வியாழன், 4 நவம்பர், 2010
நவம்பர் புரட்சி – உத்வேகத்திற்கான நினைவலைகள்
இருபது ஆண்டுகளுக்கு முன், கிழக்கு ஐரோப்பாவில் இருந்த கம்யூனிஸ்ட் நாடுகளிலும், அன்றைக்கு இருந்த சோவியத் யூனியனிலும், ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாகிக் கொண்டிருந்தது. அப்போது இன்று இருப்பதைப் போல் அதிகமான மின் ஊடகங்கள் இல்லை தான். ஆனாலும், இருந்த மின் ஊடகங்கள் கிரேன்களில் கம்யூனிஸ்ட் தலைவர்களின் சிலைகளை அப்புறப்படுத்தும் நிகழ்சிகளைத் திரும்ப, திரும்ப ஒளி பரப்பிக் கொண்டிருந்தன. அச்சு ஊடகங்கள் இனி கம்யூனிஸத்திற்கு வாய்ப்பில்லை என எழுதிக் கொண்டிருந்தன. முதலாளித்துவ அறிவு ஜீவிகள், கம்யூனிஸத்திற்கு இறுதி அத்தியாயம் எழுதப் பட்டுவிட்டது, என கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.
இருபது ஆண்டுகள் முடிந்த இன்று, ஃப்ரான்சில், போர்ச்சுக்கல்லில், கிரீஸில், ஸ்பெயினில், இத்தாலியில், ஃபின்லாந்தில் என ஐரோப்பா கண்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும், தீப்பிடித்ததைப் போன்ற பெரும் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள், பேரணிகளில் நிறைந்து வழியும் வீதிகள், என்ற நிலை உருவாகியுள்ளது. அனைத்து விதமான ஊடகங்களும் தவிர்க்க முடியாமல் சில செய்திகளை வெளியிடுகின்றனவே அல்லாது, சோசலிச நாடுகளில் ஏற்பட்ட மாற்றம் குறித்த பிரச்சாரம் போல் செய்ய வில்லை. முடிந்த அளவிற்கு போராட்ட செய்திகளின் வீரியத்தைக் குறைத்து, தனது முதலாளித்துவ விசுவாசத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதலாளித்துவ பொருளாதார மேதைகள், அறிவு ஜீவிகள் வாய் திறக்காது மௌனம் காக்கின்றனர்.
மேலே குறிப்பிட்ட இரண்டு அனுகுமுறைகளும், முதலாளித்துவ நலனில் இருந்து முன் வைக்கப்படுகிறது. ஆனால் வறுமையை ஒழித்திட, தொழிலாளர்களின் உரிமையை பாதுகாத்திட, கல்வி, வேலை, சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை அரசு தடையின்றி செய்திட, முதலாளித்துவ அரசினால் முடியாது, என்பது நிரூபனமாகி உள்ளது. கெய்ன்ஸ் போன்ற பொருளாதார மேதைகள் உருவாக்கித் தந்த, தேவை விநியோகம் கொள்கை அல்லது நலத்திட்ட கொள்கை கூட, சோசலிச நாடுகள் இருக்கும் வரையில் தான் தீவிரமாகப் பின்பற்றப் பட்டது. உலகமய கொள்கைகளும், நவீன தாராளமய கொள்கைகளும், கொழுத்த லாபத்தை, முதலாளித்துவத்திற்கு தந்ததாலும், தேசிய அரசுகளே முதலாளிகளிடம் தடுமாறிக் கொண்டிருந்ததாலும், நலத் திட்டங்கள் படிபடியாக கைவிடப் பட்டன.
இரண்டாவது உலக முதலாளித்துவம் தன்னுடைய பகட்டினை நிலை நிறுத்த, ஊகவனிகத்தில் தீவிர அக்கறை கொண்டதாலும், இருப்பே இல்லாமல் கடன் கொடுத்து சிக்கிக் கொண்டதாலும், அமெரிக்க அரசு சப் பிரைம் லோன், என்ற கடன் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு, இரண்டு ஆண்டுகளாக வெளிவர முடியவில்லை. 2008 செப்டம்பரில் ஏற்பட்ட பாதிப்பு, உலகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. வாஷிங்டன்னில் ஏற்பட்ட அதிகார மாற்றம் கூட இந்த பின்னனியில் தான் நடைபெற்றிருக்க வேண்டும். கறுப்பினத்தைச் சார்ந்த ஒருவருக்கு அதிபர் பதவி தந்த பெருந்தன்மை என்று தங்கள் ஜனநாயகத்தைப் பற்றி அமெரிக்கா ஆர்ப்பரித்தாலும், முதலாளித்துவத்தின் நெருக்கடியான ஒரு கால கட்டத்தில் பாரக் ஒபாமா அதிபர் பொறுப்பினை ஏற்றிருக்கிறார், என்ற அனுதாப குரல்களும் எழாமல் இல்லை. பால் கிரக்மான் போன்ற கட்டுரையாளர்கள், ”ஒபாமாவிற்கு பொருளாதார ஆலோசனை வழங்குபவர்கள், பொருளாதார நெருக்கடியின் அடிப்படை வேலையின்மை என்பதை உணரவில்லை” என கூறியுள்ளார். ஒபாமாவே அமெரிக்காவில் வேலையிண்மை விகிதாச்சாரம் 9 சதத்தை எட்டி உள்ளது, வருந்தத் தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது மார்க்சியம் என்பது விஞ்ஞானம். அது நெருக்கடிகளும், வறுமையும், பட்டினியும், பல்வேறு விதமான சமூக நிராகரிப்புகளையும் அரசு அரங்கேற்றுகிற பகுதிகளில், கம்யூனிஸ்ட் கட்சி விரியத்துடன் செயல் படுமானால், அங்கே தொழிலாளி வர்க்கப் புரட்சி அல்லது ஆட்சி மாற்றம் தவிர்க்க முடியாது என்பதாகும். இருக்கிற பிரச்சனைகளுக்கான தீர்வை கம்யூனிச ஆட்சி, சோசலிச சமூகம் தான் தர முடியும். எனவே ”கம்யூனிசத்தை யாராலும் அழிக்க முடியாது”, என்ற முழக்கத்தில் உண்மை இருப்பதை உணரும் காலம் இது. மார்க்ஸ் சொன்ன இந்த யதார்த்த உண்மையை முதலாளித்துவ அறிவு ஜீவிகளும் தெரிந்துள்ளனர். அதனால் தான் 2008 செப்டம்பரில், நிதி நெருக்கடி முற்றி அமெரிக்கப் பொருளாதரம் மூச்சு திணரும் நிலையில், காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனத்தை தேடி தேடி வாங்கினர். சென்னை பத்திரிகையில் செய்தி ஒன்று வந்திருந்தது. அதாவது, ”சென்னை அண்ணா சாலையில் உள்ள, ஹிக்கின் பத்தம்ஸ் என்ற ஆங்கில புத்தக கடையில் இருந்த மூலதனத்தின் 3 ஆங்கில பிரதிகளும் விற்று தீர்ந்ததாகவும், வேறு பிரதி இல்லாததால், பலர் கேட்டும் கொடுக்க முடியவில்லை”, என்றும் செய்தி குறிப்பிடப் பட்டு இருந்தது. உலகில் பல நாடுகளில் மூலதனம் புத்தக விற்பனை பரபரப்பான செய்தியாகவும் இருந்தது. நாம் முதலில் குறிப்பிட்டதைப் போல், நமது இந்திய ஊடகங்கள் இத்தகைய செய்திகளை பெரியளவில் கண்டுகொள்வதில்லை. எனவே அன்றைய ரஷ்ய நாட்டில் நிகழ்ந்த நவம்பர் புரட்சி நினைவு கூறத்தக்கது.
70 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்ய தேசத்து மக்களுக்கு மாற்று அரசியலை முன்வைத்து மகத்தான சாதனைகளை நிகழ்த்திய, புரட்சி அது. கார்ப்பசேவ், போரீஸ் எல்ட்சின் போன்ற நபர்கள், புரட்சியின் வெற்றிப்பயணத்தை நிலை குலையச் செய்திருக்கலாம். அனால் பிரச்சனைகளிலும், நெருக்கடிகளிலும் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ஆறுதல் தரக்கூடியது கம்யூனிஸ்டுகள் தலைமையிலான சமூக மாற்றம் மட்டுமே. உலக அரங்கிலும் இந்த தேவையை உணர முடியும். சோவியத் யூனியன் இருந்த வரையிலும், தனது ராணுவத்தை கட்டுப்படுத்தி வைத்திருந்த அமெரிக்கா, தற்போது, கட்டுப்பாடற்ற சுதந்திரத்தைக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறது. ஒபாமா மூன்றாம் உலக நாடுகளை புரிந்து கொள்வார், என்கிற எதிர்பார்ப்பு, செய்தி வாசிப்பவர்கள் மீது திணிக்கப் பட்டது. ஆனால் ஆஃப்கானிஸ்தான் கொள்கையிலோ, ஈராக் மீதான அனுகுமுறையிலோ, பாகிஸ்தானுடனான கூட்டு செயல் பாடிலோ, எந்த மாற்றமும் இது வரை ஏற்படவில்லை. இனியும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அறிய முடியவில்லை.
இந்த நிலையில் தான் அமெரிக்கா கடும் பொருளாதார நெருக்கடியில் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. கடந்த கால அனுபவங்களும், முதலாளித்துவத்தின் அமலாக்கம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவும், இது உடனடியாக தீருகிற நெருக்கடி அல்ல, என்பதை சுட்டிக்காட்டுகின்றன. தற்போது அமெரிக்காவின் வேலையின்மை 12 சதத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறுகின்றனர். அரசு பின்பற்றும் கொள்கைகளின் தோல்வியே இந்த நெருக்கடிகளுக்கு காரணம் என பேசத்துவங்கி விட்டனர். ஈராக் மீது படை எடுத்ததன் மூலம் பெரும் எண்ணை வளத்தை சுருட்டி வைத்துக் கொண்டாலும் கூட, அமெரிக்கா பல வகையில் திணறிக்கொண்டு தான் இருக்கிறது. தற்போது ஒபாமாவின் பேச்சில் பிரதானமானது, அமெரிக்க அரசு, அவுட்சோர்சிங் என்கிற பணி ஒப்படைப்பு தடை செய்யப் படும் என்பதாகும். ஒபாமாவின் இந்திய வருகையின் போது, இப்பிரச்சனைக்கு முடிவு காணப்படும் என்றும், அவுட்சோர்சிங் காராணமாக சம்பாதிதுக் கொண்டிருக்கும், இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி போன்ற நபர்கள், இந்திய நாடாளுமன்றத்தில், ஒபாமா இது குறித்து பேசுவார், என்றும் எதிர் பார்க்கின்றனர்.
பொதுவான பொருளாதார அறிஞர்கள், ஒபாமாவின் இந்திய விஜயத்தில், பல லட்சம் கோடி ரூபாய்க்கான வர்த்தக ஒப்பந்தங்கள் அரங்கேறும். அதற்காகத் தான் ஒபாமா பெரும் படைபலத்துடன் இந்தியாவிற்கு வர சம்மதித்திருக்கிறார். எனவே மேற்குறிப்பிட்ட இரண்டு விவரங்களுடன் இனைத்துப் பார்க்கிற போது, ஒபாமாவின் இந்திய வருகை, இந்தியாவை கொள்ளை அடிக்கும் கொள்கையுடன் இனைந்தது என்பதையும், நாராயண மூர்த்தி போன்ற பெரும் பணக்காரர்களுக்குப் பலன் தருபவை என்பதையும், புரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் உள்ள வருமான அசமத்துவம் குறித்து எக்கனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி ஆங்கில வார இதழ், செப்டம்பர்,11, 2010 ல் ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தம் துவங்கி 1993-94 முதல், 2005-2006 வரையிலான காலத்தில், கிராமப் புற விவசாயத் தொழிலாளிகள், நகர்புற ஏழைகளின் வருமானம் மிகப் பெரிய அளவில் குறைந்துள்ளதாகவும், அதே நேரத்தில், படித்தவர்களில் சிறு பகுதியினரும், நடுத்தர வர்க்கத்தின் பெரும் பகுதியினரும் கணிசமான வருமான உயர்வுக்கு ஆளாகி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 2004 ல், இந்தியாவில் 9 நபர்கள் 4600 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்பு கொண்டிருந்தனர்,. தற்போது அந்த எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது, என்று இடதுசாரி இயக்கங்கள் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இதற்கு உலகமயமாக்கல் அல்லது நவீன தாராளமய மாக்கல் கொள்கைகள் பயன்பட்டுள்ளது. இந்த நிலையில் இருந்தே இந்திய பெரும் முதலாளிகள், ஒபாமாவின் வருகையை ஆவலுடன் வரவேற்கின்றனர். நடுத்தர வர்க்கமும் இதற்கு ஒத்திசைக்கிறது.
சுரண்டலையோ, காலணி ஆதிக்கத்தையோ, ஏழைபணக்காரர் வித்தியாசத்தையோ, வேலையின்மையையோ, இதர பிரச்சனைகளையோ தீர்மானிப்பது, கறுப்பு , வெள்ளை என்ற வண்ணங்கள் அல்ல என்பதை, ஒபாமாவை சுட்டிக்காட்டி புரிய வைக்க வேண்டியுள்ளது. வண்ணங்கள் மாறினாலும், வாசங்கள் மாறாத நிலையில், உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்தி, போராடுவதும், நவம்பர் புரட்சியின் மகத்தான சாதனைகளை நினைவில் கொள்வதும், அதன் உத்வேகத்தில், மக்களை போராட்டப் பாதைகளுக்கு இழுத்து வருவதும், ஜனநாயக இயக்கங்களின் கடமை ஆகும்.
நன்றி: உழவன் உரிமை. November 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக