புதன், 11 செப்டம்பர், 2024

CITU Seithi

 

அதானியும் பங்கு சந்தை கொள்ளையும் – மோடி மௌனம் ஏன்?

மின்சாரம், துறைமுகம், விமானம் என மொத்தமாக, இந்திய நிறுவனங்களை கைப்பற்றி கோலோச்சும் நபராக அதானி, வளர்ந்துள்ளார். எல்லாம் எடுத்து விட்டு, கொசுரு வழங்குவது போல், பங்கு சந்தை வழங்கப்பட்டு உள்ளது. அதில் நடந்த ஊழல் காரணமாக அதானியும், அவர் சகோதரர், வினோத் அதானியும் பெரும் கோடிகளுக்கு சொந்தம் கொண்டாடினர், என்பதை ஹிண்டன் பர்க் ஆராய்ச்சி நிறுவனம், கடந்த ஆண்டும், இப்போதும் வெளியிட்டு உள்ளது.

பங்கு சந்தைக்கும் தொழிலாளருக்கும் என்ன சம்மந்தம்? நாம் ஏன் அது குறித்து விவாதிக்க வேண்டும்? போன்ற கேள்விகள் வரக் கூடும். உண்மையில் தொழிலாளி வர்க்கம் ஒன்று பட்டு போராடி பெற்ற ஊதிய உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கணிசமாக அனுபவிக்க கூடியதாக உள்ளது. அதன் மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்யும் வழக்கம் கணிசமான ஊழியர்களிடம் அதிகரித்து உள்ளது. அண்மையில் ஓய்வூதிய திட்டம் அறிவிப்பின் போதும், பிராவிடண்ட் பண்ட் தொகையை பங்கு சந்தைகளில் முதலீடு செய்வது குறித்தும் நடக்கும் விவாதங்கள் தொழிலாளரின் பணத்தை, பெரும் முதலாளிகள் கபளீகரம் செய்ய ஏதுவானதாக உள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும்.

நிதி மூலதன காலத்தில் பங்கு சந்தை:

தொழில் மூலதனத்தின் ஒரு பகுதியாகவே பங்குசந்தை மூலதனமும் உள்ளது. தொழில் மூலதனத்தை திரட்ட பங்குகள் விற்பனை என்பது வடிவமாக உள்ளது. இரண்டு சந்தர்ப்பங்களில் பங்குகள் விற்பனை சூடுபிடிக்கிறது. ஒன்று நிறுவனம் தனது பங்குகளை ஒரு பகுதி விற்று திரட்டும் நிதியை, வேறு ஒன்றுக்கு மூலதனமாக பயன்படுத்துகிறது. மற்றொன்று கடனை ஈடு செய்ய பிறருக்கு கடன் பத்திரங்கள் வழங்குவது என்ற நடைமுறை.

அண்மையில் நெய்வேலி நிறுவனம் தனது பங்குகளை தொழிலாளருக்கு விற்பனை செய்யும் தந்திரத்தை கையாண்டது. எல்.ஐ.சி தன் ஊழியர்களுக்கு ஐ.பி.ஒ (Initiatiating public offer) என்று குறிப்பிட்டு பங்குகளை விற்க ஏற்பாடு செய்தது. தற்போது ஹூண்டாய் கார் நிறுவனம் இந்தியாவில் அந்த பணியை துவக்கி உள்ளது. ஒரு பகுதி தொழிலாளர்களும், இது போன்ற பங்குகளை வாங்குவதன் மூலம், தன்னை நிறுவனத்தின் பங்குதாரராக கருதும் போக்கு அதிகரிக்கிறது. இது குட்டி முதலாளித்துவ குணமாகும்.

மற்றொரு புறம் நாடுகளின் நெருக்கடி பங்கு சந்தைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், அதில் சில நபர்கள் செலுத்தும் ஆதிக்கம் சூறையாடல் ஆகியவற்றுடன் இணைந்திருக்கிறது. 1934 -35ல் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய நிதி நெருக்கடி, பங்குசந்தையால் ஏற்பட்டது. அது நாடுகளின் நெருக்கடியாக மாறி உலகப் போர் வெடித்தது என்பது வரலாறு. 2008ல் அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் பங்கு சந்தை முறைகேடுகளால் மூச்சு தினறியது. நடுத்தர மக்கள் பெரும் திரளாக போராடினாலும், போனது போனதாக அமெரிக்க அரசு அறிவித்து, பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கும், சேமித்து வைத்த பணத்தை இழந்தவர்களுக்கும் சிறு பகுதி இழப்பீடு வழங்கி சூதாடிகளை காப்பாற்றியது. சூதாடிகளை காப்பாற்ற, அமெரிக்கா உலக தொழிலாளர்கள் மீது பல கொள்ளை தாக்குதல்களை நடத்தி வருவது இன்றளவும் நீடிக்கிறது.

1990 களில் ஹர்சத் மேத்தா அதைத் தொடர்ந்து கேதன் தேசாய் போன்ற சூதாடிகள் எப்படி பங்குசந்தையை கொள்ளை அடித்தனர், என்பது பெரும் விவாதப் பொருள்களாக மாறியது. அரசியல் பெரும் புள்ளிகள் அன்றைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ் வரை அம்பலமாகினார். ஆனால் இன்று கௌதம அதானி பங்கு சந்தை ஊழலில் தீவிரமாக குற்றம் சுமத்தப் படுகிறார். பிரதமர் மோடி, அதானிக்கு மிக வேண்டப்பட்டவர். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு மிக நெருங்கியவர். ஆனாலும் ஹிண்டன் பர்க் ரிசர்ச் நிறுவனம் அதானியின் பங்குசந்தை முறைகேடுகளை தொடர்ந்து அம்பலப் படுத்திய போதும், அதானி, மோடி இருவரும் பொதுமக்களால், நடுத்தர மக்களால் தீவிரமாக விமர்சிக்கப் படவில்லை. தண்டிக்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்பு வலுவாக நடத்த படவில்லை. தொழிலாளி வர்க்க அரசியல் இந்த எதிர்ப்பை தீவிரமாக்கும் போது தான், பொதுமக்கள் அரசியலாக மாறும்.

2023 லிருந்து இன்று வரை:

2023 ஜனவரியில் ஹிண்டர்ன்பர்க் ரிசர்ச் நிறுவனம், அதானி குறித்த குற்றசாட்டை முதலில் வைத்தது. அதில் மோரிசியஸ் தீவு வழியாக, கௌதம அதானியின் சகோதரர், வினோத் அதானி மூலம், அதானி குரூப் ஆப் நிறுவனங்களில் பங்கு முதலீடு செய்ததாக, வெளிநாடுகளில் இருந்து முதலீடு என பொய்யான தோற்றத்தை உருவாக்கி தனது செல்வாக்கை உயர்த்தியது, என்பது பிரதான குற்றச்சாட்டு ஆகும். இது 1.76 லட்சம் கோடி அளவில் மதிப்பு கொண்டதாகவும், குற்றம் சுமத்தியது.

மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, அதானி மீதும் அவர் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய போராட்டங்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய விவாதங்கள் பெரும் புயலை கிளப்பியது. போராடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்டனர்.  ஆனால் அதானி மீதும் பங்கு சந்தை நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை இல்லை. தொடர்ந்து மார்ச் 2023 ல் உச்சநீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல் படி, இந்திய பங்குசந்தை நிறூவனம் சுயேட்சையான விசாரணை மேற்கொண்டு, உரிய அறிக்கை தாக்கல் செய்ய கேட்டுக் கொள்ளப் பட்டது. அதுவும் முறையாக நடைபெறவில்லை. ஒரு கட்டத்தில் இந்திய பங்கு சந்தை நிறுவனம், மேற்படி விசாரணை பொறுப்பை கைவிட்டது.

இந்திய பங்கு சந்தை நிறுவனம் மடியில் கணத்துடன் இருந்த காரணத்தால், வழியில் பயத்துடன் செயல்பட்டதன் விளைவே, எந்த ஒரு விசாரணையும் முறையாக நடத்த வில்லை. மேலும் அதை பாதியிலேயே நிறுத்தவும் செய்தது. மடியில் இருந்த கணம் தான், தன்னாட்சி அந்தஸ்து கொண்ட, செபி என்ற இந்திய பங்குசந்தை நிறுவனத்தின் தலைவர் மாதவி பூச் ஆவார். இதை தற்போது மீண்டும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அம்பலப்படுத்தி உள்ளது.

2015லிருந்தே அதானி தரப்பில், வெளிநாட்டில் இருந்து பங்கு முதலீடுகள் செய்வதாக கணக்கு காட்டி, ஏமாற்றி உள்ளனர். இதற்கு மாதவி பூச் மற்றும் அவர் இணையர் பூச் இருவரும் உடந்தையாக இருந்துளனர். பல காலகட்டங்களில் இவர்கள் என்னென்ன வகையில் அதானி நிறுவனத்திற்கு உதவியாக இருந்துள்ளனர் என்பதை, ஹிண்டண்பர்க் ரிசர்ச் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. ஆனால் இன்று வரை மாதவி பூச் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை.  ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களும் வாய் திறக்கவில்லை. பிரதமர் மோடி இது போன்ற ஊழல் மற்றும் முறைகேடுகளை திசை திருப்பும் வேலையை செய்து வருகிறார். பங்கு சந்தை உள்ளிட்ட நிதி நிர்வாக நடவடிக்கைகளுக்கு பொறுப்பான நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களும் வாய் திறக்கவில்லை.

அரசின் மௌனம் மற்றும் மாதவி பூச் உள்ளிட்டோரின் செயல்பாடுகள், அதானியின் சொத்து குவிப்பிற்கு மிகப் பெரிய அளவில் உதவக் கூடியதாக உள்ளது என்பதை வெட்டவெளிச்சமாக்குகின்றன. எனவே பங்குசந்தையில் நமக்கு நேரடி பங்கு இல்லை என்றாலும், பெரும் முதலாளிகள் பங்கு போட்டுக் கொள்ளை அடிப்பதை அனுமதிக்க கூடாது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக