திங்கள், 25 அக்டோபர், 2010

அனைவருக்கும் வேலை எப்போதும் சாத்தியமே!

அனைவருக்கும் வேலை எப்போதும் சாத்தியமே!
எஸ்.கண்ணன்
அனைவருக்கும் வேலை என்ற கோரிக்கை இன்றைக்கும் பொருந்துமா? என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். கேள்வியில் நியாயம் உண்டா? என சிலர் தான் யோசிக்கின்றனர். ஆம் அரசு எத்தனை பேருக்குத் தான் வேலை தரும் என ஆட்சியாளர்கள் மீது தனது பரிதாபத்தை வெளியிடுவது, நடுத்தரத்து மக்கள் மட்டும் பரிமாரிக்கொள்ளும் கருத்தல்ல, உழைக்கும் மக்களும் இந்த அப்பாவித்தனத்திற்கு தள்ளப் பட்டு வருகின்றனர்.
உண்மை என்ன சொல்கிறது என்பதை அரசு வெளியிட்டு இருக்கும் தகவல்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் நடைபெற்றுள்ள குற்றங்களின் எண்ணிக்கையில் இருந்து அறிந்து கொள்ள முடியும். கொலைகள் 1644ஆகும். கொள்ளைகள் 21174 ஆகும். திருட்டு, பிட்பாக்கட் உள்ளிட்டவை தனி. இதில் கூடுதல் தகவல் இளைஞர்கள் தான் இத்தகைய கொடிய செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதாகும். மேற்படி தகவல்கள் மூலம் தமிழ் சமுகம் போதுமான வேலை வாய்ப்பை பெற்றிருக்கவில்லை என்பதையும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் இருப்பதையும் தெரிவிக்கிறது. நல்ல வேலை, சமூகப் பாதுகாப்புடனான வேலை, ஆகிய உத்திரவாதம் இன்றைய சமுகத்தில் இல்லை. இது இளம் தலைமுறைக்கு நம்பிக்கை அளிக்கவில்லை.
இவை போதாது என்று தமிழ் நாட்டில் அரசாணை எண் 170 பிறபிக்கப்பட்டு டி.ஒய். எஃப்.ஐ போராட்டத்திற்கு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு அறிவிக்கப்படாத வேலை நியமனத் தடைச் சட்டத்தினை அமலாக்கி வருகிறது. இதுவும் படித்த இளைஞர்களிடம் அதிருப்தி ஏற்பட காரணம் ஆகும். தேர்தல் வந்து விட்டால் வாய் கூசாமல் வாக்குறுதி தருகின்றனர். நாஙகள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டு ஒன்றிற்கு 1 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றனர். வந்தபின் இருக்கும் வேலையைப் பறிக்கின்றனர். இவைகள் இளைஞர்களிடம் நம்பிக்கையின்மை வளர மிக்கிய காரணம் என்பதை அரசு உணரவில்லை.
உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு தீவிரவாதம், வலது இடது என இரண்டு திசையில் இருந்தும் தாக்குதல் தொடுக்கும் சூழ்நிலை உள்ள நாடு இந்தியா என்றால் மிகை அல்ல. வேலையிண்மையை தீர்க்க முடியாததன் விளைவே இத்தகைய தீவிரவாதம் உருவாகிறது. தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதற்கான வாய்ப்பு வளர்ச்சியற்ற பகுதிகளிலும், அடர்ந்த காடுகளிலும் தான் அதிகம் இருக்கிறது, என்று அரசும் ஒப்புக்கொள்கிறது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்க தயாராகவில்லை.
தமிழகத்தில் சாதிக்கலவரங்கள் நடந்தபோதும், மதகலவரங்கள் நடந்த போதும் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுக்கள் வேலையிண்மையும், கள்ளச்சாராயமும் கலவரங்களுக்கு அடிப்படை காரணம் என்பதை குறிப்பிட்டு இருக்கிறது. இத்தகைய ஆய்வுகளுக்குப் பின்னர் தான் மாநில அரசுகள் வேலை நியமன தடைச்சட்டத்தையும், ஓய்வு பெற்றோருக்கு வேலை என்ற அறிவிப்பையும் வெளியிடுகின்றன. இப்போது தமிழகத்தில் சுமார் 62 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பதாகவும், நாடு தழுவிய அளவில் சுமார் 5.5 கோடி இளைஞர்கள் காத்திருப்பதாகவும் அரசு அறிவிப்புகள் சொல்கின்றன. படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்ற பழமொழியைப் போல் தான் அரசுகளின் நடவடிக்கை இந்த 63 ஆண்டுகளில் இருந்துள்ளது.

II

நமது இளைஞர்கள் இப்போது அரசு வேலையை எதிர்பார்ப்பது இல்லை மாறாக தனியார் துறை வேலைவாய்ப்பில் மிகுந்த திருப்தி கொள்கின்றனர், என்ற கருத்தை வலுவாக பரப்பிட செய்கின்றனர். வழியின்றி மேற்கோள்ளும் வாழ்க்கை தேவைக்கான் முயற்சியை அரசு பின்பற்றும் கொள்கைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது, கீழ்த்தர அரசியலின் விளைவு ஆகும்.
உண்மை நாம் அறிந்தது. தற்போது தமிழகத்தில் கிராம அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெள்யிடப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 12 லட்சம் விண்ணப்பங்கள் விற்று தீர்ந்துள்ளது. காலிப்பணியிடங்கள் சுமார் 2 ஆயிரம் மட்டுமே. இந்த அறிவிப்பினால் உருவான வேலைவாய்ப்பு விண்ணப்பம் அச்சிடுவது மற்றும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் உருவானது ஆகும். இந்த பெருமைக்குரிய வேலை வாய்ப்பை உருவாக்கியதற்கு அரசும் அதன் சார்பாளர்களும் மகிழ்ச்சி கொள்ளலாம். தமிழ்நாடு தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வின் போது 1125 பணியிடங்களுக்கு 4.25 லட்சம் இளைஞர்கள் தேர்வு எழுதினர். இத் தேர்விற்காக சிறப்பு பேருந்து இயக்கியதை பெருமை பொங்க ஆள்வோர் குறிப்பிடுகின்றனர். இது போன்ற சம்பவங்களில் அரசு அம்பலம் ஆகிறது என்பதைக்கூட புரிந்து கொள்ளாத மூடர்களின் ஆட்சியாகவே நமது தேசத்தின் ஆட்சி உள்ளது.
மத்திய ஆட்சியாளர்களின் லட்சணத்தின் பகுதியே மாநில ஆட்சியாளர்களின் கொள்கைக்குக் காரணம். முந்தைய பா.ஜ.க கூட்டணி அட்சி செய்த போது வங்கிகான தேர்வாணையத்தைக் களைத்தது. சம்மந்தப்பட்ட வங்கிகள் தங்களுக்குத் தேவையான பணியாளர்களை நியமித்துக்கொள்ளலாம், என்றும் வழிகாட்டியது. விளைவு பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் 11 ஆயிரம் எழுத்தர் பணியிடங்கள் நிர்ப்பப் படவில்லை. அதற்கான தேவை திடீரென முன் வந்த போது, எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. 36 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம் செய்தனர். மூன்று கேள்வித் தாள்களுடன் மூன்று வாரங்கள் தேர்வு நடத்தப்பட்டது. இத்தகைய விவரங்கள் அணைத்தும் அரசு வேலை மட்டுமே பாதுகாப்பானது என்பதையும், தனியார் துறை வேலை வாய்ப்பை விரும்பவில்லை என்பதையும் வெளிப்படுத்துகிறது. இதற்கு பிறகும் அரசிடம் இளைஞர்கள் அரசிடம் வேலை வாய்ப்பை எதிர்பார்க்கவில்லை என்று பிரச்சாரம் செய்வதற்கு அனுமதிக்க முடியாது.
இதன் மறுபுறம் அமைச்சர்களே தங்கள் துறையில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக ஒப்புக்கொள்கின்றனர். ரயில்வே துறையின் பட்ஜெட்டை முன்வைத்து உரையாற்றிய மம்தா பானர்ஜி ரயில்வேயில் 2 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிட்டார். இப்போது ரயில்வேத் துறையில் அதீதமான விபத்துகள் நடைபெறுகிறது. 15 ஆயிரம் லெவெல் கிராசிங்குகளில் பணியாளர்கள் இல்லாத்தன் விளைவாகவே விபத்து நடந்தது என்பதை அறிந்திருந்தும், பணிநியமனத்தில் பலகீனம் நீடிக்கிறது. இதைப்போலவே அனைத்துத் துறைகளிலும் காலிப்பணியிடங்கள் நீடித்து வருகிறது. மாநில அரசுகளிலும் உள்ள நிரப்பப் படாத பணியிடங்களையும் கணக்கில் கொண்டால், சுமார் 38 லட்சம் வேலை வாய்ப்புகள் கண் முன்னால் காலியாக இருப்பதை அறியலாம்.
இதனோடு ஒப்பிட்டு விவாதிக்க வேண்டிய மற்றொரு கருத்து, பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகளை அரசு உருவாக்காத அனுகுமுறையாகும். உதாரணத்திற்கு, 30 ஆண்டுகளுக்கு முந்தைய தாலுகா நிர்வாகமே இன்றைக்கும் இருக்கிறது. காவல் துறை, நீதித்துறை, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்திலும் இதன் பிரதிபலிப்பை பார்க்க முடியும். மேற்படி துறை சார்ந்த பணியிடங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்து கிடப்பது நமது விவாததிற்கு சாட்சி. இந்த உண்மைக்கு மாறாக அரசு தற்போது உள்ள பணியிடங்களையும் அழிக்க நடவடிக்கை எடுக்கிறது.
தொழில் நுட்பத்தை மனிதன் மிக கொடுமையாக வேலை வாங்கப்படுவதைத் தடுக்க பயன் படுத்தாமல், மனிதனின் பிழைப்பை அழிக்கும் வ்கையில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. உதாரணத்திற்கு நெய்வேலி அனல் மின் நிலையத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் ஒரு சுரங்கம், ஒரு மின் உற்ப்பத்தி நிலையம், சுமார் 600 மெகாவாட் மின்சாரம் என்று இருந்த போது 24 ஆயிரம் தொழிலாளர்கள் பனியாற்றினர். தற்போது 3 சுரங்கம், 3 மின் உற்ப்பத்தி நிலையம், 2000 மெகாவாட் மின்சாரம் என்ற நிலையை அடந்துள்ளது. ஆனால் தொழிலாளர்களின் எண்ணிக்கையோ 17 ஆயிரமாக குறைந்துள்ளது. இப்படி அரசும், தனியார் துறைகளும் தனது லாபத்தை பெருக்க தொழிலாளர் எண்ணிக்கையை குறைப்பதனால் வேலை வாய்ப்பு புதியதாக உருவாகவில்லை.
III
அனைவருக்கும் வேலை என்ற கொரிக்கையை முன் வைப்பவர்கள் மாற்று ஆலோசனையை முன்வைக்கப்பட வேண்டிய நிர்பந்ததில் இருப்பதை நாம் அறிவோம். நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து பலகீனங்களையும் அரசு போக்கிக்கொண்டால், புதிய வேலை வாய்ப்புகள் பல கோடி உருவாகும். பல கோடிப்பேரிடம் வருமாணம் அதிகரித்து வாங்கும் சக்தியும் அதிகரித்தால், ஜவுளி உற்பத்தி, உணவு உற்பத்தி, இதர அத்தியாவசிய பொருள்களின் உற்பத்தி பெருகும். இதன் காரணமாக கிராமப்புற உற்பத்தியும், வேலை வாய்ப்பும் பெருகும். இதன் மூலம் கிராம உழைப்பாளிகள் நகரத்தை நோக்கி இடம் பெயர்வதும் குறையும். அது நகர்புற படிக்காத, திறனற்ற தொழிலாளர்களின் வேலை வாய்ப்பும், பேரம் பேசும் உரிமையும் அதிகரிக்கும். இந்த வளர்ச்சி தொடர்ந்து மக்களின் வாங்கும் சக்தியையும், வருமானத்தையும் பாதுகாக்க உதவும். இவை நாம் மட்டும் கூறிக்கொண்டிருக்கும் வாக்கியங்கள் அல்ல. முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களும் வலியுறுதுகிற உண்மை.
இன்றைய காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி அரசு தேசிய கிராமப் புற வேலை உறுதிச் சட்டத்தை அமலாக்கிவருகிறது. கிராமப் புற மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்துவதன் மூலமே கிராமப்புற உழைப்பாளிகளின் உயிரைப் பாதுகாக்க முடியும், என்ற அறிஞர் பெருமக்களின் வாதத்தை ஏற்றுக் கொண்டதனால் உருவானது என்பதை மறுக்க முடியாது. இந்த் கொள்கையை அமலாக்க சோசலிசம் தேவையில்லை, இந்த முதலாளித்துவ ஆட்சியே போதும். முதலாளித்துவம் லாபத்தை நோக்கமாக கொண்டு செயல் படுவதால், இந்த குறைந்த் பட்ச நடவடிக்கையைக் கூட மேற்கொள்ளவில்லை. எனவே தான் சமூகம் மாற்றப்பட வேண்டும் என்ற முழக்கம் முன் வந்தது. நிலச்சீர்திருத்ததை அமலாக்குகிற, தொழிலாளர் நலனை பாதுகாக்கிற அரசு அமையும் போது, நாம் மேற்குறிப்பிட்ட பொருளாதாரக் கொள்கையை விட சிறந்த பொருளாதாரக் கொள்கை பின்பற்றப்படும். அப்போது அனைவருக்கும் வேலை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும்.

நன்றி: எஸ்.எஃப்.ஐ மாநில மாநாட்டு மலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக