வியாழன், 14 மே, 2020

எல்லை மீறிய உழைப்பு சுரண்டலுக்கு மூலதனத்தை அழைக்கும் பாஜக....
எஸ். கண்ணன்



பொது முடக்கத்தில் தொழிலாளர்களையும், ஜனநாயக அமைப்புகளையும் முடக்கி, தீவிரமாக செயல்படுகிறது, அரசும், முதலாளித்துவமும். மார்க்ஸ் சொன்னது போல் மூலதனம் தன்னை மேலும் மேலும் அதிகரித்து கொள்வதற்கு, இந்த கொரானா கொள்ளை நோய் காலத்தையும், விட்டு வைக்கவில்லை. பொது மருத்துவம் பறிக்கப் பட்ட மக்களுக்கு, கொரானா நோய் இருக்கிறதா இல்லையா என்பதை பரிசோதித்து கொள்வதும் கூட, மிக அதிக செலவு பிடிக்கிறது. தனியார் பரிசோதனை மையங்கள் ரூ 4500 வசூலிக்க அரசே வழிகாட்டுகிறது. தங்களின் அடிப்படை தேவை என்ன என்பது குறித்து முடிவெடுக்க முடியாத பொதுபுத்தியை, அரசும் அதைக் கட்டுப்படுத்தும் சமூக அமைப்பும் வடிவமைத்து இருக்கிறது. இறக்குமதி செய்த கருவிகள் அப்பட்டமாக விலை அதிகம் கொடுக்கப்பட்ட செய்தி, பரபரப்பாக மாறினால், மதுக்கடைகளை திறந்து, அதுகுறித்த விவாதப் பொருளில் மக்களை திசைதிருப்புகிறது. அரசு கஜானாவை சூறையாடும் பணியை, ஆளும் கட்சி தலைவர்களும், முதலாளிகளும் போட்டி போட்டு செய்கின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பொருளாதார கொள்கையான, ஏகாதிபத்திய உலகமயமாக்கல் இந்த நிலை உருவாக பெருமளவு பங்களித்துள்ளது. எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி இதழில், நோய்தொற்றும் முதலாளித்துவமும் என்ற கட்டுரையை சண்டிபன் பக்சி என்பவர், எழுதியுள்ளார். இதில் மூன்று முக்கிய அம்சங்கள் முன்வைக்கப்படுகிறது. ஒன்று பொது சுகாதாரப் பராமரிப்பு குறித்த பணிகள், அரசிடம் இருந்து படிப்படியாக தனியார் முதலாளிகளுக்கு கைமாற்றுதல் செய்தது. இரண்டு இதுவரையிலும் இல்லாத வகையில், போக்குவரத்து ஏற்பாடுகள் மூலம் வேலை வாய்ப்புக்காகவும், சந்தைக்காகவும் உலகம் முழுவதிலும் ஒட்டி உறவாடும், புதிய சூழலை உலகமய பொருளாதாரக் கொள்கை அதிகரித்தது. மூன்று இயற்கை மற்றும் சுற்றுச் சூழலை அழித்து ஒழித்தது. முதலாளித்துவம் காடுகளை அழித்ததும், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட மொத்த விவசாயமும் தொழிற்சாலை போல் மாற்றப்பட்டது ஆகும், எனக் கூறுகிறார்.

உலகம் 1918 ல் இன்ஃபுளுவன்ஸா உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்றுகளுடன் போராடிய போதும் பாடம் கற்கவில்லை. காரணம் முதலாளித்துவத்தினுடைய அதீத லாபவெறி, அனைத்தையும், தனியாருக்கு தாரை வார்க்கும் போக்கு, எல்லாவித எதிர்ப்புகளையும் புறக்கணித்தது. அறிவியலும் தொழில் நுட்பமும், மருத்துவ துறையில் கோலோச்சினாலும், நிதிமூலதனத்தின் தாக்கம், இன்சூரன்ஸ் நிறுவனங்களை வளர்த்தது. தனியாரிடம் மருத்துவம் ஒப்படைக்கப்பட்டாலும், காப்பீடு மூலம், சிகிச்சை கிடைக்கிறதே, என்ற திருப்தியுணர்வை, ஒவ்வொருவரிடமும் மேலோங்க செய்திருக்கிறது. முதலாளித்துவ சமூகத்தின் பொதுபுத்தி கட்டமைத்தலின் ஒரு பகுதியாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது.

கொள்ளை நோய் காலத்திலும் கார்ப்பரேட் பாசம்:

தாராளமய பொருளாதாரக் கொள்கை துவங்கிய காலத்தில் இருந்தே, தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் கார்ப்பரேட் ஆதரவு செயல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. தற்போதைய கொரானா பாதிப்புக்கு எதிராக கார்ப்பரேட் மட்டுமல்ல, அனைத்து பகுதி மக்களும் முடங்கி இருக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்புகளை பெரிதாகவும், சாதரண மக்களின் இழப்பை ஒரு பொருட்டாக மதிக்காத வகையிலும் சித்தரிக்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் இழப்பை நிவர்த்தி செய்ய ஊதியம் வெட்டு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வழி காட்டப்படுகிறது. உற்பத்தி இல்லை, வருவாய் இல்லை, எப்படி நிறுவனங்கள் ஊதியம் அளிக்க முடியும் என்ற கேள்விகள் மூலம், ஊதிய வெட்டை அமலாக்கிடும் பாதுகாப்பு கவசம் முதலாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

உலக அளவிலும் இது போன்ற செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் H-1B விசா பெறப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட கொள்ளை குறித்து ட் ரூத் அவுட் இணைய இதழ் பலவகைகளில் அம்பலப்படுத்தி உள்ளது. H-1B விசா அமெரிக்காவில் பணிக்காக சென்றவர்களுக்கு கிடைக்கும் ஒரு அங்கீகாரமாக கருதப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் 30 முன்னணி நிறுவனங்கள் H-1B விசா வழங்கப்பட்ட ஊழியர்களை மிக. அதிகமாக பயன்படுத்தி வருகின்றன. மைக்ரோசாப்ட், ஆப்பிள், ஃபேஸ்புக், அமேசான், வால்மார்ட், கூகுள் போன்றவை, முக்கியமானவை. இந்த நிறுவனங்கள் தொழில்நுட்பம் மற்றும் கோட்பாடு ரீதியில் அறிவு படைத்தவர்களுக்கான ஊதியம், அமெரிக்க சட்டத்தின் படி தீர்மானிக்கப்பட்டவாறு வழங்கப்படவில்லை. குறைவாக வழங்கப்படுகிறது, எனக் கூறப்படுகிறது. லெவல் 2 க்குரியவருக்கு லெவல் 1 அளவில் ஊதியம் வழங்கப்படுகிறது. இது தொழிலாளர் துறையின் அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவின் பல நிறுவனங்களில் ஊதியம் குறைப்பு அமல்படுத்தப்படுகிறது. பிரதமர் மோடி, ஏப்ரல் 14 அன்று இரண்டாவது முறையாக பொது முடக்கம் குறித்து உரை நிகழ்த்தும் போது, நிறுவனங்கள் ஊதியத்தை வெட்டக்கூடாது, ஆட்குறைப்பு செய்யக்கூடாது போன்றவைகளை தெளிவாக கூறினார். ஆனால் இங்குள்ள தனியார் நிறுவனங்கள் இதை மீறும் வகையில் நடந்து கொள்கின்றன. பெரும்பான்மையான ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் 10 முதல் 30 சதம் ஊதிய வெட்டு அமலாகியுள்ளது. வர இருக்கும் மே, ஜூன் மாதங்களிலும் ஊதியம் வெட்டப்படும் என்பதை குறிப்பிடுகின்றனர். பல தகவல் தொழில் நுட்ப ஊழியர்களுக்கு, ஊதிய வெட்டு பகிரங்கமாக அறிவிப்பு செய்யப்படுகிறது. இதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவை சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அல்ல. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகும். லாபவிகித குறைவு, பெரு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை, ஏற்க முடியாத மனநிலையை உருவாக்குகிறது. கடந்த ஆண்டு லாப விகிதத்தை விடவும் நடப்பு ஆண்டு லாப விகிதத்தை அதிகரிக்க, எந்த ஒரு மனித தன்மையற்ற செயலையும் செய்யலாம், என பெரு நிறுவன நிர்வாகத்தினர் முடிவு செய்கின்றனர்.

கடந்த காலங்களில் அடைந்த லாபத்தை கேள்விக்கு உட்படுத்தி ஊதியம் வழங்கும் நிர்பந்தத்தை அரசுகளால் செய்ய முடியவில்லை. முன்மாதிரியாக இருக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் அடுத்த ஒன்னரை ஆண்டுகளுக்கு அகவிலைப் படி உயர்வு இருக்காது என அறிவித்துள்ளன. எதிர்வரும் மாதங்களின் நிலை குறித்து அரசுகளும், முதலாளித்துவமும் திட்டமிட்டு ஒரு பதட்ட நிலையை உருவாக்குவதாக இதைப் புரிந்து கொள்ள முடியும். இந்த பதட்ட நிலையில் கிடைத்த வரை போதும், அல்லது இந்த முடக்கம் தொழிலாளர்களை விடவும்,  முதலாளிகளுக்கே பாதிப்பை உருவாக்கியுள்ளது, என்ற கருத்தை ஆழமாக பதிய வைக்கும் செயலாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்ட, ஊதிய விகிதம் குறைந்து வருவது குறித்த கருத்துக்கள் இந்நிலையில் முக்கியத்துவம் பெறுகின்றன. 20 மற்றும் 21 வது அகில இந்திய மாநாட்டு அறிக்கைகளில், “நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது, ஆலைகளுக்குள் கூட்டுபேர உரிமையற்ற ஒப்பந்த மற்றும் பயிற்சி தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது ஆகிய செயல்கள் மூலம், தொழிலாளர்களுக்கான ஊதிய பங்கு, 30 சதத்தில் இருந்து 10 சதமாக கடந்த 30 ஆண்டுகளில் குறைந்துள்ளது” எனக் கூறியது. இதையே சர்வ தேச தொழிலாளர் அமைப்பு பல பத்தாண்டுகளாக ஊதிய விகிதம் தேக்க நிலையில் உள்ளது, எனக் கூறியுள்ளது.

மார்க்ஸிஸ்ட் கட்சியின் 22 வது அகில இந்திய மாநாட்டு அறிக்கை, “1972 முதல் 2013 வரையான கட்டத்தில், அடிமட்டத்தில் உள்ள 10 சதம் மக்களின் உண்மை வருமானம் வீழ்ச்சியை சந்தித்தது. உச்சத்தில் உள்ள 10 சதவீதத்தினர் அனைத்து விதமான பலன்களையும் அனுபவித்தனர். இடையில் உள்ள தொழிலாளர்களின் வருமானம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட விகிதாச்சார அளவில் குறைவை சந்தித்துள்ளது. மொத்தத்தில் 90 சதம் மக்களின் உண்மை வருமானம் தேக்க நிலையில் முப்பது ஆண்டுகாலமாக உள்ளது”, எனக் குறிப்பிடுகின்றது. இந்த விவரங்கள் சுரண்டலின் தன்மையை வெளிப்படுத்துகின்றன.

30 ஆண்டுகளாக தேக்க நிலையில் இருக்கும் ஊதிய விகிதம், தற்போது கொரானா பாதிப்பு காலத்தில் குறைக்கப் படுவதன் மூலம், நிறுவனங்களின் லாபவிகிதம் தக்க வைக்கப்படுகிறது. சமையல் எரிவாயு மான்யம் வேண்டாம், என மக்கள் முடிவெடுக்க, அவர்களின் உணர்ச்சியைத் தூண்டி விட்டது போல், இப்போது, திரை உலக பிரபலங்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் தங்களின் ஊதியத்தில் ஒரு பகுதியை குறைத்து கொள்ள முன்வருவதாக, அறிவிக்கின்றனர். இதை தொலைக்காட்சிகள் செய்தியாக்குவதும், அந்த செய்தியை வாசிக்கும் வாசிப்பாளர், இந்த ஊதிய வெட்டுக்கு ஆளாவதும் சாதாரண நிகழ்வுகளாகின்றன. லாப விகிதத்தின் தொடர் உயர்விற்காக, கட்டமைப்படும் கருத்தாக்கம் இவை என்பதை, தீவிர பிரச்சாரமாக எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.

மீண்டும் உருவாகுமா பொருளாதார நெருக்கடி? :

நாம் சிக்கன நடவடிக்கையை கையாளாவிடில், நாடு மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ளும், என சிலர் வாதிடுகின்றனர். கொரானா கால உற்பத்தி முடக்கம் மீண்டு வர ஒரு வருடம் கூட ஆகலாம். எனவே. நிறுவனங்களின் நிதி சமாளிப்பு திறன், தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் சாத்தியம் என்ற வகையிலும், தொழிற்சங்கம் இல்லாத இடங்களில் நிர்வாகம் இந்த அளவு நடந்து கொள்வதே மிகத் தாராளமானது என்பதையும் திணிக்கின்றனர். பொருளாதார நெருக்கடியை அனைவரும் சமமாக பகிர்ந்து கொள்வதே நியாயமற்றது. ஆனால், வறியவர் தலையில் அதிகம் திணிப்பது, மிகக் கொடிய ஒன்றாகும்.

2008 ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, உலகின் பல நாடுகளை பாதித்தது. இந்தியாவிலும் தகவல் தொழில் நுட்ப துறையில் வேலைஇழப்பை கூடுதலாக உருவாக்கியது. அதையொட்டி ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பு போன்ற நடவடிக்கைகள் கையாளப்பட்டன. அதாவது நெருக்கடி காலத்திற்கான அரசு நிவாரணத்தை பெற்ற தனியார் நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்களிடம் இருந்தும் கணிசமாக பறித்துக் கொண்டது. அதேபோல் பொருளாதார பெருமந்தம் குறித்து, பேரா. மணிக்குமார் ஆய்வு செய்து எழுதிய, “1930களில் தமிழகப் பொருளாதாரம்”, சில விவரங்களைத் தருகிறது.  அதில் தொழில் பற்றி விவாதிக்கிற போது, “துணி உற்பத்தியைப் பொருத்தளவில் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் 25 சதம் வீழ்ச்சி கண்டது. அதேநேரம் இந்தியா 41 சத உயர்வை எட்டியது. இரும்பு உற்பத்தியில் அமெரிக்காவும், இங்கிலாந்தும் முறையே 20 சதம் வீழ்ச்சி கண்டது. இந்தியா 75 சத உயர்வை அடைந்தது. பருத்தி உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளிட்ட பலவும் வளர்ச்சி பெற்றது”, எனக் கூறுகிறார்.

இதற்கு எதிர் திசையில் சிறு மற்றும் குடிசைத் தொழில்கள் அழிவை சந்தித்த விவரங்களையும் பேரா. மணிக்குமார் பட்டியலிடுகிறார். அதற்கு காரணமாக, பெருமந்தத்தில் இருந்து மீட்சி பெற அமெரிக்காவும், இங்கிலாந்தும் இதர சில நாடுகளும் இந்தியாவில் இறக்குமதி செய்து குவித்த நுகர் பொருள்கள், ஆகும். ஒட்டு மொத்தமாக தொழில்துறையில் பெருமந்தம் ஏற்பட்டு இருந்ததால், வேலை இழப்பும், கூலி குறைப்பும் அதிகரித்தது என்கிறார். ஆனால் இதற்கு எதிரான தொழில் தாவா வழக்குகள் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை, என்பதையும் பதிவு செய்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட விவரங்கள் உற்பத்தி திறன் இன்றிலிருந்து, பின் தங்கியிருந்த காலமாகும். இன்று உற்பத்தி திறன் அதிகரித்துள்ளது. எனவே அந்த சூழ்நிலைகளை முழுமையாக இன்றைய காலத்திற்கு பொருத்திப் பார்க்க முடியாது. ஆனால் படிப்பினைகள் உள்ளது. அதாவது ஒருபகுதி வேலையிழப்பு உருவாக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள வேலை வாய்ப்பில் நெருக்கடியை உருவாக்கும் மூலதனத்தின் செயல்பாடு ஆகும். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களின் வளர்ச்சி உருவாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட உலகின் பல நகரங்களில் கொரானா பாதுகாப்பு நடவடிக்கைகளில் ரோபோக்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனவே ஒருபகுதி வேலைஇழப்பும், மற்றொரு புறம், புதிய தொழில்நுட்பம் கற்றவர்களின் ஒரு பகுதியினருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் நிலை உருவாகலாம்.

கொரானா வைரஸ் குறித்து, வெளிப்படையாக சீனா நடந்து கொள்ளவில்லை, எனவே அங்குள்ள தொழில் மூலதனத்தை பிறநாடுகளுக்கு இடமாறுதல் செய்ய அமெரிக்கா மற்றும், ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் சொல்லப்படுகின்றன. இதை ஈர்க்க தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் சிறப்பு குழுக்களை நியமித்துள்ளன. பாஜக ஆளும் பல மாநில அரசுகள் இதை யொட்டியே தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

சட்டத் திருத்தங்கள்:

இதுவரையிலும் இந்திய நாடாளுமன்றம் நியமித்த நிலைக்குழுக்கள், பல ஆண்டுகளுக்கு பின்னரே தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளன. ஆனால் தொழிலாளர்களின் வேலை நேரத்தை தீர்மானிக்கும், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த சட்டத் தொகுப்பை, நிலைக்குழுவிற்கு நாடாளுமன்றம் கடந்த அக்டோபரில் ஒப்படைத்தது. இக்குழு இந்த பொது முடக்க காலத்தில் அவசர அவசரமாக இணையம் மூலம், உறுப்பினர்களின் கருத்தறிந்து, அறிக்கை சமர்பித்துள்ளது. மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க ஆகிய கட்சிகளுடைய உறுப்பினர்களின் எதிர்ப்பை உதாசீனம் செய்து மேற்படி குழு அறிக்கையை அளித்துள்ளது. அதில் வேலைநேரத்தை 8 மணியில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தவும் பரிந்துரைத்துள்ளது. இதை அடியொற்றி குஜராத், மத்தியப்பிரதேஷ், இமாச்சலபிரதேஷ், அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசாஆகிய மாநிலங்கள் வேலைநேரம் 12 என தீர்மானித்து சட்டம் அல்லது அவசர சட்டங்களை இயற்றி வருகின்றன. உ.பி. மாநில அரசு குறைந்த பட்ச கூலிச்சட்டம், மற்றும் குழந்தை உழைப்பாளர் தடுப்பு சட்டம் தவிர மற்ற தொழிலாளர் சட்டங்கள் அனைத்தையும் மூன்று வருடங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அவசர சட்டம் இயற்றி உள்ளது.

சுமார் 55 நாள்கள் உற்பத்தி துறை முடங்கியதை, சரிகட்ட ஒவ்வொருநாளும் 4 மணிநேரம் கூடுதலாக உற்பத்தியில் ஈடுபடுவது, அவசியமா? என்ற கேள்வி தாராளமய பொருளாதார கொள்கைவாதிகளுக்கு கேட்கப்போவதில்லை. வேலைநேர அதிகரிப்பு, வேலைப்பறிப்பை அதிகரிக்கும், உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும், சந்தையில் நுகர்வும் குறையும். ஆனால் பாஜகவின் மத்திய ஆட்சியாளர்கள், இத்தகைய விளைவுகள் குறித்தும் வாதிட தயாரில்லை. சீனாவில் குவிந்திருக்கும் இதர நாடுகளின் மூலதனத்தை ஈர்ப்பது மட்டுமே முக்கியம், என்கிறது, பாஜக. பன்னாட்டு மூலதனத்திற்காக, இந்திய தொழிலாளர்களின் உழைப்பை, அப்பட்டமாக கொள்ளையடிக்கும் உரிமத்தை வழங்கும், முகவராக பாஜக வின் ஆட்சி மாறியுள்ளது.

காரல் மார்கஸ் குறிப்பிட்டது போல், உழைப்பு சக்தியின் விலையைக் குறைக்கும் நடவடிக்கையில் அரசுகள் ஈடுபடுகிறது. தேக்கத்தில் இருந்த ஊதிய விகிதத்தை பின்னோக்கி நகர்த்த எடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும். வேலைநேரம் உயரும்போது, கூலியின் அளவு உயராமல் கட்டுக்குள் வைக்கும் ஏற்பாடும் இதற்குள் உள்ளது. ஏற்கனவே இடம்பெயர் தொழிலாளர்கள் 12 மணிநேரம் வேலை செய்து குறைவான கூலி பெறுவதை, இப்போது அனைத்து தொழிலாளருக்கும் பொதுவாக்கும் பணியை, செய்கின்றனர்.

கடந்த காலங்களை விட ஒரு குறிப்பிட்ட பொருளை உற்பத்திக்கான நேரம் தொழில் துறையில் குறைந்துள்ளது. அதன் விளைவே உற்பத்தி அதிகரிப்பு ஏற்படுகிறது எனவும், மற்றொரு புறம் தொழிலாளி மீது உழைப்பு சுரண்டல் அதிகரிக்கிறது எனவும் தாமஸ் பிக்கட்டி, 21 ம் நூற்றாண்டில் மூலதனம் எனும் நூலில் குறிப்பிடுகிறார். பணக்கார நாடுகளில் வேலை நேரம் குறையவும், ஓய்விற்கான நேரம் அதிகரிக்கவும், இது காரணம் எனவும் பிக்கட்டி கூறுகிறார். இந்தியாவிலும் ஆலைகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கான நேரம் குறைகிறது. ஒவ்வொரு தொழில்நுட்ப வளர்ச்சியையும் பயன் படுத்தி “சைக்கிள் டைம்” அதாவது பொருள் உற்பத்திக்கான நேரம் குறைக்கப்படுகிறது. அதன் மூலம் தொழிலாளர்களின் உபரி உழைப்பு நேரம் அதிகரிக்கிறது. எனவே வேலைநேரம் 12 மணிநேரமாக அதிகரிப்பதற்கு இந்தியாவில் அனுமதிப்பதை, தடுத்து நிறுத்த அனைத்து ஜனநாயக அமைப்புகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

இந்தியாவில் தற்போது வேலையின்மை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அவர்களுக்கு வேலை வழங்க உற்பத்திநேரம் குறைவை, முன்வைத்து திட்டமிட்ட முயற்சி வேண்டும்.  ஒருநாளைக்கு 8 மணிநேரம் என்பதற்கு பதிலாக, மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்தில் கூறியவாறு, வேலைநேரத்தை 6 மணிநேரமாக குறைக்க வேண்டும். அல்லது சி.ஐ.டி.யு அகில இந்திய மாநாடு தீர்மானம் கூறியது போல், ஒருநாளைக்கு 7 மணிநேரம், வாரம் ஐந்து நாள்கள் பணி என்பதாக திருத்த வேண்டும். அதன் மூலம் மூலதனக் குவிப்பை கட்டுபடுத்துவதுடன், வேலை வாய்ப்பு அதிகரிப்பு உள்ளிட்ட முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஒட்டு மொத்தமாக இன்றைய கொரானா பொது முடக்க காலத்தில், முதலாளித்துவமும், பாஜகவின் ஆட்சியாளர்களும் தொழிலாளர்களை கொள்ளையடிக்க எடுக்கும் முயற்சியை, தடுக்கும் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டியுள்ளது. மாற்று கோரிக்கைகளான, வேலைநேர குறைப்பு போன்றவற்றை முன் வைத்து, அனைத்து ஜனநாயக அமைப்புகளை ஒருங்கிணைப்பதே, இன்றைய தேவை.
 மார்க்சிஸ்ட் தமிழ் மே 2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக