மதசார்பின்மையை
பாதுகாக்க வரலாறு கூறும் அனுபவம்
வயிற்றின் அடிப்பகுதியிலும், இதயத்திற்கும்
கீழுமாக மூன்று தோட்டக்கள் துளைத்ததால், காந்தி சரிந்து மடிந்த நாள் ஜனவரி 30. இன்றும்
அவர் முன்வைத்த மதச்சார்பின்மை கோட்பாடு, இந்துத்வா சக்திகளை வன்மம் கொள்ளச் செய்து
வருகிறது. ”தேசப்பிதா என்று காந்தியை அழைக்காதீர்கள்” அலறினார் அத்வானி, இன்றளவும்,
இந்துத்வா சக்திகள் இந்தியாவில் வெற்றி பெறாமைக்குக் காரணம் இடதுசாரிகளும், காந்தியும்
வலியுறுத்திய மதச்சார்பின்மையே ஆகும்.
அடிப்படையில், இந்துமத வழிப்பாட்டை
மேற்கொள்பவர், சதா ராமநாமத்தை உச்சரிப்பவர், என்ற அடையாளங்களைக் கொண்ட காந்தி எப்படி,
மதச்சார்பின்மையின் பிரதிநிதியாக இருக்க முடியும்? என்ற கேள்வி இன்றும் பலரைத் துளைத்து
வருகிறது. ”மதம் ஒரு சொந்த பிரச்சனை, அதற்கு அரசியலில் இடம் இல்லை” என்று அன்றைக்கு
அழுத்தமாக குறிப்பிட்டார் காந்தி.
பாகிஸ்தான் பிரிவினை முழக்கம்
வலுத்த நிலையில் காந்தியைச் சந்தித்த குழுவிடம், ”நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால்,
மதமும், அரசியலும் தனித் தனியாகவே இருக்கும். என் மதத்தின் மேல் உறுதியாக் கூறுகிறேன்.
மதம் எனது சொந்த விவகாரம் அதில் அரசுக்கு எந்தவொரு வேலையும் இல்லை”, என்றார். ஹிந்த்
ஸ்வராஜ் ஏட்டில், ”உலகில் எந்தப் பகுதியிலும் தேசிய இனமும் மதமும் ஒரே வரையறைக்கு உட்பட்டதாக
இல்லை, இந்தியாவிலும் அப்படி ஒருபோதும் இருந்ததில்லை, அதை வலியுறுத்துவதே மதச்சார்பற்ற
நம் போன்றோரின் கடமை” என்றார். பல்வேறு சந்தர்ப்பங்களில் இது போன்ற கருத்துக்களை மக்கள்
மத்தியில் பரவலாகக் கொண்டு சென்றுள்ளார்.
காந்தி வலியுறுத்திய மேற்கண்ட
கருத்துக்கள், இந்து மதம் என்ற பெயரிலும், முஸ்லீம் மதம் என்ற பெயரிலும் அரசியல் செய்தவர்களுக்கு
வெறுப்பைத் தந்தது என்பதில் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை. கோல்வாக்கர், ”கோவிலில் நீ
வழிபடுவதும், உன் தெய்வங்களைத் தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்வதும், முஸ்லீம்களை
எரிச்சலூட்டுமானால், அதைநிறுத்தி விடு, உங்கள் மனைவி, மகள் தூக்கிச் செல்லப் படும்
போது தடுக்காதே, தடுத்தால் வன்முறை என்கிறார்கள்”, என்று காந்தியின் வாசகங்களைக் குத்திக்
காட்டினார். வி.டி. சவர்க்கார்,” இந்தியாவிற்குள் பத்தானியர்கள் ஊடுருவவும், அமீர்
முடிசூடவும் காந்தி அனுமதிப்பார்,” என்றார். மறுபக்கம் முஸ்லீம் லீக் மாநாட்டிலும்,
அலிகார் மாணவர்களிடையேயும் பேசிய ஜின்னா,” இந்து மதத்தைப் புணரமைத்து இந்த நாட்டில்
இந்து ஆட்சியை ஏற்படுத்துவதுதான் அவரது நோக்கம். ஒரு இந்து ஆட்சியின் கீழ் முஸ்லீம்களை
அடக்க வேண்டும் ஒடுக்க வேண்டும், என்பதே திருவாளர் காந்தியின் எதிர்பார்ப்பு”, என்று
குறிப்பிட்டார்.
இந்துஸ்தானை முன் நிறுத்தியவர்களும்,
பாகிஸ்தானை முன் நிறுத்தியவர்களும், ஒரு சேர காந்திக்கு எதிராக களத்தில் நின்றனர்.
இதன் மூலம், காந்தியின் மக்கள் ஒற்றுமை கருத்துக்கள், இந்துத்துவா மற்றும் முஸ்லீம்
லீக்கின் பிரச்சாரங்களைக் கடந்து, மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தது என்பதையும் அறிய
முடியும். எனவே தான் இருதரப்பும் ஒருசேர எதிர்த்து நின்றார்கள். காந்தி வலியுறுத்திய
கோட்பாடுகள், பலநாட்டின் கருத்துக்களைப் போலவே நான்கு அடிப்படை அம்சங்களைக் கொண்டிருந்தது.
1. மதம் அரசியலில் ஊடுருவக் கூடாது. அரசியல், பொருளாதாரம், கல்வி, சமூக வாழ்வின் விரிவான
பகுதிகள், பண்பாடு ஆகியவற்றில் இருந்து மதம் பிரிக்கப் பட்டிருக்க வேண்டும். இவை தனிப்பட்ட
விருப்பம் சார்ந்தது. இந்திய மதச்சார்பின்மை என்ற பெயரில் இதை மறுப்பதானது. மதச்சார்பின்மையையே
மறுப்பதாகும். மதச்சார்பற்ற அரசு என்றால், மதத்தை ஊக்குவிப்பதல்ல.
2. பலமதங்கள் இருக்கும் ஒரு சமூகத்தில்,
மதச்சார்பின்மை என்பது, அனைத்து நம்பிக்கைகள் தொடர்பாகவும் அரசு நடுநிலையைக் கடைப்பிடிக்கும்,
நாத்திகவாதத்திற்கும் அரசு சம்மதிப்பு அளிக்கும் என்பதாகும். 3. மதசார்பின்மை என்பது
அரசு அனைத்து குடிமக்களையும் சமமாக நடத்த வேண்டும். மதத்தின் அடிப்படையில் ஆதரவாகவோ,
எதிர்ப்பாகவோ பாரபட்சம் காட்டக் கூடாது, என்று பொருள் கொள்ள வேண்டும். 4. இந்தியாவில்
காலணியாதிக்கத்திற்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்துகிற ஒரு கோட்பாடாகவும், தேசத்தை உருவாக்குகிற
நடைமுறையின் ஒரு பகுதியாகவும், மதசார்பின்மை என்ற கருத்து உருவானது. அதேநேரத்தில் மக்களை
சமூக மற்றும் அரசியல் ரீதியில் பிளவு படுத்தும் சக்தியாக மதவெறி வாதம் வளர்ந்தது. எனவே
மதவெறிவாதத்திற்கு எதிர்ப்பு வாதமாக, மதச்சார்பின்மை வாதம் முன் நிறுத்தப் பட்டது.
இந்த கோட்பாடுகளில் எந்த இடத்திலும் மதச்சார்பின்மைக்கான செயல் பாட்டாளர்கள் காந்தியுடன்
மாறுபடும் வாய்ப்பு இல்லை.
இந்தக் கருத்துக்களின் விளைவு
தான் இன்றளவும், மதசார்பின்மை என்ற வார்த்தை எட்டிக் காயாக மதவெறி சக்திகளால் கருதப்
படுவதற்குக் காரணம் ஆகும். காந்தி கல்வி நிறுவனங்களில், மதக் கருத்துக்கள் பிரச்சாரம்
செய்யப் படுவதை எதிர்த்தார். 1947 ல் கல்வி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப் பட்ட டாக்டர்.
ஜாகிர் உசைன் காந்தியை சந்தித்த போது, “அரசு மதக் கல்வி வழங்க வேண்டும் என்பதை நான்
ஒப்புக் கொள்ளவில்லை”. மதத்தையும் நெறி முறைகளையும் கலக்காதீர்கள்”, என்றார். இரண்டு
கோடிக்கும் அதிகமான மக்கள் சாகடிக்கப்பட்ட நிலையில், குழந்தைகளும், முதியவர்களும் ஆதரவற்றவர்களாக,
மிகக் கொடிய வறுமைக்கு ஆட்பட்டவர்களாக ஒரே இரவில் மாற்றப் பட்ட நிலையில், மத அடையாளம்
கொண்ட பெண்கள் குழந்தையாக இருந்தாலும், முதியவராக இருந்தாலும், மதவெறியில் பலாத்காரத்திற்கு
ஆளான நிலை என்று, மதவாத வெறி உச்சத்தில் இருந்த 1947 ஆகஸ்ட் மாதத்தில், இந்த கருத்துக்களை
முன்வைத்த காரணத்திற்காகவே காந்தியின் கருத்துக்களைப் பாராட்ட வேண்டும்.
இன்றைய ஆட்சியாளர்களைப் போலவே
நேருவின் ஆட்சியாளர்களும், நடவடிக்கை எடுக்காது வேடிக்கை பார்த்ததை, காந்தியின் கொலையில்
இருந்து அறியலாம். காந்தியை பலமுறை கொல்ல முயற்சித்து இருக்கிறார்கள். குறிப்பாக
1948 ஜனவரி 20 அன்று மாலை பிரார்த்தனைக்குச் செல்லும் போது, மதன்லால் பாவா என்பவரால்,
குண்டு எரிந்து கொல்வதற்கு முயற்சிக்கப் பட்டுள்ளார். அவர் கைது செய்யப் பட்டு பல்வேறு
விசாரணைகள் மூலம் கோட்சே சகோதரர்கள் உள்ளிட்டு அனைவரும் அடையாளம் காணப் பட்ட பின்னரும்
கைது செய்யப் படவில்லை. பிரதமர் பொறுப்பில் இருந்த நேரு அன்றைய உள்துறை அமைச்சர் வல்லபாய்
பட்டேலுக்கு, கடிதம் எழுதி விசாரணை ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கையை வலியுறுத்தி
உள்ளார். விடுதலைப் போரில் முன் நிறுத்தப் பட்ட மனிதன், அதிகாரத்தில் இல்லாத காரணத்தால்
மலிவாகி விட்டாரா? பட்டேலின் மௌனம் பல கேள்விகளை எழுப்புகிறது.
குறிப்பாக இந்தியப் பிரிவினையின்
போது, சகலமும் பாகப் பிரிவினைக்கு உள்ளானது. ரொக்க இருப்பு 400 கோடியில் 75 கோடிதர
வேண்டும் என்ற உடன்பாடு ஏற்பட்டது. அதில் 20 கோடி உடனே தரப் பட்டது, காஷ்மீர் பிரச்சனைத்
தீராததால் மீதம் இருந்த 55 கோடி காலதாமதம் செய்யப் பட்டது. அதை கொடுத்து கணக்குத் தீர்க்க
காந்தி வலியுறுத்தினார். நாட்டில் நடந்த மதகலவரங்களை நிறுத்தவும், 55 கோடியைக் கொடுத்திடவும்
கோரிக்கைகளை வைத்து தனது ஆயுதமான உண்ணாவிரதத்தைத் துவக்கினார். இது நாதுராம் கோட்சேவை
மட்ட்டுமல்ல, ஆட்சியாளர்களையும் வெறுப்பேற்றியிருக்க
வேண்டும். (பாகிஸ்தானுக்கு 55 கோடி தர மறுத்தவர்கள், இன்று லட்சக்கணக்கிலான கோடிகளை
பன்னாட்டு முதலாளிகளுக்கு வாரி இரைப்பது தனிக்கதை)
மதசார்பின்மையில் உறுதியாக இருந்த
காந்தி அப்போது நடந்த கலவரங்களை கட்டு படுத்த முடியாததை உணர்ந்தார். தன்னிடம் பிரத்யேக
ஆயுதம் இல்லாததை தெரிந்து கொண்டார்.. காரணம் அவரின் அரசியல் தத்துவமற்ற கோட்பாடாக இருந்தது.
மதவெறிக்கு எதிரான கோட்பாடுகள் ஒரு தத்துவப் பிடிப்பு கொண்ட மக்கள் பிரிவினரால் வலியுறுத்தப்
படவேண்டும் என்பது அவரால் முன்னிறுத்தப் படவில்லை. இதன் விளைவு தான் காந்தி பிறந்த
குஜராத்தில், மதவெறி சக்திகள் மீண்டும் வெற்றி பெற்று இருப்பதாகும். காந்தியை நினைவு
கூர்வோம், அவரின் மதசார்பின்மையைப் பாராட்டுவோம். ஆனால் அது அதிகாரப் பசிக்குமுன் தோற்றுப்
போனதன் அனுபவத்தில் இருந்து, தத்துவத்தின் அடிப்படையில், தொழிலாளி வர்க்க அரசியலுடன்
முன்னிறுத்துவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக