வியாழன், 28 அக்டோபர், 2010

அரசுக்குத் திட்டம் இருக்கிறது, திறம் இல்லை

யானை அளவு திட்டத்தினை உருவாக்கும் அரசு, பூனை அளவு கூட அதை அமலாக்குவதில்லை.
இப்படி ஒரு விமர்சனத்துடன் தான், பட்டியலினத்தவருக்கான திட்டங்களில் ஒன்றான, சிறப்பு உட்கூறு திட்டங்கள் குறித்து விவாதிக்க முடியும் இந்தியாவில், 1980-81 காலங்களில், தலித் மற்றும் பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக, சிறப்புக் கூறு நிதியை ஒதுக்கீடு செய்து, பட்ஜெட் அறிக்கையுடன் இணைத்து அமலாக்குவது என முடிவெடுத்தனர். இதை சிறப்புக்கூறு திட்டம் எனவும், பின்னர், துணைத்திட்டம் எனவும் குறிப்பிட்டனர். தலித் மற்றும் பழங்குடி மக்களின், மக்கள் தொகைக்கு ஏற்ப பட்ஜெட் தொகையில் நிதி உருவாக்கி, அந்த நிதியை சம்பந்தப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துவது நோக்கம் என்றும் கற்பித்தனர். தலித் அறிவாளிகள் துவங்கி பலரும் வரவேற்ற திட்டமாக இருந்தது. மத்திய அரசும், மாநில அரசும் இத்திட்டத்தை அமலாக்குவதற்கான முன்மொழிவுகளையும், ஆலோசனைகளயும் நிறையவும், பலமுறை விவாதித்தும், உருவாக்கி விட்டனர். ஆனாலும் அமலாகவில்லை.

தமிழ் நாட்டில் ஓரளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது. 2005-06 பட்ஜெட் ல், 2104.55 கோடி ரூபாயும், 2006-07 பட்ஜெட்- ல், 3117.86 கோடி ரூபாயும், 2007-08 பட்ஜெட்-ல் 3356.88 கோடி ரூபாயும், 2008-09 பட்ஜெட்- ல், 4178.31 கோடி ரூபாயும், 2009-10 பட்ஜெட்-ல், 4602.68 கோடி ரூபாயும் திட்ட இலக்காக குறிப்பிடப்பட்டுள்ளது. 2010-11 பட்ஜெட்-லும் 3828 கோடி ரூபாய் என முதல் முறையாககூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

முப்பது ஆண்டுகால அனுபவத்தில் நாம் விவாதிக்கும் சிறப்பு கூறு அல்லது துணைத்திட்ட நிதி குறித்து அறிவு ஜீவிகள் தவிர சாதாரண பொது மக்களுக்கு எதுவும் தெரியாது. மற்றொரு புறம் கடன் அல்லது தாட்கோ நிதி என்றும் தான் பெரும்பாலும் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. எப்படி பல பத்தாண்டுகளாக இட ஒதுக்கீடு உரிமையைப் பலரும் பயன்படுத்த முடியாமல் இருக்கிறார்களோ, அல்லது பயன் படுத்துவது புரிந்து கொள்ளப் படவில்லையோ, அது போலவே, பட்டியல் இனத்தவர்களுக்கான சிறப்பு துணைத்திட்ட நிதி ஒதுக்கீடும் சம்மந்தப்பட்டவர்களைச் சென்றடையவில்லை. இது அரசுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் வசதியாக அமைந்துவிட்டது. எனவே தான் அரசு இந்த நிதியை வேறு பல திட்டங்களுக்கு திருப்பி விட துணிகின்றனர். மிக சமீபத்தில், மத்திய அரசு காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் செலவினத்திற்காக பட்டியலினத்தவருக்கான நிதியை திருப்பி விட்டது. மாநில அரசு, தான் ஒதுக்கிய நிதியை, வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கப் பயன்படுத்தி உள்ளனர். சமத்துவபுர வீடுகளுக்கும் பயன்படுத்தியுள்ளனர். கேள்விகள் எழுந்த போது, பட்டையலினத்தவருக்கு தானே, தொலைக்காட்சி பெட்டி, வீடு கொடுத்தோம் என்கின்றனர். அப்படியானால் சிறப்பு ஒதுக்கீடு என்பதற்கு என்ன அர்த்தம். இதர சாதிப் பிரிவினருக்கு தனி நிதி ஒதுக்காமல், மேற்படி பொருள்களை வழங்கும் அரசு, தலித்துகள் பெயரில் நிதி ஒதுக்கீடு செய்து ஏமாற்றுவது, இதுவரை புரிந்து கொள்ளப் பட வில்லை
.
பட்டியலினத்தவர் துணைத் திட்டம் உருவாக்கப் பட்ட நோக்கமான, தொழில், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற நோக்கங்களில், ஆட்சியாளர்கள் முரண்பாடுகிற இடத்தை, நாம் உணரமுடியும். பட்டியல் இனத்தவர், பொருளாதார ரீதியில் முன்னேறி விடக் கூடாது என்பதற்காகவே, துணைத்திட்ட நிதியை, வேறு தேவைகளுக்கு செலவிட துணிவு காட்டுகிறார்களா? என்ற சந்தேகம் தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக வேலை மற்றும் தொழில் குறித்த வாய்ப்புகளை பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினத்தவருக்கும், ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதியைப் பயன்படுத்துவதன் மூலமே, திட்டத்தின் நோக்கமான சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஒடுக்கப் பட்ட மக்கள் அடைய முடியும். வேலை அல்லது தொழில் ஆகியவை, சுயமரியாதையை உயர்த்த்க் கூடியது என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால் மத்திய அரசும், மாநில அரசும் இந்த துறையில் முன்னேற்றத்தை எட்ட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் செயல்பட வில்லை. உதாரணத்திற்கு தமிழ் நாட்டில், 2618.56 கோடி ரூபாய் கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்டது. இதில், வேலை அல்லது தொழில் தேவைக்காக, 9 வகையான திட்டங்கள் அல்லது செயல் பாடுகள் மூலமாக, 144.92 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப் பட்டுள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில், 5.53 சதமானம் ஆகும். இதன் மூலம் பலனடந்தவர்கள் 95742 நபர்கள். மொத்த பட்டியலினத்தவர் மக்கள் தொகையான சுமார் 1.25 கோடியில், அரசுத் திட்டத்தால் பலனைந்தவர்களை ஒப்பிட்டால் அது வெறும் 0.79 சதமானம் மட்டுமே. சமூக அந்தஸ்து படிநிலையில், முக்கியப் பங்கு வகிக்கிற, பொருளாதார முன்னேற்றத்திற்கு, வழி செய்யும் வேலை மற்றும் தொழில் வாய்ப்பை, அரசு புறக்கணிக்கிறது என்பதே, இதன் மூலம் நாம் அறிவது ஆகும்.

பலனடைந்த குறைந்த பகுதி மக்களிலும் கூட, 63295 நபர்கள் சுய உதவி குழுக்களைச் சார்ந்த தலித் பெண்கள். மூன்று வகையான திட்டங்கள் மூலம் சுய உதவிகுழுக்களைச் சார்ந்த பெண்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர் அல்லது நிதி உதவி போன்ற கடன் பெற்றுக் கொடுத்துள்ளனர். இதன் மூலம் சிறு பலன் இருக்கலாம் மறுக்கவில்லை. ஆனால் தொழில் வாய்ப்பையோ, வேலை வாய்ப்பையோ எந்த வகையில் உயர்த்துவதற்கு, மேற்படித் திட்டங்கள் உதவிடும்? மற்றொரு புறம் குடிமைப் பணி அதிகாரிகளை உருவாக்கும் பயிற்சி (சிவில் சர்வீஸஸ்) கொடுக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 88 நபர்கள் மட்டுமே பயிற்சியளிக்கப் பட்டனர், என்ற செய்தி, பேரதிர்ச்சியாக இருக்கிறது. சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் தகுதியை உருவாக்குவதற்கு ஏன் அரசு வடிகட்டி தேர்ந்தெடுக்கிறது? பல லட்சம் நபர்கள் எழுதும் தேர்வுக்கு தமிழகத்தில் ஒரு சில ஆயிரம் பட்டியலினத்தவரை தயார் செய்வது குறித்து ஏன் ஆலோசிக்க வில்லை?. ஒரு வேளை சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறவில்லை யென்றாலும், வேறு தேர்வுகளுக்கு பலனளிக்கும் என்பதை ஏன் மதிப்பிடவில்லை?.

இதை விமர்சனக் கண்ணோட்டத்தில் பார்த்தால், ஆண்டுக்கு பல லட்சம் பணியிடங்களை அழித்தொழிக்கும், மத்திய, மாநில அரசுகளின் பொருளாதார கொள்கை, சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கான தேர்வை இடைவெளி இல்லாமல் நடத்துவது ஏன்?. என்ற கேள்வி எழுகிறது. உதாரணத்திற்கு, பொதுத்துறை மற்றும் மத்திய அரசுத் துறைகளில் மட்டும் சுமார் 20 லட்சம் பணியிடங்கள் அழிந்துள்ளதாக கூறுகின்றனர். மத்திய அரசு இட ஒதுக்கீடு கொள்கைப்படி 3 லட்சம் தலித் இளைஞர்களுக்கும், மாநில அரசு இடஒதுக்கீடு கொள்கைப்படி 3 லட்சத்து 60 ஆயிரம் தலித் இளைஞர்களுக்குமான வேலை வாய்ப்பு பறிக்கப் பட்டிருக்கிறது. இத்தகைய பணியிடங்களைப் பாதுக்காக்கிற வகையில் துணைத்திட்ட நிதியைப் பயன்படுத்தி இருந்தால் கூட துணைத்திட்ட நிதி பலனுள்ள வகையில் செலவிடப்பட்டிருக்கும்.

தொழில் துறையில் படித்த இளைஞர்கள் ஆர்வம் காட்டுவது தவிர்க்க இயலாதது. காலம் காலமாக தன் முன்னோர்கள் செய்த வேலைகளை செய்ய வேண்டும், என எதிர் பார்ப்பது அநாகரீக சமூகத்தின் அனுகுமுறை என்றே கொள்ளப்படும்.. துணைத் திட்டம் 16 வகையான பயிற்சிகளை முன்மொழிந்திருக்கிறது. அந்த பயிற்சிகளுக்கான வேலை வாய்ப்பை அரசு உருவாக்கும் பொறுப்பையும் ஏற்கும் போதுதான் இளைஞர்களுக்கு, நம்பிக்கை ஏற்படுத்த முடியும். சில விவாதங்கள் தொடர்ந்து முன்வைக்கப் படுகிறது. ஏன் விவசாயத் தொழிலாளர் குடும்பத்தில் இருந்து, படித்த இளைஞர்கள் சிலருக்கு, அறுவடை இயந்திரங்களை கடனாக கொடுக்க நடவடிக்கை எடுக்க கூடாது?. ஆனால் அரசு, கடந்த ஓராண்டு காலத்தில் 832 நபர்களுக்கு மட்டுமே சுய வேலைவாய்ப்பு அடிப்படையில் கடன் கொடுத்துள்ளது. 10.09 கோடி மட்டுமே இதற்காக செலவிடப் பட்டுள்ளது. இன்றைய தொழில் கொள்கை காரணமாக, சில்லரை வர்த்தகத்தில் கூட பெறும் பணக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே துணைத்திட்ட நிதியினை, மாநில அரசு தனித்தனியாக கொடுத்து சிதைக்காமல், பலரை இணைத்து, கூட்டுறவு முறையில் தொழில் துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப் பட்டால் அரசே, கொள்முதல் நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும்.
காலத்திற்கு ஏற்ற இத்தகைய அனுகுமுறையை துணைத்திட்ட நிதியைக் கையாளுவதில் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால், திரைபட நகைசுவை போல் வரும் ஆனால் வராது. இது மிக சீரிய விவாதத்திற்குறிய ஒன்று, கடந்த 30 ஆண்டுகளில் அரசு இந்த துணைத் திட்ட நிதியை எப்படி பயன்படுத்தியுள்ளது என்ற வெள்ளை அறிக்கை வெளியிடுவது அவசியம். ஏமாற்றப் பட்டு வரும் பட்டியலினத்தவரை, தொடர்ந்து திட்டத்தின் பெயர்கள் கொண்டு, ஏமாற்றாமல், செயலுக்கு கொண்டு வர அரசு அசைவது அவசியம்.

நன்றி தீக்கதிர் 27 அக்டோபர், 2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக