சித்தாந்தத்தைக் கொன்று அராஜகத்தை முன்னிறுத்துகிறது.
காலத்தின் தேவை கருதி நக்சலிசம் முதல் மாவோயிசம் வரை என்ற நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. கம்யூனிஸ்ட் விவாதத்திலும் இயக்கம் தத்துவார்ந்த விவாதத்திலும், நடைமுறை விவாதத்திலும் நீண்ட காலத்தினை செலவிட்டு இருக்கிறது. நடைமுறையின் செயல்பாட்டில், தான் எடுத்த அரசியல், தத்துவார்த்த நிலைபாடு சரி என்பதை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி, இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலக அளவில் உணர்த்தியுள்ளது. சிறந்த எதிர்கட்சியாக நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வருவதையும், மேற்குவங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் மாற்று அரசியல் குறித்த புரிதலையும் உருவாக்கி மக்களின் அங்கீகாரத்தை வலுவாகக் கொண்டிருக்கிறது.
நந்திகிராம், சிங்கூர், லால்கர் ஆகிய மேற்குவங்க மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் சலசலப்பு, இடது அதிதீவிர சித்தாந்தத்திற்கும், நடைமுறைக்கும் மக்களிடையே வரவேற்பு அதிகரித்து விட்டது போன்ற உணர்வை தேசிய ஊடகங்களும், சில அறிவுஜீவிகளும் வெளிப்படுத்துகின்றனர். மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தனது நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது. அதை சரி செய்து மக்களை வென்றெடுப்போம் என உறுதியாகத் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி தாராளமயக் கொள்கைகளை தாராளமாக அமலாக்கிட காங்கிரஸ் கட்சிக்கு உதவியுள்ளது. அப்படியானால் இது உழைக்கும் மக்களுக்கான தோல்வி என்ற அரசியலை முன்னெடுக்க வேண்டிய தருணம் இது.
ஆனால் என்ன நடைபெறுகிறது? உழைக்கும் மக்களின் ஓற்றுமையை சிதைக்கும் தத்துவார்த்த சீர்குலைவு சர்ச்சை வலுப்பெறுகிறது. அது வளர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியினரை கொல்லும் சித்தாந்தப் போராட்டமாக மாவோயிஸ்டுகள் தங்கள் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். இதன் மூலம் இந்திய ஆளும் வர்க்கமும், பன்னாட்டு நிறுவனங்களும், சிக்கலின்றி தங்கள் லாபத்தை கொள்ளை லாபமாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். எப்போதெல்லாம் எங்கெல்லாம் இதுபோன்ற சித்தாந்தப் போராட்டத்தில் சிதைவுகள் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் ஆளும் வர்க்கத்திற்கு, இடது தீவிரவாதம் துணை புரிந்துள்ளது என்ற வரலாற்றை நக்சலிசம் முதல் மாவோயிசம் வரை தெளிவாக வரிசைப் படுத்துகிறது.
இன்றைய இளம் தலைமுறை 40 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய நக்சல்பாரி இயக்கம் குறித்தோ, அதன் பின்னணி குறித்தோ முழுமையாக அறிந்திருக்க நியாயம் இல்லை. அந்த இழப்பை ஈடுசெய்யும் வகையில் முழுமையான ஆய்வினை மேற்கொண்டு வரலாற்று ரீதியான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழில் இதுபோன்ற விவாதங்கள் மிகத் தேவையாக இருக்கிறது. மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சட்டிஸ்கர், ஒரிஸ்ஸா, பீகார், ஆந்திரா, மகாராஷ்ட்ரா ஆகிய 7 மாநிலங்களில் 250 மாவட்டங்களில் அரசை ஆட்டி வைக்கும் சக்தியாக மாவோயிஸ்டுகள் உள்ளனர் என்ற சித்திரம் வரையப்படுகிறது. இந்த செய்தியை மட்டும் படிக்கும் தமிழ்நாட்டின் வாசகர் உலகில் வேறு கம்யூனிஸ்டுகள் இல்லை. என தவறாகப் புரிந்து கொள்வார். 600 மாவட்டங்களைக் கொண்ட இந்தியாவில், 250 மாவட்டங்களில் பெரும் சக்தியாக இருப்பது உண்மையென்றால், ஏன் புரட்சியைத் துவக்கவில்லை? உண்மை என்ன என்பதை நக்சல் கோஷ்டிகளின் வீழ்ச்சி என்ற 33வது அத்தியாயம் விவரிக்கிறது 12,476 காவல் நிலையங்கள் அடங்கிய பகுதிகளில் 509 காவல் நிலையங்களின் வரம்பிற்குள் உள்ள பகுதிகளில்தான் மாவோயிஸ்டுகளின் வன்முறைச் சம்பவங்கள் நடந்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஊடகங்களின் சித்தரிப்பிற்கும், உண்மைக்கும் ஏன் இவ்வளவு இடைவெளி. உண்மையில் நக்சல் அமைப்புகள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு உள்ளனர் என்பதை பலர் குறிப்பிட்டுள்ளனர். சுனந்தா பானர்ஜி, 2009 தேர்தலில் மாவோயிஸ்டுகளின் அறைகூவலை நிராகரித்து வாக்களித்துள்ளனர் என்ற விவரங்களை ணிறிகீ அக்டோபர் 2009 இதழில் குறிப்பிட்டுள்ளார். மக்கள் மாவோயிஸ்டுகளை ஏற்கவில்லை. என்ற கையறு நிலையிலேயே வன்முறைகளை அதிகரிக்கின்றனர். அதிலும் சி.பி.எம் ஊழியர்களை சொல்வதன் மூலம், தனது சித்தாந்தத் தோல்விக்கு விடைகாண்கின்றனர். இது போன்ற விவரங்கள் நூல் முழுவதும் கொட்டிக்கிடக்கிறது.
பழங்குடி மக்களிலும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இயக்கங்கள் சல்வா ஜீடும் (சட்டிஸ்கர்), கிரிஜன் (ஆந்திரா), பஹாரி (ஜார்கண்ட்), ஓரிசாவில் 3000 பேர் கொண்ட மலைவாழ் மக்களின் படை என்ற பெயரில் உருவாகியுள்ளன. காரணம் ஆயுதப் போராட்டம் என்ற பெயரில், நக்சல் அமைப்பினர் நடத்தி வரும் அராஜகங்களை பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்தாலேயே இத்தகைய எதிர்ப்பை மாவோயிஸ்டுகள் சந்திக்க வேண்டியுள்ளது.
நக்ஸல் இயக்கம்:
நக்சல்பாரி கிராமத்தில் பிறந்த காலத்தில் இருந்து நக்சல் இயக்கம் குழப்பத்தில் இருப்பதை, மிகத் தெளிவாக நூல் விளக்குகிறது. 1969இல் துவங்கிய சில நாள்களிலேயே சித்தாந்தம் சிதைந்து அராஜகம் தலையெடுத்ததை நூலின் மூலம் அறிந்து கொள்ள முடியும். இன்றைய இடது தீவிர சிந்தனையாளர் குழப்பங்கள் தீர்ந்து மாவோயிஸ்டுகள் ஒரே அணியாக இணைந்து விட்டனரே என கேட்கலாம் புரட்சி குறித்து குழப்பத்திலும் அவசரத்திலும் இருக்கும் தீவிர சிந்தனையாளர்களால், மக்களை வென்றெடுக்க முடிவதை விட கிரிமினல் குற்றவாளிகளை வென்றெடுப்பது எளிதாக இருக்கிறது. என்பதையும் நூல் தெளிவு படுத்துகிறது. குறிப்பாக மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து, சி.பி.எம் இயக்கத்தை தாக்குவதில் இருந்து கிரிமினல்களுடன் மாவோயிஸ்டுகளுக்கு உள்ள உறவை அறியலாம்.
இன்று மட்டுமல்ல 1969இல் துவங்கிய காலத்திலும் 1970முதல் 75 வரை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களைத் தாக்கிய அதே ஃபார்முலாவை, மாவோயிஸ்டுகள் பின்பற்றுகின்றனர். கொல்கத்தா நகரில் மார்ச் 1970 முதல் அக்டோபர் 1971 வரையிலான 20 மாதங்களில் 528 மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களைக் கொன்றழித்தவர்கள் தான், நக்சல் சீர்குலைவாளர்கள். இப்போது மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 20 மாதங்களில் 240 ஊழியர்களை கொன்றுள்ளனர். இக்கொலைகள் குறித்தோ, மனித உரிமைகள் இருப்பது குறித்தோ அரசு சாரா அமைப்புகளோ, ஊடகங்களோ, மனித உரிமை ஆர்வலர்களோ பேசுவதில்லை என்பது புதிய அரசியல் நாகரீகமாகவும் சொல்லப்படுகிறது.
1971இல் நக்சல் இயக்கம் ஒருபுறம் தேர்தல் புறக்கணிப்பு கோஷத்தை முன்னிறுத்தியும், மறுபக்கம் சி.பி.எம்க்கு எதிரான தேர்தல் சீர்குலைவு என இரட்டை நிலையை மேற்கொண்டனர். அதே நிலைபாட்டை இன்றைய மாவோயிஸ்டுகள் மேற்கொள்கிறார்கள். இத்தகைய அரசியல் நிலைபாடு காரணமாக, மறைமுகமாக ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர். இந்த விமர்சனத்தை மாவோயிஸ்ட்டுகளும், அவர்களின் ஆதரவாளர்களும் ஆமாம் நாங்கள் ஆளும் வர்க்கத்தை ஆதரிக்கிறோம் என வெறிகொண்டு கூச்சலிடுவதன் மூலம் ஆமோதிக்கிறார்கள்.
எங்கள் முழக்கம் விவசாப் புரட்சி எனக் குறிப்பிடும் மாவோயிஸ்டுகள் ஏதாவது ஒரு இடத்தில் வெகுஜனங்களையோ, விவசாயிகளையோ திரட்டி சாதித்து இருக்கிறார்களா? தாங்கள் கைபற்றியதாக அறிவித்த பகுதிகளில், நிலச்சீர்த்திருத்தம் செய்ததற்கான சுவடுகள் உண்டா? போன்ற கேள்விகளை மாவோயிஸ்ட்டுகள் உதாசீனப்படுத்துவதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். இவற்றை மாவோயிஸ்டுகளாலும் அவர்களுக்கு முந்தைய மூதாதையர்களாலும் சாதிக்க இயலாததற்கு ஒரே காரணம், நக்சல் சீர்குலைவளர்களின் செயலும், திரிணாமுல் அல்லது காங்கிரஸ் போன்ற கட்சிகளின் செயலும் ஒரே நேர்கோட்டில் இருப்பதே ஆகும். இந்த விவரங்களையெல்லாம் நக்சலிசம் முதல் மாவோயிசம் வரை நூலில் நேர்த்தியாக தொகுக்கப்பட்டிருக்கிறது. நூலாசிரியர் அன்வர் உசேனின் உழைப்பும் நூலின் அமைவுக்கு அடிப்படை என்பதை மறுக்க முடியாது.
இடதுசாரி இலக்கியங்களை, தமிழ் வாசகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில், பாரதி புத்தகாலயம் இந்த நூலின் மூலம் மேலும் புதிய மைல் கல்லைப் படைத்திருக்கிறது. இடது தீவிரவாதத்தின் தொட்டில் பழக்கம் கொஞ்சமும் மாறாமல் தொடருகிறது. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது தமிழ்நாட்டுப் பழமொழி. அதை நினைவு படுத்துவது போலவே இடது தீவிர சிந்தனையாளர்களின் செயல் அமைந்திருக்கிறது. நக்சல்பாரி கிராமம் துவங்கி, இன்றைய லால்கர், ஜாக்ராம் செயல்கள் வரை பழைய மொந்தையை புதிய பாட்டிலில் அடைத்ததைப் போலவே இருக்கிறது. ஆம் நக்சலிம் என்ற பெயர் மாவோயிஸ்டுகளாக மாறினாலும், குணமும், செயலும் ஒரே தன்மையில் அமைந்திருப்பதை நூல் அருமையாக விவாதிக்கிறது. 1980களில் தமிழில் சிறுசிறு பிரசுரங்கள் நிறைய வெளிவந்துள்ளன. நக்சலிஸம் குறித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் பேரா. பிப்ளவ தாஸ் குப்தா எழுதிய ஆங்கிலப் புத்தகம், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆய்வுக்குழுவின் பொருப்பாளர் டாக்டர். பிரசென்ஜித் போஸ், எழுதி சமீபத்தில் லெப்ட்வேர்டு நிறுவனம் வெளியிட்ட நூல், மறைந்த தலைவர் அனில்பிஸ்வாஸ் எழுதிய நூல், மற்றும் சமீபத்தில் கீகீகீ.றிஸிளிநிளிஜிமி.ளிஸிநி இணைய தளத்தில் தோழர். கிரிமாங்லோ எழுதி வெளிவந்துள்ள கட்டுரை ஆகியவற்றையும், தீவிர வாசகர்கள் படிப்பது அவசியம். ஏனெனில், மாவோயிஸ்டுகள் சிந்தாந்த ரீதியில் எவ்வளவு பின்னடைவை சந்தித்துள்ளார்கள் என்பதையும், மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும் வரலாற்று அனுபவத்தில் இருந்து தெரிந்துகொள்ள வேண்டும்.
சமீபத்தில் மறைந்த மாவோயிஸ்டு ஆதரவாளர் கே.கே. பாலகோபால், உண்ணாவிரதம், தர்ணா போன்றவற்றில் சோர்வுறுவோர் ஆயுதப் போராளிகளாக மாறுவதும், ஆயுதப் போராட்டத்தில் சோர்வுறுவோர், அரசு சாரா நிறுவனங்களின் பணிகளிலும் ஈடுபட்டு புரட்சியைத் தேடுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்த சிந்தனைப் போக்கை உலகமயம், தனியார்மயம், தாராளமயச் சிந்தனைகள் உரமூட்டி வளர்க்கிறது. அமைப்பு ரீதியான செயல்பாட்டை வெகுஜனங்களின் எழுச்சி மிக்க வீதிப் போராட்டத்தை தகர்ப்பதை இலக்காகக் கொண்டு செயல்படும் முதலாளித்துவ உலகமயக் கொள்கைகள், அப்படித்தான் இருக்கும் என்பதை நாம் அறிவோம்.
இருந்தாலும் இடதுசாரி சிந்தனை மட்டும் போதாது. வெகுஜன எழுச்சி மூலம் இந்திய ஆட்சியாளர்களை எதிர் கொள்வதே, மானுட விடுதலைக்கு வழிவகுக்கும். இதை அழுத்தமாகக் குறிப்பிடும் நூல் நக்சலிசம் முதல் மாவோயிசம் வரை ஆகும். இடதுசாரி ஊழியர்களின் வீடுகளில் அவசியம் இருக்க வேண்டிய நூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக