எது
பண்டிகை?
சிறுபான்மை அடையாளம் கொண்டோர்
கொண்டாடுவதில்லை
தீபாவளியையும் பொங்கலையும்
கொண்டாட்டங்களின் அடையாளம்
மாறுபட்டு இருப்பதால்
பண்டிகை நாள்களிலும்
நிற்பதில்லை பணிகள்
வேற்றுமைகளின் ஒற்றுமை
பார்த்தீர்களா? கேட்டார் சகபயணி.
நிஜமோ எதிர் திசையில்
புகைவண்டிகளும் பேரூந்துகளும்
பயணிக்கின்றன எப்போதும் போல்
ஓட்டுனர்களின் கொண்டாட்ட இழப்பால்
குறைவான பயணிகளை வாரிக்கொண்டு.
பொருள்களின் பெயரிட்டு
கூவி அழைக்கும் அதேகுரல்
தினசரி பார்க்கும் சாலையோரத்தில்
வெறிச்சோடி இருக்கும்
ரயில் பேருந்து நிலையங்களில்
இடங்களின் பெயரிட்டு
கூவும் ஆட்டோ ஓட்டுனர்கள்.
தமிழ் புத்தாண்டு எந்த நாளில்?
ஓயவில்லை பட்டிமன்றம்
வாட்டர் வாட்டர் ஒலிக்கிறது
சிறுவனின் குரல்.
எத்தனை பண்டிகைகள் வந்தாலும்
வழமைப் பணிகளில்
மூழ்கிக் கிடக்கும் தொழிலாளர்களுக்கு
எது பண்டிகை?
எது அடையாளம்?