கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தியாவில் நூறாண்டுகளாக, ஆளும்வர்க்க எதிர்ப்பு அரசியலுடன், செயல் பட்டுவருவது போராட்டத்தின் வெற்றி தான். ஒரு அரசியல் இயக்கம் போல் அல்ல. ஆனால் பட்டியலிட முடியாத அளவிற்கு சமூகத்தில் சாதனைகளைப் படைத்துள்ளது. சமூக மாற்றத்திற்கான போராட்டத்தை, தற்போதைய சமூக அமைப்பின் சீரழிவுகளை அம்பலப்படுத்திக் கொண்டு, வாழ்வாதாரம், சமூக உரிமை ஆகியவற்றை பாதுகாக்கவும், முன்னேற்றம் காணவும் போராடி கொண்டிருக்கும் இயக்கம். பாட்டாளிவர்க்கம் என அழைக்கப்படும், உடைமை அற்ற பெரும்பான்மையோரின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த போராடுவதே, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செயல் திட்டமாக அமைந்திருக்கிறது. வாழ்வாதார முன்னேற்றத்தில், தொழில் வளர்ச்சி முக்கியமான வினைபுரிகிறது.
தொழில் வளர்ச்சி தானாக உருவாகவில்லை. நடைமுறை சமூகத்தின் அவலங்கள், அதற்கு எதிரான போராட்டங்கள், சந்தை விரிவாக்கம் ஆகிய காரணங்கள் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிடுகின்றன. அந்த வகையில், கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாவதற்கு முந்தைய இந்தியாவின் நிலை, கம்யூனிஸ்ட் இயக்கம் உருவான பின் 1947 வரை, 1947 க்கு பின் என மூன்று கட்டங்களாக இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் தொழில் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கினை விவாதிக்க முடியும்.
கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாவதற்கு முந்தைய நிலை:
முதலில் இந்தியா ஒரு நாடாக இல்லை. சமஸ்தானங்களாக பல ஆட்சிப் பிரிவுகளுக்கு ஆட்பட்டு இருந்தது. ஒரு மொழிக்குள்ளும் பல்வேறு சமஸ்தானம், சில மொழிகள் இணைந்து ஒரு சமஸ்தானம் என்ற வகையில் ஆட்சிகள் இருந்தது. விவசாயம், கைவினைஞர்களின் உற்பத்தி ஆகியவை மட்டுமே தொழில். மன்னர்களுக்கு விவசாயிகள் 4 ல் ஒரு பகுதி விளைச்சலை அல்லது 6 ல் ஒரு பகுதி விளைச்சலை வரியாக செலுத்திட வேண்டும். மன்னர்கள் சுக வாழ்க்கையுடன் விவசாயிகளுக்கான பாசன வசதிகளை உறுதிசெய்யவும், இந்த வரியில் சிறு பகுதியை செலவிட்டதை அறிய முடிகிறது. இந்த மன்னராட்சி நடைமுறையை அந்நிய படையெடுப்பின் மூலம் ஆட்சி செய்த முகலாயர்களும் பின்பற்றினர். ஏனென்றால் அவர்கள் இந்திய மண்ணிலேயே, தங்கி விட்டனர்.
15 ம்நூற்றாண்டு துவங்கி இந்தியா வரத்துவங்கிய மேற்கத்திய கம்பெனிகள் அல்லது ஐரோப்பாவின் மாலுமிகள் மற்றும் வணிகர்கள், வணிக ஏற்பாடுகளுடன், கிடங்குகள் அமைக்கும் ஏற்பாடுகளையும் உறுதிசெய்தனர். வணிக ஆதிக்கம் ஆட்சியின் ஆதிக்கமாக வளர்ந்த விவரங்கள் நாம் அறிந்ததே. பிளாசி யுத்தம் 1757 ல் நடந்து ராபர்ட் கிளைவ் வென்றது துவங்கி பல மாற்றங்கள் ஏற்பட்டது. 1757 க்கு பிந்தைய இங்கிலாந்தின் செல்வம் பிரமிக்கதக்கது 1760 வரை இங்கிலாந்தில் ஜவுளி உற்பத்திக்கு பயன்பட்ட இயந்திரங்கள் அன்றைய இந்தியாவில் இருந்த தன்மையிலேயே இருந்தது. ஆனால் இந்தியாவில் இருந்து ஆற்றோட்டம் போல் வந்து இங்கிலாந்தில் குவிந்த செல்வம், இயந்திரப் புரட்சிக்கு வழிவகுத்ததாக ரஜினி பாமிதத் இன்றைய இந்தியா (பக் 161-163) நூலில் விவரிக்கிறார்.
இதில் கவனிக்க வேண்டியது, முகலாயர்கள் போல் அல்லாமல், பிரிட்டிஷார் இந்தியாவில் இருந்து செல்வத்தை தங்கள் நாட்டிற்கு மொத்தமாக வாரி சுருட்டி சென்றனர் என்பதாகும். இதன் காரணமாக இந்தியாவின் கட்டமைப்பான ஏரி, குளம் பராமரிப்பு பலவீனமானது. இரண்டாவதாக இங்கிலாந்தில் வளர்ந்த இயந்திரப் புரட்சி காரணமாக, இந்திய நுகர்வோர் சந்தையை பிரிட்டிஷார் கைப்பற்றினர். அதுவரை இருந்த கைவினைஞர்கள் தொழிலை இழக்கும் கொடுமை அரங்கேறியது. விவசாயம் மற்றும் கைத்தொழில் போன்றவை அழியும் நிலையில் பஞ்சம் தலை விரித்தாடியது. 1800-1825 காலத்தில் 10 லட்சம் பேர் பட்டினிச்சாவை சந்தித்தனர். 1875 - 1900 காலத்தில் 1.5 கோடிப்பேர் பட்டினிச்சாவை சந்தித்தனர். மொத்தத்தில் 19 ம் நூற்றாண்டில், 2.15 கோடிப்பேர் பட்டினி சாவிற்கு ஆளானதை அறிய முடிகிறது. (இன்றைய இந்தியா)
இந்தியாவில் முதல் விடுதலை போர் என்ற, மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் கட்டுரைகளின் தொகுப்பு நமக்கான புரிதலை விசாலமாக்குகிறது. அதாவது, “இந்தியாவிலும், சீனாவிலும் இருந்த தந்தை வழி உறவுகளும் படைமானிய உறவுகளும் ஒழிந்து முதலாளித்துவ வளர்ச்சி படிப்படியாக உருவானதால் மாறுதல்கள் நிகழ்ந்தன. 1857 புரட்சிக்கான காரணங்கள் மன்னர்களுக்கு இருந்த அதிருப்தி ஒருபுறம். மற்றொரு புறம், பிரிட்டிஷ் பருத்தி ஆடைகள் இந்திய சந்தையில் குவிக்கப்பட்டன. இது கைநெசவு மற்றும் பல்வேறு கைவினை தொழில்களை அழித்தது”, என பதிவு செய்துள்ளனர். அதேபோல் பிரிட்டிஷாரின் ஜமீன்தாரி, ரயத்வாரி வரி விதிப்பிலும், ஏகாதிபத்தியத்தின் தீவிர கொள்ளை காரணமாகவும் இந்திய விவசாயிகள் சித்திரவதைக்கு ஆளாகினர், எனவும் மார்க்ஸ் கூறுகிறார்.
இந்த பின்னணியில் நடந்த 1857 விடுதலைப் போர் தோல்வியடைந்தது. இருந்தாலும் அடுத்தடுத்த நிகழ்வு போக்குகள் இந்தியாவின் வறுமை ஒழிப்பு அல்லது பட்டினி சாவு குறித்த விவாதத்தை தூண்டியது. இந்தியாவில் மக்கள் குவியல் குவியலாக பட்டினிச்சாவை சந்திக்க, முதல் காரணம் விவசாயத்தை மட்டுமே நம்பியிருப்பது, இரண்டாவது மக்கள் தொகை அபரிமிதமாக வளர்ந்தது, மூன்றாவதாக தொழில் வளர்ச்சி ஏற்படாதது என பிரிட்டிஷார் முன்வைத்தனர். இந்தியாவில் படித்து அரசியல் பணியில் ஈடுபட்ட, தேசிய தலைவர்கள் தாதாபாய் நௌரோஜி, ராணடே போன்றோரில் ஒரு பகுதி, பிரிட்டிஷாரின் வாதத்தை ஏற்கவும், மற்றொரு பகுதியினர் எதிர்க்கவும் செய்தனர். விவாதத்தில் எதிர்கருத்துக்கள் இருந்தாலும் தொழில் வளர்ச்சி என்பது, அனைவருக்கும் ஏற்புடையதாகஇருந்தது. அன்றைக்கு தொழில் எனக் குறிப்பிட்டால் பஞ்சாலையே பிரதானமாக இருந்தது. வேலைவாய்ப்பிற்கு அந்நிய மூலதனம் தவிர்க்க முடியாததது என்ற வாதமும் அன்று உருவாகியுள்ளது (பிபின் சந்திரா வின், இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் வளர்ச்சியும், தோற்றமும்). இந்திய முதலாளிகள் சிலரும் கவனம் செலுத்தினர், பிரிட்டிஷாரும் ஆதிக்கம் செலுத்தினர்.
இந்திய முதலாளிகள் பிரிட்டிஷார் செய்த முதலீட்டுடன் போட்டியிடுவதில் சிரமத்தை சந்தித்தனர். அந்நிய முதலீடுகளுக்கு இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் ஏராளமான கடன், வரி தள்ளுபடி, நிலம் குத்தகை, போன்ற சலுகைகள் தருவது போல், அன்றைக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது. இன்றைய நவ காலனியாதிக்க நடைமுறை, அன்றைய காலனியாதிக்க பழக்கதின் தொடர்ச்சியாக பார்க்க வேண்டியுள்ளது. அரசாங்க கடன் வழங்குதல், தோட்டம், வெளிநாட்டு வர்த்தகம் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்திய அந்நிய முதலீடு, சணல், கம்பளி, பட்டு ஆடைகள், காகிதம், சர்க்கரை, இரும்பு, பித்தளை வார்ப்பு ஆகியவற்றிலும் கோலோச்சியது. இதன் காரணமாக அந்நிய முதலீடு தவிர்க்க முடியாது, இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு அவசியம் என வாதிட்டோரும், இந்திய முதலாளிகளின் தொழில் பாதிப்பு குறித்து அங்கலாய்த்தனர். குறிப்பாக அந்நிய முதலீடு தேவையில்லை என்ற வாதம் அதிகரித்தது.
இந்த பின்னணியில் தான் இந்திய விடுதலைப் போர் மன்னர்கள் மற்றும் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக இருந்த நிலை, இந்திய முதலாளிகள் மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்ட வடிவம் பெற்றது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் உருவான வளர்ச்சியும், படித்த இளைஞர்கள் உலக அரசியல் போக்குகளை புரிந்து கொண்டதும், இளைஞர்களிடையே அரசியல் போராட்டத்தில் பங்கேற்கும் ஆர்வத்தை அதிகரித்தது. இந்த சூழல் சுதேசி முழக்கத்தை 1905 ல் முன் வைத்து, போராட்ட களம் சூடேற காரணமாக அமைந்தது. தமிழகத்திலும், சுதேசி கப்பல், கோரல் மில் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் மற்றும் ஒப்பந்தம் இவை பிரதான இயக்கங்களாக மாறியதும், வ.உ.சி போன்ற தலைவர்கள் எழுச்சி பெற்றதும், இந்த பின்னணியில் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இ.எம்.எஸ் எழுதிய, இந்திய விடுதலை போராட்ட வரலாறு நூல், பின்வருமாறு கூறுகிறது. “ 1857 முதல் விடுதலை போர் மற்றும், முதல் உலகப் போர் நடந்த காலத்தில் நடந்த சில கலகங்களும் தோல்வியில் முடிந்தன. இவை இரண்டும் சில வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. குறிப்பாக முதல் உலகப்போருக்கு முந்தைய நிலை, சுதேசி முழக்கம் காரணமாக இந்திய முதலாளி வர்க்கம் முன்னர் இல்லாத வளர்ச்சியை பதிவு செய்தனர். பஞ்சாலை, இலகு ரக தொழில்களுடன் நிறுத்துக் கொள்ளாமல் கனரக உற்பத்தி தொழில்களிலும் ஈடுபட துவங்கினர். டாடா, எஃகு ஆலையை நிறுவினார். ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தப்படியாக இந்த ஆலை அமைந்தது. உலக யுத்தம் துவங்கிய பின், பிரிட்டிஷார் இந்திய முதலாளிகள் தொழில் துவங்க கையாண்ட தடை முயற்சிகளை கை விட்டனர்”, என மேற்படி நூல் தெளிவுபடுத்துகிறது (பக்கம் 237). மொத்தத்தில் இந்திய தொழில் வளர்ச்சி பெரும் உற்பத்தி, கனரக தொழிலில் கால் பதிக்க பெரும் போராட்டம் தேவைப் பட்டுள்ளது, என்பதை புரிந்து கொள்ள முடியும்.
1850 முதல் 1947 வரை இந்திய தொழில் வளர்ச்சியில் மூன்று தன்மைகள் என்ற கட்டுரையில், ஜிஜ்ஸ்பெர்ட் ஆங்க் (Ginsbert Oonk - Industrialisation in India 1850-1947, Three Variations in the emergence of Indigenous Industrialists) என்பவர், கொல்கத்தாவை மையப்படுத்தி, மார்வார் பிராந்திய முதலாளிகளை ஈடுபடுத்தி, சணல் ஆலை மற்றும் சார்பு துறைகளிலும், மும்பையை மையப்படுத்தி பார்சி இனத்தவரை பயன்படுத்தி பஞ்சாலை தொழில்களிலும், அகமதாபாத் பகுதியில் இதர இந்து பிரிவினரை பயன்படுத்தி, பஞ்சாலை மற்றும் வங்கி தொழிலிலும் விரிவாக்கம் செய்ய பிரிட்டிஷ் ஆட்சி துணை நின்றது எனக் கூறுகிறார். இவை இந்திய முதலாளித்துவ வளர்ச்சிக்கு துணைபுரிந்துள்ள நிலைமைகளை புரிந்து கொள்ள முடிகிறது.
கம்யூனிஸ்ட் கட்சி உருவான பின்னர் 1947 வரை:
இ.எம்.எஸ் குறிப்பிட்டதைப் போல் இந்தியாவில் 1907 ம் ஆண்டில் சூரத் நகரில் நடைபெற்ற இந்தியதேசிய காங்கிரஸ் மாநாட்டில், விவசாயிகள் மற்றும் தொழிலாளர் பிரச்சனைகள் தவிர்க்க முடியாத ஒன்றாக விவாதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னரே திலகர் தலைமையில் மும்பையில் நடந்த போராட்டங்களும், வ.உ.சி. தலைமையில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்களும் தீவிரம் பெற்றன.
1900ம் ஆண்டில், பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்கள் 1360, அதுவே 1907ம் ஆண்டில் 2661 ஆக உயர்வு பெற்றது (working Class of India - Sukomalsen) இந்த உயர்வு தொழிலாளர்கள் மீதான சுரண்டலிலும் பிரதிபலித்தது. எனவே சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களும் தீவிரம் பெற்றது. ரயில்வே, போர்ட், பஞ்சாலை,என்ஜினியரிங் ஆகிய தொழில்களில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தங்கள் மீதான சுரண்டலுக்கு எதிரான வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தூத்துகுடி, மதுரை, சென்னை உள்ளிட்டு கராச்சி வரையிலும் இந்தியாவின் அனைத்து பெரு நகரங்களிலும் வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன. 1917 காலத்தில் சென்னையில் மட்டும் 16 வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன. இந்தியா முழுவதும் 1920 ல் 110 வேலைநிறுத்தங்களில் 24.75 லட்சம் தொழிலாளர்கள் பங்கெடுத்துள்ளனர். சென்னையில் மெட்ராஸ் லேபர் யூனியன் 1918 ல் முதல் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கமாக உருவெடுத்தது.
இதற்கு முன்னதாகவே, சதிஷ் சந்திர முகர்ஜி என்பவர், டான் பத்திரிக்கையில், இந்திய தொழிலாளர்களின் நிலை, அவர்கள் தங்களுக்குள் ஒன்று சேர்ந்து தொழிலாளர் அமைப்புகளை உருவாக்காமல், தங்கள் வாழ்வை மேம்படுத்தவோ, உரிமைகள் பெறவோ வாய்ப்பில்லை, என எழுதியுள்ளார். இதற்கு பிரடெரிக் எங்கெல்ஸ் எழுதிய இங்கிலாந்தில் தொழிலாளர் நிலை கட்டுரையை கோடிட்டு காட்டியுள்ளார். இந்த பின்னணியில் இருந்தே நாடு தழுவிய மத்தியத் தொழிற்சங்கம் AITUC 1920 அக்டோபர் 31 ல் உருவானது. 1920 அக்டோபர் 17 அன்று தாஷ்கண்ட் நகரில், 7 பேர் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை உருவானது. அது இந்தியாவின் விடுதலை குறித்து விவாதித்தது. அதற்கு முந்தைய ரஷ்ய புரட்சி இந்தியாவில் இருந்த படித்த இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. கம்யுனிச சித்தாந்தம், பேசும் பொருளாக இந்திய அரசியலிலும், விடுதலை போராட்டத்திலும், தொழிலாளர் உரிமைகள் கோரும் போராட்டங்களிலும் பிரதிபலித்ததையும் பார்க்க முடிகிறது.
திலகருடன் மிக நெருக்கமாக போராட்டங்களில் பங்கெடுத்தவரும், பம்பாய் நகரின் மேயராக பின்னர் தேர்வு செய்யப்பட்டவருமான, ஜோசப் பாப்டிஸ்ட்டா, AITUC மாநாட்டிற்கான வரவேற்பு குழு தலைவராக ஆற்றிய உரையில், “தொழிலாளர்கள் விற்கும் உழைப்பு சக்தியை அபரிமிதமாக உறிஞ்சும் முதலாளி வர்க்கம் அதிகமான லாபத்தை சம்பாதிக்கிறது” என மார்க்ஸ் கூறியது போல் பேசியுள்ளார். இந்த மாநாட்டில் தலைவராக தேர்வான அன்றைய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர், லாலா லஜபதி ராய் தனது உரையில், சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து பேசியதுடன், அமைப்பு ரீதியில் ஆலைகளில் பணியாற்றி வரும் இந்திய தொழிலாளர்களும், உண்மையான மாற்றத்திற்கான போராட்டத்தை நடத்துவது தவிர்க்க முடியாது என குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் 101 பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்கள் தங்களை AITUC உடன் இணைத்து கொண்டன. பின் வந்த ஆண்டுகளில் ம. சிங்காரவேலர் உள்ளிட்டோர் ஆலோசனை குழுவில் இடம்பெற்று வழிநடத்தியதாக கூறப்படுகிறது. சென்னையில் 1923 ல் மே தின கொடி ஏற்றியது. தொழிலாளி விவசாயி கெஜட் வெளியிட்டது, எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகள் கொண்ட பிரகடனம் ஆகியவை ஆலோசனை குழுவில் சேர்க்கப்பட்டதற்கான பின்புலமாகும்.
கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கம், மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் லாகூர் ஆகிய இடங்களிலும் குழுக்களாக கம்யூனிஸ்ட்டுகள் செயல்படும் சூழலை உருவாக்கியது. 1922 ல் கயாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெயரில் தெளிவான திட்டம் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. பூரண சுயராஜ்யம் துவங்கி 13 அம்சங்கள் இடம் பெற்று இருந்தது. குறிப்பாக மூன்றாவது அம்சமான, நிலபிரபுத்துவத்தை அழித்து, நவீன விவசாய மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு பாடுபடுவது, எட்டு மணி நேர வேலை, குறைந்த பட்ச கூலி ஆகிய உத்திரவாதமான ஏற்பாடுகளையும், வேலை நிறுத்தம் செய்யும் உரிமையும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும், போன்றவை இடம் பெற்று இருந்தது. அதாவது தொழில் வளர்ச்சி என்பது தொழிலாளர்களுக்கான உரிமைகள் மற்றும் முன்னேற்றத்துடன் கூடியது என்பதை, மேற்படி செயல் திட்டம் விளக்கமாக கூறியிருந்தது.
இத்தகைய சூழலில் தங்களை தற்காத்துக் கொள்ள இந்திய தொழிலாளி வர்க்கம் நடத்திய போராட்டங்கள் இந்திய தொழிற்சங்க சட்டம் என்பதை 1926 ல் உருவாக்கியது. இதன் பின்னணியில் 1921 ல் லண்டன் நகரில் செயல்படடு வந்த இந்தியாவினுடைய தொழிலாளர் நலக்குழு மூலமும், பிரிட்டிஷ் தொழிற்சங்கம் மூலமும், அதில் செயல்பட்ட கம்யூனிஸ்ட் சக்லத்வாலா போன்றோரின் முயற்சியாலும் பிரிட்டிஷ் அரசுக்கு நிர்பந்தம் அளிக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசு 1926 ல் தொழிற்சங்க சட்டத்திற்கு அனுமதி அளித்த கையுடன் மீரட் சதி வழக்கில் கம்யூனிஸ்ட்டுகள் மீது சதி வழக்கு பதிவு செய்து செயல் பாட்டை முடக்கவும் செய்தது.
இந்திய விடுதலைப்போரில், மன்னர்கள், தேசிய முதலாளிகள் ஆகியோரின் பங்களிப்பில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பங்களிப்பாக மாறும் நிலை படிப்படியாக உருவானதை காண முடிகிறது. 1921 ல் மக்கள் தொகை 30.18 கோடியாக இருந்தது, 1931 ல், 30.52 கோடியாக உயர்ந்தது. கிராமங்களில் இருந்த சூழல் வேலைவாய்ப்பை அதிகரிப்பதாக இல்லை. தொழில் வளர்ச்சி உருவான பகுதிகளை நோக்கிய இடம் பெயர்தல் அதிகரிக்க இந்த சூழல் நிர்பந்தம் அளித்தது. இந்தியத் தொழிற்சாலைகளின் நிலைமை குறித்து ஆய்வு செய்ய 1929 ல் பணிக்கப்பட்ட ராயல் கமிசன் இது குறித்த விவரங்களை பதிவு செய்துள்ளது. மேற்குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில், நடந்த போராட்டங்கள் அல்லது தொழிற்சாலைகளின் நிலைமை, ஆட்குறைப்பு, பணிநீக்கம், ஊதிய உயர்வு, போனஸ் ஆகிய பிரச்சனைகள் சார்ந்ததாக இருந்ததாகவும் ராயல் கமிசன் பதிவு செய்துள்ளது. அன்றைய சூழ்நிலையில் முதலாளித்துவ பாணியிலான தொழில் வளர்ச்சி அளித்த வேலைவாய்ப்பு, வேலையின்மை அதிகரிக்கும் போது செய்யும் வேலையை நிரந்தரமற்றதாக்கும் பணியை செய்த விவரங்களை ராயல் கமிஷன் அறிக்கையின் விபரங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
விடுதலைக்கு பின் இந்திய தொழில் வளர்ச்சி:
இத்தகைய தேசிய முதலாளிகளின் வளர்ச்சியை தொடர்ந்தே, 1944 பாம்பே திட்டம், டாடா, பிர்லா, பாய் குருப் உள்ளிட்ட பலர் இந்திய வர்த்தக கூட்டமைப்பு (FICCI) லிருந்து பங்கெடுத்து உருவாக்கியுள்ளனர். இந்திய விடுதலைக்கு பின் விவசாயம், தொழில், சேவை ஆகியவற்றின் கலவை அப்போதைக்கு இருந்த 53%, 17%, 22 ஐ, குறைந்த பட்சம் சில ஆண்டுகளில் 40%, 35%, 20% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளனர். அதேபோல் மக்களின் வாழ்வாதாரம் 2800 கலோரி உணவு, 100 சதுர அடியில் வீடு போன்ற அளவில் இருப்பதை உறுதி செய்வது பேசப்பட்டுள்ளது. 1934 லேயே விஸ்வேஸ்ரய்யா மைசூர் திவான், இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம் என்ற நூலை வெளியிட்டு உள்ளார். 1938 ல் நேரு, தலைமையில் இந்திய தேசியக் காங்கிரஸ் திட்டக் குழுவை உருவாக்கியுள்ளது. நேரு ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தது, குறிப்பாக சோவியத்தில் அவர் கண்ட வளர்ச்சியும், அது குறித்து அவருடைய உரைகளும் இதற்கு காரணமாக அமைந்தது. ஜெயப்பிரகாஷ் நாராயணன், சர்வோதயா திட்டம் என 1950 ல் பேசியுள்ளார். ஶ்ரீமான் நாராயணன் என்பவர், காந்திய திட்டம் என பேசியுள்ளார். எம்.என். ராய் தலைமையில் கம்யூனிஸ்ட்டுகள் 1945 ல் மக்கள் திட்டம் என்பதை வெளியிட்டனர்.
மக்கள் திட்டம், 10 ஆண்டுகளில் அடைய வேண்டிய இலக்குகளை முன்வைத்தது. விவாசாயத்தில் கவனம், மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்துவது, அதன் மூலம் தொழில் வளர்ச்சியை துரிதப் படுத்துவது, அனைவருக்கும் சமமான பங்கீடு தரும் விதத்தில் மக்கள் ஆட்சி இந்தப் பணிகளை செய்யும், குறிப்பாக வளர்ச்சிக்கு மிக முக்கிய தேவையான உள்கட்டமைப்புகளான, சாலை, ரயில் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து வசதிகள் திறம்பட செய்யப்படும் என இருந்தது. நேருவின் தலமையிலான அரசு அமைந்தபின், மகலனோபிஸ் உள்ளிட்ட அறிஞர்களின் தயாரிப்பை உள்வாங்கி கொண்டு செயல்பட்டது. குறிப்பாக சோவியத் அமைப்பு பின் பற்றிய 5 ஆண்டு திட்டங்களை உள்ளடக்கியதாக மகலனோபிஸ் தயாரித்த திட்டம் இருந்தது.
1952 ல் தேர்வு செய்யப் பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் கம்யூனிஸ்ட்டுகள் இரண்டாவது இடத்தில் இருந்தனர். இதை இந்திய வளர்ச்சிக்கான ஆக்கப் பூர்வமான பங்களிப்பு செய்யவும் பயன்படுத்தினர். அதில் மிக முக்கியமானவை, நெய்வேலி நிலக்கரி சுரங்கம், மின்சார தயாரிப்பு மற்றும் இரும்பு உருக்காலை, சேலத்தில் அமைப்பது ஆகியவை முக்கியமானதாகும். இதில் பி. ராமமூர்த்தி முக்கிய பங்களிப்பு செய்தார். திருச்சியில் பெல் மற்றும் துப்பாக்கி தொழிற்சாஅலைகள் அமைவதில் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பின் மூலம் அனந்த நம்பியார் நிறைவேற்றினார். இந்திய விடுதலையை தொடர்ந்து தொழில் வளர்ச்சிக்கு மற்ற முதலாளித்துவ நாடுகள் உதவி செய்யாத நிலையில், சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஜெர்மனி ஆகிய கம்யூனிஸ்ட் நாடுகள் மேற்படி தொழில் வளர்ச்சிக்கு உதவி செய்தன.
1953 ல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கெடுத்த ஏ.கே.கோபாலன், சோவியத் அதிபர் ஸ்டாலினிடம் இந்திய தொழில் வளர்ச்சிக்கு உதவி செய்ய கேட்டு கொண்டார். இந்தியாவிற்குத் திரும்பிய பின் நேருவை சந்தித்து, சோவியத் உதவியை நட வலியுறுத்தினார். ஏற்கனவே பிரதமர் நேரு, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளிடம் உதவி கேட்டு வெறும் கையுடன் திரும்பிய நிலையில், சோவியத் உதவியை நாடினார். அதன் மூலம் உருவானதே, பிலாய், ரூர்கேலா உருக்கு ஆலைகள். அதேபோல் பல எண்ணெய் நிறுவனங்கள். ஆனால் இந்திய ஆளும் வர்க்கம், இதை நினைத்துப் பார்க்கவோ, உருவான பொதுச் சொத்தை மேம்படுத்தவோ இன்று முயற்சிக்கவில்லை என்பதைப் பார்க்கிறோம். திருச்சி பெல் நிறுவனத்தை, ஜார்ஜ் பெர்னாண்டஸ் 1978 ல் தொழில் துறை அமைச்சராக இருந்த போது, அன்றைய மேற்கு ஜெர்மனியின் சீமென்ஸ்க்கு விற்க முயற்சித்தார். அதை பி.ராமமூர்த்தி அம்பலப்படுத்தி தடுத்து நிறுத்தினார். இன்று வரை இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதை தடுக்கும் போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் நடத்தி வருகின்றனர்.
அதேபோல் கேரளா, மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா வில் கிடைத்த இடது முன்னணி ஆட்சியை அடிப்படை கட்டமைப்பை மாற்றுவதற்கு பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மக்கள் திட்டம் முன் வைக்கப்பட்டதை போல், விவசாய வளர்ச்சிக்கு பெரும்பாங்காற்றியதன் மூலம் வாங்கும் சக்தியில் மாற்றத்தை உருவாக்கிய பெருமை இடதுமுன்னணி ஆட்சிக்கு உண்டு. இந்திய விடுதலைக்கு முன் உருவாக்கப்பட்ட பல திட்டங்கள் வெறும் அறிவிப்புகளாக, பிரச்சாரப் பயன்பாட்டு தேவையுடன் நின்றது. ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் தங்களின் திட்டம் மற்றும் புதிய திட்ட உருவாக்கங்களுடன், இந்தியாவில் அனைவருக்குமான தொழில் வளர்ச்சிக்கு போராடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக