வெள்ளி, 28 மே, 2021

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி செய்ய வேண்டியவை

“ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா ஒற்றை தன்மை கொண்ட நாடல்ல, மதசார்பின்மையுடன் கூடிய, பன்முகத் தன்மை கொண்டது என்பதை மேலும் நிரூபணம் செய்துள்ளது”, என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. தமிழகத்தில் திமுக தலையிலான கூட்டணி பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இது கடந்த நாடாளுமன்ற தேர்தலின் தொடர்ச்சி ஆகும். “மத்திய பாஜக ஆட்சியின் வகுப்பு வாத கொள்கைகளையும், அதிமுக ஆட்சி அதற்கு உடந்தையாக இருந்ததையும், அதிமுகவின் நிர்வாக சீர்கேடுகளையும் தமிழக மக்கள் ஏற்கவில்லை என்பதையும் முடிவுகள் தெளிவு படுத்தியுள்ளன”, என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூறியுள்ளது.  இன்றைக்கு கொரானா பெரும் தொற்று ஏற்படுத்திய தாக்கம் பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார துறையில் மிக அதிகமாக இருக்கிறது. மக்களை மேற்படி தாக்ககங்களில் இருந்து மீட்கும் வகையிலான செயல் திட்டத்துடன் திமுக தனது நடவடிக்கைகளை துவங்கும் எனவும் மார்க்சிஸ்ட் கட்சி தனது நம்பிக்கையை தெரிவித்துள்ளது. 


பாஜக ஆட்சியின் பொருளாதார கொள்கைகள் தமிழகத்திற்கு நன்மை தரவில்லை. அதேபோல் கல்வி, பொது சுகாதாரம், போன்றவையும் இயற்கை பேரிடர் காலங்களில் தமிழகத்தை புறக்கணித்ததையும், தமிழக மக்கள் மறக்க முடியாது. ஆனாலும் அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் 40 சதம் வாக்குகளைப் பெற்றுள்ளது. அதேபோல் ஆட்சி மாற்றங்களைக் கடந்த காட்சி மாற்றமும் தேவைப் படுகிறது என்பதை, தமிழகத்தில் கூட்டணியில் இல்லாத பிற கட்சிகள் பெற்றுள்ள சுமார் 14 சத வாக்குகள் குறிப்பிடுகிறது. அமைய உள்ள திமுக ஆட்சி இதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஜனநாயகத்தில் பெரும்பான்மை என்பது தேர்ந்தெடுக்கபடும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கொண்டது மட்டுமல்ல. வாக்களித்த மக்களின் சதமானம் எந்த அணியை பிரதிபலித்துள்ளது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்போது உள்ள அசாதாரண சூழலில் மக்களை காக்கும் சரியான, உடனடியான நடவடிக்கைகள் திமுக ஆட்சி எடுப்பதன் மூலம், மேலே குறிப்பிட்ட வாக்கு சதத்தினரை, திமுக ஆட்சியை அங்கீகரிக்க செய்ய முடியும். 


தேவைப்படும் நலத்திட்டங்கள்:


இன்றைய சூழலில் முதலில் கட்டுப்படுத்தப் பட வேண்டியது, கொரானா பெரும் தொற்று பரவல் ஆகும். சில கட்டுப்பாடுகள் விதிக்காமல், மக்கள் பொது வெளியிலும், பணித்தளத்திலும் குவியும் நிலையை வரைமுறை படுத்தாமல், தொற்று பரவல் வேகத்தை கட்டுப் படுத்த முடியாது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை குறைக்க வேண்டும் என்றால், மக்களுக்கு தேவையான உணவும், உணவுக்கு வேண்டிய பணமும் பெரும் சுமையானதாக பெரும்பான்மையோருக்கு உள்ளது. எனவே தான்வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது. தேவைப் படும் கட்டுப்பாடு காரணமாக தற்போது மூடப்பட்டுள்ள சலூன், ஓட்டல், திரையரங்கம், சுற்றுலா தளங்கள், திருமண மண்டப பணிகள், கோவில் விழாக்களுக்காக பெரும் எண்ணிக்கையில் உழைக்கும் மக்கள் என பல வகை தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். 


இத்தகைய தொழிலாளர்கள் தான் தற்போது மிக அதிகமாக தொற்று பரவலுக்கும் இரையாகின்றனர். கடந்த 13 மாத மத்திய பாஜக மற்றும் மாநில அதிமுக ஆட்சி இவர்களுக்கான நிவாரணம் வழங்குவதில் பாராமுகமாக இருந்து, நோய் தொற்றை நோக்கி தள்ளியுள்ளது. இது இரண்டு வகையில் நடந்துள்ளது. ஒன்று வேலை இழந்து வருமானம் இழந்ததால்ஆகும். இரண்டு சத்து குறைவான உணவையே இந்த காலம் முழுவதும் பெரும்பாலான குடும்பங்கள் எடுத்து கொண்டதால், பலவீனமாகியுள்ளனர் என்பதாகும். கடந்த 2020 ஏப்ரலில் ஒவ்வொரு குடும்பமும், 44 சதம் வருவாய் குறைவை எதிர் கொண்டுள்ளனர், மே மாதம் 39 சதம் வருவாய் குறைவும், ஜூன் மாதம் 25 சதம் வருவாய் குறைவும், தொடர்ந்து வந்த மாதங்களிலும் இதே நிலை நீடித்ததாகவும் கூறப்படுகிறது. 


இதன் காரணமாக உணவு செலவு குறைக்கப்பட்டுள்ளதே தவிர, வீட்டு வாடகை, மின்கட்டணம், குடிநீர் கட்டணம், செல்போன் மற்றும் மருந்து போன்ற அவசிய செலவுகள் குறைக்கபட வில்லை. ஏனென்றால் இதை பாஜக, அதிமுக ஆட்சியினர் புறக்கணித்தனர். எனவே பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர் குடும்பங்கள் பலவீனமானது உண்மை. அது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்ததும் உண்மை. இதை கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உணர்ந்த காரணத்தால், மாதம் 7500 ரூ வீதம் மூன்று மாதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற பேரவை சங்கமும் (தொ.மு.ச) மேற்படி கோரிக்கையை வைத்தது மட்டுமல்ல, போராட்ட களத்திலும் இணைந்து நின்றது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொரானா கால நிவாரண நிதியாக ரூ 4000 வழங்கப்படும் என அறிவித்தது. இது மிக சரியான ஒன்று. 


பொருளாதார வல்லுனர்களான, ப.சிதம்பரம், ரகுராம் ராஜன், பேரா. பிரபாத் பட்னாயக் உள்ளிட்டோரிடம்,  இப்படி மேலும் மேலும் இலவச தொகை அறிவிப்பு குறித்து கேட்ட நேரத்தில், பொருளாதாரம் மறு சுழற்சி இன்றி முடங்கி கிடக்கிறது. பணமாக மக்கள் கையில் அளிக்கப்பட்டால், வாங்கும் சக்தி உருவாகும். எனவே இந்த அறிவிப்பு பலன் தர தக்கதே, எனக் கூறினர். இது விலையில்லா பொருள் விநியோகம் அல்ல. மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருளை பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள அளிக்கப்படும் வாய்ப்பு. எனவே மேற்படி அறிவிப்பை தாமதம் இன்றி வழங்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கலாம். 


அடுத்ததாக ரெம்டிசிவீர் மருந்து வரவைக்கப்படுகிறது, தடுப்பூசி மருந்து வெளியில் இருந்து பெறப்படுகிறது. மாறாக மத்திய அரசினை வலியுறுத்தி பெற தாமதமாகலாம் என்ற நிலையில், தமிழகத்தில் உள்ள சகல உள்கட்டமைப்பு வசதிகளுடன் தயார் நிலையில் உள்ள செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை, பயன் படுத்தி மருந்து தயாரிக்க முடியும். சில நூறு கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் சாதிக்கும் வாய்ப்பு உள்ளதை, கணக்கில் கொண்டு, தடுப்பூசி உற்பத்தியைத் துவக்க முடியும். உற்பத்தி துவங்குவது, வேலைவாய்ப்பை அதிகப்படுத்தவும், வேலையில் இருப்போருக்கு முழு ஊதியம் வழங்கப்படவும் முடியும். அது தமிழக வளர்ச்சிக்கு உதவ கூடியதே. 


தொடர்ந்து செய்ய வேண்டிய மற்றொரு முக்கியமான பணி, தமிழகத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் போதுமான பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் இல்லை. இந்த பணி இடங்களை பூர்த்தி செய்வது, சற்று செலவு பிடிக்கும் என்றாலும், மேற்படி நியமனங்களின் மூலம் பல ஆயிரம் ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பும், அவர்கள் தங்கள் வருவாயை பயன்படுத்தி சந்தையில் பணத்தை புழங்கச் செய்வதும் நடைபெறும். அதுவும் தமிழகத்தின் நலனுக்கு நீண்டகால நோக்கில் பலன் தரக் கூடியதாக இருக்கும். 


அதேபோல் தமிழகத்தில் உள்ள பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தொழிலாளர் குடும்பங்களுக்கு சில மாதங்கள் விலை இல்லா அரிசி உள்ளிட்ட உணவு பொருள்களை வழங்குவது, தற்போது உணவு கிடங்குகளில் இருக்கும் உணவு தானியத்தை விநியோகம் செய்ய வழி வகுக்கும். அரிசி தவிர்த்த இதர உணவு பொருள், சர்க்கரை ஆகியவற்றை அரசு கூடுதலாக கொள்முதல் செய்யவும், உற்பத்தியாளர்கள் உற்பத்தியில் ஈடுபடவும் வழிவகுக்கும். இவை அனைத்தும் தற்போதைக்கு கூடுதல் செலவாக இருந்தாலும், தொலைநோக்கில் பெரும் பலன் தரக் கூடியது ஆகும். தமிழக முதல்வர். மு.க. ஸ்டாலின் திருச்சியில் நடத்திய மாநாட்டில் குறிப்பிட்ட 7 அம்சத் திட்டங்கள் நிறைவேறவும் மேற்படி செயல்பாடுகள் அடிக்கட்டுமானத்தை அமைத்து தரும். 


நிதி உருவாக்கம் இல்லாமல் நலத்திட்டங்கள் சாத்தியமில்லை:


முக்கியமாக அரசு கஜானா காலி செய்யப் பட்டது மட்டுமல்ல, கடன் அளைவையும், அதிமுக ஆட்சி அதிகமாக்கி சென்றுள்ளது. அதாவது தமிழக அரசுக்கு கடந்த 2001 ல் இருந்த 28685 கோடி ரூபாய் கடன், 2011 ல் ரூ 1, 01, 439 கோடியாக உயர்ந்தது. தற்போது 4.85 லட்சம் கோடியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுமட்டுமல்ல வெளியேறு அதிமுக ஆட்சி, கடந்த பிப்ரவரியில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த போது, அன்றைய நிதி அமைச்சர். ஓ. பன்னீர் செல்வம் அடுத்த நிதியாண்டுக்குள் மேலும் ஒரு லட்சம் கோடி கடன் பெற வேண்டியிருக்கும் என கூறியுள்ளார். தமிழகப் பொருளாதாரம் கடன் பெறும் நிதியால் தான் கட்டமைக்க பட்டு இருக்கிறது. 


பாஜக மத்திய ஆட்சி பொறுப்பை ஏற்ற பின் மத்திய நிதித் தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு மிகக் குறைவாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாநிலங்களுக்கு கிடைத்து வந்த மதிப்பு கூட்டு வரி மூலமான நிதியும் ஒழிக்கப்பட்டு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) புகுத்தப்பட்டுள்ளது. இது மாநிலங்களுக்கான நிதி பங்களிப்பை குறைத்தது மட்டுமல்ல, சிறு, குறு உற்பத்தியாளர்களை முடக்கி கனிசமான வேலை இழப்பையும் உருவாக்கியுள்ளது. தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ11.284 கோடி 2020 ஆண்டுக்கான ஜி.எஸ்.டி பங்கு அளிக்க வேண்டும். இது 2021 ல் அதிகரிக்கும். மத்திய அரசு கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாமல், மாநிலங்களுக்கு தர வேண்டிய 1.5 லட்சம் கோடி ஜி.எஸ்.டி பங்கை அளிக்க நிதியில்லை என கூறுகிறது. 


பாஜக மத்திய ஆட்சி பொறுப்பிற்கு வந்த பின் தமிழகம் சந்தித்ததும், மத்திய அரசு வழங்கிய நிதியும் கவனிக்க தக்கது. 2015 - 16 சென்னை மழை வெள்ளத்தின் போது 25912 நிவாரணமாக கேட்டதற்கு 1738 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது. 2016 - 17 வறட்சியின் போது 39565 கோடி ரூபாய் கேட்டதற்கு 1748 கோடி மட்டுமே கிடைத்தது. 2016 - 17 வர்தா புயலின் போது 22573 கோடி ரூபாய் கேட்டதற்கு 266 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது. 2017 - 18 ஒக்கி புயலின் போது 9302 கோடி ரூபாய் கேட்டதற்கு 133 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது. 2018 - 19 இல் வந்த கஜா புயலின் போது 17899 கோடி ரூபாய் கேட்டதற்கு வெறும் 1146 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது.

இப்போது கூட நிவர் புயல் பாதிப்பு நிவாரணமாக 3758 கோடி ரூபாய் கேட்கப்பட்டது. ஆனால் நிவர் மற்றும் புரவி இரண்டுக்கும் சேர்த்து, ரூ 283 கோடி மட்டுமே மதிய அரசு ஒதுக்கியுள்ளது. இது போன்ற விவரங்கள் பொது மக்களுக்கு அயர்ச்சியை மட்டுமே உருவாக்கும். 


இந்த நிலையில் மத்திய அரசு மீது குற்றம் சுமத்தி தப்பித்து கொள்ளும் வேலையை ஒரு மாநில அரசு செய்ய முடியாது. அவ்வாறு நடந்து கொண்ட காரணத்தால் தான் அதிமுக அம்பலப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளது. எனவே அரசியல் அமைப்பு சட்டம் கூறியது போல் மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா என்பதை நிலை நிறுத்த வேண்டியுள்ளது. நிதி பங்கினை பெற உறுதியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். தமிழகத்திற்கு பல்லாயிரம் கோடி நிதி பாக்கி வைத்துள்ள மத்திய பாஜக அரசு தமிழக மக்களிடம் முழுமையாக அம்பலபடுத்த படுவதும், தமிழக உரிமையை நிலை நிறுத்துவது அவசியம். 


அதேபோல் பி.எம். கேர்ஸ் நிதி பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. தமிழக நிறுவனங்கள் ஏராளமானவை இதற்கு பங்களிப்பு செய்துள்ளன. ஆனால் பி.எம் கேர்ஸ் நிதியில் இருந்து நாடு முழுவதுமே எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தமிழக அரசு இது போன்று மாநிலத் தேவைக்கு நிவாரண நிதி உருவாக்குவது குறித்து ஆலோசிப்பதும் போர்கால அடிப்படையில் செயலாற்றுவதும் அவசியமாகும். 


தமிழகத்தில் தொழில் மற்றும் சமூக நடவடிக்கைகள்:


2006 ல் தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்த பின், தொழில் கொள்கையை பிரகடனம் செய்தது. செல்போன், ஆட்டோமொபைல், ஐ.டி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் தாக்கம் கொண்டதாக இருந்தது. ஆனால் அதில் முதலீட்டாளர்களுக்கு இருந்த பாதுகாப்பு, தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் தொழிற்சங்க அங்கீகார சட்டம் இயற்றப்படுவது குறித்து ஆய்வு செய்ய மே. வங்கம், மகராஷ்ட்ரா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு அன்றைய அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஒரு குழுவை அனுப்பி, விவரங்கள் சேகரிக்கவும் செய்தது. ஆனால் அமலாகவில்ல. இப்போது அதற்கான சூழல் உள்ளது. தமிழகம் ஜனநாயக நடவடிக்கையில் தலை சிறந்தது என்பதை நிலைநாட்ட இது உதவும். 


அடுத்ததாக தொழில் வளர்ச்சிக்காக, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்க மத்திய அரசு சட்டம் இயற்றி, சலுகைகள் வழங்கியது. குறிப்பிட்ட கால சலுகைகளை அனுபவித்த பின், பன்னாட்டு ஆலைகள் பறந்து விடுவதற்கு அதில் உள்ள ஓட்டைகளை அடக்கவும், தொடர்ந்து தொழிலும், தொழிலாளர்களும் நீடிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுப்பதும் இப்போது தேவையாக உள்ளது. அதிமுக ஆட்சி, நடத்திய இரண்டு உலக முதலீட்டாளர் மாநாடு விளம்பரங்களை உருவாக்கிய அளவிற்கு தொழில் வளர்ச்சியையும், தொழிலாளர் எண்ணிக்கை வளர்ச்சியையும் உருவாக்கவில்லை. இந்த பத்தாண்டு கால பலவீனத்தை போக்கும் வகையில் திமுக ஆட்சி செயல்படுவது, தொடர் முன்னேற்றத்திற்கு உதவும். 2008ல் மார்க்சிஸ்ட் கட்சியின் 19வது அகில இந்திய மாநாடு தொழில் வளர்ச்சி குறித்து விவாதித்தது. அதில் கூறியது போலவே சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற கருத்தும், செயலும் தேக்கத்தை சந்தித்துள்ளது. தேக்கத்தை முறித்து முன்னேற தொழில் கொள்கையுடன் தொழிலாளர் கொள்கையும் கூடுதலாக ஜனநாயகப் படுத்தப்பட வேண்டும். 


குறைந்த பட்ச ஊதியம் ரூ 21000 என உயர்த்துவது. தொழிற்சங்க அங்கீகார சட்டத்தை இயற்றுவது, வேலைவாய்ப்பை நிரந்தரம் செய்வது, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பை மேம்படுத்துவது, சம வேலைக்கு சம ஊதியம் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பை அமலாக்குவது, பெண் தொழிலாளர்களுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துவது, பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க பாரபட்சமற்ற  நடவடிக்கைகளை மேற்கொள்வது, மத்திய அரசு சட்டத் திருத்தங்களை செய்தாலும், மாநில அரசு தனது விதிகளை உருவாக்கும் போது இருக்கும் நல்லவற்றை பாதுகாக்கும் வகையில் விதிகளை உருவாக்குவது, ஆகியவற்றை உள்ளடக்கியதாக தொழிலாளர் கொள்கை அமைய வேண்டும். 


இதே போல் விவசாயம் மற்றும் விவசாயத் தொழிலாளர் பாதுகாப்பு சார்ந்தும் ஆலோசனைகளை பெற்று செயல்படுவது பலனளிக்கும். எம்.எஸ். சுவாமிநாதன், கோலப்பன் போன்ற அறிஞர்கள் உருவாக்கிய விவசாயத் தொழிலாளர்களுக்கான வேலைநாள்களை அதிகப்படுத்துவது, நூறுநாள் வேலை திட்டத்தை, நாள்களிலும், கூலியிலும் விரிவு படுத்துவது, உள்ளூர் நீர்த்தேக்கங்கங்களைப் பாதுகாத்து, நிலத்தடி நீர் மற்றும் பாசன வசதிகளை மேம்படுத்துவது ஆகியவை கிராமப் புற வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். 


இவை தவிர சமூக நடவடிக்கைகளாக ஆணவ கொலைகளை தடுக்கும் சட்டம் இயற்றுவது, பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்கும் பணியில் மனிதர்கள் இறக்கும் கொடுமையை தடுக்கும் வகையில் ரோபோக்களை பயன்படுத்துவது, காவல் துறையின் அணுகுமுறையில் மக்களுக்கான பாதுகாப்பு என்ற கண்ணோட்டத்தில் மிகபெரிய மாற்றத்தை உருவாக்குவது, அவர்களுக்கு வேலை நேரம் தீர்மானிப்பது, நீட் உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை அமலாக்கத்தின் தள்ளி வைக்க நடவடிக்கை மேற்கொள்வது, டாஸ்மாக் தமிழகத்திற்கு கனிசமான வருவாய் தரும் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் கடைகள் எண்ணிக்கையையும், செயல் படும் நேரத்தையும் படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுப்பது, அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்று பணி வழங்குவது, ஆகியவை குறித்தும் உரிய கவனம் செலுத்த வேண்டும். 


மொத்தத்தில் தமிழக சட்டமன்றம் செயல்படுவதற்கு இணையாக, களத்தில் பணியாற்றும் சமூக இயக்கங்களையும், புத்திஜீவிகளையும் கணக்கில் கொண்டு அவ்வப்போது ஆலோசிப்பது மிகப்பெரிய அளவில் தமிழக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். திமுக வின் ஆட்சி இத்தகைய சவால்களையும், தேவைகளையும் கணக்கில் கொள்வது காலத்தின் கட்டாயம். 





புதன், 12 மே, 2021

One year Lock down

 ஓராண்டு பொது முடக்கம் கற்றுத் தரும் பாடம்

எஸ். கண்ணன்

 

கொரானா பொது முடக்கம் இந்தியாவில். மீண்டும் துவங்கியுள்ளது. நோய் தடுப்பு மருந்து கிடைக்க வில்லை. ஆக்சிஜன் பற்றாக்குறையால் பிணக்குவியல்கள் பலமாநிலங்களில் எரியூட்டப்பட்டும், கங்கையில் மிதக்க விடப்பட்டும் வருகின்றன. பிரதமர் மோடியின் சொந்த தொகுதி காசி வாரணாசி பிணங்கள் குவியலாய் எரியூட்டப்படுவதற்கு சாட்சி. ஆனாலும் தினம் ஒரு உரை, தினம் ஒரு அறிவுரை என அசிங்கப்பட்டு நிற்கிறது மத்திய பாஜக ஆட்சி. இந்தியா முழுவதும் 7 ஆண்டுகளாக வளர்ச்சி குறித்த முழக்கம் பயனற்று எதிரொலிக்கிறது. வளர்ச்சி குறித்து பேசும் பாஜக ஆளும் மாநிலங்கள் மலை மலையாய் பிணங்கள் குவிந்த போது வேடிக்கை பார்க்கும் நிலையிலேயே உள்ளன. . நீண்ட இடைவெளிக்குப் பின் நீதிமன்றங்கள் அரசுகளை நோக்கி எரியும் கேள்வி கணைகள் ஆறுதல் அளித்தாலும், தீர்வு கிடைக்காததால், காணல் நீராகவே தெரிகிறது. 

 

கொரானா ஒன்று காட்சிகள்  இரண்டு: 

 

2020 மே மாதம் 20 அன்று, சரக்கு ரயில் ஏறி 16 பேர் சாவு என்ற செய்தி வந்தது. மகராஷ்ட்ரா மாநிலம் அவுரங்கா பாத்தில், மேற்படி கொடுமை நடந்தது. மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த ஒரு குடும்பம், தண்டவாளம் முழுவதும், ரத்த வெள்ளத்தில் நாசமானது. ரயில் இல்லை, பேருந்து இல்லை. பிழைக்கப் போன இடத்தில் உணவுக்கும் கூட வழியில்லை. எனவே முதல் நாளில் 45 கி.மீ தொலைவு நடந்த சோர்வில் ரயில் தண்டவாளத்தில் ரயில் வருவதில்லையே என்ற நினைப்பில் படுத்தவர்கள் 16 பேரும் பிணமாகினர். 

 

இதில் கொடுமை என்ன வென்றால், அவர்களுக்கு இறப்பு சான்றிதழ் கூட கடந்த 11 மாதங்களாக அளிக்கப் படவில்லை, என்பதே. மகராஷ்ட்ரா மாநில அவுரங்கபாத் மாவட்ட ஆட்சியரும், ம.பி. அரசும் மேற்படி குடும்பத்தில் எஞ்சியோரை அலைக்கழிக்கிறது. நிவாரணம் கூட முழுமையாக பெற வழி ஏற்படுத்தாத அரசு தான் பாஜக. கடந்த மார்ச் 30 2021 தி குயிண்ட் என்ற இணைய இதழ் இது குறித்து ஒரு செய்தி வெளியிட்டு உள்ளது. விதவையாக எஞ்சிய பெண்களுக்கு விதவை பென்சன் பெறுவதற்கும், சான்றிதழ் இல்லாத காரணத்தால் தாமதமாகிறது. இவ்வளவு துயரங்களுக்கு பின்னரும் மத்திய தொழிலாளர் துறையில், புலம் பெயர் தொழிலாளர் குறித்த எண்ணிக்கை, உள்ளிட்ட விவரங்கள் இல்லை என்பதே அந்த செய்தி. கடந்த ஓர் ஆண்டு காலமாக புலம் பெயர் தொழிலாளர்களின் அவலம் குறித்து நடந்த விவாதங்கள் குறித்து துளி அளவும் பாஜக ஆட்சியாளர்கள் கவலைப் படவில்லை. 

 

அதேபோல் பொது முடக்கம் காரணமான உற்பத்தி முடக்கம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. உலகில் மிக அதிக வேலை இழப்பு கொண்ட நாடாக  இந்தியா இருந்தது. எனவே வருமானக் குறைவும், அதன் காரணமான  இதர பாதிப்புகளையும் தொழிலாளர் குடும்பங்கள் சந்தித்தன. அதாவது தனி நபர் வருமானம் 44 சதம்  ஏப்ரலில் குறைந்தது, மே மாதத்தில் 39 சதமும் ஜூன் மாதத்தில் 25 சதமும் குறைந்ததாக  ஆய்வுகள் கூறுகின்றன. மொத்தத்தில் கடந்த ஆண்டு 5.4 சதம் தனிநபர் வருமனம் குறைந்துள்ளது. மூன்று மாதங்கள் வருமான இழப்பை சந்தித்த தொழிலாளர் குடும்பங்கள் எந்த வகையில் சத்தான உணவு வகைகளை உட்கொண்டிருக்க முடியும்? நோய் எதிர்ப்பு வலிமையை பெற்று இருக்க முடியும்? இப்போது கொரானா இரண்டாவது அலை, கொடூரமாக குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோரைத் தாக்குவதற்கு காரணம், மேற்படி வருமான இழப்பு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு ஆகும். இதை கணக்கில் கொண்ட காரணத்தால் தான் சி.ஐ.டி.யு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் தொடர்ந்து ரூ 7500 மூன்று மாதங்களுக்கு தொழிலாளர் குடும்பங்களுக்கு மத்திய பாஜக அரசு நிவாரணமாக வழங்க வலியுறுத்தி போராடியது. இப்போதும் இந்த கோரிக்கையின் நியாயத்தை வலியுறுத்துகிறது. 

 

மற்றொரு புறம் இந்தியாவில் உள்ள ஹூண்டாய் நிறுவனம் 2390 கோடி ரூபாய் 2020ம் ஆண்டுக்கான லாபம் அடைந்ததாக எக்கனாமிக் டைம்ஸ் கூறுகிறது. அதாவது தொழிலாளர் வருகையில் எவ்வளவு சிரமங்கள் இருந்த போதும், தொழிலாளர்கள் 90 முதல் 92 சதம் உற்பத்தியை நிறைவு செய்ததாகவும் கூறுகிறது. அதேபோல் மாருதி சுசுகி நிறுவனம்  மூன்றாவது காலாண்டில் 1941.4 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாக 2020 டிசம்பரில் தெரிவித்து உள்ளது.    அதேபோல் பொது முடக்க காலத்தில் முகேஷ் அம்பானிக்கு ரூ 90 கோடி வருவாய் ஒரு மணிநேரத்தில் கிடைத்துள்ளது (24 சதம் இந்தியர்கள் 3000 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தை கொண்டிருந்த காலம் இது). இந்தியாவில் உள்ள பில்லியனர்களின் சொத்து மதிப்பு 35 சதம் உயர்ந்ததாகவும் ஆக்ஸ்பேம் அறிக்கை குறிப்பிடுகிறது.

 

மேற்படி இரு காட்சிகளும் இந்திய ஆட்சியாளர்களின் பாரப்ட்சமான கொள்கையை அம்பலப்படுத்துகிறது.  பாஜக ஆட்சி இந்திய பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக நின்று அவர்களின் சொத்து குவிப்பை அதிகரித்துள்ளது. நிச்சயமற்ற வியாபர சூழல் உள்ள நிலையில், கொள்வாரும் இல்லை ( வாங்கும் சக்தி குறைவு ) கொடுப்பாரும் இல்லை, என்ற நிலையில், அரசின் கொள்கை உதவாமல் இத்தகைய சொத்து குவிப்பு சாத்தியமல்ல. உணவு, மருந்து, போன்ற அத்தியாவசிய தேவைகளை வாங்க சக்தி இல்லாத நாட்டில், எப்படி கார்கள் வாங்க முடிந்தது. வங்கி கடன் உதவிகளையும், ஏற்றுமதிக்கான சலுகைகளையும் அரசு செய்யாமல் மேற்படி முதலாளிகள் வளர்ச்சி பெற்றிருக்க முடியாது. 

 

சிறந்த வழி எது?:

 

ஆடம் ஸ்மித் நாடுகளின் செல்வம் எனும் நூலை எழுதிய போது வேலைப் பிரிவினை செல்வக் குவிப்பிற்கு முக்கியப் பங்காற்றியதாக கூறினார். ஆடம் ஸ்மித்தின் இந்த கருத்தை சற்று விமர்சன கண்ணோட்டத்தில் எதிர் கொண்ட காரல் மார்க்ஸ், செல்வத்தை பகிர்ந்தளிப்பது குறித்து பேசினார். சுரண்டலை ஒழிக்க சோசலிசமே மாற்று என்ற உண்மையை வெளிக் கொணர்ந்தார். இரண்டுக்கும் இடையில் நலத்திட்ட அரசு என கெயிண்ஸ் பேசினார். உலகம் முழுவதும் முதலாளித்துவ நாடுகள் சுரண்டலையும், கொள்ளை லாபத்தையும் ஆதரிக்கிற காரணத்தால், பெரும்பாலான வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் கொரானா காலத்தில், முடங்கிய பொருளாதாரத்தில் இருந்து மீள முடியாமல் திணறுகின்றன. மாறாக சோசலிச நாடுகள் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும், தொடர் முன்னேற்றப் பாதையில் பயணிப்பதைப் பார்க்க முடிகிறது. எனவே செல்வ குவிப்புக்கு பதிலாக செல்வம் பகிர்ந்தளிக்கப் படுவது என்ற காரல் மார்க்ஸ் தத்துவம் தேவைப் படுகிறது.

 

தொடர்ந்து 44 ஆன்டுகளாக சரிவே இல்லாமல் சென்று கொண்டிருந்த சீன பொருளாதாரம், தற்போது இந்த கொரானா பாதிப்பு காலத்திலும், 2.1 சத வளர்ச்சி என சீன பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. வியட்நாம் பொருளாதாரம் 2019ல் 7சதம் என்ற நிலையில் இருந்து, 2020ல் 6.8 சதம் என சிறு சரிவை சந்தித்துள்ளது. வடகொரியா, கியுபாவும் கூட சிறு அளவில் முன்னேற்றத்தையே அடைந்துள்ளது. ஆனால் முன்னரே குறிப்பிட்டதைப் போல் முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளன.

 

உலகில் எட்டாவது பெரிய பணக்காரர், இந்தியாவின் முதல் பெரும் பணக்காரர்ராகியுள்ளார். முகேஷ் அம்பானி. அதானி இந்தியாவின் இரண்டாவது பணக்காரர். ஆய்வாளர் அனஸ் ரஹ்மான் ஜூனைய்டு என்பவர், விரைவில் அமெரிக்காவில் இருக்கும் பில்லியனர்களின் எண்ணிக்கையை விட இந்தியாவில் கூடுதல் எண்ணிக்கை உருவாகலாம், என்கிறார். இந்தியா நேரு பிரதமராக இருந்த காலத்தில், கலப்பு பொருளாதாரம் என்ற பெயரில் நலத்திட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. இப்போது மோடி தலைமையிலான அரசு, நலத்திட்ட நடவடிக்கைகளை கைவிட்டு, முதலாளித்துவ கொள்ளை லாபத்திற்கு வழி வகுக்கிறது. உலகம் முழுவதும் கேடுகெட்ட முதலாளித்துவம் ஆதிக்கம் செலுத்துகிற காரணத்தால், நலத்திட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டு, மக்களின் மொத்த பொதுச் சொத்துக்களையும், கொள்ளை அடிக்கவும் பெரு முதலாளிகளுக்கு அனுமதிக்கிற வகையில், பாஜக ஆட்சி இந்த கோவிட் பாதிப்பு காலத்தையும், பொது முடக்க காலத்தையும் பயன்படுத்துகிறது.

 

அதைவிடவும் கொடுமையானது, டில்லி, மகராஷ்ட் ரா போன்ற மாநிலங்கள் 2013 க்கு பின் ஒரு அரசு மருத்துவமனை கூட திறக்கவில்லை என்பதாகும். டில்லியில் 16 மருத்துவமனைகளுக்கு திட்டமிட்டு பணிகள் துவங்கியும், ஒன்றைக்கூட கட்டி முடிக்கவில்லை. தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை அதிகரிப்பால், சற்று பரவாயில்லை. ஆனால் கிராமப் புற மற்றும் நகர்புற  சுகாதார மையங்களை மேம்படுத்த வேண்டிய தேவையை எச்சரிக்கையாக கொரானா காலம் சுட்டிக்காட்டுகிறது. 

 

எனவே மாற்றத்திற்கான பாதை சமத்துவத்தை நோக்கியே இருக்க முடியும். அதற்கு முன்னாள் ஜனநாயகம், சட்டம் ஆகியவைகளின் முன் அனைவரும் சமம், என்பதை நிலை நாட்ட போராடியாக வேண்டும். அதற்கான போராட்டத்தை தீவிரப் படுத்த வேன்டும் என்பதையே கொரானாவின் ஓராண்டு நமக்கு போதிக்கும் பாடமாகும்.