வியாழன், 30 ஏப்ரல், 2020

May Day 2020

மே தின சிறப்பு கட்டுரை: போற்றுதலுக்குரிய மே தினம்….. நமக்கான வரலாறு.. – எஸ். கண்ணன்

221VIEWS
Spread the love
மே தினம் 1, உழைப்பாளர் தினம் உலகம் 8 மணி நேரம் என்பதை உழைப்பு நேரமாக தீர்மானிக்க வேண்டும், என்பதை போராடி பெற்ற வரலாற்று தினம். முதலாளிகளுடனும், அரசுகளுடனுமான போரில், உயிர் பலி தந்த, ரத்தம் சிந்திய தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள். வரலாற்றில் இருந்து, உழைப்பு சுரண்டலை தடுக்கவும், புதிய உரிமைகளுகளுக்கான குரலை வலுப்படுத்தவும், உறுதி ஏற்கும் தினம். இந்த 2020 ஆண்டில், உலகம் பொது முடக்கத்திற்குள் தள்ளப்பட்ட காலத்தில், நம்மை கடக்க இருக்கிறது. முடங்கி இருக்கும் நமக்கு, போராட்ட வரலாறே, புதுத் தெம்பூட்டுகிறது. முதலாளித்துவ சுரண்டலை எதிர்க்கும் போராட்டத்தை வலுப்படுத்துகிறது.
இந்தியாவில் உற்பத்தியும் தொழிலாளர்களும்:
இந்தியாவில், பிரிட்டிஷ் கால முதலாளித்துவ உற்பத்தி வளர்ச்சி முறை, புதிய தொழிலாளர்களை உருவாக்கியது. 1857-59ல் நடந்த முதல் விடுதலைப்போர், இந்தியாவில் ரயில் பாதை அமைக்க வேண்டிய கட்டாயத்தை பிரிட்டிஷாருக்கு ஏற்படுத்தியது. இது இந்தியாவை நவீனப்படுத்தும் நோக்கம் கொண்டதாக, பிரிட்டிஷாரும் மற்றும்  அவர்களை அண்டிப் பிழைத்த கூட்டமும் சொன்னது உண்மையில்லை. இந்தியாவை மறு உற்பத்தி நாடாக மாற்றி அமைப்பது, பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு தேவையான ஒன்று, என காரல் மார்க்ஸ் கூறியுள்ளார். (இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி குறித்து மார்க்ஸ்)
இந்தியாவில் முதலாளி வர்க்கம் என்ற ஒரு வர்க்கம் பிறப்பதற்கான நிகழ்முறையை, பிரிட்டிஷ் ஆட்சி துவக்கி வைத்தது. இந்த வர்க்கம், நிலப்பிரபுத்துவ உயர்குடி வர்க்கத்தில் இருந்து வேறுபட்டதாக இருந்தது. முதலாளி வர்க்கத்தின் பகைமை சக்தியான தொழிலாளி வர்க்கமும், முதலாளித்துவம் பிறக்கும் போதே, ஜனித்து விட்டது. அவ்வாறு உருவான தொழிலாளி வர்க்கம், அலையலையாய் எழுந்த விடுதலைப் போராட்டத்தில், முன்னணி பங்கு வகித்தது, என மார்க்சிய அறிஞர் இ.எம்.எஸ் குறிப்பிடுகிறார். ( இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு)
உலகத்திற்கு தொழிலாளர் எவ்வளவு அவசியம் என்பதை தொழிலாளர்களே இன்னும் உணரவில்லை. உலகத்தாருக்கு வேண்டிய பொருள்கள் எல்லாம், தொழிலாளர்களே உற்பத்தி செய்கின்றனர். நெல்லாக இருந்தாலும், நீராவி கப்பல் ஆனாலும் தொழிலாளர்களின் உழைப்பினாலேயே கிடைக்கிறது. ஆனால் அந்த தொழிலாளி உயிர் வாழ்வதற்கான உணவு, உடை மற்றும் வீடுகள் பற்றாக்குறையாக உள்ளது.
மே நாளில் ம.சிங்காரவேலர் | தமிழக ...
இது திட்டமிட்டே உருவாக்கப்பட்டுள்ளது. இதை எதிர்ப்பதும், தீர்வு காண்பதும், அவசியம். அதற்காக தொழிலாளர்கள் சங்கமாக ஒன்று சேர்வதும், போராடுவதும் தேவையாக உள்ளது, என ம. சிங்காரவேலர் கூறியுள்ளார். ஸ்வதர்மா எனும் இதழில் 1921 ல் எழுதிய கட்டுரையில் இவ்வாறு கூறியுள்ளார். (ம. சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம்)
மேலே குறிப்பிட்ட வளர்ச்சிப் போக்குகளில் இருந்தே இந்தியத் தொழிலாளி வர்க்கம், தனது உரிமைகளுக்கான போராட்டத்தை துவக்கியுள்ளது. சிங்காரவேலர் 1921ல் மேலே கூறிய சொல்லாடல்களின் பிறப்பிடமாக, சென்னையில் இருந்த பி&சி மற்றும் பின்னி ஆலைகளும் அதில் நடந்த போராட்டங்களும் அடித்தளமாக அமைந்தன. இந்திய சமூகத்தின் வளர்ச்சி முழுமையாக முதலாளித்துவ உற்பத்தி சார்ந்ததாக இல்லை.
எனவே தான் சிங்காரவேலர், 1923 ல் மே தினம், என்ற உழைப்பாளர் தினத்தை, சென்னை திருவல்லிக்கேணியில் கொண்டாடிய போது, தொழிலாளர் விவசாயி கட்சியின், கெஜட் என்ற பெயரில், 22 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறிய கருத்துக்கள் இந்தியா முழுவதும், சுரண்டப்பட்ட தொழிலாளர்களுக்கு எழுச்சியூட்டுவதாக இருந்தது, அதன் காரணமாகவே, 1924ம் ஆண்டில் கயாவில்  நடந்த காங்கிரஸ் மாநாட்டில், தொழிலாளர் உரிமைகள் குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதை சிங்காரவேலர் முன் மொழிந்து பேசியுள்ளார்.
தொழிலாளர் விவசாயி கட்சியின், செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு, 1923 மே 1, கொடியேற்றம் முடிந்தவுடன், வெளியிடப்பட்டுள்ளது. சங்கம் வைக்கும் உரிமை, வேலை நிறுத்தம் செய்யும் உரிமை, வார விடுப்பு, 8 மணி நேரம் வேலை நேரமாக தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் கொண்டதாக, மேற்படி செயல் திட்டம் இருந்தது.
இந்தியாவில் மே தின தியாகிகளை நினைவு கூறும் பேரணிகள்:
பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சிக்கு எதிராக தொழிலாளர்கள் குவியலாக பங்கெடுக்கும் வேகத்தை தந்தது, ஆலைகளுக்குள் இருந்த உழைப்பு சுரண்டல் ஆகும். உழைப்பு சுரண்டலில் இருந்து விடுபட்டு, தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டுவது, பிரிட்டிஷாரை இந்தியாவில் இருந்து விரட்டுவது, என்ற அரசியல் போராட்டத்துடன் இணைந்தது, என்பதை இந்தியாவின் ஆலை தொழிலாளி வர்க்கம் நன்கு உணர்ந்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்திய போராட்டங்களில் தொழிலாளர் பங்கேற்பு அதிகரித்தது, இந்த பின்னணியில் தான்.
மே தினம் உருவானது எப்படி? - Punnagai | DailyHunt
1920 முதல் 1940 கால கட்டத்தில் இந்தியாவின் பிரதான, நகரங்களில் தொழிலாளர்கள் ஏராளமான வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். ஒரு ஆலை தொழிலாளருக்கு ஆதரவாக, பிற பகுதி தொழிலாளர்கள் போராடுகிற வர்க்க ஒற்றுமையும், பெருமளவில் வெளிப்பட்டது. குறிப்பாக சென்னை ராஜதானி, போராட்டங்கள் நிறைந்ததாக மாறியது.
இன்றைய ஆந்திராவின், எளூர் நகரில் சணல் ஆலை தொழிலாளர்களின் போராட்டம், கோவை, மதுரை, நெல்லை அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் நடந்த பஞ்சாலை போராட்டங்கள், நாகபட்டினம் ஸ்டீல் தொழிலாளர்கள், திருச்சி ரயில்வே தொழிலாளர்கள் சென்னை நகரில் டிராம் தொழிலாளர், பஞ்சாலை தொழிலாளர், பீடி தொழிலாளர், வெஸ்ட்டர்ன் இந்தியா மேச் ஃபாக்டரி தொழிலாளர்  மற்றும் டயோசின் பிரஸ் தொழிலாளர்கள் என பல்வேறு வகைப்பட்ட தொழிலாளர்கள் போராட்டங்களில் பங்கெடுத்தனர்.
தண்டையார் பேட்டையில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்கெடுத்த பேரணி, சென்னை மாகாண நிர்வாகத்தை, நெருக்கடிக்கு ஆளாக்கியது. இது டிராம் வே தொழிலாளர்களின் உரிமைகளுக்கு வழிவகுத்தது. ஏகாதிபத்தியம் ஒழிக, முதலாளித்துவம் வீழ்க எனும் முழக்கங்கள், அரசுகளை நிர்பந்தித்தது, என, Colonialism, Labour and politics, என்ற நூல் குறிப்பிடுகிறது.
அதேபோல் இன்றைய கேரளத்தின் பகுதிகளான, கோழிக்கோடு, கண்ணூர், தலசேரி ஆகிய பகுதிகளிலும், பீடி, கயிறு தயாரித்தல் ஆகிய தொழில்களில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தீவிரமாக போராடினர். இந்த போராட்டங்கள் அனைத்தும் சென்னை மே தினக் கொடியேற்றம் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடந்தது. இப்போராட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை ஆலைப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, மாரிசன் என்பவர் தலைமையிலும், ராயல் என்பவர் தலைமையிலும், வெவ்வேறு காலங்களில் இந்தியாவிற்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ள வேண்டிய அழுத்தத்தை தந்தது.அதன் தொடர்ச்சியாக சில சீர்திருத்தங்களும் செய்தனர். ஆனாலும் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்கள் தொடர்ந்தது.
What Is Labor Day? A History of the Workers’ Holiday – The New …
1936,1937,1938 ஆண்டுகளில் மே தின பேரணிகள் படிபடியாக அன்றைய சென்னை ராஜதானி முழுவதும், பரவியது. விசாகபட்டினம், ராஜமுந்திரி, நெல்லூர், சென்னை, மதுரை, கோவை, நாகப்பட்டினம், கடலூர், திருச்சி, திருநெல்வேலி, கோழிக்கோடு, கண்ணூர், தலசேரி ஆகிய இடங்களில் 6000 முதல் 10000 ஆயிரம் தொழிலாளர்கள் வரையிலும் பேரணிகளில் பங்கெடுத்துள்ளனர். தொழிலாளர்கள் மேலே குறிப்பிட்ட தினங்களை கடந்து, ரஷ்ய புரட்சி தினம், காரல் மார்க்ஸ் தினம், லெனின் தினம் ஆகியவைகளையும் நினைவு கூர்ந்துள்ளனர். இந்த நாள்களில் தொழிலாளர்களுக்கு அன்றைய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உரை நிகழ்த்தியுள்ளனர்.
 மே தினம் விடுமுறை தினம்: 
சிக்காகோ வீதிகளின் ரத்ததுளிகளும், தூக்கிலிடப்பட்ட தியாகிகளும், சுட்டுக் கொல்லப்பட்டவர்களும் நம் தலைமுறையிலும், வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள், அவர்கள் தந்த உரிமைப் போராட்டம், என்கிற மூச்சுகாற்று வழியாக, தொழிலாளர்கள் இன்றளவும் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் நினைத்து பார்க்கும் நாள் அல்ல. ஒவ்வொரு நாளும் நினைக்க வேண்டிய வரலாறு. தலைமுறை தலைமுறையாக நினைவுகளும், தியாகமும், போராட்டமும் கடத்தப்படும் போது தான், சுரண்டலை ஒழிக்கும் நெருப்பை அணையாமல் காக்க முடியும்.
1886 ல் பற்ற வைக்கப்பட்ட 8 மணி நேர வேலை, 8 மணி நேர உறக்கம், 8 மணிநேரம் ஓய்வு என்ற முழக்கம் அங்கீகரிக்கப்பட்டது. அதற்காக, ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், ஜார்ஜ் எங்கல், சாமுவேல் ஃபில்டன் ஆகியோர் தூக்கிலப்பட்டனர். பலர் ஊர்வலத்திலேயே கொல்லப்பட்டனர். லட்சங்களில் பங்கேற்ற தொழிலாளர் பேரணி, பலபத்தாண்டுகளாக நடந்த பிரச்சாரத்தின் விளைவாகும். இதன் தொடர்ச்சியாக பாரிஸ் நகரில் நடந்த தொழிலாளர் மாநாட்டில், பிரடெரிக் ஏங்கெல்ஸ் சர்வதேச அளவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து நெருப்பு கனன்று கொண்டிருந்ததே ஒழிய, தீர்வு உருவாகவில்லை.
Amazon.com: LAMINATED 36x24 inches POSTER: Worker And Kolkhoz ...
முதலில் 8 மணிநேர வேலை என்பதை சட்டமாக்கி, மே தினப் போராளிகளையும், தியாகிகளையும் அங்கீகரித்தது, சோவியத் யூனியன் தான். லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றி, நிறைவேற்றிய சட்டங்களில் முக்கியமானதாக எட்டு மணி நேர வேலை அமைந்தது. அன்றைய தினத்தை தொழிலாளர் தினமாக, ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. மார்க்சிம் கார்கியின் தாய் நாவலில், மே தின கொண்டாட்டத்திற்கான தயாரிப்புகள் விவரிக்கப்படும், கொடியை நீங்கள் தான் சுமந்து செல்ல வேண்டுமா?
அப்படியானால் மீண்டும் சிறைக்கு போக போகிறீர்களா? போன்ற கேள்விகள் நாவலின் நாயகன் பாவெலை நோக்கி பாயும். அந்த சிறிய ஊரில், ஆலை தொழிலாளர்கள் மே தின வரலாறு குறித்த துண்டு பிரசுரங்களை, வாசிப்பதும், பலருக்கும் விநியோகிப்பதும், குதுகலத்துடனும், திகிலாகவும் விவரிக்கப்படும். இந்த பெருமைக்குரிய கதையாடல், உரையாடல், விவரிப்புகள் தான், ரஷ்ய மக்களை புரட்சிப் பாதையில் அணிவகுக்க செய்தது. எனவே சோவியத் யூனியன் எட்டு மணி நேர வேலை குறித்து சட்டம் இயற்றியது, அவர்கள் சுமந்த கருவின் பிரசவம்.
இன்று பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகள் மே தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளன. இந்தியாவிலும் அது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிங்காரவேலர் கொடிஏற்றிய பாரம்பரியம் காரணமாக துவக்கத்திலேயே விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.
கேரளா அடுத்ததாகவும், மேற்கு வங்கம் 1967 ல் ஐக்கிய முன்னணி அரசு அமைந்த போது, ஜோதிபாசு முயற்சியில் அறிவிக்கப்பட்டது. கர்நாடகா, ஆந்திரா, திரிபுரா, கர்நாடகா, கோவா, பீகார், அஸ்ஸாம், ஜார்கண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் மட்டுமே பொது விடுமுறையை கடைப்பிடிக்கின்றன. இதர மாநிலங்கள் இந்திய பெருமுதலாளிகளின் அழுத்தம் காரணமாக அடங்கி கிடக்கின்றன. மத்திய அரசு தனது அதிகாரத்திற்கு உட்பட்டு விடுப்பு அறிவிக்க தயாரில்லை. மகாராஷ்டரா மாநிலத்தில் மே முதல் விடுமுறை தான், அது தொழிலாளர் தினம் என்பதால் அல்ல, மாறாக மகராஷ்டரா மாநிலம் 1960, மே 1 அன்று உதயம் ஆன தினம் என்பதால், இப்படி தான் இந்தியாவில் நிலை உள்ளது.
மே தினப் பூங்கா:
May Day Park, Chennai, Tamil Nadu
சென்னை மாநகரம் தொழிலாளர்களின் போராட்ட வரலாறு கொண்ட நகரம் ஆகும். குறிப்பாக சிந்தாதிரிப்பேட்டை, சென்னை மௌண்ட் ரோடு (இப்போது அண்ணாசாலை), தொழிலாளர்களின் போராட்ட வரலாறை சித்தரிக்கும் அடையாளம் ஆகும். குறிப்பாக 1920 துவங்கி  1970-75 வரையிலும் தொழிலாளர்கள் தங்களின் கூட்டு பேர உரிமைக்காக, நடத்திய வீரம் செறிந்த போராட்டம் நடத்திய பகுதி ஆகும். சிம்சன் ஆலை, மே தினப் பொதுக் கூட்டம், பேரணி ஆகியவை மூலம் அதிக தாக்கத்தை உருவாக்கிய பகுதி.
1869 ல் சென்னை நகராட்சி, 14.5 ஏக்கர் பரப்பளவில் அமைத்த பூங்கா, சென்னை ராஜதானியின் 10வது கவர்னராக இருந்த, ஃபிரான்சிஸ் நேப்பியர் பெயரில் அமைக்கப்பட்டது. 1950 ல்., சென்னை ராஜதானியின் விவசாய அமைச்சராக இருந்த, ஏ.பி. ஷெட்டி பொது மக்களும் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் திறந்து வைத்தார். அதுவரை பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை என தெரிகிறது. 1989 ல், இந்த பூங்கா மே தினப் பூங்கா எனப் பெயர் சூட்டப்பட்டது. இது வெறும் தகவல் அல்ல. பத்திரமா பாத்துக்கங்க, என்பது போலான, மிக முக்கிய சாதனை, மைல்கல். நின்று இளைப்பாறி பாய்ச்சல் வேகத்தில் முன்னேறுவதற்கான, தாங்கல்.
இப்போதைய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை கட்டமைக்கும் நுணுக்கங்களைக் கற்றுத் தரும் இந்த வரலாற்றை, பாதுகாப்போம். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்துவோம்.. இது நம் வரலாறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக