புதன், 11 செப்டம்பர், 2024

இந்து தமிழ்திசை

 முதலீடுகள் மட்டுமல்ல ..... உரிமைகளும் முக்கியம்

 

பிரமிக்கதக்க விடுதி, 17800 நபர்களுக்கான, படுக்கைகள், உணவுக்கூடம், விளையாட்டு வசதிகள் இன்னும் பல வசதிகள் என தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. உலகின் மிகப் பெரிய கைபேசி உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் கட்டிய விடுதிகளும், அதன் திறப்புவிழாவும் தான் இப்படி பேச வைக்கிறது. மேற்படி விடுதியில் பெண்கள் மட்டுமே தங்க முடியும். அதுவும், திருமணமாகாத இளம் பெண்களுக்கான வாய்ப்பாக இந்த விடுதிகளின் பயன்பாடு பேசப்படுகிறது.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில், இந்த பிரமாண்டம் அமைந்திருக்கிறது. தொழில் முதலீடுகளை, கண்மூடித் தனமாக எதிர்க்க முடியாது. வேலைவாய்ப்பிற்காகத் தான் வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கின்றோம், சலுகைகள் வழங்குகிறோம் என்பது, அரசுகள் வெளியிடும் முக்கியமான செய்தி. இத்தகைய நிறுவனங்கள், அரசுகளிடம் இருந்து பெறும் சலுகைகளுடன் ஒப்பீடு செய்தால், வேலைவாய்ப்பு உயர்ந்ததாகவும், மனித உரிமைகளை மதிக்க கூடியதாகவும் இருக்க வேண்டும்.

திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் வேலை செய்யலாமா?

கடந்த ஜூன் 25 தேதியன்று, சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தியால், சில விமர்சனங்களை பாக்ஸ்கான் சந்தித்தது. ஓராண்டு காலத்தில் அந்த நிறுவனத்தின் செய்தியாளர்கள் 20க்கும் மேற்பட்ட முறை ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு, சென்று பார்வையிட்டும், விவரங்கள் சேகரித்தும், செய்தி கட்டுரை வெளியிட்டதாக கூறுகிறது. திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் அதிக விடுப்பு எடுப்பர். குழந்தைபேறு ஒரு பிரச்சனையாக இருக்கும், போன்ற காரணங்களுடன், இந்து திருமண முறைப் படி அணியும், தாலி அல்லது ஆபரணம், உற்பத்தி தளத்தில் ஆபத்து விளைவிப்பதாக இருக்கும், என்ற காரணமும் முன் வைக்கப் படுகிறது.

தைவான் நாட்டு தலைமையகத்தில் பேசும்போது திருமணம் செய்வோர் வேலை செய்ய தடையல்ல எனக் கூறுகின்றனர். இந்தியாவிலும், 1961ல் நிறைவேற்றப்பட்ட சட்டம், 80 நாள்கள் பணி செய்த பெண் ஊழியரும், மகப்பேறு சட்ட பலன்களை அனுபவிக்கமுடியும் எனக் கூறுகிறது. 2017ல் சட்ட திருத்தம் மூலம் 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பு பலன்களை அனுபவிக்க வழிவகை செய்கிறது. தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்றும், 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரியும் நிறுவனத்திற்கும் இது பொருந்தும் என்றும் கூறுகிறது.

இணைய தளத்தில், இந்தியாவில், பாக்ஸ்கான் 48000 பேருக்கு வேலை அளித்து வருவதாக கூறுகிறது. ஆனால் மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கு பதிலாக, திருமணம் செய்த பெண்களை வேலைக்கு வைத்துக் கொள்ள மாட்டோம் என மறைமுகமாக அமலாக்கி வருகிறது. இதுகுறித்த கேள்விக்கு, பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி லியு 25 சதம் பெண்கள், திருமணம் செய்த பின் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறுகிறார்.

தமிழ்நாட்டில், பெரியார், 1930களிலேயே, பெண் குழந்தை பெறும் இயந்திரம் அல்ல என்றும், பெண்கள் கருத்தடை செய்து கொள்வது குறித்தும் பேசியுள்ளார். பெண்களின் விடுதலைக்கும் சுயேட்சை செயல்பாடுகளை முன்னெடுக்கவும், கருத்தடை தேவை என்பதை வலியுறுத்துகிறார். பெரியார் குறிப்பிட்ட பெண் விடுதலை என்பது குழந்தை பெற்றுக் கொள்ளும் உரிமையை பேசுகிறது. சுமார் 95 ஆண்டுகளுக்கு முன் இப்படியான பெண் உரிமையை, தமிழ்நாட்டு மக்கள் விவாதித்து உள்ளனர். இன்று அதை விட பல மடங்கு முன்னேறிய சிந்தனையும், செயல்களும் தேவைப் படுகிறது.  நிறுவனங்கள் பல ஆண் தொழிலாளர்களுக்கு, தந்தைமை பேறு விடுப்பு என அனுமதிக்கும் முன்னேற்றத்தை, நமது நாட்டிலும் பெற்றுள்ளோம். எனவே திருமணம் வேலை செய்ய தடை அல்ல என்பதை நமது அரசுகள் வலியுறுத்த வேண்டும்.

மனித உரிமைகள் குறித்த ஐ.எல்.ஓ வழிகாட்டுதல்கள்:

பாக்ஸ்கான் தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்கள், தனது நிறுவனம் உருவாக்கியுள்ள விடுதியில் தங்க வலியுறுத்துகிறது. அக்கறை, நலன் போன்ற சொல்லாடல்கள் சார்ந்து, இந்த நடைமுறை பின்பற்றப் படுகிறதா? அல்லது உற்பத்தி சார்ந்து பின்பற்றப் படுகிறதா?. என்பதை விவாதிக்க வேண்டியுள்ளது. பெண்களுக்கான தனிப்பட்ட விருப்பங்களும், உரிமைகளும் இதன் மூலம் பாதிப்புகளை சந்திக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

24 நாடுகளில், 137 வளாகம் மூலம் பாக்ஸ்கான் உலக அளவில் செயல்பட்டு வருவதாக கூறுகிறது. பல லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால் சீனா உள்ளிட்ட நாடுகளில் உள்ள நிறுவனமும், மேலே குறிப்பிட்ட விடுதியில் தங்க வைக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறது. நமது தமிழ்நாட்டில் தற்போது திறக்கப் பட்டுள்ளது. இது மிகுந்த கவனத்துடன் கையாளப் பட வேண்டும் என்பதை தொழிற்சங்கம் தொடர்ந்து விவாதிக்கிறது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையினால் வழி நடத்தப் படுகிறது. அதேபோல் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கான ஒத்துழைப்புக்கான நாடுகளின் அமைப்பு (Organisation for Economically Co Operation and Development) என்ற அமைப்பும் உள்ளது. இரண்டு அமைப்புகளும் மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகளை இணைத்து வழிகாட்டுதல்களை அளித்துள்ளன. 38 நாடுகளைக் கொண்ட ஓ.இ.சி.டி.  இதில் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகள் மேற்குறிப்பிட்ட நாடுகளில் உறுப்பு நாடுகள் அல்ல.

ஒ.இ.சி.டி நாடுகளின் தொழில் முதலீடுகள், இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் அதிகம் உள்ளது. மனிதவளம், உள்நாட்டு சந்தை ஆகியவையும் மேற்படி முதலீடுகளுக்கு காரணமாக சொல்லப் படுகிறது. இதன் மூலம் 38 நாடுகளும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் வலியுறுத்தப் படுகின்றன. குறிப்பாக, மனித உரிமைகள் மீறப்பட கூடாது. முதலீடு செய்யப் பட்ட நாடுகளின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும், போன்றவை மிக முக்கியமானது ஆகும். இந்த அடிப்படையில் அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றனவா? சர்வதேச தொழிலாளர் அமைப்பு வலியுறுத்தும் பல்வேறு வகையிலான தொழிலாளர் உரிமைகள் பின்பற்றப் படுகின்றனவா? என்பதை கண்காணிப்பதும், அமலாக்க வழிவகை செய்வதும், முதலீடுகளை கவரும், அரசுகள் கவனம் கொள்ள வேண்டியதாக உள்ளது.

முதலீடுகளுக்கான பயணம் நம் முதுகெழும்பையும் பாதுகாக்கட்டும்:

தமிழ்நாட்டின் முதல்வர் தற்போது முதலீடுகளை ஈர்ப்பதற்கான, வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். கடந்த காலத்தில் அதிமுக அரசும் இதை மேற்கொண்டது. பிரதமர் மோடி தனது ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திலும், வெளிநாட்டு முதலீடுகளை கவரும் வகையில் பேசி வருகிறார். இதன் மூலம் இந்தியாவில் முதலீடுகள் அதிகரிக்கின்றன, என்பதை மறுக்கவில்லை. வேலைவாய்ப்பும் உயர்ந்துள்ளது. மனித உரிமைகள் மீறப்படுவது அதிகரிக்கிறது, என்பதை ஏராளமான ஆய்வுகள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன.

தொழிலாளர் மற்றும் வாழுமிடங்களை பாதுகாக்கும், சுற்றுச் சூழல் சார்ந்த சட்ட வரையறைகள் என்ன? அதில் எவ்வாறு மீறுதல்கள் நடந்துள்ளன? என்னென்ன நிறுவனங்கள் மீறியுள்ளன? என்பது போன்ற கேள்விகள் எழுப்ப பட்டு, வழக்குகளும் நடந்துள்ளன. தமிழ்நாட்டிலும் உணவு விநியோகிக்கும் தொழிலாளர்கள் சார்ந்த பிரச்சனைகள் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் இடம் பெற்று உள்ளன.

உரிமைகள் வலுவாக முன் வைக்கப்படும் போது, நிறுவன அதிகாரிகள், வேறு மாநிலங்களுக்கு சென்று விடுவோம், என அச்சுறுத்துவது நடைபெறுகிறது. தொடர் முன்னேற்றம், திறன் படைத்த தொழிலாளர்கள் மூலமே சாத்தியம். நீடித்த வளர்ச்சி என்பது உள்நாட்டு சந்தை மற்றும் மக்களின் வாங்கும் சக்தி உயர்வு ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. தமிழ்நாடு இரண்டு வகையிலும் முன்னேறிய மாநிலமாக உள்ளது. எனவே நிறுவனங்களின் இடம்பெயர்ந்து விடுவோம் என்ற அச்சுறுத்தலுக்கு, அரசு ஆளாக கூடாது.

இது போன்ற பேரங்கள் மனித உரிமை மீறலுக்கு உதவுவதாக மாறிவிடும் அபாயம் இருப்பதை உணரவேண்டும். முதலீடுகளும் தேவை, மனித உரிமைகள், தனி மனித சுதந்திரம் போன்ற அடிப்படையான ஜனநாயக மாண்புகளும் மதிக்கப்பட வேண்டும். மற்றொரு புறம், இந்தியாவில், பிளாச்சிமடா உள்ளிட்ட பகுதிகளில் குளிர்பான நிறுவனங்கள் அமைந்த போது, குடிநீர், நிலத்தடி நீர் வளம் ஆகியவை பாதிக்கப்பட கூடாது என்ற உத்தரவுகளை கணக்கில் கொள்ள வேண்டும். இந்திய அரசியல் சாசன சட்டம், பிரிவு 21 முன் வைக்கும் வாழும் உரிமை குறித்த கருத்து மற்றும் பிரிவு 51 (A) முன்வைக்கும், சுற்றுச் சூழலை பாதுகாப்பது இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் அடிப்படை கடமை என்கிறது. அரசுக்கு முதல் பொறுப்பு இருப்பதை மறந்து விட முடியாது.

எஸ். கண்ணன்

துணைப் பொதுச் செயலாளர்

சி.ஐ.டி.யு தமிழ்நாடு.

9445367415

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக