வியாழன், 20 ஜூன், 2013

ஜாலியன் வாலா பாக்


இந்திய மக்கள் சந்திந்த கொடும் அடக்கு முறைக்கா4ன சாட்சி!!

இந்திய விடுதலைக்கு சிந்திய ரத்தம் பெரும் குவியலாய் குவிந்து குன்று போல், தியாகத்தின் சாட்சியாய் காட்சியளிக்கும் இடங்களில் ஒன்று, ஜாலியன் வாலாபாக் மைதானம். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரின் மையத்தில், குறுகிய நுழைவாயிலைக் கொண்டது ஜாலியன் வாலா பாக். பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பின் படி 400 பேர் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலேயே மாண்டனர். பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டு மடிந்தனர். ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை கொடிய காயங்களுடன், பல ஆண்டுகள் படுக்கையில் விழுந்து சிகிச்சை எடுத்து, பின்  உயிர் பிழைத்தனர்.

டில்லியில் 1918 ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் ஆண்டு மகாசபை, 1919ல் நடைபெற உள்ள அடுத்த மகாசபையை பஞ்சாப் மாநிலத்தில் நடத்துவது என முடிவு, செய்தது. தென் ஆப்பிரிக்காவில் நிற வெறிக்கு எதிரான போராட்டத்தைத் தீவிர படுத்திய காந்தி அப்போது தான் இந்தியா திரும்பி இருந்தார். காங்கிரஸ் இயக்கத்திற்குத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார். பஞ்சாப் மாகாணத்தில் ஆண்டு மகாசபையை காங்கிரஸ் நடத்துவதாக எடுத்த முடிவு, பிரிட்டிஷாருக்கு பீதி கிளப்புவதாக அமைந்தது என்றால் மிகை அல்ல. அதுவரை பூரண சுதந்திரத்திற்காக எந்த முழக்கத்தையும் காங்கிரஸ் முன் வைக்கவில்லை. காந்தியும், ஆயுதப் போராட்டம் எதுவும் நடத்துவதாக அறிவிக்கவும் இல்லை. ஆனாலும் பிரிட்டிஷார் காங்கிரஸின் ஆண்டுப் பேரவை பஞ்சாபில் நடத்துவதை விரும்பவில்லை.

பஞ்சாப் மாநிலம் கத்தார் கட்சியின் விளைநிலமாக விளங்கியது. இக்கட்சி அமெரிக்காவில் துவக்கப் பட்டாலும், இந்தியாவில் பெரும் தாக்கத்தைக் குறிப்பாக, பஞ்சாபியர்கள் முழுமையாகப் பங்கு வகித்த, விடுதலைப் போராட்ட இயக்கமாக கத்தார் கட்சி இருந்தது. விரைவில் அவர்களின் போராட்டம் ஒடுக்கப் பட்டது. பல நூற்றுக்கானக் காணோர் தூக்கிலிடப் பட்டனர். பல நூற்றுக்கணக்கிலான இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் பட்டனர். பலர், அந்தமான் சிறைச்சாலை உள்ளிட்டு எண்ணற்ற சிறைகளில் அடைக்கப் பட்டனர். இது 1913 முதல் 1915 வரையிலும் நிகழ்ந்த கொடுமையாகும். பஞ்சாபி இளைஞர்கள் கணிசமான எண்ணிக்கையில் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணி புரிந்தாலும், இந்த படுகொலைகள் அவர்களிடம் பிரிட்டிஷ் எதிர்ப்பை உருவாக்கி இருந்தது. எனவே பஞ்சாபில் காங்கிரஸ் மாநாடு நடப்பது, பஞ்சாபியரை மேலும் ஆங்கிலேயருக்கு எதிரான மனநிலைக்கு கொண்டு செல்லும் என அஞ்சினர்.

அதேபோல் ஒத்துழையாமை இயக்கத்திற்கான அறைகூவல் டில்லி மாநாட்டிலேயே விடுக்கப் பட்டதால், பிரிட்டிஷ் அரசு மக்கள் ஒன்று கூடுவதைத் தடுக்கும் ரௌலட் சட்டத்தை உருவாக்கி இருந்தது. ராஜ துரோக வழக்கில் பல தனி நபர்களைக் கைது செய்து கணக்கில்லாமல் சிறையில் அடைக்கும் வாய்ப்பை ரௌலட் சட்டம் வழங்கியது. யார் சந்தேகத்திற்கு உரியவராக காவல் துறையால் கருதப் படுகிறாரோ அவரை கைது செய்து விசாரிக்கும் உரிமையை மாநில அரசுகள் ரௌலட் சட்டத்தின் பெயரில் வழங்கி இருந்தது.  இது பொது மக்களிடம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்ட உணர்வைத் தூண்டியது.

1919 மார்ச் 30 அன்று ஒத்துழையாமை இயக்க அறைகூவலுக்கு செவி சாய்க்கும் முகமாக, டில்லியில் ஹர்த்தால் உள்ளிட்டப் போராட்டங்கள் ஆவேசமாக நடைபெற்றது. குறிப்பாக இந்து முஸ்லீம் என்ற இரு பகுதி மக்களும் இந்தப் போராட்டத்தில் மிகப் பெரும் சக்தியாக ஒன்றிணைந்தனர். அதன் விளைவாக 5 பேர் படுகொலை செய்யப் பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதுவும் இளைஞர்களிடமும் தேச பக்தர்களிடமும் கடும் கோபத்தை உருவாக்கி இருந்தது. மூன்றாவது ஆத்திரமூட்டலாக, காங்கிரஸ் மகாசபையை நடத்தும் பொறுப்பாளர்களாக இருந்த டாக்டர். சைஃபூதின் மற்றும் டாக்டர். சத்தியபால் ஆகிய இருவரையும், காவல் துறை 1919 ஏப்ரல் 10 அன்று கைது செய்தது.

இந்த கைது சம்பவத்திற்கு எதிராக உடணடியாக லாகூர், அமிர்தசரஸ் உள்ளிட்ட பஞ்சாபின் பல்வேறு நகரங்களில் வெகுமக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராகத் திரண்டது மட்டுமல்லாமல், சில தாகுதல்களிலும் ஈடுபட்டனர். இது இந்தியா முழுவதும் பரவியது. குறிப்பாக டில்லி, கல்கத்தா, அஹமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் பெரும் மக்கள் எழுச்சியை உருவாக்கியது. மோதலாகவும் மாறியது. பல வெள்ளை அதிகாரிகள் உள்ளிட்டு ஏராளமானோர் படுகொலைக்கு ஆளாகினர். பஞ்சாப் மாநிலம் போர்களமாக காட்சியளித்தது.

டாக்டர்கள் கைது மற்றும் மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஜாலியன் வாலாபாக்கில் பெரும் கண்டனப் பொதுக் கூட்டத்திற்கு பகிரங்க அழைப்பு விடுக்கப் பட்டது. சுமார் 20 ஆயிரம் பொது மக்கள் பங்கேற்ற மாபெரும் கூட்டத்தில், ஹன்ஸ்ராஜ் என்பவர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். மைதானத்தைச் சுற்றிலும், சுற்றுச் சுவர்களும், ஒரு பக்கம் மட்டுமே நுழிவாயிலாகவும், அதுவும் குறுகியதாகவும் மைதானத்திற்கு செல்லும் வழி இருந்தது. ஜெனரல் டையர் வெள்ளை அதிகாரி 50 பிரிட்டிஷ் காவலர்களையும், 100 இந்தியாவைச் சார்ந்த காவலர்களையும் அழைத்துக் கொண்டு மைதானத்திற்கு வந்தான். கூட்டம் நடத்த அனுமதி இல்லை, இவ்வளவு நபர்கள் ஓரிடத்தில் கூட அனுமதிக்க முடியாது எனவே களைந்து செல்லுங்கள் என உத்தரவிட்டதாகவும், அதற்கு கூடியவர்கள் செவி சாய்க்க வில்லை என்பதாலும், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, டையர் மீதான விசாரனையில், அவன் தெரிவித்து உள்ளான். அதாவது 1600 ரௌவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை விசாரிக்க அமைக்கப் பட்ட ஹண்டர் கமிட்டி, டையரை விசாரிக்கிற போது, “நான் ராணுவ பீரங்கியைத் தான் எடுத்துச் செல்ல விரும்பினேன் ஆனால் அந்த நுழைவாயிலுக்குள் வாகணம் செல்லாது என்பதால், அதை விட்டு விட்டு சென்றேன். உத்தரவிட்ட பிறகும் களைந்து செல்லாததால், சுட்டேன் சுட்டேன் குண்டுகள் தீரும் வரை சுட்டேன்” என திமிரான வாக்கு மூலத்தைப் பதிவு செய்தான். இன்றளவும், நமது ஆட்சியாளர்களுக்கு இத்தகைய சட்டங்களும், வாக்கு மூலங்களும் தான் போராடுபவர்களை ஒடுக்கப் பயன்பட்டு வருகிறது. உண்மையில் களைவதற்கு உத்தரவிட்ட போது களைய வேண்டும் என்றால் கூட 20 ஆயிரம் நபர்கள் வெளியேற வாயில் ஒன்றுதான் அதுவும் குறுகலானது என்பதைக் கூட, அன்றைய காவல் அதிகாரிகள் புரிந்து கொள்ளாத வெறி கொண்டவர்களாக இருந்தது.

அன்றைய துப்பாக்கிச் சூட்டில் பலர் மரணமடைய இரவும் முழுவதும் சிகிச்சை இல்லாமல் துன்பப் பட்டதும், குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் அவதிப்பட்டதுமே காரணமாக அமைந்தது. குழந்தைகளும் பெண்களும் இப்படுகொலைக்கு ஆளாகினர். ஒட்டு மொத்த நாடும் கண்டனக் குரல் எழுப்பியது. லண்டனிலும் கண்டன இயக்கம் நடந்தது. அதன் பிறகுதான் மெற்படி நிகழ்வை விசாரிக்கிற ஹண்டர் கமிட்டி அமைக்கப் பட்டது. விடுதலைப் போராட்ட வரலாற்றில் அழிக்க முடியாத வடுவாக மாறிப்போனது ஜாலியன் வாலாபாக். இன்றும் வரலாற்றை உயிர் ஓவியமாக  சொல்லிக் கொண்டிருக்கிறது.

காவல் அதிகாரிக்கு உத்தரவிட்ட பஞ்சாப் மாகாண கவர்னராக அன்று இருந்த ஓ.டயர் என்ற நபரைப் பல ஆண்டுகள் கழித்து லண்டனில் உத்தம் சிங் என்ற இளைஞன் சுட்டுக் கொன்றான். ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது 12 வயது கொண்டிருந்த பகத்சிங் அந்த மைதானத்தில் இருந்து ரத்தம் தோய்ந்த மண்ணை எடுத்துச் சென்று வழிபட்டான். இப்படி ஏராளமான இளைஞர்கள் தீவிரமாக விடுதலைப் போரில் பங்கெடுக்கவும், பிரிட்டிஷாரை இந்தியாவை விட்டு விரட்டியே தீர வேண்டும் என உறுதி ஏற்பதற்கும் காரணமாக அமைந்தது.

இந்தியாவின் வளங்களையும், மனிதர்கள் மீதான் உழைப்புச் சுரண்டலையும் இழக்க விரும்பாத வெள்ளை ஏகாதிபத்தியம், போராடியவர்களை கொடுமையாக ஒடுக்கியதன் மூலம் போராட்டங்களை ஒடுக்க நினைத்தது. இன்று நவதாராளமயக் கொள்கைகள் மூலம் நேரடி ஆட்சியதிகாரம் இல்லாமல் இந்தியாவின் மிச்ச வளங்களையும், பன்னாட்டு முதலாளிகள் கொள்ளை அடிக்கிறார்கள். தேவை நாட்டைக் காப்பது. அதற்காக நினைவு தினங்கள் அனைத்தையும் போராட்ட தினங்களாக, வீரர்களுக்கு வீரியம் தரும் எண்ண அலைகளை உருவாக்குவதாக அமைத்திடுவோம். அடிமைத் தனம் எந்த வடிவில் வந்தாலும் முறியடிப்போம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக