அதானி – பாஜக கூட்டணியிடம் இருந்து பொதுச் சொத்துக்களை பாதுகாப்போம்..
அதானி மீது தொடர்ந்து ஊழல்
குற்றச்சாட்டுகள் வருகிறது. இதுவரை இந்தியாவில் எந்த ஒரு இந்திய பெரு நிறுவனத்தின்
மீதும் இல்லாத குற்றச்சாட்டு அதானி மீது மட்டும் ஏன் வருகிறது, என்ற கேள்வி முக்கியமானது.
எந்த ஒரு பெரு நிறுவனமும் 10 ஆண்டுகளில் பெரும் சொத்துக்களுக்கு சொந்தக் காரராக வளரவில்லை,
என்ற உண்மையில் இருந்து ஊழலுக்கு அப்பாற்பட்ட நிறுவனம் அல்ல அதானி குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ்
என்ற முடிவுக்கு வர முடியும்.
அதானி சொத்துக் குவிப்பில்
பொதுத் துறை நிறுவனங்கள்:
முதலில் 2023 ஜனவரியில், ஹிண்டன்பர்க்
ரிசர்ச் நிறுவனம் அதானி எப்படி பங்கு சந்தை வர்த்தகத்தை முறைகேடாக பயன்படுத்தினார்
என்பதை அம்பலப் படுத்தியது. அதானியின் சில குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்பு
819 சதம் திடீரென உயரும் வகையில் முறைகேடுகள் செய்யப் பட்டதை, ஹிண்டன்பர்க் ரிசர்ச்
நிறுவனம் அம்பலப்படுத்தியது. பாரத ஸ்டேட் வங்கி, எல்.ஐ.சி நிறுவனங்களின் பெயரும் இதன்
மூலம் பாதிப்புகளை சந்தித்தது. இந்த விவகாரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் மொகுவா மொய்த்ரா
தகுதி நீக்கம் செய்யப் பட்டார். பாஜக ஆட்சி, அந்த அளவிற்கு அதானி ஆதரவு நடவடிக்கைகளை
மேற்கொண்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இடைக்கால நீக்கம் செய்யப் படும் அளவிற்கு,
நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் அதீதமாக நடந்து கொண்டனர்.
உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம்
மூலம் நிதி பெறுவது, சட்டவிரோதம் என்றது. அதில் அதானி பெரிய அளவில் இடம் பெறாதது எப்படி
என கேள்வி எழுப்பினர். ஆனால் அதானி நிறுவனத்தின் கிளை நிறுவனங்களான ABC இந்தியா, வெல்ஸ்பர்ன்
லிவிங் லிமிடெட் ஆகியவை மூலம் 55.4 கோடி பாஜக கட்சிக்கு, தேர்தல் பத்திரம் வழங்கியதாக
பாரத ஸ்டேட் வங்கி அளித்த விவரம் தெரியப் படுத்தியது. பாஜக உடன் அதானி நிறுவனம் நெருக்கமாக
ஊல்லது என்பதற்கு இது கூடுதல் உதாரணம் ஆகும்.
மூன்றாவதாக அதானி நிறுவனம்
கோலோச்சும் துறை கப்பல் துறைமுகம் ஆகும். 355 மில்லியன் டன் (35.5 ஆயிரம் கோடி கிலோ)
சரக்குகளை கையாளும் அளவிற்கு 8 பெரிய துறைமுகங்களை
தன்வசம் கொண்டிருக்கிறது. மேற்கு கடற்கரையில், முந்த்ரா, டுனா, டாஹ்ஜ், ஹாஜிரா, திஹி,
மோர்குவா மற்றும் விழிஞம் என ஒன்றிய அரசிற்கு சொந்தமானதை விடவும் அதிக எண்ணிக்கையை,
மேற்கு கடற்கரையில் அதானி உடைமையாக்கி உள்ளார். தமிழ்நாட்டில்
காட்டுப்பள்ளி துறைமுகமும் அதானிக்கு சொந்தமானது ஆகும்.
10 ஜனவரி, 2024 நிலவரப் படி,
மங்களூர், லக்னோ, அகமதாபாத், கவுகாத்தி, ஜெய்பூர், திருவனந்தபுரம் மற்றும் மும்பை ஆகிய
7 விமான நிலையங்கள் அதானி கட்டுப்பாட்டில், 100 சதமானம் வைக்கப் பட்டிருக்கிறது. இங்கு
80 மில்லியன் (8கோடி) பயணிகள் கடந்தாண்டு வந்து சென்றுள்ளனர். அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்
லிமிடெட் என்ற பெயரில், அதானியின் மகன் ஜீத் அதானி பொறுப்பாக்கப் பட்டு இயங்கி வருகிறது.
இந்தியாவின் 25 சதமான பயணிகளையும், 33 சதமான கார்கோ (சரக்கு போக்குவரத்து) பணிகளையும்
அதானி ஏர்போர்ட் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனம் செய்து வருகிறது. அடுத்து சென்னை விமான
நிலையத்தை கைப்பற்றும் பணியில் தீவிரமாக இயங்கி வருகிறது.
அதானி நிறுவனமும், இந்தியாவின்
மகாரத்னா நிறுவனம் என அழைக்கப்படும் இந்தியன் ஆயில் நிறுவனமும் இணைந்து, இந்தியன் ஆயில்
அதானி கேஸ் பிரைவேட் லிட்., என்ற நிறுவனத்தை நடத்துகின்றனர். இந்தியாவின் 8 சதமான நுகர்வோர்
இந்த நிறுவனத்தை சார்ந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இது இல்லாமல் எண்ணெய் நிறுவனங்களும்
செயல்படுகின்றன.
அதானியின் நிலக்கரி சுரங்கங்கள்,
சட்டிஸ்கர், மத்திய பிரதேஷ், ஒடிசா, ஆகிய மாநிலங்களிலும், இரும்புதாது சுரங்கம் ஒடிசா,
மத்திய பிரதேஷ் மாநிலங்களிலும் உள்ளது. ஏரத்தாள அரசுக்கு இணையாக சுரங்கத் தொழிலில்
ஈடுபட்டு வரும் நிறுவனமாக அதானி நிறுவனம் உள்ளது. ஏலத்தில் மற்ற எல்லோரையும் விட செல்வாக்கு
பெற்ற நபராக அதானி இருப்பது அரசியல் செல்வாக்கு இல்லாமல் இருக்குமா? ஆஸ்திரேலியாவின்
பெர்த் நகரிலும் நிலக்கரி சுரங்கம் அதானிக்கு இருக்கிறது.
மின்சார உற்பத்தி அதானியின்
அடுத்த பெரிய தொழிலாகும். அதானிபவர் டாட் காம் இணைய தளம், 15,250 மெகாவாட் மின்சாரம்
உற்பத்தி செய்யும் தெர்மல் பவர் பிளாண்ட் நடத்தி வருவதாக கூறுகிறது. குஜராத், மகராஷ்ட்ரா,
கர்நாடகா, ராஜஸ்தான், சட்டிஸ்கர், மத்தியபிரதேஷ் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களின் மின்
தேவை அதானியின் சேவையில் சிக்கி இருப்பதை அறிய முடிகிறது. இதன் காரணமாகவே மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி கார்ப்பரேட் - அரசுகளின்
கள்ளக் கூட்டணி என தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
மொத்தத்தில் அதானியிடம் இல்லாத
தொழில் இல்லை. அரசு படிப்படியாக தனது நிறுவனங்களை கூட்டு அல்லது தனியார் மயம் என்ற
பெயரில் இழந்து வருகிறது. அரசின் கைவசம் உள்ள போது சேவை நிறுவனங்களாகவும், தனியாரிடம்
செல்லும் போது கொள்ளை நிறுவனங்களாகவும் மாறும் என்பதற்கு, பைனான்சியல் டைம்ஸ் அம்பலப்
படுத்தி உள்ள, நிலக்கரி குறித்த பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் மிகப் பெரிய உதாரணம் ஆகும்.
அதானி – பாஜக – அதிமுக கூட்டணி:
மே 22 தூத்துக்குடியில், ஸ்டெர்லைட்
என்ற வேதாந்தா கார்ப்பரேட் நிறுவனத்தை காப்பதற்காக, அதிமுக அரசு, துப்பாக்கிசூடு நடத்திய
நாள். அதே நாளில் லண்டனில் உள்ள பைனான்சியல் டைம்ஸ் இதழ் அதானி – பாஜக மற்றும் அதிமுக
கூட்டணியின் கூட்டு கொள்ளை குறித்த விவரங்களை வெளியிட்டு உள்ளது. அமெரிக்காவைச் சார்ந்த
ஜார்ஜ் சோரஸ் முதலீட்டில் இயங்கும் ஆர்கனைஸ்டு கிரைம் அண்ட் கரப்சன் ரிப்போர்ட்டிங்
புராஜக்ட் (ஓ.சி.சி.ஆர்.பி) என்ற அமைப்பு, ஏராளமான ஆவணங்களை வெளிப்படுத்தி, மேற்படி
ஊழலை அம்பலப் படுத்தி உள்ளது. 2014 ஜனவரி முதல் அக்டோபர் வரை 24 கப்பல்கள் மூலம் இறக்குமதி
செய்யப்பட்ட நிலக்கரி, முதலில் தரம் குறைந்தது என விலை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.
அதன் பின் மூன்று மடங்கு விலையில் தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு விற்கப் பட்டுள்ளது.
மேற்படி விவரம் பாஜக ஆட்சி துவங்கிய காலம், அதன் பின் விலை நிர்ணயத்தில் மாற்றம் என்றால்,
பாஜக துணை இல்லாமல் எப்படி சாத்தியம்? பாஜக துணையுடன் அதிமுக இந்த கொள்ளைக்கு உடந்தையாக
இல்லாமல் எப்படி, அதானி இவ்வளவு பெரிய மோசடிக்கு தமிழ்நாடு மின்வாரியத்தை பயன்படுத்தி
இருக்க முடியும்?.
மேற்படி நிலக்கரி டான்ஜெட்கோ
என்ற தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனத்தை அடையும் முன், கப்பலுக்கான ஆவணங்கள் சுப்ரீம்
யூனியன் இன்வெஸ்ட்ரஸ் லிமிடெட் என்ற இடைத்தரகர் நிறுவனம் மூலம் வரி தளர்வுகள் அதிகம்
கொண்ட பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் பதிவு
செய்யப் பட்டதாக ஓ.சி.சி.ஆர்.பி என்ற அமைப்பு வெளிப்படுத்துகிறது. முழுக்கவும் அதானி
செய்த மோசடி குறித்த விவரங்களாக இந்த புலனாய்வு அமைந்திருப்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.
சுமார் 7 ஆண்டுகள் இந்த கொள்ளைப் பயணத்தை வெற்றிகரமாக அதானி, பாஜக, அதிமுக கூட்டணி
நடத்தி இருக்கிறது.
விலை அதிகம் மட்டுமல்ல, எரிதிறன்
என சொல்லப் படுகிற, தரம் குறித்த கேள்வியிலும் மேற்படி நிலக்கரி செல்லுபடி ஆகக் கூடியதல்ல.
இந்தோனேசியாவில் உள்ள ஜான்லின் சுரங்க குழும நிறுவனத்திடம் பெற்ற நிலக்கரியின் எரிதிறன்
3000 கலோரி கொண்டதை அதானி இடைத்தரகராக இருந்து செயல்பட முடிவாகியுள்ளது. இதன் விலை
86 டாலர் என தீர்மானித்து உள்ளனர். இதை தமிழ்நாடு மின்வாரியம் ஒப்பந்தம் செய்து கொண்ட
பின் தான், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விலை அதிகம் கொடுத்து வாங்கியுள்ளது.
ஆனால் 6000 கலோரி எரிதிறன் கொண்டநிலக்கரி செலவுகள் உள்பட 81 டாலருக்கு கிடைக்கிறது.
இதை விட மோசம், 2022ம் ஆண்டில்
தி லான்செட் என்ற அமைப்பு நடத்திய ஆய்வு கூறும் செய்தியான, ஒவ்வொரு ஆண்டும், காற்று
மாசு காரணமாக இந்தியாவில் 20 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர், என்பதாகும். அனல் மின்
நிலையங்களை சுற்றி 100 மைல் சுற்றளவிற்கு குழந்தைகள் இறப்பு அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.
மேற்படி விவரங்கள் அரசு உடந்தையாக
இருந்து செய்தது என்பதற்கு, சென்னையில் இயங்கும் அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு அளித்த
புகார் முக்கியமான சான்று ஆகும். 2018ம் ஆண்டில், விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு
இயக்குநகரகத்தில் அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் பொருளாதார
குற்றங்களைத் தடுக்கும் நிதி அமைச்சகத்தின் புலனாய்வு பிரிவான, வருவாய் புலனாய்வு இயக்குநகரம்,
6000 கலோரி எரிதிறன் கொண்ட நிலக்கரி 81 டாலருக்கு கிடைக்கும் போது, 3000 கலோரி எரிதிறன்
கொண்ட நிலக்கரியை, 86 டாலருக்கு தமிழ்நாடு மின்வாரியம் கொள்முதல் செய்வதாக குறிப்பிட்டு
உள்ளது. ஆனாலும், ஒன்றிய அரசும், அதிமுகவும் இதற்கு உடந்தை என்ற காரணத்தால் தான், மேற்படி
கொள்ளை தடுக்கப் படவில்லை. 2016ம் ஆண்டில் ஒன்றிய அரசின் நிதி அமைச்சர்களாக அருண் ஜேட்லி
மற்றும் ஜெயந்த் சின்ஹா இருந்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரிய துறை அமைச்சராக பி. தங்கமணி
இருந்துள்ளார். தரம் குறைவான நிலக்கரியை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யும் பணி
துவங்கிய காலத்தில் அமைச்சராக, நத்தம் விஸ்வநாதன் இருந்துள்ளார்.
ரூபாய் 6000 கோடி முதல் 10
ஆயிரம் கோடி வரை, மோசடி செய்யப்பட்டதாகவும் ஓ.சி.சி.ஆர்.பி நிறுவனம் கூறுகிறது. இந்த
மோசடி நுகர்வோரின் மீது, கட்டண உயர்வு செய்யவும், மின்வாரிய ஊழியர்களின் நலன் காக்கும்
திட்டங்களை கைவிட்டு, ஒப்பந்த ஊழியர்கள் மூலம், உழைப்பு சுரண்டலை அதிகப் படுத்தவும்
பயன்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுசூழல் மாசு அதிகரிக்கவும் இந்த தம் குறைவான நிலக்கரி
இறக்குமதி காரணமாகியுள்ளது. தி லான்செட் அமைப்பு கூறிய, 20 லட்சம் பேர் உயிரிழந்திருக்க
கூடும் என்பது சாதாரண செய்தி அல்ல. மனித இழப்பும், பொருள் இழப்பும், அதானி – பாஜக-
அதிமுக கஜானாக்களை நிரப்பி இருப்பது உண்மை.
தேவை பெரும் போராட்டங்கள்:
இந்தியாவிலும், உலக அனுபவத்திலும்,
நவ தாராளமய கொள்கை அமலான 190களுக்கு முன் ஊழல் குற்றச் சாட்டுகளுக்க்கு எதிரான போராட்டங்கள்
தீவிரமாக இருந்தன. தாராளமய கொள்கைகள் அமலாக துவங்கிய பின் அம்பலமாகும் ஊழல்கள் மீதான
எதிர்ப்பு இயக்கங்கள் குறைந்து வருகிறது. போபர்ஸ் எதிர்ப்பு, முந்த்ரா எதிர்ப்பு உள்ளிட்டவை
வரலாற்றில் மிக முக்கியமான ஆட்சி மாற்றங்களுக்கு காரணமாக இருந்தது. பொதுமக்களும், வாலிபர்,
மாணவர் அமைப்பினர் பெரும் போராட்டங்களை நடத்தினர். 2014ல் 2ஜி ஊழல் ஆட்சி மாற்றத்திற்கு
முக்கிய பங்கு வகித்தது.
பாஜக ஆட்சிக்கு வந்த பின்,
ரபேல் ஏர்கிராப்ட் ஊழல், அதானி நிறுவனங்கள் செய்யும் வகை வகையான ஊழல், ஆகியவை கார்ப்பரேட்
பெரும் நிறுவனங்கள் வழிநடத்தும் ஊடகங்களால், மடைமாற்றம் செய்யப் படுகிறது. ஊடகங்கள்
பாஜக வினால் அச்சுறுத்தப் படுவதும், கைப்பற்றப் படுவதும் அதிகரிக்கிறது. எனவே மக்கள்
இயக்கம் தான் ஒரே வழி. அதானி நிறுவனத்தின் கொள்ளையை, அதற்கு உடந்தையாக இருந்த பாஜக
மற்றும் அதிமுக கட்சியினரை அம்பலபடுத்தவும், பொதுச் சொத்துக்களை, பொதுத் துறை நிறுவனங்களை
காக்கவும் தீவிர போராட்டங்கள் அவசியம்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக