புதன், 20 அக்டோபர், 2010

லெனின் மற்றும் பகத் சிங்





தனது விருப்பம் குறித்து ஆர்வம் கொண்டிருந்தால், அதற்காக முழுமூச்சாக உழைத்தால், அதனால் தூக்கமின்றித் தவித்தால், பின்னர் அவ்விருப்பம் நிறைவேறும் போது, உலகில் மாபெரும் பிம்பத்தைத் தான் அடைந்ததாக உணருவான் மனிதன். சோசலிசம் நமது விருப்பமா?

லெனின்.

இளைஞர்கள் அரசியலில் ஈடுபடலாகாது. மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது. பொதுமக்கள் என்ற பெயரிலான அங்கலாய்ப்புகள் இப்படித் தான் விதைக்கப் படுகிறது. கல்லூரிகளில் பயிலும் மாணவர் கூட்டமோ, பொதுவான இளைஞர்களோ, அரசியலுக்கு வர விரும்பவில்லை. காரணம் அது ஒரு சாக்கடை, விழுந்தால் எழுந்திருக்க இயலாது, என ஏற்கனவே குறிப்பிட்ட முன்முடிவை பின் தொடருவதனால் உருவானது. மழை பெய்து நீர்வரத்து அதிகரிக்கும் போது மட்டுமே சாக்கடை சுத்தமாகிறது. மழை பொய்த்துப் போனால், சாக்கடையின் துர்நாற்றமும், தேங்கிய சாக்கடையினால், நிலத்தடி நீரும் சேர்ந்து கெட்டுப்போவதும் இயற்கை. மனித உடலிலும் பழைய செல்கள் அழிந்து புது செல்கள் உருவாவதும் இயற்கையாக நடைபெற்று வருகிறது. இயற்கை ஒருவேளை நின்று போனால், நிலமும் உடலும் பாதிக்கப் படும். அரசியலும் இளைஞர்களின் பங்கேற்பு இல்லை என்றால், மிகச் சிறந்த அரசியலாக இருந்தாலும், எதிர்காலத்தை இழந்து விடும்.

உலகில் இளைஞர்களிடம் அரசியல் பேசிய தலைவர்கள் பலர். அரசியல் உரைகள் உலகப் புகழ் பெற்றது, லெனின், மா சே துங், சேகுவேரா, ஆகிய கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு மட்டுமே. இத் தலைவர்கள் தங்கள் நாடுகளில் புரட்சி வெற்றி பெற்ற பிறகே அதிகளவில் இளைஞர்களிடம் பேசினார்கள். இளைஞர்களின் பங்களிப்பு அதிகார மாற்றத்துடன் நின்று விடக்கூடாது. இளைஞர்கள் சமூக ஆக்கத்தில் முன்நிற்க முடியும் என்பதை அறிவியல் பூர்வமாக உணர்ந்து தங்கள் சம்பாசனைகளை அமைத்துக் கொண்டனர்.

அக்டோபர் 2, 1920ல் லெனின், கம்யூனிஸ்ட் இளைஞர் கழக ஊழியர்களிடம் நிகழ்த்திய உரை, வரலாற்றின் எல்லாக் காலங்களிலும், இளைஞர்களிடம் என்ன விவாதிக்க வேண்டும் என்பதற்கான, நிரந்தர சான்று. மார்க்சீயம் என்பது கடந்த காலத்தில் இருந்த அனைத்து சமூக அமைப்புகளின் சுரண்டல் முறையையும் கற்றதன் அடிப்படையில் உருவானது. எனவே புரட்சிக்கு முந்தைய முதலாளித்துவ சமூகம் உருவாக்கி வைத்த கண்டு பிடிப்புகளை, தொழில் நுட்பத்தை, நல்ல அம்சங்கள் எனப்படும் அனைத்தையும், இளைஞர்கள் கற்றுத் தேர வேண்டும் என வலியுறுத்துகிறார்.

கம்யூனிஸ்ட் கட்சி பிரசுரம், ஆய்வுக்கட்டுரைகள், மட்டும் கற்பது போதும், என்று இருந்தால் கம்யூனிஸம் என்பது வறட்டு சூத்திரம் ஆகிவிடும். அத்தகைய கம்யூனிஸ்டுகள் தற்பெருமை நிறைந்தவர்களாக மாறிவிடுவர். பழைய முதலாளித்துவ கல்வி முறையில் நாம் அமைக்க விரும்பும் சமூகத்திற்கு கெடுதல் விளைவிக்கும் அம்சங்களை விலக்கி விட்டு, கம்யூனிஸத்திற்கு பலனளிக்கும் அனைத்தையும், பழைய பள்ளியில் இருந்து கற்பது அவசியம், என்பதை இன்றைய சமூகத்திற்கும் பயன் படும் வகையில் குறிப்பிட்டு இருக்கிறார். சோசலிசம் என்பது முதலாளித்துவத்தை விடவும் சிறந்தது. ஏனென்றால் முதலாளித்துவத்தின் சிறந்தவற்றையும், அதன் கெட்ட அம்சங்களை களைந்து புதிய உருவாக்கமும் இனைந்து எல்லாமே மொத்த சமூகத்திற்கும் பொதுவானது, என்பதை நிலைநாட்டுகிறது. அப்பணியில் கம்யூனிஸ்டுகள் முழு ஆர்வம் செலுத்த வேண்டும் என்ற லெனின் விடுத்த வேண்டுகோள், அரசியல் சாக்கடை என்பவராலும் மறுக்க இயலாது.

ஒரு நாடு வளர்ச்சி பெற இளைஞர்களிடம் முதலீடு செய்ய, அரசுகள் முன்வர வேண்டும் என பலர் வலியுறுத்தியுள்ளனர்.. இந்தியா உலகிலேயே மிக அதிகமான இளைஞர்களைக் கொண்டிருக்கும் நாடு. இங்கிருக்கும் அரசியல் இயக்கங்களோ, முதலாளித்துவ இளைஞர் இயக்கங்களோ, இளைஞர்களைத் தொலை நோக்குப் பார்வையுடன் அனுகுவதில்லை. மாறாக இளைஞர்களின் உணர்ச்சி வேகத்தை மட்டும் பயன் படுத்துகின்றனர். காஷ்மீரத்து போராட்டங்கள், வடகிழக்கு மாநிலங்களின் போராட்டங்கள், மாவோயிஸ்டுகள் என சொல்லிக் கொள்பவர்களின் போராட்டங்கள் ஆகிய அனைத்தும், இளமையின் வேகத்தைப் பயன் படுத்திக் கொள்ளும் சிந்தனையில் கருக் கொண்டதே.

இன்றைய இந்திய சூழ்நிலையில், இளைஞர்கள் ஏன் அரசியலில் ஈடுபட வேண்டும்? என்ற பகத்சிங் எழுதிய கட்டுரை, சில விளக்கங்களை முன் வைக்கிறது. இன்றைய அரசியலில் புரட்சி புரட்சி என்று பேசுவோர்க்கும், முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கும், சமூக மாற்றம் குறித்த கம்யூனிஸ்ட் கட்சி அரசியலுக்குமான வித்தியாசத்தினை தெளிவுபடுத்துகிறது.

ஊழல் குற்றச்சாட்டுகள் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. பணத்தை விதைத்து, நாற்காலிகளுடன், நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் செல்வதோ எளிது, என்ற அரசியல் வியாபாரம் கண்டு, அதிருப்தி கொள்வது நியாயமே. அதிருப்தி காரணமாக அரசியல் வனவாசம் கொள்ள முடியாது. புதிய சமூகத்தை உருவாக்கும் போராட்டம் எளிதானதல்ல. இளம் அரசியல் தொண்டர்கள் கம்யூனிஸ்ட் கட்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், அக்கட்சியை வலுப்படுத்துவதன் மூலமே, விவசாயி, தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க முடியும், என்ற விவாதத்தை பகத்சிங், கம்யூனிஸ்ட் கட்சியில் சேராமலேயே முன்வைத்துள்ளார்.

இந்தியா விடுதலை பெற்றால், இர்வின் பிரபுவின் இடத்தில், சர். தேஜ் பகதூர் சாப்ரு வைக்கப்படலாம். இதனால் இந்திய விவசாயிக்கு என்ன பலன் கிடைக்கும்? என்ற கேள்வி முக்காலத்திற்க்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது. பிரிட்டிஷாருக்கு அன்றைய இந்திய மக்களை ஏமாற்ற, மண்டோ மார்லி சீர்திருத்தம், செம்ஸ் போர்டு சீர்திருத்தம் போன்ற வார்த்தை விளையாட்டுக்கள் போதுமானதாக இருந்தது. இன்றைய ஆட்சியாளர்களிடம் நலத்திட்டங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறது.

23 வயதில் கொல்லப்பட்ட பகத்சிங், 1929களில், எழுதியிருக்கிறார், எனது கருத்துப் படி மேலவை என்பது முதலாளித்துவ ஆட்சியின் போலித்தனம் அல்லது சூழ்ச்சி, ஒரே ஒரு அவையைக் கொண்ட அரசாங்கமே சிறந்த ஒன்றாக செயல்பட முடியும். சட்ட மன்றத்திற்கும் விடவும், உயர்ந்த அதிகாரங்களுடன் மேலிருந்து திணிக்கப்படும் ஆளுநர் ஒரு கொடுங்கோலர் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும். இந்த விவாதம் இன்று கம்யூனிஸ்ட் கட்சியினரால் மட்டுமே முன் வைக்கப்படுகிறது. மாநில சுயாட்சி முழக்கங்கள் அரியணைக்கான வாய்ப்பு கிடைக்கும் வரை என்பதாகி விட்டது. பகத்சிங்கின் தீர்க்க தரிசன உணர்வு தெளிவாக இருக்கிறது. பொருளாதார சுந்திரத்திற்கு சோசலிசம் மட்டுமே தீர்வு, என பகத்சிங் குறிப்பிட்ட நிலையில் தற்போது அரசியல் சுதந்திரத்தை பாதுகாக்கவும் கம்யூனிஸ்டுகளால் மட்டுமே முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

உலகமயம், நவீன தாராளமயம் என்பது வார்த்தைகளாக மட்டும் இல்லாமல், இந்திய ஆட்சியைத் தீர்மானிக்கிற சர்வ சக்தி படைத்ததாக அதிகாரம் செலுத்துகிறது. ஊழல் பெருக்கத்திற்கு பன்னாட்டு நிதி மூலதனத்தின் வருகை ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. காமன் வெல்த் போட்டிகளுக்கான தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பல ஆயிரம் கோடி ஊழல் அம்பலப்பட்டுள்ளது. இது போன்ற திட்ட அமலாக்கத்தில், 10 சதம் கமிஷன் பேரம் பேசப்படுவது தவிர்க்க இயலாது என அதிகாரிகளில் ஒருவர் குறிப்பிடுகிறார். இப்படி லஞ்சம் மற்றும் ஊழல் நியாயப்படுத்தப் படுகிறது.

இதற்கு காரணம் இந்த முதலாளித்துவ அமைப்பு முறையும், அது பாதுகாக்கும் வர்க்கமும் ஆகும். இதற்கு மாற்று பகத்சிங் குறிப்பிட்ட கம்யூனிஸ்ட் அரசியலும், லெனின் வலியுறுத்திய இளைஞர்கள் கற்றுத் தேர வேண்டிய சமூகமும் முன் நிறுத்தப்பட வேண்டும். கம்யூனிஸ்ட் அரசியல் இதற்கு வலுப்பெறுவதும், இளைஞர்கள் அதை நோக்கி வருவதும் காலத்தின் கட்டாயம். இக்கட்டுரை தொகுப்பு வெளிவர துணை நின்ற அனைவருக்கும் நன்றிகள் பல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக