செவ்வாய், 2 மே, 2023

மே தின கட்டுரைகள் 3

 

மே தினம் விடுமுறை தினம் மட்டுமல்ல…

மே தினம் 1, உழைப்பாளர் தினம் உலகம் 8 மணி நேரம் என்பதை உழைப்பு நேரமாக தீர்மானிக்க வேண்டும், என்பதை போராடி பெற்ற வரலாற்று தினம். முதலாளிகளுடனும், அரசுகளுடனுமான போரில், உயிர் பலி தந்த, ரத்தம் சிந்திய தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள். வரால்ற்றில் இருந்து, உழைப்பு சுரண்டலை தடுக்கவும், புதிய உரிமைகளுகளுக்கான குரலை வலுப்படுத்தவும், உறுதி ஏற்கும் தினம். இந்த 2020 ஆண்டில், உலகம் பொது முடக்கத்திற்குள் தள்ளப்பட்ட காலத்தில், நம்மை கடக்க இருக்கிறது. முடங்கி இருக்கும் நமக்கு, போராட்ட வரலாறே, புதுத் தெம்பூட்டுகிறது. முதலாளித்துவ சுரண்டலை எதிர்க்கும் போராட்டத்தை வலுப்படுத்துகிறது. 


இந்தியாவில் உற்பத்தியும் தொழிலாளர்களும்:


இந்தியாவில், பிரிட்டிஷ் கால முதலாளித்துவ உற்பத்தி வளர்ச்சி முறை, புதிய தொழிலாளர்களை உருவாக்கியது. 1857-59 கால முதல் விடுதலைப்போர், இந்தியாவில் ரயில் பாதை அமைக்க வேண்டிய கட்டாயத்தை பிரிட்டிஷாருக்கு ஏற்படுத்தியது. இது இந்தியாவை நவீனப்படுத்தும் நோக்கம் கொண்டதாக, பிரிட்டிஷாரின் அவர்களை அண்டிப் பிழைத்த கூட்டமும் சொன்னது உண்மையில்லை. இந்தியாவை மறு உற்பத்தி நாடாக மாற்றி அமைப்பது, பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு தேவையான ஒன்று, என காரல் மார்க்ஸ் கூறியுள்ளார். (இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி குறித்து மார்க்ஸ்)


இந்தியாவில் முதலாளி வர்க்கம் என்ற ஒரு வர்க்கம் பிறப்பதற்கான நிகமுறையை, பிரிட்டிஷ் ஆட்சி துவக்கி வைத்தது. இந்த வர்க்கம், நிலப்பிரபுத்துவ உயர்குடி வர்க்கத்தில் இருந்து வேறுபட்டதாக இருந்தது. முதலாளி வர்க்கத்தின் பகைமை சக்தியான தொழிலாளி வர்க்கமும், முதலாளித்துவம் பிறக்கும் போதே, ஜனித்து விட்டது. அவ்வாறு உருவான தொழிலாளி வர்க்கம், அலையலையாய் எழுந்த விடுதலைப் போராட்டத்தில், முன்னணி பங்கு வகித்தது, என மார்க்சிய அறிஞர் இ.எம்.எஸ் குறிப்பிடுகிறார். ( இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு)


உலகத்திற்கு தொழிலாளர் எவ்வளவு வசியம் என்பதை தொழிலாளர்களே இன்னும் உணரவில்லை. உலகத்தாருக்கு வேண்டிய பொருள்கள் எல்லாம், தொழிலாளர்களே உற்பத்தி செய்கின்றனர். நெல்லாக இருந்தாலும், நீராவி கப்பல் ஆனாலும் தொழிலாளர்களின் உழைப்பினாலேயே கிடைக்கிறது. ஆனால் அந்த தொழிலாளி உயிர் வாழ்வதற்கான உணவு, உடை மற்றும் வீடுகள் பற்றாக்குறையாக உள்ளது. இது திட்டமிட்டே உருவாக்கப்பட்டுள்ளது. இதை எதிர்ப்பதும், தீர்வு காண்பதும், அவசியம். அதற்காக தொழிலாளர்கள் சங்கமாக ஒன்று சேர்வதும், போராடுவதும் தேவையாக உள்ளது, என ம. சிங்காரவேலர் கூறியுள்ளார். ஸ்வதர்மா எனும் இதழில் 1921 ல் எழுதிய கட்டுரையில் இவ்வாறு கூறியுள்ளார். (ம. சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம்)


மேலே குறிப்பிட்ட வளர்ச்சிப் போக்குகளில் இருந்தே இந்தியத் தொழிலாளி வர்க்கம், தனது உரிமைகளுக்கான போராட்டத்தை துவக்கியுள்ளது. சிங்காரவேலர் 1921ல் மேலே கூறிய சொல்லாடல்களின் பிறப்பிடமாக, சென்னையில் இருந்த பி&சி மற்றும் பின்னி ஆலைகளும் அதில் நடந்த போராட்டங்களும் அடித்தளமாக அமைந்தன. இந்திய சமூகத்தின் வளர்ச்சி முழுமையாக முதலாளித்துவ உற்பத்தி சார்ந்ததாக இல்லை. எனவே தான் சிங்காரவேலர், 1923 ல் மே தினம், என்ற உழைபாளர் தினத்தை, சென்னை திருவல்லிக்கேணியில் கொண்டாடிய போது, தொழிலாளர் விவசாயி கட்சியின், கெஜட் என்ற பெயரில், 22 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறிய கருத்துக்கள் இந்தியா முழுவதும், சுரண்டப்பட்ட தொழிலாளர்களுக்கு எழுச்சியூட்டுவதாக இருந்தது, அதன் காரணமாகவே, 1924 ஆண்டில் கயாவில்  நடந்த காங்கிரஸ் மாநாட்டில், தொழிலாளர் உரிமைகள் குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதை சிங்காரவேலர் முன் மொழிந்து பேசியுள்ளார். 


தொழிலாளர் விவசாயி கட்சியின், செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு, 1923 மே 1, கொடியேற்றம் முடிந்தவுடன், வெளியிடப்பட்டுள்ளது. சங்கம் வைக்கும் உரிமை, வேலை நிறுத்தம் செய்யும் உரிமை, வார விடுப்பு, 8 மணி நேரம் வேலை நேரமாக தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் கொண்டதாக, மேற்படி செயல் திட்டம் இருந்தது. 


இந்தியாவில் மே தின தியாகிகளை நினைவு கூறும் பேரணிகள்:


பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சிக்கு எதிராக தொழிலாளர்கள் குவியலாக பங்கெடுக்கும் வேகத்தை தந்தது, ஆலைகளுக்குள் இருந்த உழைப்பு சுரண்டல் ஆகும். உழைப்பு சுரண்டலில் இருந்து தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டுவது, பிரிட்டிஷாரை இந்தியாவில் இருந்து விரட்டுவது, என்ற அரசியல் போராட்டத்துடன் இணைந்தது, என்பதை இந்தியாவின் ஆலை தொழிலாளி வர்க்கம் நன்கு உணர்ந்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்திய போராட்டங்களில் தொழிலாளர் பங்கேற்பு அதிகரித்தது, இந்த பின்னணியில் தான். 


1920 முதல் 1940 கால கட்டத்தில் இந்தியாவின் பிரதான, நகரங்களில் தொழிலாளர்கள் ஏராளமான வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். ஒரு ஆலை தொழிலாளருக்கு ஆதரவாக, பிற பகுதி தொழிலாளர்கள் போராடுகிற வர்க்க ஒற்றுமையும், பெருமளவில் வெளிப்பட்டது. குறிப்பாக சென்னை ராஜதானி, போராட்டங்கள் நிறைந்ததாக மாறியது. இன்றைய ஆந்திராவின், எளூர் நகரில் சணல் ஆலை தொழிலாள்ர்களின் போராட்டம், கோவை, மதுரை, நெல்லை அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் நடந்த பஞ்சாலை போராட்டங்கள், நாகபட்டினம் ஸ்டீல் தொழிலாளர்கள், திருச்சி ரயில்வே தொழிலாளர்கள் சென்னை நகரில் டிராம் தொழிலாளர், பஞ்சாலை தொழிலாளர், பீடி தொழிலாளர், வெஸ்ட்டர்ன் இந்தியா மேச் ஃபாக்டரி தொழிலாளர்  மற்றும் டயீஸின் பிரஸ் தொழிலாளர்கள் என பல்வேறு வகைப்பட்ட தொழிலாளர்கள் போராட்டங்களில் பங்கெடுத்தனர்.  தண்டையார் பேட்டையில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்கெடுத்த பேரணி, சென்னை மாகாண நிர்வாகத்தை, நெருக்கடிக்கு ஆளாக்கியது. இது டிராம் வே தொழிலாளர்களின் உரிமைகளுக்கு வழிவகுத்தது. ஏகாதிபத்தியம் ஒழிக, முதலாளித்துவம் வீழ்க எனும் முழக்கங்கள், அரசுகளை நிர்பந்தித்தது, என, Colonialism, Labour and politics, என்ற நூல் குறிப்பிடுகிறது.


அதேபோல் இன்றைய கேரளத்தின் பகுதிகளான, கோழிக்கோடு, கண்ணூர், தலசேரி ஆகிய பகுதிகளிலும், பீடி, கயிறு தயாரித்தல் ஆகிய தொழில்களில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தீவிரமாக போராடினர். இந்த போராட்டங்கள் அனைத்தும் சென்னை மே தினக் கொடியேற்றம் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடந்தது. இப்போராட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை ஆலைப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, மாரிசன் என்பவர் தலைமையிலும், ராயல் என்பவர் தலைமையிலும், வெவ்வேறு காலங்களில் இந்தியாவிற்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக சில சீர்திருத்தங்களும் செய்தனர். ஆனாலும் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்கள் தொடர்ந்தது. 


1936,1937,1938 ஆண்டுகளில் மே தின பேரணிகள் படிபடியாக அன்றைய சென்னை ராஜதானி முழுவதும், பரவியது. விசாகபட்டினம், ராஜமுந்திரி, நெல்லூர், சென்னை, மதுரை, கோவை, நாகப்பட்டினம், கடலூர், திருச்சி, திருநெல்வேலி, கோழிக்கோடு, கண்ணூர், தலசேரி ஆகிய இடங்களில் 6000 முதல் 10000 ஆயிரம் தொழிலாளர்கள் வரையிலும் பேரணிகளில் பங்கெடுத்துள்ளனர். தொழிலாளர்கள் மேலே குறிப்பிட்ட தினங்களை கடந்து, ரஷ்ய புரட்சி தினம், காரல் மார்க்ஸ் தினம், லெனின் தினம் ஆகியவைகளையும் நினைவு கூர்ந்துள்ளனர். இந்த நாள்களில் தொழிலாளர்களுக்கு அன்றைய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உரை நிகழ்த்தியுள்ளனர். 


மே தினம் விடுமுறை தினம்: 


சிக்காகோ வீதிகளின் ரத்ததுளிகளும், தூக்கிலிடப்பட்ட தியாகிகளும், சுட்டுக் கொல்லப்பட்டவர்களும் நம் தலைமுறையிலும், வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள், அவர்கள் தந்த உரிமைப் போராட்டம், என்கிற மூச்சுகாற்று வழியாக, தொழிலாளர்கள் இன்றளவும் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் நினைத்து பார்க்கும் நாள் அல்ல. ஒவ்வொரு நாளும் நினைக்க வேண்டிய வரலாறு. தலைமுறை தலைமுறையாக நினைவுகளும், தியாகமும், போராட்டமும் கடத்தப்படும் போது தான், சுரண்டலை ஒழிக்கும் நெருப்பை அணையாமல் காக்க முடியும். 


1886 ல் பற்ற வைக்கப்பட்ட 8 மணி நேர வேலை, 8 மணி நேர உறக்கம், 8 மணிநேரம் ஓய்வு என்ற முழக்கம் அங்கீகரிக்கப்பட்டது. அதற்காக, ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், ஜார்ஜ் எங்கல், சாமுவேல் ஃபில்டன் ஆகியோர் தூக்கிலப்பட்டனர். பலர் ஊர்வலத்திலேயே கொல்லப்பட்டனர். லட்சங்களில் பங்கேற்ற தொழிலாளர் பேரணி, பலபத்தாண்டுகளாக நடந்த பிரச்சாரத்தின் விளைவாகும். இதன் தொடர்ச்சியாக பாரிஸ் நகரில் நடந்த தொழிலாளர் மாநாட்டில், பிரடெரிக் ஏங்கெல்ஸ் சர்வதேச அளவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து நெருப்பு கனன்று கொண்டிருந்ததே ஒழிய, தீர்வு உருவாகவில்லை. 


முதலில் 8 மணிநேர வேலை என்பதை சட்டமாக்கி, மே தினப் போராளிகளையும், தியாகிகளையும் அங்கீகரித்தது, சோவியத் யூனியன் தான். லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றி, நிறைவேற்றிய சட்டங்களில் முக்கியமானதாக எட்டு மணி நேர வேலை அமைந்தது. அன்றைய தினத்தை தொழிலாளர் தினமாக, ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. மார்க்சிம் கார்கி யின் தாய் நாவலில், மே தின கொண்டாட்டத்திற்கான தயாரிப்புகள் விவரிக்கப்படும், கொடியை நீங்கள் தான் சுமந்து செல்ல வேண்டுமா? அப்படியானால் மீண்டும் சிறைக்கு போக போகிறீர்களா? போன்ற கேள்விகள் நாவலின் நாயகன் பாவெலை நோக்கி பாயும். அந்த சிறிய ஊரில், ஆலை தொழிலாளர்கள் மே தின வரலாறு குறித்த துண்டு பிரசுரங்களை, வாசிப்பதும், பலருக்கும் விநியோகிப்பது, குதுகலத்துடனும், திகிலாகவும் விவரிக்கப்படும். இந்த பெருமைக்குரிய கதையாடல், உரையாடல், விவரிப்புகள் தான், ரஷ்ய மக்களை புரட்சிப் பாதையில் அணிவகுக்க செய்தது. எனவே சோவியத் யூனியன் எட்டு மணி நேர வேலை குறித்து சட்டம் இயற்றியது, ஆச்சரியமல்ல.


இன்று பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகள் மே தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளன. இந்தியாவிலும் அது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிங்காரவேலர் கொடிஏற்றிய பாரம்பரியம் காரணமாக துவக்கத்திலேயே விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. கேரளா அடுத்ததாகவும், மேற்கு வங்கம் 1967 ல் ஐக்கிய முன்னணி அரசு அமைந்த போது, ஜோதிபாசு முயற்சியில் அறிவிக்கப்பட்டது. கர்நாடகா, ஆந்திரா, திரிபுரா, கர்நாடகா, கோவா, பீகார், அஸ்ஸாம், ஜார்கண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் மட்டுமே பொது விடுமுறையை கடைப்பிடிக்கின்றன. இதர மாநிலங்கள் இந்திய பெருமுதலாளிகளின் அழுத்தம் காரணமாக அடங்கி கிடக்கின்றன. மத்திய அரசு தனது அதிகாரத்திற்கு உட்பட்டு விடுப்பு அறிவிக்க தயாரில்லை. மகாராஷ்ட் ரா மாநிலத்தில் மே முதல் விடுமுறை தான், அது தொழிலாளர் தினம் என்பதால் அல்ல, மாறாக மகராஷ்ட் ரா மாநிலம் 1960, மே 1 அன்று உதயம் ஆன தினம் என்பதால், இப்படி தான் இந்தியாவில் நிலை உள்ளது. 


மே தினப் பூங்கா:


சென்னை மாநகரம் தொழிலாளர்களின் போராட்ட வரலாறு கொண்ட நகரம் ஆகும். குறிப்பாக சிந்தாதிரிப்பேட்டை, சென்னை மௌண்ட் ரோடு ( இப்போது அண்ணாசாலை), தொழிலாளர்களின் போராட்ட வரலாறை சித்தரிக்கும் அடிஅயாளம் ஆகும். குறிப்பாக 1920 துவங்கி  1970-75 வரையிலும் தொழிலாளர்கள் தங்களின் கூட்டு பேர உரிமைக்காக, நடத்திய வீரம் செறிந்த போராட்டம் நடத்திய பகுதி ஆகும். சிம்சன் ஆலை, மே தினப் பொருள் கூட்டம், பேரணி ஆகியவை அதிக தாக்கத்தை உருவாக்கிய பகுதி. 


1869 ல் சென்னை நகராட்சி, 14.5 ஏக்கர் பரப்பளவில் அமைத்த பூங்கா, சென்னை ராஜதானியின் 10 வது கவர்னராக இருந்த, ஃபிரான்சிஸ் நேப்பியர் பெயரில் அமைக்கப்பட்டது. 1950 ல்., சென்னை ராஜதானியின் விவசாய அமைச்சராக இருந்த, ஏ.பி. ஷெட்டி பொது மக்களும் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் திறந்து வைத்தார். அதுவரை பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை என தெரிகிறது. 1989 ல், இந்த பூங்கா மே தினப் பூங்கா எனப் பெயர் சூட்டப்பட்டது. இது வெறும் தகவல் அல்ல. பத்திரமா பாத்துக்கங்க, என்பது போலான, மிக முக்கிய சாதனை, மைல்கல். நின்று இளைப்பாறி பாய்ச்சல் வேகத்தில் முன்னேறுவதற்கான, தாங்கல்.


இப்போதைய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான போரட்டத்தை கட்டமைக்கும் நுணுக்கங்களைக் கற்றுத் தரும் இந்த வரலாற்றை, பாதுகாப்போம். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்துவோம்.. இது நம் வரலாறு.

மே தின கட்டுரைகள் 2


சவால்களை முறியடிக்க முடியும்

 ஆளும் அரசுக்கு எதிராக அல்லது, அடக்கிய கருத்தாக்கத்திற்கு எதிரான கலக குரல் எல்லாகாலத்திலும் இருந்துள்ளது. உலகம் உண்ண உண், உலகம் உடுக்க உடுத்து போன்ற, சமத்துவ எண்ணங்களும் ஆங்காங்கு, எல்லா காலத்திலும் பிரதிபலிக்கவே செய்துள்ளது. வலியோர் வென்றதாக சொல்லப்படும் ஒவ்வொரு நிகழ்விலும், எளியோரின் முன்னேற்றம் இல்லாமல் இல்லை. அது பௌதீக சக்தியாக ஆட்கொண்டு, எளியோரை வழி நடத்துவது, கருத்தியல் தளத்தில் அடையும் முன்னேற்றம் சார்ந்ததாகும். காரல் மார்க்ஸ் அத்தகைய கருத்தியல் பலத்தை, பாட்டாளி வர்க்கத்திற்கு அளித்துள்ளார். 1808 ல், பிலடெல்பியா நகரில் கட்டுமானத் தொழிலாளர்கள், தங்களின் வேலைநேரத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த போது, மார்க்ஸ் பிறந்திருக்கவில்லை. ஆனால் தாங்க முடியா பளுவை இறக்கி வைக்கும், ஆறுதலாக வேலை நேர குறைப்பை கருதுவதற்கும், சுரண்டலை தடுத்து, சமத்துவத்தை நோக்கி பயணிப்பதற்கான வழியாக வேலை நேரம் குறைக்கப்படுவதை பார்க்க வேண்டும். அவசிய உழைப்பு நேரம், தனக்காகவும், உபரி உழைப்பு நேரம் சமுதாயத்திற்காகவும் இருப்பதை, உறுதி செய்வது, உபரி உழைப்பு நேரத்தை தனியார் வசம் அல்லது, ஏகபோக பெருமுதலாளிகள் வசம் குவிப்பதற்கும் வேறு பாடு நிறைய இருக்கிறது, என்பதை காரல் மார்க்ஸ் தெளிவு படுத்துகிறார்.


1886 ல் சிக்காகோ வீதிகளில் போராடிய லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மீது காவல்துறை கொடிய அடக்கு முறையை ஏவிவிட்டது. பலர் கொல்லப்பட்டனர். தலைவர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை என்ற பெயரில் நாடகம் நடத்தி, 4 பேர், தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைசஸ், சாமுவேல், ஜார்ஜ் எங்கெல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். அன்றைய ஜனநாயக சக்திகள் இந்த போராட்டத்தின் நியாயத்தை வலியுறுத்திய அடிப்படையில், கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் சட்டமாக நிறைவேற்றப்படவில்லை. மேற்படி தியாகிகளுக்கு தொழிலாளர்கள் நினைவுச்சின்னம் அமைக்கும் முன்னரே, காவல் துறை 1888 ல் மேற்படி சிக்காகோ வீதியில், ஹே மார்க்கட்டில் காவல் துறையினருக்கு, சிக்காகோ காவல்துறையினர்,  நினைவுச்சின்னம் வைத்தனர். 1889 ல் தான் தொழிலாளர்கள் இறந்த தொழிலாளர் நினைவாக நினைவு சின்னம் அமைத்தனர். மே தின தியாகிகளின் வரலாறு பேச,பேச, 1960 ல் ஹே மார்க்கட்டில் இருந்த காவலர்களுக்கான நினைவு சின்னம், அமெரிக்க மாணவர்களால் இடிக்கப்பட்டது, இப்போது அது காவல் அலுவலகத்திற்குள்ளேயே வைக்கபட்டுள்ளது. எனவே வரலாறு பேசப்படுவது, ஏதாவது ஒரு கட்டத்தில் பயன்படும்.


இன்றைய தலைமுறை அல்லது நவீன பாட்டாளி வர்க்கம், எட்டு மணிநேரம் வேலை நேரம் என்பதை, அரசு சட்டங்களால் நிலை நாட்டியது என புரிந்து கொள்கின்றனர். சட்டங்கள் உருவாக நடந்த போராட்டங்களையும், அடக்குமுறைகளையும், சிறை, சித்திரவதைகளையும், புரிந்து வினையாற்றுவதில்லை. அதையே முதலாளித்துவம் விரும்புகிறது. இந்த முதலாளித்துவ விருப்பதின் விளைவே, அன்மையில், பாஜக ஆட்சி வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்த முடிவு செய்ததாகும். ஏற்கனவே உருவான எட்டு மணி நேரத்திற்கான சட்ட வழிகாட்டுதலின் வரலாற்றை அறிந்திருக்கும் தலைமுறையாக இன்றைய தலைமுறை இல்லாதது, முதலாளித்துவத்திற்கு சாதகமாக உள்ளது. டிரோன் கேமராக்கள் விரட்டும், விளையாட்டு வீரர்களை, நக்கலாக சித்தரிக்கும் ஊடகங்கள், 12 மணிநேரமாக வேலை நேரம் உயர்த்துவதை பெரிய செய்தியாக படம்பிடிக்கவோ, விவாதிக்கவோ செய்யவில்லை. 


தாராளமயத்தின் ஆதிக்கமும், வரலாற்று பின்னடைவும்:


வேலைநேரம் உலகத்தில் வளர்ந்த நாடுகள் என சொல்லிக்கொள்ளும் நாடுகள் அனைத்திலும், குறைக்கப்பட்டது. இதற்கு அழுத்தம் தந்தது, சோவியத் யூனியன் என்ற மகத்தான சோசலிஸ நாடு ஆகும். லெனின் தலைமையில் அரசமைத்த பாட்டாளி வர்க்கம், எட்டுமணி நேரம் ஒரு நாளைக்கு வேலை நேரம், என்பதை முதலில் சட்டமாக்கியது. அதன்பின்னர் தான் பிற நாடுகள் இவ்வாறுசட்டம் இயற்றின. அதன் பின் சோவியத் சோசலிச அரசு, வேலை நேரத்தை ஆறு மணிநேரமாக குறைத்தது, அதுவும் இதர முதலாளித்துவ நாடுகளுக்கு அழுத்தத்தை உருவாக்கியது. குறிப்பாக ஐ.எல்.ஓ என்ற சர்வ தேச தொழிலாளர் அமைப்பு, வாரம் 40 மணிநேரம் வேலைநேரம் என வழி காட்டியது. இதைத் தொடர்ந்தே பெரும்பாலான நாடுகள் தங்கள் நாடுகளில் வேலைநேரத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் உருவானது. அவ்வாறு குறைக்கவில்லை எனில், தங்கள் நாட்டு இளைஞர்கள் சோசலிச சோவியத் யூனியனைப் போல் புரட்சி செய்வர், என்ற அச்சம் இருந்தது. எனவே வேலை நேர குறைப்புக்கு போராட்டம் ஒரு காரணம் எனில், கருத்தியல் ரீதியில் மாற்று அரசு ஒன்றின் இருப்பும் முக்கிய பங்கு அளித்தது.


சோசலிச சோவியத் யூனியன் பல நாடுகளாக சிதறுண்டு, அரசியல் பின்னடைவை சந்தித்த நிகழ்வும், உலகை தாராளமய பொருளாதரக் கொள்கை மேலாதிக்கம் செய்வதும் ஒன்றாக நடந்தது. அநேகமாக 1990 க்குப் பின் தொழிலாளர் இயக்கம் பெரும் பான்மையான நாடுகளில் தங்களுக்கான புதிய சட்ட உரிமைகளைப் பெற முடியவில்லை. நிரந்தர வேலை வாய்ப்பே கேள்விக்கு உள்ளான நிலையில், வேலை நேர குறைப்புக்கான போராட்டங்களோ, வேலையின்மையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளோ, தாராளமய கொள்கை கொண்ட அரசுகளால் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக ஒப்பந்த ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, அமர்த்து பின் துரத்து போன்ற நிரந்தரமற்ற வேலைத் தன்மை, அவுட் சோர்சிங் என்ற அயல்பணி ஒப்படைப்பு போன்றவை அதிகரித்து, வேலையில் இருப்போரின் உரிமைகளை அச்சப்படுத்திக் கொண்டே இருக்கிறது, முதலாளித்துவம். இதன் தொடர்ச்சியாக அன்மையில் ஆர்ட்டிபிசியல் இண்டெலிஜெண்ட் என்ற செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள், தானியங்கி இயந்திரங்கள போன்றவையும் சவாலாக நவீன தொழிலாளி வர்க்கத்திற்கு உள்ளது.


மேலே குறிப்பிட்ட தாராளமய பொருளாதார கொள்கை அமலாக்கத்தை, எதிர்க்க வேண்டிய மக்கள் அரசியல் ரீதியில் அல்லது வர்க்க ரீதியில் ஒன்று சேர சில தடைகள் முன்னுக்கு வருகின்றன. இதை நாடுகள் பயன்படுத்திக் கொள்கின்றன. ஏற்கனவே இருக்கக் கூடிய சமூக முரண்பாடுகள் இக்காலத்தில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கூடுதலாக வெளிப்படுகின்றன. குறிப்பாக முதலாளித்துவ வளர்ச்சி இருந்தாலும், உழைப்பு சுரண்டல், சமூக சுரண்டலுக்கு பழகி போன ஆளும் வர்க்கம், தாராளமய காலத்தில், வேகமாக வளர்ச்சி பெற்றதும், தொழிலாளி வர்க்கத்திற்கு கடுமையான சவாலை உருவாக்கியுள்ளது.

சாதிரீதியில் அணி சேர்ந்து, 20 ஆண்டுகள் முடிந்த நிலையில் அடுத்த தலைமுறையை மதரீதியில் ஒருங்கிணைக்கும் பணிக்கு தாராளமய பொருளாதார கொள்கை உத்வேகம் அளிக்றது. 


இந்தியாவில் பாஜக “வளர்ச்சி” என்ற முழக்கத்தை முன்வைத்து வரலாறை பின்னோக்கி நகர்த்துகிறது. போராடி பெற்ற ஜனநாயக உரிமைகளையும், தொழிலாளர் உரிமைகளையும் மெல்ல பறித்து வருகிறது. கொரானா பொது முடக்க காலத்தை பயன்படுத்தி, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணிநேரமாக உயர்த்துவது, ஆலை தொழிலாளர்களுக்கு ஊதியம் தர மறுக்கும் நிர்வாகங்களை மறைமுகமாக ஆதரிப்பது போன்றவை உதாரணங்கள் ஆகும். கொரானா பாதிப்பிற்கான காரணத்தை அமெரிக்கா சீனா மீது சுமத்துவது போல், இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீது சங்கிகள் கூட்டம் சுமத்தியது. ஒட்டு மொத்தமாக வலது சாரி திருப்பம் இத்தகைய திசை திருப்பும் அரசியலுக்கு பங்களிக்கிறது. தொலைக்காட்சி பார்க்கும் உழைக்கும் மக்களுக்கு, வெளியில் செல்வது குறித்த அச்சத்தை ஊட்டும் வகையில், டிரோன் கேமராமூலம் விளையாடுபவர்களை விரட்டுவதை காணமுடிகிறது. விளையாடுவது அவ்வளவு குற்றமாக கருதப்படும் நாட்டில், உழைப்பு நேரத்தை அதிகரிப்பது, தொழிலாளர் விரோத மசோதாக்களை சட்டம் ஆக்குவது ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 


சவால்களை முறியடிக்கும் வலிமை தொழிலாளி வர்க்கத்திற்கு உண்டு:


சவால்களை எதிர்ப்பது, சுரண்டலின் அளவைத் தக்கவைக்க அல்லது மேலும் அதிகரிக்கும் அதிகாரத் திணிப்பை எதிர்த்த போராட்டத்தின் பகுதியாகும். எந்தவிதமான கல்வி, சமூக மாற்றத்திற்கான வழிகாட்டுதல் ஆகியவை இல்லாத நிலையில், மக்கள் எழுச்சியை, சில நபர்களே உருவாக்கினர். அதற்காக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டது. சிறை வாழ்க்கை கூட பரவாயில்லை, ஆனால் சிரச்சேதங்கள் அதிகம் இருந்தன. ஜூலியஸ் பூசிக் என்ற பத்திரிக்கையாளன், தனது 40 வயதில் முதலாளித்துவ சமூகத்திற்கு எதிராக அணி திரட்டிய காரணத்திற்காக தூக்கிலிடப்பட்டார். சிறைசாலையில், மே தினக் கொடியேற்றும் நிகழ்வையும் பதிவு செய்துள்ளனர். பகத்சிங், லெனின் பிறந்தநாளுக்கு சிறையில் இருந்து தந்தி அனுப்பிய வரலாறு, தூக்கு தண்டனைக்கு முந்தைய நாளில் அரசும் புரட்சியும் புத்தகம் படித்ததுதும், உலக இளைஞர்களுக்கு எழுச்சியை தந்தது. சே குவேரா உலகம் முழுவதும் ஒரு கலகக்காரனின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் இரு கைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில், சுட்டுக் கொல்ல முயற்சித்த காவல் அதிகாரியிடம், நில் எழுந்து நிற்கிறேன், அதன் பின் சுடு, எனக் கூறியதாக நாம் படிப்பது, நமது மனவலிமைகளை அதிகரித்து கொள்ள மட்டுமல்ல. முதலாளித்துவத்திற்கான சிம்ம சொப்பனம், தொழிலாளி வர்க்கம் என்பதை, சுட்டிக் காட்ட. 


இதெல்லாம், கருத்தியல் தாக்கத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. மார்க்ஸ் சொன்னவைகளுடன் பொருந்தி போக கூடியதே. முதலாளித்துவம், தனக்கான சவக்குழியைத் தானே தோண்டுகிறது, என்பதே அது. ஆலைக்குள் குவிந்து இருக்கும் தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக ஒன்று சேர்வது தவிர்க்க முடியாதது. உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற முழக்கம், முதலாளித்துவ சுரண்டல் முறைக்கு, எதிரான வலுவான கருத்தாயுதம் என்பதையும் பார்க்கிறோம். ஆனால் இந்த முழக்கங்கள் உண்மையாவது கள செயல்பாடுகளும், அமைப்பின் முயற்சிகளுமாகும். எனவே மே தின சூளுரையோ, உழைப்பு சுரண்டலுக்கு எதிரான நடவடிக்கைகளோ, எதுவானாலும், பாதிப்புக்கு ஆளானோரைத் திரட்டுவதில் இருந்தே வெளிப்பட முடியும். 


இன்று ஆலைகளில் ஒப்பந்த, பயிற்சி தொழிலாளர்கள், படித்த வல்லுநர்கள் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகின்றனர். நவீன இயந்திரங்கள், மற்றும் தொழில் நுட்பம் காரணமாக அதிகரித்து வரும் வேலை இழப்புகள் அல்லது அதிகரித்து வரும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆகியவை கலகத்திற்கான, பெரும்படையாக உள்ளது. ஆனால் இந்த பெரும் படை ஆளும் வர்க்கத்தின் சமூக காரணிகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. பொருளாதார சுரண்டலையும், சமூக சுரண்டலையும் இணைந்து நடத்த, திட்டமிட்ட முயற்சிகள் போதுமான அளவிற்கு சாதகமாக அமையவில்லை, இருந்த போதும் அதை சலிப்பில்லாமல் தொடர்வதும், ஒன்றுபட்ட முயற்சிகளை அதிகப்படுத்துவதும் இன்றைய தேவையாக உள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் நடந்த போராட்டங்கள் மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. இப்போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்துவதே, இந்த 135 வது மே தினத்தின் உறுதி ஏற்பாக இருக்க முடியும்.