சனி, 8 மார்ச், 2014

இளைஞர் முழக்கத்தில் இருந்து


வணிகம் மற்றும் தொழில் காலணிக்காகவா? – நவகாலணிக்காகவா?
”வல்லான் வகுத்ததே வழி” என்ற முதுமொழி உழைப்பில் சிறந்தவன் வழிகளை உருவாக்குவான் எனபதை குறிப்பிடுவதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இன்றைய நிலையில் ஆதிக்கம் செலுத்துவதில் வல்லவனாக உள்ளவன் ஏற்கனவே உள்ள வழிகளுக்கு கப்பம் வசூல் செய்து தனது வருவாயை மேம்படுத்திக் கொள்பவன் என்பதை நினைவில் நிறுத்துவது நல்லது. வணிகம் மற்றும் தொழில் ஆகியவற்றை இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டிய தேவை முன்னெழுந்துள்ளது. எல்லாக் காலங்களிலும் வணிகம் இருந்துள்ளது. அநேகமாக 2000 ஆண்டுகள் வரலாறு கொண்டதாக, பல நாடுகளுக்கிடையிலான வணிகம் இருந்துள்ளது. பூம்புகார், தூத்துக்குடி, தொண்டி, முசிறி என்று அன்றைய தமிழக மன்னர்களின் துறைமுகத்தையும் அங்கு நடைபெற்ற வணிகத்தையும், கற்றுத் தரும் வகையில், பள்ளிப் பாடங்களில் அமைந்துள்ளது.

கடாரம் கொண்டான், இலங்கை வென்றான் என்று நாம் மணப்பாடம் செய்கிற வரலாற்றில், வணிகத்தின் மூலம் ஆதிக்கம் என்பது இல்லை. அரசியல் மற்றும் அதிகாரம் சார்ந்த ஆதிக்கம் இருந்ததால், வணிகத்தின் மேலான ஆதிக்கமும் நிலைநாட்டப் பட்டு இருக்கலாம். ஆனால் வரலாறு அது குறித்து பெரும் விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கவில்லை. உபரி என்பது, நில உற்பத்தியில் அதிகமாகிறபோது, வணிகம் வளர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பண்டமாற்று முறையில் துவங்கி இன்று நாடுகளைக் கைப்பற்றுகிற வலிமையுடன் வணிகம் வளர்ந்துள்ளது, என்பதில் இருந்தே உலகமயமாக்கல் மற்றும் அதன் தாக்கம் குறித்து விவாதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தேவைக்கு அதிகமாக கையில் எஞ்சியதை விற்று தனக்கு தேவையானதை பெற்றுக் கொள்வதற்கு, வணிக விதிகள் தேவைப் பட்டிருக்க வில்லை. நியாயம், நேர்மை என்ற குணங்கள் மட்டுமே தேவைப் பட்டது. ஆனால் இன்று உபரியை உருவாக்கும் நோக்கத்துடன் பெரும் தொழிற்கூடங்கள் உருவாக்கப் படுகின்றன. பொதுவுடமை தத்துவத்தின் தந்தை, காரல் மார்க்ஸ், “உபரி அதிகரிக்க அதிகரிக்க மனிதன் மீதான சுரண்டல் அதிகரிக்கிறது. அது அடிப்படைக் கட்டமைப்புகளையும், கடமைகளையும் கூட விட்டு வைக்காது. அனைத்தையும் வணிகமயமாக்கும்” என்று குறிப்பிட்டதை உறுதிப்படுத்துவதாக இன்றைய வணிகம் மாறியுள்ளது.

உலகமயமாக்கல் குணத்தோடு கூடிய வணிகம் 400 ஆண்டுகளுக்கும் மேலாகவே நடைபெற்று வருகிறது. வணிகம் நாடுகளை காலணி நாடுகளாக மாற்றிய காலத்தில்,  வணிகர்களிடையே ஏற்பட்ட மோதல்கள், சில சமரசத்தை சமரசங்களை உருவாக்கிக் கொள்ளும் நோக்கத்துடன், தங்களுக்கான எல்லையை பங்கிட்டுக் கொள்ளும் விதிகள் உருவாக்கப் பட்டது. அதனால் தான் இந்தியாவின் மேற்குக் கரையில் கோழிக்கோடு நகரத்தில் நுழைந்த வாஸ்கோடகாமா, என்ற போர்ச்சுகீசிய மாலுமியும் அதன் பின் வந்த போர்ச்சுகீசிய வணிகர்களும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கை மேலோங்குகிற போது கோவா வுடன் சுருக்கிக் கொண்டனர். இது தங்களுக்கிடையிலான எல்லைப் பங்கீடு சார்ந்தது, இதற்கு பொது விதிகள் உருவாக்கப் படவில்லை. ஆனால் பங்கீடு செய்து கொள்ளும் லாபவெறி இருந்தது..

இந்தியாவிற்குள் கிழக்கிந்தியக் கம்பெனி நுழைந்து வணிகத்தில் ஆதிக்கம் செலுத்துகிற போது, பிரிட்டிஷ் அரசு, பூமிபந்தின் கிழக்கு பகுதி மொத்தத்திற்கும் வணிகம் செய்யும் அதிகாரத்தை வழங்கியது மட்டுமல்லாமல், பிரிட்டிஷைச் சார்ந்த வேறு நிறுவனங்கள், கிழக்கு நாடுகளுக்கு வணிகம் செய்ய தடையும் விதித்து உள்ளனர். இது புது தகவலாக இருந்தாலும், முதலாளித்துவ வளர்ச்சியில் அரசு எப்படி குறிப்பிட்ட சிலரின் வளர்ச்சிக்கு உதவி செய்துள்ளது என்பதை அறிய முடியும். அதாவது போட்டியே இல்லாமல் செய்த வணிகம் செய்யும் உரிமையை அரசு ஏற்படுத்தித் தந்துள்ளது. குறைந்த விலையில் வாங்கி மிக அதிக லாபத்தில் சரக்குகளை விற்று கொள்ளை லாபம் ஈட்ட அரசுகள் துணை புரிந்துள்ளன. இத்தகைய எழுதப் படாத சட்டங்களே ஏகபோகத்தை வளர்த்து விட்டுள்ளது.

1696ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியினர் வங்காளத்தின் ஹூக்ளி நதிக்கரையில் முதல் தொழிற் சாலையை உருவாக்கி உள்ளனர். அதோடு கூடவே சேர்ந்து பொருள்களுக்கான சேமிப்புக் கிடங்குகளும் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து படிப்படியாக வளர்ந்த கிழக்கிந்தியக் கம்பெனி, அவுரங்க சீப் அரசிடம் இருந்து, வரிசெலுத்தாமல் விற்பனைகளை விரிவாக்கம் செய்து கொள்வதற்கான உத்தரவையும் பெற்றுள்ளது. அப்போதே இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்ற ஏற்பாடுகள் விதைக்கப் பட்டுள்ளன.

உலகப் போர்களின் அடிப்படையும் வணிகம் மற்றும் மேலாதிக்கமே ஆகும். இரண்டாம் உலகப் போருக்குப் பின், இனி வரும் காலங்களில் வர்த்தகத்திற்கான பேரத்தில் யுத்தங்கள் தவிர்க்கப் படவேண்டும் என்பதற்காகவும், மேலாதிக்கம் செலுத்தும் நாடுகளிடையே இதர நாடுகளின் சந்தையைப் பங்கிட்டுக் கொள்வதற்காகவும் உருவாக்கப் பட்டதே உலகவங்கி, சர்வ தேச நிதி நிறுவனம், வர்த்தகம் மற்றும் வரிகள் குறித்த பொது உடன்பாடு (GATT) ஆகியவை ஆகும்.   

அது இன்று WTO, என்ற பெயர் தாங்கி நிற்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. எல்லாக் காலங்களிலும் வல்லானுக்கு உகந்த வகையில் மட்டுமே விதிகள் அமைக்கப் பட்டுள்ளன, என்பது முதலாளித்துவத்தின் பொது விதியாகப் புரிந்து கொள்ள முடியும். இதில் இருந்தே இன்றைய உலகமயமாக்கல் மற்றும் அதன் தாக்கம் குறித்துப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதாவது உற்பத்திப் பொருள்களை வணிகம் செயவது என்ற நிலையைக் கடந்து சேவை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளையும் வணிகப் பொருள்களாக மாற்றுவதற்கு WTO உடன்பாடுகளை வளர்ந்த நாடுகள் பயன்படுத்துகின்றன.

உபரி உற்பத்தியை விற்பனைக்கு எடுத்து வந்த நிலை மாறி, வணிகச் சந்தையை கைப்பற்றி, பின் சந்தை இருக்கும் இடத்தில் உற்பத்தி செய்வது, மிக மிகக் கூடுதல் உபரியை அல்லது லாபத்தை ஈட்டுவது என்ற முதலாளித்துவ மந்திரம் மாறிக் கொண்டே செல்கிறது. அதாவது லாபம் அதிகரித்து பங்குச் சந்தை ஆக்கிரமிப்பு, நிதிமூலதனம் மூலம் நாடுகளின் பொது சொத்துகளைக் கைப்பற்றுதல் ஆகியவை இன்றைய உலகமயமாக்கலின் துவக்க காலமான 1990களில் இருந்தது. 1994ல் WTO வின் விதிகள் மூலம் சேவைத்துறைகளையும் விட்டு வைக்காமல், வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாக வளரும் நாடுகளைக் கட்டுப்படுத்துகிற பல்வேறு விதமான வர்த்தகங்களுக்குத் திட்டமிடப் பட்டது. குறிப்பாக கல்வி, சுகாதாரம், மருந்து பொருள்கள் போன்ற மிக முக்கியமான பொருள்களின் விற்பனையையும் WTO ஒப்பந்தக்களுக்குள் அடக்கினர். இதற்கு சர்வ தேசத் தரம் என்ற வார்த்தையை அதிகமாக பிரயோகம் செய்தனர். உள்நாட்டு உற்பத்தியில் தரக் குறைவு இருந்தால் அதை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்குவதற்கு மாறாக, அந்த உற்பத்தியையும், நுகர்வோர் சந்தையையும் கைப்பற்றும் நோக்கம் கொண்டதாகவே வணிகத்திற்கான விதிகளை வளர்ந்த நாடுகள் அல்லது WTO உருவாக்கி வைத்துள்ளன.

வால்மார்ட் மற்றும் மெகா மால்களின் அணிவகுப்பு இந்தப் பின்னணியில் தான் உருவாக்கப் படுகிறது. காரல் மார்க்ஸ் மூலதனம் குறித்து குறிப்பிடுகிற போது, முதலாளித்துவம் தனது உற்பத்தியை மற்ற உற்பத்தியாளர்களுடன் போட்டியிடச் செய்வதற்கு சில யுக்திகளைக் கையாளுகிறது. ஒன்று தரமான உற்பத்தி மற்றும் அதிகமான உற்பத்தி ஆகியவற்றின் மூலம் போட்டியை எதிர் கொள்ள முடியும் என்பதனால், உற்பத்தி சக்திகளை இயந்திரமயமாக்குகிறது. இது ஆட்குறைப்பை உருவாக்கி, திறனற்ற தொழிலாளர் அல்லது முறைசாராத் தொழிலாளர் எண்ணிக்கையை அதிகப் படுத்தும். இரண்டாவது இயந்திரமயமாதல் காரணமாக தரமான பொருள் குறைந்த விலையில் கிடைக்கிறது, இது சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களை அழித்து அந்தத் தொழிலில் இருந்து அகற்றி விடும்” எனக் குறிப்பிட்டதை இன்றைய இந்திய நிலையில் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

இப்போது WTO ஒப்பந்தங்கள் என்பது நவகாலணியாதிக்கம் என்று அழைக்கப் படுவது இந்தப் பின்னணியில் தான். அன்றைய அவுரங்கசீப், வரி விலக்கு அளித்து சந்தையைப் பிரிட்டிஷ் கம்பெனிக்கு தாரைவார்த்தார் என்றால் இன்றைய மத்திய அரசும், மாநில அரசுகளும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும் உலக பெரும் பணக்காரர்களுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் தாரை வார்த்து வருகின்றனர். அன்று காலணியாதிக்கம் இன்று நவகாலணியாதிக்கம். அன்று மான்செஸ்டருக்கான மூலப்பொருள்கள் விலைவிக்கும் இடம் மற்றும் இந்தியாவில் பஞ்சாலைகள் என்பதாக இருந்தது. இன்று இந்திய நுகர்வோர் சந்தையை கைப்பற்றுவது அதற்காக ஸ்டிக்கர் பொட்டு, சிப்ஸ் போன்றவற்றிற்கும் பன்னாட்டு நிறுவனங்களை வரவேற்பது என மாறி உள்ளது. கார், செல்போன் உற்பத்திகளை அதிகரித்து சந்தையை கைப்பற்றுவது. அன்று ஒரு கம்பெனி இன்று பல ஆயிரம் கம்பெனி. அன்று உப்புக்கு வரி மட்டும் தான் விதித்தார்கள் இன்று உப்பைக்கூட வால்மார்ட்டில் தான் வாங்க வேண்டும் என்கிறார்கள். அன்று அவர்களின் நிர்வாகத்திற்கு தேவைப்பட்ட கிளர்க்குகளை உருவாக்க கல்வியை இலவசமாகக் கொடுத்தார்கள், இன்று கல்வி வணிகப் பொருளானதால் அந்நியப் பல்கலைக் கழகம் என சட்டம் உருவாக்குகிறார்கள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.


 எனவே இன்றைய உலகமயமாக்கல் சூழலில் வணிகம் மற்றும் தொழில் என்பது ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்தது அல்ல. ஒட்டு மொத்த வாழ்க்கையை அபகரிப்பதுடன் இணைந்தது. இதில் காங்கிரஸ் பா.ஜ.க என்ற வேறுபாடுகள் இல்லை. முதலாளித்துவ கட்சிகளாக உள்ள பெரும்பாலான மாநிலக் கட்சிகளும் இந்த கொள்கையை பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பவர்களே. குஜராத் வளர்ச்சி மோடியின் அணுகுமுறை ஆகியவை மேற்குறிட்டவற்றைக் கடந்த எதுவும் இல்லை. பாஜக ஆட்சி செய்யும் குஜராத்தின், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மோடியின் மூதாதையர் அவுரங்க சீப் என்பதை இன்றைய தலைமுறை மறக்கலாகாது. இதில் மதம் சார்ந்த அணுகுமுறை எதுவும் இல்லை. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ன் மன்னர் போலவே மோடியும் அமெரிக்காவுக்கு வேண்டியவர். கொள்கை மாற்றம் மட்டுமே காலணியாதிக்கம் மற்றும் நவகாலணியாதிக்கம் ஆகிய அடிமை சிந்தனைகளில் இருந்து நம்மை விடுவிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக