செவ்வாய், 2 ஜூன், 2020

கொரானா கால தொழிலாளர் சட்ட திருத்தங்கள்

தொழிலாளர் சட்டத்திருத்தம்... ஜனநாயக வளர்ச்சிக்கு ஆபத்து...


கால சக்கரத்தை பின்னோக்கி நகர்த்த, உழைக்கும் வர்க்கம் போராடி பெற்ற அனைத்து உரிமைகளையும் பறித்து கொள்ள, கொரானா பொது முடக்க காலத்தை, மத்திய பாஜக ஆட்சி மற்றும் நவ தாராளமய ஆதரவு கட்சிகள் கூட்டாக செய்து வருகின்றன. தொழிலாளர்கள் மீதான இந்த உரிமைப் பறிப்பு, அனைத்து பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் மிகக் கடுமையாக பாதிக்கும். ஒன்று அரசியல் ரீதியில் ஏற்பட்டு இருக்கும் ஜனநாயக பின்னடைவை மேலும் அதிகப்படுத்தும். இது நவதாராளமய ஆதரவு அரசியல் இயக்கங்களுக்கு தெரியாமல் இல்லை. அவர்கள் வெறுமனே பாஜக எதிர்ப்பு மட்டுமே, மாற்று அரசியல் கட்சியை ஆட்சியில் அமர்த்தும் என்ற கனவில் உள்ளதாக தெரிகிறது. மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் அனைத்தும் பொருளாதார மற்றும் வாழ்வாதார பதிப்புகளுடன், வகுப்புவாத அரசியலையும் இணைத்து கொண்டதால் உருவானது என்பதை தெரியாதது போல் இருப்பது அழகல்ல. இந்த அரசியல் உணர்வை கூட்டுபேர ஜனநாயகம் வலிமை அடைந்த நாடுகளில், இடதுசாரி அரசியல் வலுப்பெறுகிற போது மாற்றி அமைக்க முடியும்.

ஜனநாயக வளர்ச்சியின் முதல் படி, அம்பேத்கர் அவர்கள் கூறியவாறு, “ஒரு வாக்கு ஒருமதிப்பு” என்ற தன்மையில் அமைய வேண்டும். மூலதனம் மற்றும் கட்டுபாடற்ற முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தை, கட்டுக்குள் வைக்க இந்த கூட்டு பேரம் மற்றும் வலிமையான தொழிலாளர் சட்டங்கள் ஓரளவு பயந்தரும். அடுத்ததாக இதைப் பயன்படுத்தி, அமைப்பு சாரா மற்றும் கிராமப்புற உழைப்பாளர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை வென்றடைய முடியும். இதை இந்திய ஆளும் வர்க்கம் நன்கு அறிந்த காரணத்தால் தான், இந்திய தொழிலாளி வர்க்கத்தின் மீது முன் எப்போதும் இல்லாத வகையில் தாக்குதல் நடத்துகிறது.

இரண்டு இந்திய அரசின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் வசம் ஒப்படைப்பது. இது கம்யூனிஸ்ட் அறிக்கை குறிப்பிட்டதை போல் ஏகபோக முதலாளிகளின் வளர்ச்சிக்கு தேவைப்படும் வகையில் நடைபெறுகிறது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தனியார் மயமாக்கல் அமலாகி வந்தாலும், இந்த கொரானா பொது முடக்க காலத்தில், மின்சாரம், பாதுகாப்பு தளவாடங்கள், விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி துறை,  கல்வி நிறுவனங்கள் ஆகியவையும், தனியார் பெரு முதலாளிகளிடம் ஒப்படைக்கப்படும், என்ற அறிவிப்பு மிக மோசமானது. அதேபோல் வனங்களும் தனியாரிடம் ஒப்பட்டைக்கப்படுக்கிறது. இதெல்லாம் கடந்த காலங்களில் தயங்கி நின்ற நடவடிக்கைகள் ஆகும். இது தொழிலாளி வர்க்கத்திற்கு உள்ள உரிமைகள் பறி போவது மட்டுமல்ல. இங்கு வேலைவாய்ப்பு பறிபோவதன் மூலம், சமூக நீதியின் அடித்தளமான இடஒதுக்கீடு, படிப்படியாக அழிக்கப்படும். ஒட்டு மொத்த அரசு சொத்துக்களும், அரசு நிறுவனங்களும் தனியார் பெருமுதலாளிகளுக்கு மாற்றப்படுவதன் அறிகுறி.

மூன்று இந்திய ஆட்சியாளர்கள் எப்போதெல்லாம் மக்களை வாட்டும் துயரத்தை கண்டு கொள்ளாமல், நிர்வாணமாகி, அம்பலப்பட்டு உள்ளனரோ. அப்போதெல்லாம், தேசிய வெறியை கிளறி விட்டு குளிர் காய்ந்திருக்கின்றனர். இப்போது இருக்கும் ஆட்சியாளர்கள் வகுப்புவாத வெறியுடன், இந்துத்துவா அரசியலை திணிப்பவர்கள். இவர்களுக்கே, மேற்குறிப்பிட்ட இரண்டு கொள்கைகளையும் அமலாக்க, பொதுமுடக்கம் தேவையாக இருக்கிறது. காரணம் அந்த அளவிற்கு வலுவான தொழிற்சங்க மற்றும் இதர வெகுமக்கள் அமைப்புகள் வலுவாக இருந்துள்ளன. அதன் அடிக்கட்டுமானத்தை நாசமாக்கும் வழியில்தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சட்டதிருத்தங்கள்:

சட்ட திருத்தங்கள் திடீரென அமலுக்கு வரவில்லை. பொதுத்துறை விற்பனை, தனியார் மேலாதிக்கம், மூலதன விரிவாக்கம் ஆகியவற்றிற்கு, இந்திய தொழிற்சங்கம் ஒரு தடை என்பது மிகையல்ல. ஆனாலும் தொழிலாளர் சட்டங்கள் 44வகைகளும், 4 கோடு என்ற பெயரில் திருத்தம் செய்யப்பட்டது. தொழிலாளர் துறையின் அதிகாரிகளுக்கான அதிகாரம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கான உரிமைகளை குறைப்பது என்ற நோக்கத்தில், நவதாராளமய மூலதனம் மற்றும் ஆட்சியாளர்களின் நோக்கம். அந்த வகையில் இந்த திருத்தம் முன்மொழியப்பட்டது. பாஜக ஆட்சிக்கு வந்த பின், நான்கு வேலை நிறுத்தங்கள் இந்த பின்னணியில் தான், தொழிலாளி வர்க்கத்தால் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 20 கோடி தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தங்களில் பங்கெடுத்துள்ளனர் ( அனைத்து வெகுமக்கள் அமைப்புகளின் பங்கெடுப்பு சேர்த்து). தொழிலாளர்களின் எதிர்ப்பு வீரியம் பெறுவதை புரிந்து கொண்ட காரணத்தால் தான், பாஜக ஆட்சி, இந்த பொது முடக்க காலத்தை பயன்படுத்துகிறது. சமூகபாதுகாப்பு கோடு, சம்பளம் கோடு, ஆகியவை ஏற்கனவே சட்டமாகி உள்ளது.

தற்போது பொது முடக்க காலத்தில், வேலைத்தள பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், தொழிலுறவு சட்டம் ஆகியவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, அந்த நிலைக்குழு கூடாமலேயே இருந்தது. இந்த பொது முடக்க காலத்தில், அந்தகுழு இணையம் மூலம் கருத்து கேட்பு நடத்தி விரைவாக அறிக்கையை தாக்கல் செய்திருப்பது, கார்ப்ப்ரேட் பெரு முதலாளிகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதாகும். இந்த குழுவில் 21 பேர் உள்ளனர். பல கட்சிகளும் உள்ளன. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க ஆகிய உறுப்பினர்களான, எளமரம் கரீம், க. சுப்பராயன், மு. சண்முகம் ஆகியோர் மட்டுமே எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளனர். மற்ற அனைவரும் முதலாளிகளுக்கு சாதகமான திருத்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதன் விளைவு தான், பாஜக ஆட்சியில் உள்ள, குஜராத், உ.பி, ம.பி, ஹரியானா, இ.பி, கர்நாடகா ஆகியவையும், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான், பஞ்சாப், சிவசேனை மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மகராஷ்ட்ரா, பிஜு ஜனதா தளம் ஆட்சியில் உள்ள ஒடிசா, மற்றும் தெலுங்கானா மாநிலம் ஆகிய 11 மாநிலங்கள் தற்போது துவக்க கட்டமாக சட்டங்களை நிறுத்தி வைப்பதாக அல்லது சிலவற்றை திருத்துவதாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  தமிழக முதலாளிகள் பரவலாக தமிழக அரசும் இதர மாநிலங்களை போல், தொழிலாளர் சட்ட அமலாக்கத்தை நிறுத்தி வைக்க கோரிக்கைகள் வைத்து வருகின்றன.

இந்த திருத்தங்கள் மேலும் மூலதனக் குவிப்பை அதிகப்படுத்தும். குறிப்பாக இந்தியாவில் உள்ள பெரும் பான்மை மக்களின் மொத்த சொத்து மதிப்பும், ஒரு சதம் முதலாளிகளின் சொத்து மதிப்பிற்கு சமம், என்பது மேலும், ஒரு சத முதலாளிகளுக்கு சாதகமாக அமையும். ஒரு காலத்தில் நிலம் குவிந்திருந்ததைப் போல், இப்போது மூலதனம். உழைப்பு சுரண்டல் மிக மோசமாக அதிகரிக்கும். வேலையின்மை அதிகரிப்பால் வேலையில் இருப்போரின் வேலைக்கு உத்தரவாதம் இருக்காது. போட்டியும், வாழ்க்கை நெருக்கடியும் போராட்டங்களை கூட, வலுவற்றதாக மாற்றலாம். எனவே தான் இந்த சட்ட திருத்தங்கள் ஆபத்தானது. தொழிலுறவு சட்டம் மூலம், தீர்வு காண்பதும், எளிதல்ல. எல்லாவற்றிற்கும் மேல், உலகில் உள்ள மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தீர்மானங்களான, ஒன்று கூடும் உரிமை (87), கூட்டு பேர உரிமை (98) ஆகிய தீர்மானங்களுக்கு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. மேற்படி தீர்மானங்கள் 1947,1948 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டது. இந்த பின்னணியில் உழைப்பு சுரண்டல் மேலும் இந்திய தொழிலாளி வர்க்கத்தை பாதிக்கும்.

வேலை நேர அதிகரிப்பிற்கான முயற்சியே பிரதானம்:

சுமார் இருநூறாண்டு கால போராட்டத்தின் வெற்றியே, எட்டு மணிநேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேரம் இதர பணிகள் என்பதாகும். நவீன இயந்திரங்கள், ஆர்ட்டிபிசியல் இண்டெலிஜெண்ட் (செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள்) ஆகியவை கண்டறியப்பட்ட பின்னணியில், வேலைநேரத்தை குறைப்பதும், புதிய வேலை வாய்ப்பை உருவாக்குவதுமே, பொருளாதாரம் சரியான திசையில் சுழலுவதற்கு உதவி செய்யும். ஆனால் முதலாளித்துவத்தின் லாபவெறி அல்லது மூலதனத்தின் தன்னைத்தானே விரிவாக்கிகொள்ளும் வெறி, வேலை நேரத்தை அதிகப்படுத்த கோருகிறது. இந்திய ஆட்சியாளர்கள் இதற்கான சட்டத்தை திருத்துகின்றனர்.

தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத்தில், இருந்த வேலைநேர குறித்த பிரிவுகள் 51,52 ஆகியவை தற்போது திருத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே ஒருநாளின் வேலைநேர எட்டு மணிநேரமாக இருந்தது. ஒருவாரத்திற்கு மிகைப்பணி சேர்த்து 54 மணி நேரம் என வரையறை செய்யப்பட்டு இருந்தது. இப்போது, ஒருநாளின் வேலைநேரம் 12 எனவும், வாரத்திற்கு மிகைப்பணி சேர்த்து 72 மணி நேரம் எனவும் திருத்தப்பட்டுள்ளது. மிக கொடிய சட்ட திருத்தம் ஆகும். உலகின் வேறு எந்த ஒரு நாடும் இவ்வாறு பகிரங்க உரிமைப் பறிப்பு செயலில் ஈடுபட்டதாக தெரியவில்லை. சீனாவில் இருந்து தொழில் மூலதனம் வெளியேறுவதாகவும், அதை ஈர்க்க இப்படி ஒரு தேவை இருப்பதாகவும் கூறப்படுவது, தவறான ஒன்று. அங்கு சந்தை விரிவாக்கம் அதிகம். இந்தியா குறைவான தொழிலாளர் சட்டம் மற்றும் ஊதிய விகிதாச்சாரம் கொண்டுள்ள நாடு, இங்கு மக்கள் தொகை எண்ணிக்கை, உள்நாட்டு சந்தை விரிவாக்கம் ஆகியவற்றை கொண்டு, தாராளமாக பன்னாட்டு மூலதனத்தை ஈர்க்க முடியும். ஆனால் பாஜக ஆட்சியாளர்கள் நாம் போராடி பெற்ற உரிமையை அடமானம் வைத்து, பன்னாட்டு மூலதனத்திற்கு பட்டு கம்பளம் விரிக்கிறது.

வேலை நேரம் உயர்வு, தொழிலாளர்களின் சராசரி ஆயுள் காலம் தற்போது 66 என்பதை மேலும் குறைக்கும் நடவடிக்கையாக இருக்கும். அடுத்து வேலையின்மையை பலமடங்கு உயர்த்தும், ஏனென்றால் தற்போது இந்தியாவில் வேலையின்மையும், தனிநபர் வருமானமும் சந்தையில் நுகரும் தன்மையை குறைவாக வைத்துள்ளது. இந்நிலையில் வேலை நேரம் அதிகரிக்கப்படுவது, மேலும் வேலையின்மையை அதிகப்படுத்துவதுடன், சந்தையையும் கடுமையாக பாதிக்கும். எனவே ஜனநாயக செயல்பாட்டிற்கும், சந்தை இருத்தலுக்கும், மத்திய பாஜகவின் பெரு நிறுவன ஆதரவு சட்ட திருத்தங்கள் பாதகமாக இருக்கும் என்பதை வலுவாக எடுத்து செல்ல வேண்டும்.

இந்திய வரலாறு:

இந்தியா சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றாலும், போராட்டங்கள் மூலம்,  இந்திய தொழிலாளி வர்க்கம் தனக்கான, கூட்டு பேரத்தை உறுதி செய்து கொண்டது. இதை ஜனநாயக அரசியல் இயக்கங்களும் ஆதரித்தன. இந்தியாவின் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் 1990 நவதாராளமய பொருளாதார கொள்கை அமலாக்கத்துடன், அவதாரம் எடுத்த காரணத்தால் இந்த வரலாற்றை அங்கீகரிப்பதில்லை. வேலைநேர எட்டு மணி நேரம் என்பதை, சிங்காரவேலர் சென்னையில் 1923 மே, 1 கொடியேற்றி கோரிக்கை வைத்த நாளில் இருந்து, தொழிலாளி வர்க்கம் விழிப்புணர்வு பெற்று இருக்கிறது. அந்த விழிப்புணர்வு தாராளமய பொருளாதார கொள்கை அமலாக்க காலத்தில், பின்னடைவை சந்தித்திருந்தாலும், தற்போது அடக்கு முறையும், ஒடுக்குமுறையும் அதிகரித்த நிலையில், வீரியம் பெறவே செய்துள்ளது.

இந்த வீரியத்திற்கு அமைப்புகளே, மேலும் முன்னேறிசெல்லும் வடிவம் கொடுக்க முடியும். இடதுசாரி சிந்தனையும், அரசியலும் நெருக்கடிகளை எதிர் கொள்வதற்கு சரியான கருத்தாயுதம், என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. கொரான தடுப்பு, நடவடிக்கைகளில் சீனா, வியட்நாம், வடகொரியா, கியூபா, கேரளா ஆகிய ஆட்சிகளே சரியாக செயல்பட்டுள்ளன. முதலாளித்துவம் அடுத்தவர் மீது குற்றம் சுமத்தி தப்பித்து கொள்ள முயற்சிக்கிறது. எனவே ஆள்விஒரின் தாக்குதல் அரசியலை எதிர்ப்பது என்பதுடன் மாற்றத்தை முனவைத்து வலுவான போராட்டத்தை நடத்துவதே தீர்வு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக