வியாழன், 20 ஜூன், 2013

நேர்மை

           நேர்மை இனி மெல்ல சாகுமோ?

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்றார் கம்பர். இன்றைய நிலையோ “அரசியல் பிழைத்தோருக்கு அறம் வெற்றுப் பேச்சாகும்” எனக் கொள்ளப் படுகிறது. நேர்மை எங்கே இருக்கிறது? தேடினாலும் கிடைக்குமா? என்பது தெரியவில்லை. இப்போது நாம் பார்க்கிற மூன்று செய்திகள், மேற்படி விவாதத்தை வலுப்படுத்துகின்றன. ஒன்று சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப் பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசா குறித்தது. இரண்டு மத்திய அமைச்சராக இருக்கும் ப. சிதம்பரம் தேர்ந்தெடுக்கப் பட்ட விதம் பற்றிய நீதிமன்ற விவாதம் குறித்தது. மூன்று உ.பி.யில் டிம்பிள் என்ற பெண்மணி போட்டியின்றி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப் பட்டது.

ராசா சென்னை, கோவை, நீலகிரிக்கு வந்திறங்கிய போது ஆயிரக் கணக்கில் தொண்டர்களைத் திரட்டி வரவேற்றது அவரின் தனிமனித உரிமை  என்ற போதிலும், அதன் மூலம் மக்கள் ஆதரவு இருப்பதாகவும், தான் குற்றமற்றவர் என்பதாகவும் நிருவுவதற்கும் முயற்சிக்கிற ஏற்பாடாக கருத வேண்டியுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பவர்களெல்லாம் குற்றவாளிகள் ஆவதில்லை என்ற போதிலும், ராசா போன்றோர் மீது, நீதிமன்றம் கொடுத்துள்ள நிபந்தனைகளையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

ப.சிதம்பரத்தின் விண்ணப்பத்தை மதுரை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை என்பதே, குற்றம் நிரூபிக்கப் பட்டதற்கான ஆதாரம் எனக் கருதவில்லை. ஆனால் கடந்த ஒருமாத கால அவகாசத்தில் இரண்டாவது முறையாக மத்திய அமைச்சர் சிதம்பரம் சர்ச்சைக்கு உள்ளாகிறார். முதலில் ஏர்செல் விற்பனை விவகாரத்தில், அவரது புதல்வரின் நடவடிக்கையும் இருக்கிறது, என்பது நாடாளுமன்றத்தில் சர்ச்சையானது. இரண்டாவது, அவர் தேர்ந்தெடுக்கப் பட்ட விதம் குறித்து தற்போது முன்னுக்கு வந்துள்ள சர்ச்சை. இவைகளின் மீது முறையான விவாதம் நடைபெறுவதற்கு, அவரின் உள்துறை அமைச்சர் பதவி தடையாக இருக்குமோ என்ற ஐயம் நியாயமானதே.

அடுத்ததாக உத்திரப் பிரதேச அரசியலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மூலம் நுழைந்துள்ள டிம்பிள் என்னும் பெண்மணி. இவர் முதல்வர் அகிலேஷின் மணைவி. ஏற்கனவே இவர்களின் குடும்பத்தில் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ், முலாயமின் தம்பி, மைத்துனர், என்று நெடும் பட்டியல் கொண்ட குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் டிம்பிளின் தேர்வு ஜனநாயகத்தை கேலி கூத்தாக்குகிறதோ? என்ற எண்ணம் உருவாகாமல் இருக்காது.

இந்திய அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர், லால் பகதூர் சாஸ்த்திரி. இவர் அரியலூர் ரயில் விபத்தில் 144 நபர்கள் மரணம் அடைந்ததற்கு பொறுப்பேற்று தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். விபத்திற்கு ஒரு துரும்பளவும் தொடர்பில்லாத அமைச்சரின் ராஜினாமா நிகழ்வு அதிகாரிகளை பெரும் அளவில் பொறுப்புடன் செயல்பட நிர்பந்திக்கும் ஏற்பாடு என்று புரிந்து கொள்வது அவசியம். ஒரு குழுவின் செயல் பாட்டில் எங்கேயோ நடந்த தவறை சரி செய்ய இத்தகைய நடவடிக்கைகள் அன்றைக்குத் தேவைப்பட்டிருக்கலாம். இன்று மனித இழப்புகளும் பொருள் இழப்புகளும் மிக சாதாரணமாகி, மலிந்து விட்டன. இன்றைய சூழலில், அதிகமான வளர்ச்சித் திட்டங்களும், சர்வ தேச அளவில் இந்தியாவின் மனித வள மேம்பாடு குறித்த முன்னேற்றமும் அதிக அளவில் எதிர்பார்க்கப் படுகிறது. எனவே இன்றைய  அமைச்சர்களுக்கும், அரசியல் கட்சிகளில் உயரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கும் கடந்த காலத்தை விட கூடுதல் பொறுப்புணர்ச்சி தேவை. ஆனால் குற்றச்சாட்டுப் பட்டியலில் இடம் பெற்ற பிறகும் தன் மீது நடைபெறும் விசாரணைக்கும், வகிக்கும் பதவிக்கும் தொடர்பில்லை, என விளக்கம் அளிப்பது ஏற்புடையதல்ல.

நேர்மையாக நிர்வகித்தல் குறைந்து வருகிறது, என்பதற்கு, விக்கிப்பீடியா வெளியிட்டுள்ள அதிர்ச்சி தரும் பட்டியலை உதாரணமாகக் கொள்ளலாம். இந்திய அரசியலில் ஊழல் குற்றச்சாட்டு பல இருந்தாலும் சில தீவிர சர்ச்சைக்கு உரியதாக மாறியது. ஒன்று 1958ல் 1.2 கோடி சம்மந்தப்பட்ட முந்த்ரா ஊழல். இரண்டு 1971 ல், 65 லட்சம் சம்மந்தப் பட்ட நகர்வாலா ஊழல். மூன்று 1987ல் 65 கோடி சம்மந்தப்பட்ட ஃபோபர்ஸ் ஊழல். நான்கு 1996ல் 900 கோடி மாட்டுத் தீவன ஊழல்.  ஐந்து 1999ல் சில ஆயிரம் கோடி சம்மந்தப் சவப்பெட்டி ஊழல். ஆறு 1 லட்சத்து 75 ஆயிரம் சம்மந்தப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல்.  இவை இல்லாமல் கழிப்பிடம், சுடுகாடு ஆகிய அடிப்படைத் தேவைகளிலும், நாட்டைக் காக்கும் பணியில் உயிர் துறந்த, ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்குவதிலும் என எல்லா கொள்முதல்களிலும் ஊழல் அரங்கேறியுள்ளது.

1948ல் ஒரு ஊழலில் துவங்கிய முறைகேடு, இப்போது 2012 ன் எட்டு மாத அவகாசத்திற்குள்ளேயே 89 ஊழல்கள் எனப் பெருகியுள்ளது. மத்திய, மாநில அரசுகளால் நிகழ்த்தப் பட்டதாக, சிஏஜி குறிப்பிட்டது என்பதனால், வழக்குகள் பதிவு செய்யப் பட்டு அம்பலமாகியுள்ளது. இதில் சுரங்கம் ஒதுக்கீடு மூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பாக 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ஊழல் தற்போது முன்னுக்கு வந்துள்ளது. 2012 ல் மட்டும் 19 வகையான ஊழல்களில் 14 லட்சத்து 41 ஆயிரத்து 319 கோடி அரசுப் பணம் முறைகேடு செய்யப் பட்டுள்ளது அல்லது அரசுக்கு வரவேண்டிய வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளது ( ஆதாரம் விக்கிப் பீடியா).

இந்தியாவில் ஆளும் அரசியல்வாதிகளாக பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் இருந்தவர்கள் சம்மந்தப் பட்ட ஊழல் 24. இதில் 4 நபர்கள் தண்டிக்கப் பட்டுள்ளனர். 4 நபர்கள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர். நீதிமன்ற விசாரணையில் இருவரின் மீதான குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளது. கடுமையான குற்றச்சாட்டின் பெயரில் வழக்குப் பதிவு செய்யப் பட்டவர்கள் 3 நபர்கள். குற்றப்பத்திரிக்கை மட்டும் தாக்கல் செய்யப் பட்டவர்கள் 11. தண்டிக்கப்பட்டாலும், குற்றம் சாட்டப் பட்டாலும், அடுத்து வருபவர், மேற்படித் தவறை செய்யாமல் இருப்பதில்லை.  1990 களுக்குப் பிறகு நவீன தாராளமயமாக்கல் கொள்கை பிரதான காரணம், என்பதை 1990க்குப் பின் நடைபெற்ற ஊழல்களே அதிகம் என்பதிலிருந்து அறியலாம்.

ஊழலின் ஊற்றுக் கண்ணாக நேர்மை யின்மை இருந்தாலும், அது உயர் பொறுப்பில் உள்ளவர்களால் தான் அரங்கேறுகிறது. உயர் பொறுப்பிற்கு வருவதற்கு தகுதியாக கல்வியும், நிர்வாக அறிவும் இருப்பதுடன் நேர்மையின்மையும் தேவைப்படுவதாக புரிந்து கொள்ளப் படுகிறது. தகுதி இல்லாதவர்களுக்கு அதிக சலுகை கொடுத்தல் துவங்கிய காலத்தில் தான் ஊழல்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. மத்திய ஆட்சி அமைப்பில் கூட்டணிக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தினாலும், சலுகைசார் (favouratism) நடவடிக்கைகளுக்கு கூட்டணி ஆட்சி முறையும் ஒருவகையில் பங்களிப்பு செய்கிறது.

இந்தப் பின்னணியில் தான் குடும்ப அரசியல், பதவி விலக மறுத்தல், சிறையில் இருந்து வெளி வரும் போது கொடுக்கிற பிரமாண்ட வரவேற்புகள் அரசியல் அரங்கில் அரங்கேறி வருகிறது. லால் பகதூர் சாஸ்த்திரி உள்துறை அமைச்சராக இருந்த போது, அவருக்கு சொந்தமாக வீடு இருந்ததில்லை. அதை அன்றைய சக அமைச்சர்கள் ஹோம்லெஸ் ஹோம் மினிஸ்ட்டர் என நையாண்டி செய்ததாக, சொல்லப் படுகிறது. 1988 ம் ஆண்டு திரிபுரா மாநிலத்தில் இடது முன்னணி தோற்று, காங்கிரஸ் வெற்றி பெற்ற பின்னணியில், வெளி வந்த தினமணி செய்தி இன்று மிகமுக்கியமானது. அந்த செய்தி, ”அதிசயம் ஆனால் உண்மை”, என்று தலைப்பிடப் பட்டு இருந்தது. முதல்வராக இருந்த நிருபன் சக்கரவர்த்தி, முதல்வருக்கு ஒதுக்கப் பட்ட இல்லத்தில் இருந்து, வெளியேறி, சைக்கிள் ரிக்க்ஷாவில் ஏறி கட்சி அலுவலகத்திற்கு குடியிருக்கச் சென்றார், என்பது பிரசுரிக்கப் பட்டிருந்தது. மாநில அமைச்சராக இருந்த கக்கன் தனது இறுதி நாள்களில் அரசு மருத்துவமனையில் உரிய படுக்கை வசதி கூட இல்லாமல், சிகிச்சைப் பெற்று வந்தார்.

மேற்படி உதாரணங்கள் பல இருந்தாலும், அவை இன்றைய தலைமுறைக்கு சென்றடையும் ஏற்பாடு இல்லை. பாடப்புத்தகங்கள் இத்தகைய தகவல்களை முழுமையாக சொல்வதில்லை. நேர்மை குறித்து சில விவாதங்களை முன் வைக்கிறது. இருந்தாலும் தொலைக்காட்சி அல்லது நாளிதழ் செய்திகளை இனைத்து பார்க்கிற எந்த மாணவருக்கும், அதைப் பின்பற்றும் சூழலை உருவாக்காது. அநேகமாக ஆவணக்காப்பகத்தில், ஆய்வு மாணவர்கள் மட்டும் படிக்கும் செய்தியாக, மேலே குறிப்பிட்ட நல்ல உதாரணங்கள், சுருங்கி விடும் அபாயம் இருக்கிறது. எனவே இன்றைய அமைச்சர்களோ, அதிகாரிகளோ ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகிற போது, கடந்த கால அல்லது நிகழ்கால முன் உதாரணங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். இல்லையென்றால் நேர்மை ஏட்டளவில் மட்டும் காட்சி தரும். நேர்மை பின்பற்றப் படாவிடில், சட்டம், ஒழுங்கு, நீதி என்ற வார்த்தைகள் நகைச்சுவை காட்சிகளாகவோ, சிரிப்பு போலீஸ்களாகவோ மாறி விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக