புதன், 11 செப்டம்பர், 2024

Ilaignar Muzhakkam

 

நாடாளுமன்ற தாக்குதலும்… வேலையின்மை அரசியலும்…

பாலுக்கு ஏங்கும் குழந்தை

கல்விக்கு ஏங்கும் மாணவர்

வேலை தேடும் இளைஞர்

பசியால் வாடும் மனிதர்

 

இவர்கள் எல்லாம் இல்லாத இந்தியாவே சுதந்திர இந்தியா என பகத்சிங்கும் அவரின் தோழர்களும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து, இந்திய விடுதலை குறித்த எதிர்பார்ப்பை பதிவு செய்தனர். அப்படியான சமூக அமைப்பு உருவாவதிலேயே அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என அழுத்தமாக குறிப்பிட்டனர். இந்த கருத்தியல் பிரச்சாரம் உலகம் முழுவதும் இளைஞர்களால் முன்னெடுக்கப் பட்டது. அதற்கான விசால பார்வையை, சோவியத் யூனியன் பின்பற்றிய சோசலிச கொள்கை உலக இளைஞர்களுக்கு வழங்கியது. முதலாளித்துவ நாடுகள், தங்கள் நாடுகளில் இளைஞர்கள் புரட்சிகர பணிகளில் இறங்கி விடக் கூடாது என அஞ்சினர். அதற்காக ஜான் மோனார்ட் கெயின்ஸ் நலத் திட்ட பொருளாதார கொள்கையை முதலாளித்துவ அரசுகள் பின்பற்றுவதன் மூலமே, குறைந்த பட்சம் தங்கள் நாட்டின் இளைஞர்களை புரட்சிகர அரசியலுக்கு செல்லாமல் கட்டுபடுத்த முடியும் என வழிகாட்டினார்.

பகத்சிங் மற்றும் தோழர்களின் எதிர்பார்ப்பை இந்திய ஆட்சியாளர்கள் எப்போதோ கைவிட்டு விட்டனர். ஜான் மோனார்ட் கெயின்ஸ் ன் வழிகாட்டுதலை ஏகாதிபத்திய உலகமயமாக்கல் கொள்கை, மாற்று அரசியலின் அழுத்தம் இல்லை என்பதால் கைவிட்டது. விளைவு இன்றைய வேலையின்மை, கல்வி வணிகம், அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, பசி, பட்டினி சாவுகள் ஆகிய பிரச்சனைகள் மேலதிகமாக முன்னுக்கு வந்து மக்களை வாட்டி எடுக்கிறது.

கார்ப்பரேட் அரசியல் அமலாக்கம்:

நாடாளுமன்றங்கள் மக்களுக்காக செயல்படுவதை விட, கார்ப்பரேட் முதலாளிகளுக்காக செயல்படுவது மிக மிக அதிகம். இதை ஏழை மக்கள் மீதான புயலின், ரெட் அலெர்ட் என குறிப்பிடலாம். இதை அம்பலப்படுத்துவதில் இடதுசாரிகள் வெளிப்படுத்தும் தீவிரத்தை, இதர ஜனநாயக சக்திகள் வெளிப்படுத்துவதில்லை. நெல்லுக்கு பாயும் நீர் ஆங்கே புல்லுக்கும் புசிந்தோடுமாம், என்பதைப் போல், முதலாளிகளுக்கான சலுகைகளில் வழிந்தோடும் சிறு பகுதி தான் வேலைவாய்ப்பாக காட்சி படுத்தப் படுகிறது. வேளாண் சட்ட திருத்தங்களை எதிர்த்த ஓராண்டு முற்றுகைப் போர், தொழிற்சங்கங்கள் தொடர்ந்து நடத்தும், வேலைநிறுத்தங்கள் ஆகியவை, பாதிக்கப் பட்ட மக்களின் கலகக் குரல். இது சமூக அமைப்புகளின் குரலாக பிரதிபலிக்கவில்லை.

ஓராண்டு நீடித்த போராட்டங்களை அரசியல் இயக்கங்களில் இடதுசாரி கட்சிகள் கடந்து களத்தில் ஆதாரிக்க ஆளில்லை. ஆதரவு இயக்கங்களும் இல்லை. ஆனாலும் உறுதியான போராட்டம் அளித்த அழுத்தம் பாஜக ஆட்சியை சற்று பின்வாங்க செய்திருக்கிறது. அரசியல் அழுத்தமாக வடிவம் பெற்று இருந்தால், ஒருவேளை அது மாற்று கொள்கைக்கான தேடலை உருவாக்கி இருக்கும். இடதுசாரி கட்சிகள் ஓரளவு முன்னெடுத்தாலும் அந்த மாற்று கொள்கைகள், குறிப்பிட்ட பகுதிக்குள் நின்று விட்டது. மாற்று கொள்கைகள் மீதான பிரச்சாரம் சம்மந்தப் பட்ட கூட்டு இயக்கங்களாலும், தொழிற்சங்க அமைப்புகளாலும் பேசப் பட்டது. ஆனால் வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப் படும் என்ற அறிவிப்பு வந்த பின் தொடரவில்லை. இதன் விளைவு தான், 2022 மார்ச் மாதம் நடந்து முடிந்த உத்திர பிரதேச மாநில தேர்தல் முடிவுகள். அது பாஜக விற்கு சாதகமாக மாறியது.  இது ஒருபகுதி இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியையும், விரக்தியையும் உருவாக்கியது. இதன் மூலம் சமூக திரட்டுதல் பணிகளில் நம்பிக்கை இழப்பை உருவாக்கி இருப்பதும் உண்மை தான். இந்த நம்பிக்கை இன்மையைத் தான் முதலாளித்துவம் விரும்புகிறது.

உலக அளவில், எண்ணற்ற புரட்சியாளர்கள் இருந்தாலும், சே குவேரா புரட்சிகர அரசியலுக்கான அடையாளமாக, இளைஞர்கள் மத்தியில் அங்கீகரிக்கபட்டுள்ளார். அதேபோல் இந்தியாவிலும் பலர் இருந்தாலும் பகத்சிங் மற்றும் அவரின் தோழர்கள் பெரும் உத்வேகம் அளிக்கும் அடையாளமாக உள்ளனர். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளின் வணிகமயத்தில், சே குவேரா வை கரைக்க முயற்சித்து வருகின்றனர். இந்தியாவில் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடத்திய தாக்குதல் மூலம், பகத்சிங் மற்றும் அவரின் தோழர்களின் அரசியலை சிறுமைப் படுத்தி உள்ளனர். இது புரட்சிகரமான அரசியல் செய்ய ஆர்வம் செலுத்துவோரை குழப்பும் நோக்கம் கொண்டது.

ஏற்கனவே அர்பன் நக்சலைட் என்ற சொல்லாடல் மூலம், கம்யூனிச அரசியலை கொச்சைப் படுத்தும் பணியை பாஜகவின் வகுப்புவாத சித்தாந்தம் செய்து வருகிறது. தற்போது நாடாளுமன்றத்தில் இளைஞர்கள் நடத்திய ஒரு தாக்குதலை முன்வைத்து, பகத்சிங் ரசிகர் குழு என பெயர் சூட்டப் பட்டு விவாதிப்பது, அர்பன் நக்சலைட் என்ற தாக்குதலின் அடுத்த கட்டம். இதன் மூலம் பாஜகவின் வகுப்புவாத அரசியல் மற்றும், உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளுக்கான மாற்று, கம்யூனிசம் முன் வைக்கும் சோசலிச கொள்கை என்பது உறுதியாகிறது. எனவே சோசலிச கொள்கைகளின் அடையாளமாக உள்ள மாவீரர்கள் மற்றும் அவர்களின் அரசியல் செயல் பாடு, சிறுமைப் படுத்தப் படுகிறது.

தேவை வேலையின்மைக்கு எதிரான வலுவான பிரச்சாரம்:

வேலையின்மை முதலாளித்துவத்திற்கு மிக அவசியத் தேவையாக உள்ளது. மூலதன குவிப்பில் வேலையின்மை கணிசமான பங்களிப்பை செய்கிறது. வேலையில் இருப்போரின் கூட்டு பேர உரிமையை கட்டுப்படுத்தும் ஆயுதமாக வேலையின்மை உள்ளது. வேலையில் இருப்போருக்கு எதிராக வேலையில்லாதோரை நிறுத்தி, முதலாளித்துவம் குளிர் காய்கிறது. காரல்மார்க்ஸ் வேலையில்லா பட்டாளத்தை, சேமநலப் படை என குறிப்பிடுகிறார். அந்த ரிசர்வ் ஆர்மியை முதலாளித்துவம் தன் தேவைக்கு பயன்படுத்துகிறது என்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரும், விடுதலைப் போராட்ட வீரருமான பி.டி.ரணதிவே, வேலையில்லாதோரையும் திரட்ட வேண்டிய பொறுப்பு தொழிற் சங்கத்தினருக்கு உள்ளது எனக் கூறுகிறார். மேற்படி இருவருடைய விவாதங்களும், கார்ப்பரேட் மூலதனம் வேலையின்மையை பயன்படுத்தி கொள்ளும் ஆபத்தை வெளிப்படுத்துவதாகும்.

வேலையின்மையை வகுப்புவாதம், சாதி, உள்ளிட்ட அடையாளங்கள் இன்று பயன்படுத்தி வருவதை நாம் பார்க்கிறோம். மோதலுக்கு இரையாக இளைஞர்களை அவர்களின் அடையாள பெருமைகள் கூறி திரட்டிவந்த இந்துத்துவா வகுப்புவாத அரசியல், இப்போது, அதற்கு மாற்றான அரசியலின் அடையாளத்தை சிதைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. ஒருபுறம் பகத்சிங் நினைவு தினம், பிறந்த தினங்களில் பாஜக தலைமை ஈடுபட்டு கொண்டே, மற்றொரு புறம் அவரின் கொள்கைகளை சிறுமை படுத்துவதன் மூலம் நீர்த்து போகச் செய்கிறது. அதன் விளைவு தான் அண்மையில் நடந்த நாடாளுமன்ற தாக்குதல்.

அந்த தாக்குதல் மூலம் இருமுனை தாக்குதலை இடதுசாரி இளைஞர்கள் மீது முன் வைத்தது மேலும் ஒரு உதாரணம். ஒன்று டி.ஒய்.எப்.ஐ மற்றும் எஸ்.எப்.ஐ பயன்படுத்தும் பகத்சிங் என்ற புரட்சிகர அடையாளத்தை சிதைத்தது. இரண்டு இந்திய மாணவர் சங்கத்தின், மைசூர் மாவட்ட தலைவர் விஜயக்குமார்  பேசுவது போல் உள்ள புகைபடத்தை சில மணி நேரங்களில் பாஜகவின் தொழில் நுட்பகுழுவினர், நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட மனோரஞ்சன் என்பவரின் புகைப்படத்துடன் இணைத்து அரசியல் செய்தது.

மேற்படி இரண்டும் இன்றைய முதலாளித்துவத்திற்கும், இந்துத்துவா கார்ப்பரேட்டிற்கும் இடதுசாரி சிந்தனை கொண்ட இளைஞர்களும், அவர்களின் அமைப்புகளுமே சவாலாக உள்ளதாக கருதுகின்றனர். முதலாளித்துவம் உருவாக்கும் தலைமுறைக்கு எதிரான கருத்தியல் ரீதியில் அதே இளைய தலைமுறையை உருவாக்கும் வலிமை, இடதுசாரி அரசியலுக்கு இருக்கும் காரணத்தினால், மேற்படி சித்தரிப்புகளை பாஜகவும், கார்ப்பரேட் இந்துத்துவா வும் முன்னெடுத்துள்ளது.

இந்த கட்டுரையின் முகப்பில் குறிப்பிட்டவாறு, சோசலிசத்தை எதிர் கொள்ள, ஜான் மொனார்டு கெயின்ஸ் என்ற நபர் முன்மொழிந்த திட்டம், லாபத்தையும், மூலதன குவிப்பையும் கட்டுபடுத்தியது. இன்று சோசலிச சமூக அமைப்பு பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், மூலதனம் மற்றும் லாபத்தின் குவிப்பு அதிகரித்துள்ளது. இந்த லாப வேட்டை நீடிக்க, சோசலிசம் குறித்த கருத்துரைகளும், பரப்புரைகளும் அழிக்கப் பட வேண்டும் என முதலாளித்துவம் விரும்புகிறது. இந்த சமூக விதியின் போக்கை புரிந்து கொள்ளும் போதே நாம் நமக்கான இளைஞர்களை அரசியலாக திரட்ட முடியும். வேலையின்மை என்பது முதலாளித்துவ அரசியல். வேலையின்மையை பயன்படுத்தி கொள்வது இந்துத்துவா வகுப்புவாத அரசியல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக