உலகில் பல நாடுகளில் பொருளாதார
ஏற்றத் தாழ்வுகள் மட்டும் தான் உண்டு. ஆனால் இந்தியாவில் சமூக ரீதியான ஏற்றத் தாழ்வுகளும்
இனைந்து தேசம் முழுவதும், நீக்கமற நிறைந்திருக்கிறது. இது பொருளாதார ஏற்றத் தாழ்வை
நீட்டிக்கச் செய்யும் அளவிற்கு வலுவான, கருத்து ஆதிக்கத்தை கொண்டதாகவும் செயல் பட்டு
வருகிறது. சமூக சமத்துவத்திற்காக, வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்திற்கான போராட்டம் தீவிரமாகி ஆங்கிலேய ஆட்சியாளர்களை நிர்பந்தித்ததால்,
1950 வரையிலும் அமலானது. வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம், சரியல்ல என்ற நீதிமன்றத்
தீர்ப்பின் காரணமாக, பிற்படுத்தப் பட்டவர், தலித் மற்றும் பழங்குடி என இட ஒதுக்கீடு
முறை 1950 முதல் அமலாகி வருகிறது. வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில்,
தாழ்த்தப் பட்டோர், முஸ்லீம்கள், கிறித்துவர்கள், ஆங்கிலோ இந்தியர், பிராமணர் அல்லாதார்,
என்ற பிரிவினர், இட ஒதுக்கீட்டுக்கு வரையறை செய்யப்பட்டு, பலன் பெற ஏற்பாடு இருந்தது.
ஏனென்றால் அன்றைய தினம் தனியார் துறையின் ஆதிக்கம் குறைவு
.
இன்று இட ஒதுக்கீடு முறை அமலில்
இருந்தும், தனியார் துறையின் ஆதிக்கம் மிக அதிகமாக இருக்கும் தன்மையை, மத்திய அரசின்
கொள்கைகள் உருவாக்கி விட்டதால், பலன் இல்லாது, ஏட்டளவிலான சட்டமாக மட்டும் இடஒதுக்கீடு
இருக்கிறது. எனவே சமூக சமத்துவம் ஏற்பட வேண்டும், என்ற நோக்கத்தில் உருவாக்கப் பட்ட
இடஒதுக்கீடு பலன் தரவில்லை. இந்திய ஆட்சியாளர்கள், இது போன்ற ஒதுக்கீடுகள் பலன் தராது
என்பதை தீர்க்க தரிசனமாக உணர்ந்திருக்கிறார்கள். அதனால் தான் 1979 காலத்திலேயே, இடஒதுக்கீட்டுக்கும்
மேலாக, தலித் மற்றும் பழங்குடி மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக, ஆட்சியாளர்கள்,
சிறப்பு உட்கூறுத் திட்டம் என்பதை அறிமுகம் செய்துள்ளனர். 1979ல் தனியார் மயம், உலகமயமாக்கல்
தன்மையை எட்டியிருக்காத காலம். இருந்தபோதும், அரசு, உட்கூறுத் திட்டத்தை அறிமுகம் செய்தது.
அதாவது பல ஆயிரம் ஆண்டுகளாக தொடரும், சாதிய சுரண்டல் முறையினால் ஏற்பட்ட, பொருளாதார
இடைவெளி, குறைவதற்காக அமலான இடஒதுக்கீடு போதுமான
பயனளிக்காத நிலையில் தான், உட்கூறுத் திட்டத்தின் மூலம், மேற்படி சமூக, பொருளாதார இடைவெளியைக்
குறைக்க வேண்டும் என்பதற்காக உட்கூறுத் திட்டத்தை, மத்திய அரசு முன் மொழிந்தது. இந்நோக்கம்
நிறைவேற தலித் மற்றும் பழங்குடி மக்கள் எண்ணிக்கை சதத்திற்கு ஏற்ப, நிதி ஒதுக்கீடு
செய்யப் படுவதன் மூலமே, மேற்படி இடைவெளியைக் குறைக்க முடியும் என்பதையும், அரசுக்கு
பரிந்துறைத்த குழு தெளிவு படுத்தியிருந்தது. ஆனால் கடந்த 32 ஆண்டுகளில் ஒரு பட்ஜெட்டிலும்
மக்கள் தொகை கணக்கின் படி மத்திய அரசு நிதி
ஒதுக்கீடு செய்யவில்லை. மாநில அரசும் 2009
வரை மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதன் காரணமாக, மத்திய அரசு,
சுமார் ரூ நாலரை லட்சம் கோடி ரூபாயை, 32 ஆண்டுகளில் குறைவாக ஒதுக்கியுள்ளது. அதேபோல்
மாநில அரசு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் குறைவாக ஒதுகீடு செய்துள்ளது.
ஒதுக்கப் பட்ட நிதியும், வேறு
காரணங்களுக்காக திருப்பி விடப் படுவது வெகு காலமாக நடந்து கொண்டிருக்கிறது. மிகச் சமீபத்திய
உதாரணம், மத்திய அரசு ஒதுக்கிய நிதியை காமன் வெல்த் போட்டி ஏற்பாடுகளுக்கு திசை திருப்பினர்.
மாநில அரசு இலவச டிவி வழங்கிய வகையில் இத் துணைத்திட்ட நிதியை திருப்பி விட்டது. கடந்த
காலங்களில் இது போல் எண்ணற்ற திசை திருப்பல்களுக்கு தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கான
துணைத் திட்ட நிதி ஆளாகியுள்ளது. இச்செயல்கள் காரணமாக அரசு தனது நோக்கம் எனக் குறிப்பிட்ட
சமூக இடைவெளியைக் குறைக்க, திட்டமிட்டு மறுக்கிறது என்பது புலனாகும்.
நியாயமற்ற இந்த செயலைக் கேள்வி
கேட்கிற போது, பிரித்துப் பார்க்க முடியாத (indivisible) இனங்களின் அடிப்படையில் மேற்படித்திட்ட
நடவடிக்கைகளைப் பார்க்க வேண்டும் என ஆட்சியாளர் தரப்பு கூறுகிறது. பட்டியல் இன மற்றும்
பட்டியல் பழங்குடி மக்களுக்கான துணைத் திட்டம், என்ற பெயருக்கும், அது உருவாக்கிய நெறிமுறைகளுக்கும்
முரணாக அரசின் செயல் பாடு அமைந்துள்ளது. பிரித்துப் பார்க்க கூடாது என்றால் சிறப்பு
உட்கூறு திட்டம் எதற்கு?. அதாவது ”துணைத்திட்டத்தின் அடிப்படையில் ஒதுக்கப் படும் நிதி,
பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடி குடும்பங்கள் அல்லது தனிநபர்களின் முன்னேற்றங்களை
அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அரசின் அனைத்துத் துறைகளிலும் இதற்கான திட்டங்கள்
வகுக்கப் படவேண்டும்”, என்ற அடிப்படை நெறியை அரசு மீறுகிறது. அரசு உருவாக்கிய நெறிமுறைகளை
அரசே மீறினால், யார் கேள்வி கேட்பது?
சில தனி நபர்களும், ஒரு சில இயக்கங்களும்
இது குறித்து தெரிவித்து வந்த அதிருப்தியை, அரசு கண்டு கொள்ளாத நிலையில் தான், தீண்டாமை
ஒழிப்பு முன்னனி தீவிரமாக களம் இறங்கியிருக்கிறது. கடந்த 2010 அக்டோபரில் துணைத்திட்ட
நிதி ஒதுக்கீடு மக்கள் தொகைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிற அதே நேரத்தில்,
ஒதுக்கப் பட்ட நிதி, நோக்கத்தை நிறைவேற்றுகிற வகையில் செயல் படுத்தப் பட வேண்டும்,
என்ற அறிவுறுத்தலுடன், தீண்டாமை ஒழிப்பு முன்னனி பயிலரங்கம் நடத்தியது. அதில் பல சிந்தனையாளர்கள்
கலந்து கொண்டனர். தீண்டாமை ஒழிப்பு முன்னனியில் அங்கம் வகிக்கின்ற சி.ஐ.டி.யு உள்ளிட்ட
அமைப்புகள் கலந்து கொண்டன. அதிலிருந்து, கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயத்துறை, பண்பாட்டுத்துறை,
அடிப்படைத் தேவைகள் ஆகிய ஐந்து தலைப்புகள் மீதான விவாதத்தினை உருவாக்கி, சில கோரிக்கைகளை
உருவாக்கியது.
கல்வி பெற்றோர் கணக்குப் படி,
ஆதிதிராவிடர், 63.19% என்றும், பழங்குடியினர் 41.5% என்றும் உள்ளது. ஆனால், மொத்த எழுத்தறிவு
பெற்றோர் சதவிகிதம், 73.45%, இதனுடன் ஒப்பிடுகையில், தலித் மற்றும் பழங்குடி மக்கள்
பின் தங்கி இருப்பதைத் தெளிவாகக் காணமுடியும். எனவே அரசு துணைத்திட்ட நிதியை, ஆதி திராவிட
மாணவர்களுக்கான பிரத்யேக முன்பருவப் பள்ளிகளை உருவாக்கப் பயன் படுத்துவதன் மூலம் பள்ளி
செல்லும் எண்ணிக்கையை உயர்த்தலாம். 75% ஆதி திராவிட மாணவர்கள் சேர்க்கப் படும் வகையில்
புதிய நவோதயா, கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளை மத்திய அரசு துவக்க வேண்டும். AIEEE,
GATE, GRE போன்ற தேர்வுகளை தலித் மற்றும் பழங்குடி மாணவர்கள், எழுதி வெற்றி பெறுவதற்கு
உதவியாக, மாவட்டம் தோறும் பயிற்சி மையங்களை உருவாக்க மேற்படி நிதியைப் பயன்படுத்த வேண்டும்.
சிட்கோ, டான்சிட்கோ போன்ற தொழிற்பேட்டைகளில்
20% தலித் மற்றும் பழங்குடியினருக்கு வழங்க வேண்டும். தலித் மற்றும் பழங்குடி மக்கள்
அதிகம் உள்ள மாவட்டங்களில், தொழில் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாட்கோ கடன் வரம்பு காலநிலைக்கு ஏற்ப உயர்த்தப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை வேலை
வாய்ப்புத் துறை அமலாக்க வேண்டும்.
1980 களுக்குப் பின் நிலவுடைமை
விகிதாச்சாரத்தில், பட்டியல் இன மற்றும் பழங்குடி மக்களின் நிலவுடைமை விகிதாச்சாரம்
குறைந்துள்ளது. பஞ்சமி நில உடமை போன்றவை கை மாறியது காரணமாக இருக்கலாம். எனவே அந்த
நிலங்களை மீட்க வேண்டும். புதியதாக நிலம் வாங்கி தலித் மற்றும் பழங்குடி இன மக்களுக்குப்
பிரித்துக் கொடுக்க வேண்டும். அறுவடை இயந்திரம், சிறு டிராக்டர்கள் உள்ளிட்ட விவசாய
உபகரணங்கள் வாங்க மேற்படி நிதி ஒதுக்கீட்டைப் பயன் படுத்த வேண்டும்.
பட்டியல் இன மற்றும் பழங்குடி
மக்களின் வரலாறு சார்ந்த ஆய்வுகளுக்கு இந்நிதியைப் பயன்படுத்த வேண்டும். வன்கொடுமைத்
தடுப்பு சட்டம், குடிமை உரிமைகள், துணைத் திட்டம் ஆகியவை குறித்த விழிப்புணர்வைத்,
தலித் மற்றும் பழங்குடி மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்களை, கருத்தரங்குகளைத்
திட்டமிட்டு நடத்த அரசு மேற்படி நிதியைப் பயன் படுத்த வேண்டும்.
தலித் மற்றும் பழங்குடி மக்கள்
குடியிருப்புகளில் கழிவறை, குடிநீர், கழிவுநீர் வெளியேற்றம் ஆகியவற்றை உறுதி செய்ய
வேண்டும். புதிய தொகுப்பு வீடுகள் கட்டப் படவெண்டும். குடிசை மாற்று வாரியம் ஒதுக்கிய
வீடுகளின் மராமத்துப் பணிகளுக்கு, மேற்படி நிதியை அரசு பயன் படுத்த வேண்டும்.
இத்தகைய செயல்களை மாநில அரசும்,
மத்திய அரசும் மேற்கொள்கிற போது, பட்டியல் இன மற்றும் பழங்குடி மக்களுக்கும், இதர்
பகுதி மக்களுக்குமான சமூக இடைவெளியைக் குறைக்க முடியும் என தீண்டாமை ஒழிப்பு முன்னனி
பரிந்துறைக்கிறது. இந்த பரிந்துறைகளை முன்வைக்கிற விதத்தில் நடத்திய, சிறப்பு மாநாடு,
கடந்த ஆகஸ்ட் 10, 2011 தேதியில் சிறப்புற நடைபெற்றது. மாநாட்டில் பேசிய தலைவர்கள்,
பி.வி. ராகவலு, அ. சவுந்தரராஜன், பி.சம்பத், உள்ளிட்ட தலைவர்களும், கிறிஸ்துதாஸ்காந்தி,
சிவகாமி, மணிவண்ணன் போன்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் பங்கெடுத்து கொண்டனர். இதைத் தொடர்ந்து
26 ஆகஸ்ட் அன்று தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டமும், தொடர் பிரச்சாரங்களும், செயல்களும்
திட்டமிடப் பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக