புதன், 11 செப்டம்பர், 2024

தீக்கதிர்

 

அம்பானி வீட்டு திருமணமும் – நம்மிடம் இருந்து பறிக்கப் பட்டவையும்.. 

சின்ன செய்திகளுக்கும் “இப்பவே கண்ணக் கட்டுதே” என்ற கமெண்ட் ஐ கேட்க முடியும். முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் (Pre Wedding Celebration) மார்ச் முதல் வாரத்தில், குஜராத் மாநிலம், ஜாம் நகரில் நடந்த விவரங்களை கேட்டால், கண் மட்டும் கட்டுவதில்லை, உடலே நடுங்குகிறது. ஒன்னுமில்லை அந்த கொண்டாட்டத்தின் செலவு சுமார் ரூ 1250 கோடி என சொல்லபடுகிறது. தி மிண்ட் இணைய இதழ் ரூ 200 கோடி ரூபாய் உணவு செலவிற்காக என மதிப்பீடு செய்கிறது.

முக்கியமான செய்தி என்னவென்றால் எதிர் வரும் 2024 ஜூலை 12ல் தான் திருமணம் நடக்க உள்ளது. அதற்கு எவ்வளவு செலவாகும் என்றால் நிச்சயம் மேற்குறிப்பிட்ட தொகையை விடவும் கூடுதலாக இருக்கும். எங்கு திருமணம் என்ற கேள்விக்கு, மும்பை அல்லது ஏதாவது ஒரு தீவில் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. பல் இருப்பவர் பட்டாணி தின்கிறார் என கடந்து செல்லும் செய்தி அல்ல. நாம் பேரரசர்கள் குறித்து அறிந்து இருக்கிறோம். அதை விடவும் கூடுதல் செல்வாக்கை, மக்கள் ஆட்சி காலத்தில், முதலாளித்துவ பேரரசர்களால் நிகழ்த்த முடிகிறது, என்பதே இப்போது காணும் உண்மையாக உள்ளது. இதையே மார்க்சிஸ்ட் கட்சி, நெறியற்ற முதலாளித்துவம் (குரோனி கேப்பிட்டலிசம்) என்கிறது

சர்வ தேச விமான நிலையம்:

இந்த கொண்டாட்டத்திற்காக, ஜாம்நகர் விமான நிலையத்தை, பாஜக ஆட்சியாளர்கள், சர்வதேச விமான நிலையம் என 10 நாள்களுக்கு அறிவிப்பு செய்தது. அம்பானியின் சொத்து மதிப்பு 23.1 பில்லியன் அமெரிக்க டாலர் (1,91,730 ஆயிரம் கோடி ரூபாய்) இந்த தொகை, 19 நாடுகளின் ஜி.டி.பி (உள்நாட்டு உற்பத்தி) ஐ விடவும் அதிகம் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறுகிறது.

இவ்வளவு சொத்து மதிப்பு கொண்டுள்ள, ஒரு நபரின் தேவைக்காக ஜாம்நகர் விமான நிலையத்தை 10 தினங்கள் சர்வ தேச விமான நிலையமாக விதிகளை மீறி அறிவித்தது சரிதான் என சிலர் கூறுவதையும் கேட்க முடிகிறது. கூடவே மேற்படி கொண்டாட்டத்திற்கு வருகை தந்தவர்கள் பட்டியலில், பில்கேட்ஸ், மார்க் ஜூகர்பெர்க், இவாங்கா டிரம்ப் (டிரம்ப்பின் மகள்) இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியல் இந்திய ஆட்சியாளர்களை, தானாகவே முன் வந்து வசதி வாய்ப்புகளை செய்து கொடுக்க, அழுத்தம் தரும் என்பதை புரிந்து கொள்ள முடியும். பல நாடுகளில் உள்ள பிரமுகர்கள் மேற்படி கொண்டாட்டத்திற்கு வருகை தந்தாலும், நம் ஊர் திரைகலைஞர் ரஜினி காந்த் தனி விமானம் மூலம் அழைத்து செல்லப் பட்டுள்ளார்.

இங்கு பொதுமக்களுக்கு முன் வரும் கேள்வி, இப்படி தனி நபர்களின் தேவைக்காக விதிகளை மீற முடியுமானால், ஏன் ஒரு நாடாளுமன்ற தொகுதி மற்றும் தென் தமிழ் நாட்டு மக்கள் பயன்படுத்தும் மதுரை விமான நிலையத்தை சர்தேச தரம் கொண்டதாக மாற்ற கூடாது என்பதாகும். மதுரை விமான நிலையத்திற்கு விதி மீறல்களை கேட்கவில்லை. அரசு விதிகள் குறிப்பிடும் அளவை குறைப்பதன் மூலம், வளர்ச்சிக்கான வாய்ப்பை முன்னெடுக்க முடியும் என்பதாகும்.  

பில்லியன் டாலர் எப்படி வளர்ந்தது எப்படி?

ஜாம்நகர் சர்வ தேச விமான நிலையத்திற்காக, முகேஷ் அம்பானி சொத்துக்களையும், உலக பிரமுகர்களையும் சுட்டி காட்டும் நபர்கள் அந்த சொத்துக்கள் எங்கிருந்து வந்தது? என கேள்வி எழுப்புவதில்லை. 35 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய தொழில் அதிபராக எவ்வாறு வர முடிந்தது? ஒன்று அரசு அளிக்கும் சலுகைகள், இரண்டு பொதுதுறை வங்கிகள் அளிக்கும் கடன் பின் அதை தொடர்ந்து வழங்கும் தள்ளுபடி, மூன்று பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் உழைப்பு.

உதாரணத்திற்கு, முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு சொந்தமாக ஜாம்நகரில் 280 ஏக்கரில் ஒரு மிருக காட்சி சாலை உள்ளது. ரிலையன்ஸ் என அதற்கு பெயரும் சூட்டப் பட்டுள்ளது. வண்டலூர் மிருக காட்சி சாலையை விட குறைவு என ஒப்பிடுவதை விட, சிங்க பொம்மை வாங்கி தர சிரமப் படும் மனிதர்களுக்கு மத்தியில், அம்பானி தன் குழந்தைகளுக்கு அசல் மிருகங்களை காட்சி படுத்தி உள்ளார் என ஒப்பிடுவதே, இன்றைய இந்தியாவின் ஏற்ற இறக்கத்தையும், சமத்துவமற்ற தன்மைகளையும், சரியாக புரிந்து கொள்ள உதவும்.

அடுத்து ஜியோ நெட்வொர்க், இந்த நிறுவனம் 2015ல் துவங்கப் பட்டது. அதற்கு முன் செல்போன் கருவி விற்பனையை மட்டும் நடத்தி வந்த நிறுவனம், செல்போன் பயனை அனுபவிக்க தேவையான நெட் வொர்க் பொறுப்பு, ரிலையன்ஸ் குழுமத்திற்கு கிடைத்தது. இப்போது இந்த நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, ஒட்டு மொத்த செல்போன் வாடிக்கையாளர்களில் 46.2 கோடிப் பேர் ஆவர்.  இது சுமார் 50 சதம் ஆகும். துவங்கும் போதே 4ஜி சேவை, என்ற அறிமுகத்தை, நமது பிரதமர், பாஜக கட்சியின் தலைவர் மோடி வழங்கினார். அதுமட்டுமல்ல, மோடி இந்த நிறுவனத்தின் விளம்பரங்களிலும் இடம்பெற்றார். ஜியோ குழுமம், பிரதமரை தனக்கு விளம்பர தூதுவராக பயன்படுத்தி கொண்டது.

இதன் மூலம் அப்பட்டமாக அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் க்கு அந்த சேவை வழங்க இன்று வரை மறுத்து வருகிறது. ஆனால் ஜியோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு 5ஜி சேவை வரையிலும் அனுமதி வழங்கி, செல்வ வளத்தை அதிகரிக்க பாஜக அரசு உதவியுள்ளது. அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை, மோடி தனது செயல்கள் மூலம் ஜியோ வாடிக்கையாளர்களாக மடைமாற்றம் செய்துள்ளார்.

மிண்ட் இணைய இதழின் (5.4.2023) செய்திபடி, 55 வங்கிகள் மூலம் முதலில் 3 பில்லியன் டாலர் கடனும், அதைத் தொடர்ந்து 18 வங்கிகள் மூலம் 2 பில்லியன் டாலர் கடனும், என மொத்தம் 5பில்லியன் டாலர் கடன், ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் பெற்றுள்ளது. தி எக்கனாமிக் டைம்ஸ் இதழ் 1,61,035 கோடி ரூபாய் என குறிப்பிடுகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாஜக அரசு கடன் தள்ளுபடி அறிவிப்பை வழங்கி வருகிறது. அறிவிக்கப் படும் தொகையின் அளவும் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவதை காண முடிகிறது. தி இந்து நாளிதழ் கடந்த 10 ஆண்டுகளில் ரூ 10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளதாக செய்தி வெளியிட்டு உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அம்பானியின் பங்களிப்பு,  சுமார் 8 சதம் என மதிபிடப்படுகிறது. அநேகமாக இது கடன் பெறுவதிலும், கடன் தள்ளுபடி அனுபவிப்பதிலும் கூட பிரதிபலிக்கும் என்பதே உண்மை. அந்த வகையில் அரசின் பெரும்பான்மையான மக்களின் சேமிப்பு பணத்தை தொழில் துவங்குவது என்ற பெயரில் பயன்படுத்தும் நிலை உள்ளதை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

தேர்தல் பத்திரங்களுடன் என்ன தொடர்பு?

தேர்தல் பத்திரங்கள் அளிக்கும் நபர்களின் பெயர்களும் விவரங்களும், ரகசியமாக வைக்கப் படும் என்ற அரசு முடிவு, மேலே கண்ட தனி நபர்களான தொழில் அதிபர்களுக்கான சலுகையுடன் இணைத்து பார்க்க வேண்டிய தேவை இருப்பதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, தேர்தல் பத்திரம் வழங்கிய நபர்கள் அல்லது நிறுவனங்கள் குறித்த விவரங்களை அளிக்க தாமதம் செய்வது, இந்த தேர்தல் நேரத்தில் பாஜகவின் மீது வளரும் அதிருப்தியை அதிகரிக்காமல் இருக்கும் உள் நோக்கம் கொண்டது என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்து சரியானது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

குறிப்பாக தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்கள் வெளிவரும் போது, கடன் சலுகை அல்லது தள்ளுபடி சலுகை பெற்ற நிறுவனங்கள் அம்பலமாகும். 125 நாடுகள் கொண்ட வறுமை சார் பட்டியலில் இந்தியா 111 வது இடத்தில் இருக்கிறது.  ஆனால் அம்பானி குடும்பத்தினர், திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தை 1250 கோடி ரூபாய் செலவில் நடத்துவது, கேள்விக்கு உள்ளாக்கப் பட வேண்டும்.

ஒருபுறம் அரசின் சலுகைகள் மறுபுறம் மக்கள் விரும்பும் ஆளுமைகளை அழைப்பதன் மூலம் பொதுமக்களின் விமர்சனங்களை தவிர்க்க முயற்சிப்பதையும் காண முடியும். நாம் வசதியானவர்களின் திருமண விழாக்களை கேள்வி எழுப்பவில்லை. அதில் வெளிப்படும் ஆடம்பரம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய ஏதோ ஒரு சலுகையில் இருந்து பறிக்க பட்டுள்ளதையும் பார்க்க முடியும்.

 

ஆனால் கார்ப்பரேட் முதலாளிகள் எளிய மக்களுக்கு வழங்கும் சில அடிப்படை தேவைகளை, கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். குறிப்பாக பாஜக கட்சியினர், இலவச திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கிறது என்ற பெயரில் வழக்குகளைத் தொடர்ந்து, மக்களையும், மக்கள் நலத் திட்டங்களையும் அவமானப் படுத்துகிறது. உதாரணத்திற்கு மகளிர் உரிமைத் திட்டத்திற்கு, ஒரு கோடியே 10 லட்சம் பேர் பயனடைய, ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடி செலவாகும் என்றால், 10 அல்லது 20 கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு 10 லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் தள்ளுபடி ஆவதை, விமர்சிப்பதில்லை. பாஜகவின் இந்த அரசியலை அம்பலப் படுத்துவது மிக அவசியமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக