ஒரு நட்சத்திரம் மடிந்து விழலாம்
ஆயினும் அதன் பிரகாசம்,
ஒருமலர் வாடி விடலாம்
ஆயினும் அதன்மணம்
எமது புரட்சி வீரர்கள்
இம்மண்ணிலே சிந்திய
செங்குறுதி காய்ந்திருக்கலாம்
ஆயினும் அதன் நினைவு....
எமது கொடிகளிலே
எமது நினைவுகளிலே
அழுத்தம் நிறைந்த
செவ்வண்ணமாக சித்தரிக்கப் பட்டுள்ளது.
சீன கவிதை
ஜாலியன் வாலாபாக் மைதானம் அமைந்துள்ள, அமிர்தசரஸ் நகரம், 2003ம் ஆண்டு நவம்பர் மாதம், அதுவரை இல்லாத வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 7வது மாநாடு நடைபெற்ற நேரம், ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் அஞ்சலியை செலுத்தி ஊர்வலமாக, மாநாட்டு அரங்கத்தை அடைந்தவுடன், அஞ்சலித் தீர்மானத்தை முன்மொழிந்தனர். மூன்று ஆண்டுகளில், 289 வாலிபர் சங்கத் தோழர்கள், உயிரைச் சங்கத்திற்காக அர்ப்பணித்து இருந்தனர். மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களில் மட்டும், 260 தோழர்களை இழந்திருக்கிறோம் என்ற செய்தி, சற்று அதிச்சியாக இருந்தாலும், மாற்று அரசியல், ஆதிக்க அரசியலின் வன்மங்களை, எதிர்கொள்ளாமல் சாத்தியமில்லை என்பதை புரிய வைத்தது.
1980ல் துவங்கப் பட்ட வாலிபர் சங்கம் இந்த தேச நலனுக்காக கொடுத்த விலையை, நாட்டின் எந்த ஒரு இயக்கமும் கொடுத்திருக்க முடியாது. காலிஸ்தான் கோரிக்கை வலுப்பெற்ற போது, இந்திய ராணுவதிற்கு இனையாக களப்பலி கொடுத்த இயக்கம், டி.ஒய்.எஃப்.ஐ, அரசியல் ராணுவமாக, தேச ஒற்றுமையை வெளிப்படுத்தியது. டி.ஒய்.எஃப்.ஐ. மாநிலத் தலைவராக இருந்த குர்னாம் சிங் உப்பல், மாநிலச் செயலாளராக இருந்த சோகன்சிங் தேஷி ஆகியோரைத் தீவிரவாத கும்பல் சுட்டுக் கொன்றதை, இன்றைய இளைய சமூகம் முழுதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. அஸ்ஸாமில், பிரிவினை கோஷத்தை எதிர்த்த காரணத்திற்காக துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்ட நிரஞ்சன் தாலுக்தாரின் வரலாறு, கல்லூரி மாணவிகளின் வீரமிக்க போராட்டம் போன்றவை, 1980 களில், இந்திய அரசியலில் திவீரம் செலுத்திக் கொண்டிருந்தது. தேச ஒற்றுமைக்கு விடப்பட்ட சவாலை, எதிர்கொண்டதால், அன்றைய டி.ஒய்.எஃப்.ஐ இளைஞனை, ஹீரோவிற்குறிய மிடுக்கோடு, நடைபோடச் செய்தது.
பஞ்சாப்பில், காலிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், டி.ஒய்.எஃப்.ஐ இளைஞர்களை தற்காத்து கொள்ள வேண்டிய அளவிற்கு தாக்குதல் உச்சத்திற்கு சென்றது. எனவே சில ஆயுதங்களை வாங்கிட முடிவெடுத்து, அகில இந்திய தலைமை அறைகூவல் விட்டதும், பள்ளி மாணவனாக வசூலில் ஈடுபட்டதும், நெஞ்சை விட்டு அகலாத நினைவுகள். தியாகத்தில் புடம்போட்ட இயக்கம் என்பது மிகை அல்ல. இன்றைக்கும் மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான தோழர்கள தங்களை இந்த மண்ணில் விதைத்துக் கொண்டே இருக்கின்றனர். உயிரை அச்சுறுத்தி, இயக்கத்தை அழிக்கும் பகல் கணவில் எதிரிகள் நிச்சயம் வெற்றி பெறமுடியாது. உயிர்பயம் என்ற அழித்தொழிப்பு கொள்கை வெற்றி பெற்று இருந்தால், இந்தியா ஒரு நாடாக உருவெடுத்திருக்கவோ, விடுதலை பெற்றிருக்கவோ வாய்ப்பில்லை. மாறாக வன்முறை மட்டுமே அதிகாரம் செலுத்தியிருக்கும்.
தமிழகத்திலும், 30 ஆண்டு வரலாற்றில் 19 வீரர்களை இழந்திருக்கிறோம். திரும்பிப் பார்த்தால் அற்பமாக தெரியும் சில காரணங்கள், கொலைக்கு அடித்தளம் அமைத்திருப்பது, தமிழ் நாட்டின் நிலப்பிரபுத்துவ சிந்தனையாளர்களை, அடையாளம் காட்டுகிறது. உரிமைகள் அனைத்தும் உயிர்ப் பலி என்ற விலை கொடுத்து பெறப்பட்டது என்பதை, உரிமைகளை அனுபவிப்பவர்கள் நினைவில் கொள்வது அவசியம்.
உயிர் இழந்த யாரும் தனது சொந்த நலனை முன்னிருத்த வில்லை. கள்ளச் சாராயத்தால் பாதிக்கப்படும் குடும்பங்களைக் காக்க, கந்து வட்டி கொடுமையில் இருந்து மீட்க, ரவுடிகளிடம் இருந்து, நிம்மதியான வாழ்க்கையை பொது மக்களுக்கு உருவாக்கிட, காமவெறியர்களிடம் இருந்து பெண்களைக் காத்திட, மதவெறியர்களிடம் இருந்து சிறுபான்மை மக்களைக் காத்திட, அரசியலில் ஜனநாயகத்தை நிலைநாட்டிட, உள்ளாட்சி தேர்தல்களில் ஊழலற்றவர்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, மாணவர் உரிமையை நிலப்பிரபுக்களிடம் இருந்து பாதுகாத்திட, பொதுச் சொத்தை அபகரித்ததை மீட்பதற்காக, என பொது மக்களின் தேவைக்காக, அவர்களைப் பாதுகாப்பதற்காக, தங்கள் வாழ்வை அர்ப்பணம் செய்தவர்கள். தனி நபர் சாகசங்களாக இதைப் பார்க்காமல், இயக்க வளர்ச்சியைக் காக்க, தந்த விலைகள் என்று தான் டி.ஒய்.எஃப்.ஐ பார்க்கிறது. இனியும் தனது வன்முறையை, கள்ள சாராய வியாபாரத்தை, பெண்கள் மீதான ஆதிக்கத்தை தொடர முடியாது என்ற நிலையிலேயே, ஆதிக்க சக்திகளும், சமூக விரோதிகளும், வாலிபர் இயக்கத் தலைவர்கள் மீது கொலைவெறித் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். ஸ்பார்ட்டகஸின் மரணம் அடிமை முறைக்கு முடிவு கண்டது. அது போல், நமது தோழர்களின் தியாகம், பல இடங்களில், சமூகக் கொடுமைகளை தடுத்து முன்னேற வித்திட்டது..
இன்றைய தமிழகத்தில், மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்த இயலாத காரணத்தால், தற்கொலை அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். கல்வி வர்த்தகம் கணஜோராக அரங்கேறுகிறது. தனியார் பள்ளி உரிமையாளர்கள், தங்கள் தேவைக்காக, பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விடுமுறை அறிவித்து, தாங்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆள் திரட்டுகிறார்கள். கல்வி தனியார் வசம் கொடுக்கப் பட்டால், இந்த கொடுமைகள் தலைவிரித்து ஆடும் என்பதை, டி.ஒய்.எஃப்.ஐ. நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறது. உயிர் கொடுத்தாவது, தடுப்பது என களம் கண்டிருக்கிறது. கேரள மாநிலம், கூத்துபரம்புவில், தனியார் மருத்துவ கல்லூரி துவங்க, காங்கிரஸ் அரசு முயற்சித்த நேரத்தில், நவம்பர், 25, 1995ல், நடைபெற்ற டி. ஒய்.எஃப்.ஐ, எஸ்.எஃப்.ஐ.யின் எழுச்சிமிக்க போராட்டம் குறிப்பிடத் தக்கது. ராஜிவ், மது, ரோஷன், ஷிபுலால், பாபு ஆகிய ஐந்து தோழர்கள், காவல் துறையின், ஆட்சியாளர்களின் கொலைவெறிக்கு ஆளாகினர். அந்த போராட்டத்தில் பல ஆயிரம் கலந்து கொண்டனர். நூற்றுக் கணக்கில் தாக்குண்டனர். கன்னூர் மாவட்டம், சொக்லி பஞ்சாயத்தில், 15 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக, கழுத்திற்கு கீழ் சிதைக்கப் பட்ட உடலாக, இருந்தாலும், வரும் தோழர்களிடம், புன்னகை தவழும் முகத்துடன், இயக்கப் பணி எப்படி இருக்கிறது என்பதை அக்கறையுடன் விசாரிக்கும் தோழனாக, புஷ்பன் வாழ்ந்து வருகிறார். 15 ஆண்டுகளில், 5475 நாட்களில், இழந்திருக்கும் நேரத்தை, வாழ்வின் பல்வேறு இன்பத்தைத் தொலைத்து விட்டதை நினைத்து ஏங்கவில்லை. மாறாக தொடரும் போராட்டங்கள் காரணமாக வெற்றி மீதான நம்பிக்கையுடன், தோழர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறார்.
இயக்கம் என்பது சம்பாதிப்பதற்கல்ல, பலரைப் பாதுக்காக்க, அந்த கவசமாக இயங்கிய குற்றத்தினால் தான், எமது தோழர்கள் கொலையுண்டார்கள். அனைவரும் 17 வயது துவங்கி, 40 ஐ, தொட்டவர்கள். அம்மா, அப்பா, மணைவி, குழந்தை ஆகிய அன்பைக் கடந்து, மக்கள் மீது நேசம் கொண்டிருந்தார்கள். அதனாலேயே மக்கள் நிம்மதிக் காற்றை சுவாசிக்க, தாங்கள் காற்றாகி போனார்கள். இவர்கள் தியாகத்தை வரலாறு நினைவில் வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், வளரும் புதிய தலைமுறைக்குச் சொல்லாமல் தியாகிகள் விதைக்கப் படுகிறார்கள், என்று சொல்வதில் பொருளில்லை. சொல்லும் விதத்தில், தோழர். ரமேஷ் பாபு முயற்சி எடுத்திருக்கிறார். ஓரிரு நாள் பணியில் இத்தகவல்களை சேகரிப்பது சாத்தியமற்றது. 30 ஆண்டுகளுக்கும் முந்தைய தியாகிகள் குறித்த விவரங்களை, இன்று இந்நூலுக்காக திரட்டாமல் விட்டிருந்தால், வரலாற்றின் பக்கங்களுக்குள், புதைந்து போயிருப்பார்கள். எனவே தான் இது மிகச்சிறந்த முயற்சி.
களப்பலியாகிய தோழர்களின், தோழர்கள், நன்பர்கள், குடும்பத்தினர், அப்பகுதி மக்கள் இத் தொகுப்பு குறித்து அறிந்தால், மட்டற்ற மகிழ்ச்சி கொள்வார்கள். வாலிபர் சங்கப் பணிகளுக்கிடையில், தமிழகத்தின் அனைத்து தியாகிகள் குறித்த வரலாற்றினை, சேகரித்து தொகுத்திருக்கும், டி.ஒய்.எஃப்.ஐ. மாநிலத் தலைவர். தோழர். எஸ்.ஜி.ரமேஷ்பாபு விற்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும், அவர் எடுத்த முயற்சி வெற்றி பெற தகவல் தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகளையும் உரித்தாக்குகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக