திங்கள், 4 மே, 2020

வர்க்க ஒற்றுமையை வலியுறுத்துகிறது மே தின வரலாறு....
எஸ். கண்ணன்


ஆளும் அரசுக்கு எதிராக அல்லது, அடக்கிய கருத்தாக்கத்திற்கு எதிரான கலக குரல் எல்லாகாலத்திலும் இருந்துள்ளது. உலகம் உண்ண உண், உலகம் உடுக்க உடுத்து போன்ற, சமத்துவ எண்ணங்களும் ஆங்காங்கு, எல்லா காலத்திலும் பிரதிபலிக்கவே செய்துள்ளது. வலியோர் வென்றதாக சொல்லப்படும் ஒவ்வொரு நிகழ்விலும், எளியோரின் முன்னேற்றம் இல்லாமல் இல்லை. அது பௌதீக சக்தியாக ஆட்கொண்டு, எளியோரை வழி நடத்துவது, கருத்தியல் தளத்தில் அடையும் முன்னேற்றம் சார்ந்ததாகும். காரல் மார்க்ஸ் அத்தகைய கருத்தியல் பலத்தை, பாட்டாளி வர்க்கத்திற்கு அளித்துள்ளார். 1808 ல், பிலடெல்பியா நகரில் கட்டுமானத் தொழிலாளர்கள், தங்களின் வேலைநேரத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த போது, மார்க்ஸ் பிறந்திருக்கவில்லை. ஆனால் தாங்க முடியா பளுவை இறக்கி வைக்கும், ஆறுதலாக வேலை நேர குறைப்பை கருதுவதற்கும், சுரண்டலை தடுத்து, சமத்துவத்தை நோக்கி பயணிப்பதற்குரிய வழியாக வேலை நேரம் குறைக்கப்படுவதை பார்ப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. அதாவது அவசிய உழைப்பு நேரம், தனக்காகவும், உபரி உழைப்பு நேரம் சமுதாயத்திற்காகவும் இருப்பதை, தொழிலாளி உறுதி செய்வது, என்பதில் இருந்து, உபரி உழைப்பு நேரத்தை தனியார் வசம் அல்லது ஏகபோக பெருமுதலாளிகள் வசம் குவிப்பது வேறுபட்டது. காரல் மார்க்ஸ் இதை தெளிவு படுத்துகிறார்.

1886 ல் சிக்காகோ வீதிகளில் போராடிய லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மீது காவல்துறை கொடிய அடக்கு முறையை ஏவிவிட்டது. பலர் கொல்லப்பட்டனர். தலைவர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை என்ற பெயரில் நாடகம் நடத்தி, 4 பேர், தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைசஸ், சாமுவேல், ஜார்ஜ் எங்கெல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். அன்றைய ஜனநாயக சக்திகள் இந்த போராட்டத்தின் நியாயத்தை வலியுறுத்திய அடிப்படையில், எட்டு மணி நேர உழைப்பு என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் சட்டமாக நிறைவேற்றப்படவில்லை. மேற்படி தியாகிகளுக்கு தொழிலாளர்கள் நினைவுச்சின்னம் அமைக்கும் முன்னரே, காவல் துறை 1888 ல் மேற்படி சிக்காகோ வீதியில், ஹே மார்க்கட் தாக்குதலில் இறந்த சில காவல் துறையினருக்கு,  நினைவுச்சின்னம் வைத்தனர். 1889 ல் தான் தொழிலாளர்கள் இறந்த தொழிலாளர் நினைவாக நினைவு சின்னம் அமைத்தனர். மே தின தியாகிகளின் வரலாறு பேச,பேச, 1960 ல் ஹே மார்க்கட்டில் இருந்த காவலர்களுக்கான நினைவு சின்னம், அமெரிக்க மாணவர்களால் இடிக்கப்பட்டது, இப்போது அது காவல் அலுவலகத்திற்குள்ளேயே வைக்கபட்டுள்ளது. எனவே வரலாறு பேசப்படுவது, ஏதாவது ஒரு கட்டத்தில் பயன்படும்.

இன்றைய தலைமுறை அல்லது நவீன பாட்டாளி வர்க்கம், எட்டு மணிநேரம் வேலை நேரம் என்பதை, அரசு சட்டங்களால் நிலை நாட்டியது என புரிந்து கொள்கின்றனர். சட்டங்கள் உருவாக நடந்த போராட்டங்களையும், அடக்குமுறைகளையும், சிறை, சித்திரவதைகளையும், புரிந்து வினையாற்றுவதில்லை. அதையே முதலாளித்துவம் விரும்புகிறது. இந்த முதலாளித்துவ விருப்பதின் விளைவே, அன்மையில், பாஜக ஆட்சி வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்த முடிவு செய்ததாகும். டிரோன் கேமராக்கள் விரட்டும், விளையாட்டு வீரர்களை, நக்கலாக சித்தரிக்கும் ஊடகங்கள், 12 மணிநேரமாக வேலை நேரம் உயர்த்துவதை பெரிய செய்தியாக படம்பிடிக்கவோ, விவாதிக்கவோ செய்யவில்லை. 

தாராளமயத்தின் ஆதிக்கமும், வரலாற்று பின்னடைவும்:

வேலைநேரம் உலகத்தில் வளர்ந்த நாடுகள் என சொல்லிக்கொள்ளும் நாடுகள் அனைத்திலும், குறைக்கப்பட்டது. இதற்கு அழுத்தம் தந்தது, சோவியத் யூனியன் என்ற மகத்தான சோசலிஸ நாடு ஆகும். லெனின் தலைமையில் அரசமைத்த பாட்டாளி வர்க்கம், எட்டுமணி நேரம் ஒரு நாளைக்கு வேலை நேரம், என்பதை முதலில் சட்டமாக்கியது. அதன்பின்னர் தான் பிற நாடுகள் இவ்வாறு சட்டம் இயற்றின. அதன் பின் சோவியத் சோசலிச அரசு, வேலை நேரத்தை ஆறு மணிநேரமாக குறைத்தது, அதுவும் இதர முதலாளித்துவ நாடுகளுக்கு அழுத்தத்தை உருவாக்கியது. குறிப்பாக ஐ.எல்.ஓ என்ற சர்வ தேச தொழிலாளர் அமைப்பு, வாரம் 40 மணிநேரம் வேலைநேரம் என வழி காட்டியது. இதைத் தொடர்ந்தே பெரும்பாலான நாடுகள் தங்கள் நாடுகளில் வேலைநேரத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் உருவானது. அவ்வாறு குறைக்கவில்லை எனில், தங்கள் நாட்டு இளைஞர்கள் சோசலிச சோவியத் யூனியனைப் போல் புரட்சி செய்வர், என்ற அச்சம் இருந்தது. எனவே வேலை நேர குறைப்புக்கு போராட்டம் ஒரு காரணம் எனில், கருத்தியல் ரீதியில் மாற்று அரசு ஒன்றின் இருப்பும் முக்கிய பங்கு அளித்தது.

சோசலிச சோவியத் யூனியன் பல நாடுகளாக சிதறுண்டு, அரசியல் பின்னடைவை சந்தித்த நிகழ்வும், உலகை தாராளமய பொருளாதாரக் கொள்கை மேலாதிக்கம் செய்வதும் ஒன்றாக நடந்தது. அநேகமாக 1990 க்குப் பின் தொழிலாளர் இயக்கம் பெரும் பான்மையான நாடுகளில் தங்களுக்கான புதிய சட்ட உரிமைகளைப் பெற முடியவில்லை. நிரந்தர வேலை வாய்ப்பே கேள்விக்கு உள்ளான நிலையில், வேலை நேர குறைப்புக்கான போராட்டங்களோ, வேலையின்மையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளோ, தாராளமய கொள்கை கொண்ட அரசுகளால் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக ஒப்பந்த ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, அமர்த்து பின் துரத்து போன்ற நிரந்தரமற்ற வேலைத் தன்மை, அவுட் சோர்சிங் என்ற அயல்பணி ஒப்படைப்பு போன்றவை அதிகரித்து, வேலையில் இருப்போரின் உரிமைகளை அச்சப்படுத்திக் கொண்டே இருக்கிறது, முதலாளித்துவம். இதன் தொடர்ச்சியாக அன்மையில் ஆர்ட்டிபிசியல் இண்டெலிஜெண்ட் என்ற செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள், தானியங்கி இயந்திரங்கள போன்றவையும் சவாலாக நவீன தொழிலாளி வர்க்கத்திற்கு உள்ளது.

மேலே குறிப்பிட்ட தாராளமய பொருளாதார கொள்கை அமலாக்கத்தை, எதிர்க்க வேண்டிய மக்கள் அரசியல் ரீதியில் அல்லது வர்க்க ரீதியில் ஒன்று சேர சில தடைகள் முன்னுக்கு வருகின்றன. இதை நாடுகள் பயன்படுத்திக் கொள்கின்றன. ஏற்கனவே இருக்கக் கூடிய சமூக முரண்பாடுகள் இக்காலத்தில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கூடுதலாக வெளிப்படுகின்றன. குறிப்பாக முதலாளித்துவ வளர்ச்சி இருந்தாலும், உழைப்பு சுரண்டல், சமூக சுரண்டலுக்கு பழகி போன ஆளும் வர்க்கம், தாராளமய காலத்தில், வேகமாக வளர்ச்சி பெற்றதும், தொழிலாளி வர்க்கத்திற்கு கடுமையான சவாலை உருவாக்கியுள்ளது.
சாதிரீதியில் அணி சேர்ந்து, 20 ஆண்டுகள் முடிந்த நிலையில் அடுத்த தலைமுறையை மதரீதியில் ஒருங்கிணைக்கும் பணிக்கு தாராளமய பொருளாதார கொள்கை உத்வேகம் அளிக்கிறது. 

இந்தியாவில் பாஜக “வளர்ச்சி” என்ற முழக்கத்தை முன்வைத்து வரலாறை பின்னோக்கி நகர்த்துகிறது. போராடி பெற்ற ஜனநாயக உரிமைகளையும், தொழிலாளர் உரிமைகளையும் மெல்ல பறித்து வருகிறது. கொரானா பொது முடக்க காலத்தை பயன்படுத்தி, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணிநேரமாக உயர்த்துவது, ஆலை தொழிலாளர்களுக்கு ஊதியம் தர மறுக்கும் நிர்வாகங்களை மறைமுகமாக ஆதரிப்பது போன்றவை உதாரணங்கள் ஆகும். கொரானா பாதிப்பிற்கான காரணத்தை அமெரிக்கா சீனா மீது சுமத்துவது போல், இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீது சங்கிகள் கூட்டம் சுமத்தியது. ஒட்டு மொத்தமாக வலது சாரி திருப்பம் இத்தகைய திசை திருப்பும் அரசியலுக்கு பங்களிக்கிறது. தொலைக்காட்சி பார்க்கும் உழைக்கும் மக்களுக்கு, வெளியில் செல்வது குறித்த அச்சத்தை ஊட்டும் வகையில், டிரோன் கேமராமூலம் விளையாடுபவர்களை விரட்டுவதை காணமுடிகிறது. பொது முடக்க காலத்தில் விளையாடுவது அவ்வளவு பெரிய குற்றமாக கருதப்படும் நாட்டில், உழைப்பு நேரத்தை அதிகரிப்பது, தொழிலாளர் விரோத மசோதாக்களை சட்டம் ஆக்குவது ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 

சவால்களை முறியடிக்கும் வலிமை தொழிலாளி வர்க்கத்திற்கு உண்டு:

சவால்களை எதிர்கொள்வது, சுரண்டலைத் தடுப்பது அல்லது மேலும் அதிகரிக்கும் அதிகாரத் திணிப்பை எதிர்த்த போராட்டத்தின் பகுதியாகும். எந்தவிதமான கல்வி, சமூக மாற்றத்திற்கான வழிகாட்டுதல் ஆகியவை இல்லாத நிலையில், மக்கள் எழுச்சியை, சில நபர்களே உருவாக்கினர். அதற்காக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டது. சிறை வாழ்க்கை கூட பரவாயில்லை, ஆனால் சிரச்சேதங்கள் அதிகம் இருந்தன. ஜூலியஸ் பூசிக் என்ற பத்திரிக்கையாளன், தனது 40 வயதில் முதலாளித்துவ சமூகத்திற்கு எதிராக அணி திரட்டிய காரணத்திற்காக தூக்கிலிடப்பட்டார். சிறைசாலையில், மே தினக் கொடியேற்றும் நிகழ்வையும் பதிவு செய்துள்ளனர். பகத்சிங், லெனின் பிறந்தநாளுக்கு சிறையில் இருந்து தந்தி அனுப்பிய வரலாறு, தூக்கு தண்டனைக்கு முந்தைய நாளில் அரசும் புரட்சியும் புத்தகம் படித்ததுதும், உலக இளைஞர்களுக்கு எழுச்சியை தந்தது. சே குவேரா உலகம் முழுவதும் ஒரு கலகக்காரனின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் இரு கைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில், சுட்டுக் கொல்ல முயற்சித்த காவல் அதிகாரியிடம், நில் எழுந்து நிற்கிறேன், அதன் பின் சுடு, எனக் கூறியதாக நாம் படிப்பது, நமது மனவலிமைகளை அதிகரித்து கொள்ள மட்டுமல்ல. முதலாளித்துவத்திற்கான சிம்ம சொப்பனம், தொழிலாளி வர்க்கம் என்பதை, சுட்டிக் காட்ட.

இதெல்லாம், கருத்தியல் தாக்கத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. மார்க்ஸ் சொன்னவைகளுடன் பொருந்தி போக கூடியதே. முதலாளித்துவம், தனக்கான சவக்குழியைத் தானே தோண்டுகிறது, என்பதே அது. ஆலைக்குள் குவிந்து இருக்கும் தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக ஒன்று சேர்வது தவிர்க்க முடியாதது. உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற முழக்கம், முதலாளித்துவ சுரண்டல் முறைக்கு, எதிரான வலுவான கருத்தாயுதம் என்பதையும் பார்க்கிறோம். ஆனால் இந்த முழக்கங்கள் உண்மையாவது கள செயல்பாடுகளில் ஆகும். இது, அமைப்பின் மற்றும் தனி நபர்களின் முன்முயற்சிகளுமே சாத்தியம். எனவே மே தின சூளுரையோ, உழைப்பு சுரண்டலுக்கு எதிரான நடவடிக்கைகளோ, எதுவானாலும், பாதிப்புக்கு ஆளானோரைத் திரட்டுவதில் இருந்தே வெளிப்பட முடியும். 

இன்று ஆலைகளில் ஒப்பந்த, பயிற்சி தொழிலாளர்கள், படித்த வல்லுநர்கள் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகின்றனர். நவீன இயந்திரங்கள், மற்றும் தொழில் நுட்பம் காரணமாக அதிகரித்து வரும் வேலை இழப்புகள் அல்லது அதிகரித்து வரும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆகியவை கலகத்திற்கான, பெரும்படையாக உள்ளது. ஆனால் இந்த பெரும் படை ஆளும் வர்க்கத்தின் சமூக காரணிகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. பொருளாதார சுரண்டலையும், சமூக சுரண்டலையும் இணைந்து நடத்த, திட்டமிட்ட முயற்சிகள் போதுமான அளவிற்கு சாதகமாக அமையவில்லை, இருந்த போதும் அதை சலிப்பில்லாமல் தொடர்வதும், ஒன்றுபட்ட முயற்சிகளை அதிகப்படுத்துவதும் இன்றைய தேவையாக உள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் நடந்த போராட்டங்கள் மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. இப்போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்துவதே, இந்த 135 வது மே தினத்தின் உறுதி ஏற்பாக இருக்க முடியும்.

மாற்று இணைய இதழ்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக