல அரசியல் கட்சிகளுக்கான தலைவர்களும், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் போன்ற அதிகாரிகளையும் உருவாக்கிய பெருமை, இந்த கல்வி வளாகத்திற்கு உண்டு. உலகம் முழுவதும் உள்ள பெருமை மிகு கல்வி நிலையங்களில் இந்த பல்கலைக் கழக மாணவர்கள் பேராசிரியர்களாக உள்ளனர். ஹூகோ சாவேஸ் முதல் பல நாட்டுத் தலைவர்கள் இந்த பல்கலைக் கழகத்தில் பாராட்டு பெறுவதும், வரவேற்கப்படுவதும்  உண்டு. இங்கு நடைபெறும் மாணவர் பேரவைக் தேர்தல், ஜனநாயகத்தின் மாண்பை பறைசாற்றக் கூடியது. அனைத்து தரப்பும் விவாதிக்க வாய்ப்பு அளிக்கும் இடமாக இருக்கிறது. மிகச்சிறந்த தேர்தல் முறை இங்கு பின்பற்றப்படுவதால், இதன் முடிவை அறிவதில் இந்தியா முழுக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுவதை காணமுடியும். இதன் விளைவு தான் மாணவ, மாணவியர் நள்ளிரவிலும் நூலகத்தை பயன்படுத்த முடிகிற இந்தியாவின் ஒரு பல்கலைக்கழகமாக இருக்கிறது. இங்குள்ள தேனீர் கடைகளும், இதர பல இடங்களும் மாணவியருக்கு அச்சம் தருவதாக இருந்ததில்லை. கேண்டீன் மற்றும் விடுதிகளும் இருபாலரும் ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பு என்ற வகையிலேயே, செயல்படும் ஜனநாயகத் தன்மை கொண்டுள்ளது. 

1984 ல் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டு படுகொலை செய்த போது, சீக்கியர்கள் மிகக்கடுமையாக தாக்கப்பட்டனர். அப்போது 3000க்கும் மேற்பட்ட சீக்கியர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, காங்கிரஸ் கட்சியினரின் பழி வாங்கும் உணர்ச்சியை, ஒதுக்கி தள்ளிய மாணவர் வரலாறு இந்த பல்கலைக் கழக மாணவர்களுக்கு உண்டு. அதேபோல் 1975-77 காலத்தில் அவசர சட்டத்தை இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அமலாக்கிய நேரத்தில், இன்றைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், தோழர். சீத்தாராம் யெச்சூரி, ஜே.என்.யு மாணவர் பேரவைக் தலைவராக இருந்தார். அவர் தலைமையில், இந்திரா காந்தி வீடு முன் ஜே.என்.யு மாணவர்கள் குழுமி, இந்திரா காந்தி முன்னிலையில், அடக்கு முறையை கண்டித்து தீர்மானம் இயற்றிய பெருமை ஜே.என்.யு மாணவர்களுக்கு உண்டு.

தொடரும் முரண்பாடுகளும் ஜனநாயகத்திற்கான போராட்டமும்:

பல்வேறு வகையில் சிறப்புக்களைப் பெற்று இருந்தாலும், முரண்பாடுகளும், அடக்குமுறைகள் பலவற்றினை கொண்டதாகவும் இருந்துள்ளது. குறிப்பாக இடதுசாரிகளின் செல்வாக்கை இந்த பல்கலைக்கழகத்தில் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆளும் வர்க்கம் பலவகை முயற்சிகளை மேற்கொண்டு தோல்வியை தழுவியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் மாணவர் அமைப்பு என்.எஸ்.யு.ஐ, தற்போது பாஜகவின் ஏ.பி.வி.பி களம் கண்டு தேர்தல்களில் தோல்வியுறுவது தொடர்கிறது. 

இந்த ஆளும் வர்க்க கருத்துக்களுடன் மோதும் வலிமை ஜே.என்.யு மாணவர்களிடம் அதிகரித்து இருப்பதை பொறுத்து கொள்ள இயலாத நிலையை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து, பார்க்க முடிகிறது. குறிப்பாக டில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய 377 வது சட்ட பிரிவு குறித்த தீர்ப்பு, அடிப்படை வாதிகளால் எதிர்க்க பட்ட போதும், ஜே.என்.யு மாணவர்கள் ஜனநாயக உரிமை, என்ற முறையில் ஆதரித்தனர். அடக்குமுறை அதிகரித்த போது, வானவில் பேரணி என 2015 ம் ஆண்டு நடத்தியது, பெரும் வரவேற்பை பெற்றது. 2016 ம் ஆண்டில், கண்ணையா குமார், நஜிப் ஆகிய மாணவர்கள் தே விரோத சட்டத்தின் பெயரில் தாக்குண்ட போது, இந்தியா முழுமைக்குமான ஜனநாயக சக்திகள் குரல் கொடுத்ததை பார்க்க முடிந்தது. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலம் தொட்டு, கல்வி காவிமயம் ஆவதையும், சமஸ்கிருத மொழி திணிப்பு, ஜோதிட கல்வி, பெண்களுக்கான கல்வி என பழமைவாத கண்ணோட்டம் கொண்ட பாடத்திட்ட மாற்றங்களை, அறிவியல் பூர்வமாக எதிர்த்து நின்ற வலிமை, ஜே.என்.யு மாணவர் மற்றும் பேராசிரியர்களுக்கு உண்டு. ஆக்ஸ்போர்டு, மஸாசூட்ஸ் இண்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி ஆகிய பல்கலைக் கழகங்கள் அதன் பேராசிரியர்கள் நோம்சோம்ஸ்கி, அமர்த்திய சென் ஆகியோர் உலக நிகழ்வு போக்குகளில் கருத்து சொல்வதில் முன்னணியில் இருப்பது போல், ஜே.என்.யூ பேராசிரியர்கள் ரொமிலா தாபர், கே.என்.பணிக்கர், பிரபாத் பட்நாயக் ஆகியோர், செயல்ப்டுகின்றனர்.

இந்த பின்னணியில் தான் மாணவர் சேர்க்கை வடிக்கட்டப்படுவதை, ஆளும் வர்க்கம் விரும்புகிறது. குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் ஆக்கிரமிப்பை தடுக்க விரும்புகிறது. இதில் அண்மையில் அதிகரித்து வரும் தனியார் பல்கலைக் கழகங்களின் விருப்பமும் உள்ளடங்கும். அஸிம் பிரேம்ஜியின் பல்கலைக் கழகம், சிவ் நாடார் பல்கலைக் கழகம் ஆகியவை ஜே.என்.யு அதன் வரலாற்று பின்புலத்துடன் நீடிப்பதை விரும்பவில்லை. ஜே.என்.யு வை விட தனியார் பல்கலைக்கழகங்கள் சிறந்தது என்ற கருத்தாக்கம் தோல்வியுறுவது, ஆளும் வர்க்கத்தை நெருக்கடிக்கு தள்ளுகிறது. குறிப்பாக பாஜகவின் தொடர் முயற்சியான, பன்னாட்டு பல்கலைக் கழகங்களுக்கான அனுமதி மசோதா, அமலாக்கம், நிலுவையில் உள்ளது. இதற்கெல்லாம், ஜே.என்.யு ஒரு தடை என்றால் மிகையல்ல. 

கல்வி கட்டண உயர்வு மற்றும் உரிமை பறிப்புகள்:

பலமடங்கு கல்விகட்டணம், விடுதி கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து பகுதியில் இருந்தும், சாதாரண குடும்ப பின்புலம் கொண்ட மாணவர்கள் கல்வி பயிலும் இந்த நிறுவனத்தில் வசதி படைத்தோரின் ஆதிக்கத்தை மேம்படுத்த விரும்பும் நோக்கத்துடன், இந்த கட்டண உயர்வு திணிக்கப்பட்டு உள்ளது. விடுதிகளுக்குள் செல்லும், நேரம், ஆண்,பெண் பழகும் விதத்தில் கட்டுப்பாடு என்ற பெயரில் பழமை வாத திணிப்பு ஆகியவற்றை, பாஜகவின் கொள்கைப் பிரச்சாரகராக செயல்படும், துணைவேந்தர் அறிவிப்பு செய்துள்ளார். மேலே விவாதித்த அனைத்து பெருமைகளையும் நாசம் செய்யும் உள்நோக்கம், நீண்ட கால திட்டமிடலுடன் திணிக்கப்பட்டு இருப்பதை எதிர்த்து தான் தற்போது மாணவர்கள் போராட்ட களத்தில் உள்ளனர்.

எண்ணற்ற போராட்டங்களுக்கு தலைமையேற்று, வழிகாட்டிய ஜே.என்.யு மாண்வர்களின் போராட்டத்தை வளாகத்திற்குள்ளேயே அடக்கி விட எடுக்கும் முயற்சியை ஒன்று பட்டு மாணவர்கள் எதிர்த்து போராடி வருகின்றனர். இந்த வீரம் செரிந்த போராட்டம் பாராட்டுக்குரியது. தலைமை தாங்கும் மாணவர்களை குறிவைத்து, தனியாக பிரிப்பது, அவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடிப்பிரயோகம் செய்வது, இதில் மாணவிகளையும் விட்டு வைப்பதில்லை என்ற மணப்போக்குடன் செயல்படுவது ஆகியவற்றை, பார்க்க முடிகிறது. இது ஒரு குறிப்பிட்ட மாணவர் போராட்டம், கல்வி கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டம், என குறுக்கிவிட முடியாது. ஜனநாயக குரலை, அறிவு ஜீவிகளின் வலிமையை, மாற்றுக் கொள்கை வடிவமைத்து போராடுவதை ஒடுக்க முயற்சிக்கும், சர்வாதிகாரப் போக்கு என புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பாசிச சக்திகளுக்கு இன்று இந்தியாவில் தேவை ப்படும் ஒடுக்குமுறை.

எனவே தான் இந்தியாவின் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும், ஜே.என்.யு மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து, அறிக்கை வெளியிட்டு உள்ளன. ஆதரவு போராட்டத்திற்கான அழைப்பு விடுத்துள்ளன. அண்மையில், பாரிஸ், சிக்காகோ, கலிபோர்னியா, சிலி போன்ற நகரங்களிலும், மாணவர் - தொழிலாளர், ஆசிரியர் - மாணவர் ஆகியோரின் ஒன்று பட்ட போராட்டம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. தலைநகர் டில்லியிலும் அத்தகைய வெற்றிக்கு வாய்ப்பிருக்கிறது. இந்தியா முழுவதும் இந்த ஒன்றுபட்ட போராட்டங்கள் அணிவகுக்க வேண்டிய தேவை, அதிகரித்துள்ளது. ஜே.என்.யு மாணவர்கள் முழக்கமிடுவது போல், நாடே முழங்கட்டும், We People United Shall Always be victorious..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக