ஞாயிறு, 5 டிசம்பர், 2010

அரசு வேலை உரிமை தொடர்-8

திறன் பெற்றவர்களுக்கு வேலை, அதற்காக சிறப்புப் பயிற்சியினை அரசே வழங்க இருக்கிறது, என்பது சமீபத்திய செய்தி. வேலையில்லை என்பது இல்லை, மாறாக, வேலைக்கான திறன் பெற்றவர்கள் இல்லை, என்ற வாசகங்களையும், அவ்வப்போது காணமுடிகிறது. இந்த செய்திகளைப் படிக்கும் இளைஞனுக்கு, தனது திறன் குறித்த தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்க, இச்செய்திகள் உதவுமே அல்லாது, தன்னம்பிக்கையை வளர்க்க உதவாது. திறன் என்பது எதற்காக, யாருக்காக? என்பது நிறைய விவாதங்களுக்கானது. காரல் மார்க்ஸ், திறன் வாய்ந்த தொழிலாளி என்ற பொருளில் தான் விவாதிக்கிறார். “வாழ்நாள் முழுவதும் ஒரே சாமானிய வேலையைச் செய்வதற்கு வேண்டிய, தானியங்கி தன்மை வாய்ந்த தனித்தேர்ச்சி பெற்ற கருவியாக, தொழிலாளி தன்னை மாற்றிக் கொள்கிறார்”, என குறிப்பிடுகிறார். அதாவது தொழிலாளி வேலைகளைச் செய்து செய்து, திறன் பெற்றவராக மாறுகிறார், என்பதே இதன் பொருள். இந்த வரிகளை தனது மூலதனம் நூலில் மார்க்ஸ் குறிப்பிட்டு 150 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்றைக்கும் இந்த வரிகளின் அமலாக்கத்தைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. ஆம் ஒரு தொழிலாளி திறன் குறித்த கோட்பாட்டு அறிவை கற்று தேர்ந்தாலும், அனுபவம் மிக அவசியம். அந்த வகையிலேயே, தொழிலாளி தன்னுடைய அனுபவம் காரணமாக, திறனை மேம்படுத்திக் கொள்கிறார்.

தற்போது வேலை நிறுத்தம் செய்து வரும், ஃபாக்ஸ்கான், பி.ஒய்.டி, போன்ற தொழிற்சாலைகளில், பணியாற்றும் தொழிலாளர்களில் பலரும், 12, அல்லது 10 படித்து முடித்த இளைஞர்களே. இவர்கள் தொடர்ந்து ஒரே வேலையைச் செய்ததன் மூலமாக திறன் வாய்ந்தவர்களாக மாறினார்கள் என்பதே உண்மை. இதன் காரணமாகத் தான், அந்த நிறுவனங்களின், உற்பத்தி ஏற்கனவே இருந்ததை விடவும் அதிகரிக்கிறது. இதை மார்க்ஸ், மூலதனத்திற்கு எந்த செலவும் இல்லாமல், உற்பத்தித்திறன் அதிகரிப்பதற்கான வழிவகையை முதலாளித்துவம் உருவாக்கிக் கொள்வதாக குறிப்பிடுகிறார். உற்பத்தி முறையில் இயந்திரம் அறிமுகப்படுத்தப் படும் போது, உழைப்பு பிரிவினை (செக்ஸன்) உருவாவதும் நடைபெறுகிறது. கூட்டு உழைப்பு பெருக்கம் அடைகிறது. எனவே மூலதனத்திற்கு செலவில்லாமல், கூட்டு உழைப்பு மற்றும் உழைப்புப் பிரிவினை காரணமாக, முதலாளிக்கான லாபம் அதிகரிக்கிறது என்பதை இன்றைய உழைப்பு சூழலில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

இத்தகைய அனுபவங்கள் சுட்டிக்காட்டும் உண்மை, வேலை வாய்ப்பைப் பெருக்குவதற்கு பதிலாக, லாபத்தைப் பெருக்கும், நோக்கத்துடன், இயந்திரங்கள் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கிறது, என்பதாகும். காலம் காலமாக மனிதன் தனது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும், என்ற வகையில் தூண்டப்பட்டுக் கொண்டே இருக்கிறான். 1990களுக்கு முந்தைய பொருளாதாரக் கொள்கை, உலகமயமாக்கல் என்று அழைக்கப் படவில்லை என்றாலும், உலக பொருளாதரக் கொள்கையுடன் இனைந்தே, இந்திய பொருளாதாரக் கொள்கைகள் தீர்மாணிக்கப் பட்டது. அப்போதும் வேலையில்லாத் திண்டாட்டம் இருந்தது. அன்றைக்கு, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், போன்ற தொழில் கல்வி மீதான ஈர்ப்பு திட்டமிட்டு உருவாக்கப் பட்டது. ஒருசில தேவையும், வேலை வாய்ப்பில் இருந்தது. அலுவலகப் பணிகளுக்கு, தட்டச்சு, ஸ்டெனோக்ராஃப், ஆகிய தொழில் நுட்பம் அவசியம் என்பது வலியுறுத்தப் பட்டது.

1985க்குப் பின் அமலான புதிய பொருளாதாரக் கொள்கை, இன்னும் கூடுதல் இயந்திரங்களுடன் அணிவகுத்தது. விளைவு, பொறியியல் கல்லூரிகள் புற்றீசலைப் போல், பல்கிப் பெறுகியது. அத்தகைய தொழில் நுட்பக் கல்வித் தகுதி உடையோர் மட்டுமே, வேலை வாய்ப்பைப் பெற முடியும், என்ற புனைவுகளும் இனைந்தே கட்டவிழ்க்கப் பட்டது. குறிப்பாக கணிணித் துறையின் மீதான ஈர்ப்பு, மிக கவணமாக செதுக்கப் பட்டது. வேலைக்கான தகுதிகளாக இவை தீர்மானிக்கப் படும் நிலையில், மேற்படித் தனியார் வசம் விற்பனைப் பொருளாக இருந்த, தொழில் நுட்பக் கல்வியை, தொழிலாளி வர்க்க குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்களால் பெற முடியாது போனது. எனவே நவீன வேலைவாய்ப்பில் இருந்து, உழைக்கும் வர்க்கக் குடும்பத்தைச் சார்ந்தோர் ஒதுக்கி வைக்கப் பட்டனர். நடுத்தர வர்க்கம் மற்றும் மேல் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தோர், உலகமயமாக்கப் பட்ட பொருளாதாரக் கொள்கை காலத்தில், பலனடைந்தோராக உருமாறியதையும் காண முடிந்தது. தொழிலாளி வர்க்க குடும்பத்தினர், திறனற்றவர்கள், என்ற முத்திரை குத்தப் படுவதற்கும், வடிகட்டப் படுவதற்கும் ஆளானார்கள்.

இரண்டு, புகுத்தப் பட்ட இயந்திரங்களைக் கண்காணிக்கும் அல்லது இயக்கும், மனித உழைப்பு சக்தி குறைவதற்கு பதிலாக அதிகரித்திருக்கிறது என்பதாகும். உதாரணத்திற்கு, நவீனத் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றுள்ள இக்காலத்தில் தான், வேலை நேரம் காலவரம்பற்றதாக மாறி இருக்கிறது. 8 மணி நேரம் வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி வெற்றி பெற்ற, மே தினம் கொண்டாடத் துவங்கி, 124 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனால் இந்திய திருநாட்டில், 12 மணி நேரம் வேலை வாங்கப்படுகிறது. குறிப்பாக இளம் தொழிலாளர்கள், அதுவும் பெண்கள் இத்தகைய கொடுமையை அனுபவிக்கின்றனர்.

தொழில் நுட்பத்தின் வளர்ச்சி, ஒருபுறம், மனிதனின் உழைப்பு நேரத்தினை அதிகரிப்பதற்காகக் கூடுதலாகப் பயன்படுகிறது. அதே நேரத்தில் மற்றொரு புறம், இருக்கிற தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், புதிய வேலை வாய்ப்பைத் தடுக்கவும் பயன்பட்டிருக்கிறது. இருக்கிற மனித வளத்தினைப் பயன் படுத்துவதன் மூலமே, ஒரு நாட்டின் பொருளாதாரம் மேம்பட முடியும். ஆனால் அரசுகள், தனது முதலாளித்துவ வர்க்க நலனை பாதுகாப்பதற்காக, தீவிரத் தன்மையுடன் செயல் படுகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சமீபத்திய இந்திய பயணம், அரசுகளின் அனுகுமுறைக்கு மிகச் சிறந்த உதாரணம். ஒபாமா இந்திய அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்கவில், 53000 வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும், என்ற உண்மை, நமது பாமர மக்கள் அறியாத ஒன்று. 2008ல் இருந்து அமெரிக்கப் பொருளாதாரம், தேக்க நிலையில் நீடிப்பதற்கு முக்கிய காரணம், அமெரிக்கவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம், வேலைவாய்ப்பு அதிகரிக்காமல், வேலை வாய்ப்பு, பறிக்கப் பட்டதன் விளைவே ஆகும். மனித உழைப்பின் மூலமான, பொருளாதார சுழற்சி, தடைபடுகிற போது, உலகில் பெரும் பணக்கார நாடு என்றழைக்கப் படுகிற அமெரிக்காவே நிலைகுழைந்து உள்ளது என்பதை இந்திய ஆட்சியாளர்கள் கவணிக்க வேண்டும்.

இயந்திரத்தின் அவசியத்தை மறுப்பது, இக்கட்டுரையின் நோக்கமன்று. புதிய கண்டு பிடிப்புகள் தவிர்க்க இயலாது.; அதுவும் முதலாளித்துவத்தின், லாப வேட்கை அதிகரிக்கிற போது, இயந்திரமயமாக்கல் அதிகரிக்கவே செய்யும். லாபமற்ற, சுகாதரப் பராமரிப்பு பணிகளான, பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுகள் அகற்றுதல் ஆகியவற்றில் ஏன், இயந்திரங்கள் அறிமுகம் செய்யப் படவில்லை? என்ற கேள்விக்கு முதலாளித்துவம் ஒரு போதும் பதில் சொல்லப் போவதில்லை. எந்திரன் திரைப்படத்தில், ரோபோவிற்கான கண்டுபிடிப்பை நியாயப்படுத்தும் போது, ராணுவத்தின் கடினமான பணிகளை ரோபோ கொண்டு இயக்கலாம், என்ற கருத்து முன்வைக்கப் படுகிறது. இச்செய்தியை சினிமாவாக மட்டும் கவணிக்கும் எவரொருவரும், சிறந்த ஆலோசனை என்றே கருதுவர். செய்தியின் பொருளைக் கவணித்தால் இரண்டு நெறிப் பிறழ்வை விதைப்பது புரியும். ஒன்று ராணுவத்திலும் வேலைவாய்ப்பைப் பறிக்கும் விதத்தில், மனிதர்களைக் குறைத்து, இயந்திரங்களைப் புகுத்துவது. இரண்டு, மனிதன் கையாளும், போதே அணுகுண்டுகளின் அச்சுறுத்தல் இருக்கிறது. இயந்திரமயமாகி விட்டால், என்ன நடைபெறும், என்ற கேள்வி சார்ந்தது. அதாவது முதலாளித்துவ உற்பத்தி முறை மனித நேயத்தை, சிறிது, சிறிதாக அழித்து வருகிறது, உதாரணம், நோக்கியா நிறுவனத்தில், மிகச் சமீபத்தில் நிகழ்ந்த விபத்து. அம்பிகா என்ற இளம் பெண், இரவுப் பணியின் போது, இயந்திரத்தில் சிக்கி கொண்டால். இயந்திரத்தை உடைத்தால், அப்பெண்ணை சில சேதாரத்துடன் உயிருடன் மீட்டிருக்கலாம். ஆனால் நிர்வாகம் இயந்திரத்தை உடைத்தால், நிர்வாகத்திற்கான இழப்பு அதிகமாக இருக்கும் என்ற காரணத்தால், இயந்திரத்தைக் காத்தது, உயிரைப் பறித்தது.

எனவே இப்போதைய தேவை திறன் மட்டுமல்ல. மனித மான்புகளைப் பாதுகாக்கும் கொள்கையும் தான். அப்போது தான் திறன் கொண்டோருக்கும் வேலை கொடுக்கும் கொள்கை உருவாகும். இல்லை என்றால் திறன் என்பதும், பேக்காரி கட்டவோ(வேலையின்மையே வெளியேறு), என்பது போல் வெற்று முழக்கமாகி விடும்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக