கல்வி உரிமையை பாதுகாப்போம்
அதிகார குவிப்பை விரும்பும்
சமூகத்தை இன்றைய முதலாளித்துவம் கட்டமைக்கிறது. அதற்கு நவ தாராளமய கொள்கை பாதை அமைக்கிறது.
இந்த பாதையில் மட்டுமே அரசுகள் பயணிக்க முடியும் என்ற நிலையை, முதலாளித்துவ கட்சிகள்
மீது வலிந்து திணிப்பது அதிகரிக்கிறது. குறிப்பாக பாஜகவின், வகுப்புவாத அரசியலும்,
தாராளமய கொள்கைகளும் கை கோர்த்து நடத்தும் தாக்குதல்களில் மாநில அரசுகளின் உரிமையும்
பறி போகும் அபாயம் அரங்கேறுகிறது. இதை தடுப்பதும், மாநில உரிமைகளை வலுப்படுத்துவதும்,
அதிகார பரவலை மேம்படுத்துவதும் அவசியம். இந்திய ஆட்சி நிர்வாகத்தில் உள்ள மூன்றடுக்கு
முறை மிக சிறந்த பங்களிப்பை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக செய்திருக்கிறது.
ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள். இவை மூன்றுக்கும் வளர்ச்சி
குறித்த வாதத்தில், பங்கிருப்பதை உணராமல், வளர்ச்சியின் பரிமானத்தை முன்னெடுக்க முடியாது.
அதிகார பரவலில் மார்க்சிஸ்ட்
கட்சி:
அதிகார
குவிப்பிற்கு மாற்றாக மார்க்சிஸ்ட் கட்சி அதிகார பரவலை முன் வைக்கிறது. வளர்ச்சி
என்பது உள்ளூர் பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்து, வருவாய் உயர்வு மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றை,
மேலும் மேலும் பரவாலாக்க உதவுவது என, மார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிடுகிறது.
அண்மையில் கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சி, மக்கள் திட்டம் உருவாக்கப் பட்ட 25 ஆவது
ஆண்டு நிகழ்வை கொண்டாடியது. தோழர். இ.எம்.எஸ் அவர்கள் முன் முயற்சியில் மேலும்
மேலும் அதிகாரப் பரவலுக்கான விவாதத்திற்கு வடிவம் கொடுக்கப் பட்டதை விழா நினைவு
கூர்ந்துள்ளது.
அரசு நடத்திய பொது
சுகாதார நிறுவனங்களை, 1991ல் மக்கள் 28 சதம் பயன்படுத்தினர், 2014ல் 38 சதமாகவும்,
கோவிட் காலத்தில் 48 சதமாகவும் உயர்ந்துள்ளது. அதேபோல் தனியார் பள்ளிகளை கைவிட்டு,
அரசு பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்றோர் எண்ணிக்கை 6 லட்சம் ஆகும். இது கட்டணம்
செலுத்த முடியாமை காரணமாக அல்ல. அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்த காரணத்தால் ஆகும்.
இதற்கு அடிப்படையாக மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில், உள்ளாட்சிகள் மூலமான திட்ட
செலவுகளுக்கு ஒதுக்கப்பட்ட 36 சதம் நிதி ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் தொடர்வதால்
அதிகாரப் பரவல், உள்ளூர் மட்ட செயல்பாடு, வளர்ச்சி ஆகியவை பிரதிபலிப்பதாக இந்தியன்
எக்ஸ்பிரஸ் ஏடு உள்ளிட்ட இதழ்கள் கூறுகின்றன.
கல்வியில் அதிகார குவிப்பு:
சமூக வளர்ச்சியில் முக்கியப்
பங்கு வகிப்பது கல்வி முறை. இளம் தலைமுறைக்கு வளர்ச்சியை, வரலாற்றின் அடிப்படையிலும்,
மேலும் முன்னேறி அடைய வேண்டிய இலக்கையும் கற்றுத் தருவது மிக அவசியத் தேவையாக உள்ளது.
ஆனால் இந்திய கல்வி முறை, படிப்படியாக மையப்படுத்தப் பட்டு வருகிறது. பாஜக ஆட்சி அதை
முழுநேர வேலையாக செய்து வருகிறது. முதலாளித்துவம் கல்வியை வணிகமயமாக்க, ஒரு சரக்காக
மாற்றி உள்ளது. சிந்தாந்த ரீதியில் அதிகார குவிப்பிற்கான ஒரு கருவியாக கல்வியை கைப்பற்றும்
பணியை பாஜக செய்துள்ளது. கள்ளும் குரங்கும் இணைந்ததைப் போல், முதலாளித்துவமும், பாஜக
வகுப்புவாதமும் இணைந்துள்ளது. கல்வி பாஜக ஆட்சியில், வணிகம், காவி, மையப் படுத்தல்
என்ற மும்முனைத் தாக்குதலுக்கு இரையாகி உள்ளது.
உண்மையில் விடுதலை பெறும் போது
டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலான கல்விக்குழு தொடர்ந்து வரிசையாக, கோத்தாரி,
ராமமூர்த்தி, யஷ்பால் வரை சொல்லும் அம்சம், விடுதலைக்கு பின் இந்திய வளர்ச்சிக்கான
அடித்தளத்தை மேம்படுத்தும் வகையில் இருந்தது. அரசு கல்வி நிறுவனங்களை உருவாக்கவும்,
பாடத்திட்டத்தை வடிவமைக்கவும், ஜனநாயக ரீதியில் சில வாய்ப்புகள் வழங்கப்பட்டது.
தாராளமயமாக்கல் கொள்கை அமலாக்கம்
துவங்கிய பின், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு ஏகபோக நிறுவனங்களின் மூலதனக்குவிப்புக்கு
தேவையான டெக்னோகிராட்ஸ் களை ( தொழில் நுட்ப பணியாளர்களை) உருவாக்கும் வேலையை கல்வித்
துறை செய்ய வேண்டும் என்பதாக மாற்றப் பட்டது. இத்தகைய மாற்றத்திற்கு, பிர்லா - அம்பானி
தலைமையிலான கல்விக்குழு வழிவகுத்தது. இந்த குழுவை வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி
2000 ஆண்டில் அமைத்தது. இன்று நாம் எதிர்க்கும் தேசிய கல்விக் கொள்கைக்கான அடித்தளமாக
அது அமைந்தது.
நீட், க்யூட், நெக்ஸ்ட், என்.டி.ஏ:
மருத்துவ கல்விக்கான மாணவர்
சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாக நீட் (National Eligibility cum Entrance Test) ஒன்றிய
பாஜக அரசினால் அமல் படுத்தப் பட்டு வருகிறது. இது அகில இந்திய அளவில் நடத்தப் பட்ட
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேர்வு மற்றும் மாநிலங்கள் நடத்திய தேர்வு முறைகளை ரத்து
செய்து, ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு எடுத்து கொண்டது. இதை தமிழகத்தில் அமலாக்க வேண்டாம்
என்பதற்கான குழு அமைக்கப்பட்டு ஒரு அறிக்கையும் பெற பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் நீட்
தேர்வு வேண்டாம் என்றும், மாநில அரசே மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு உரிய தேர்வுகளை
நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் தீர்மானம் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு, ஆளுநர் மற்றும்
ஒன்றிய பாஜக அரசு காரணமாக அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது மாநில அரசின் சட்டம்
இயற்றும் அதிகாரத்தை பறிப்பது மட்டுமல்ல. கல்வி பொதுப்பட்டியலில் இருந்து, ஒன்றிய அரசின்
பட்டியலுக்கு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், அபகரிப்பதை வெளிப்படுத்துகிறது.
நெக்ஸ்ட் ( The National
Exit Test) மருத்துவ கல்வியின் முதுகலைப் படிப்பிற்கான நுழைவு தேர்வு என ஒன்றிய அரசு
அறிவித்துள்ளது. நீட் அல்லது நெக்ஸ்ட் இரண்டுமே மருத்துவ மாணவர் சேர்க்கையில், பணம்
படைத்தவருக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது. 2006 ல்,
இந்தியா முழுவதும், மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப் பட்டோர் இட ஒதுக்கீடு 27 சதம்
அமலான போது, பெரும் எதிர்ப்பை பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகள் தூண்டி விட்டனர்.
அப்போது நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அமர்த்தியா சென், தென் மாநிலங்களில், ஏராளமான
பிற்படுத்தப் பட்ட சமூகத்தினர் மருத்துவர்களாக பணி புரிவதையும், மக்களுக்கு நெருக்கமாக
மருத்துவம் செய்ய அவர்களால் முடிகிறது என்றும் கூறி இட ஒதுக்கீட்டின் தேவையை வலியுறுத்தினார்.
ஆனால் தற்போது, ஒன்றிய பாஜக அரசின் செயல்கள் காரணமாக, மீண்டும் மருத்துவ கல்வியை, மருத்துவர்களை,
மக்களிடம் இருந்து விலக்கி வைக்கும், கார்ப்பரேட்மயமான சிந்தனையை கொண்டிருக்கிறது.
இந்த செயல்பாடுகளை மாநில அரசு வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலையை உருவாக்குகிறது.
பல்கலைக் கழக மாணவர் சேர்க்கைக்கு,
க்யூட் (Common University Entrance Test) இது 2022 முதல் அமலாகிறது. பல்வேறு தேர்வுகள்
எழுதும் சிரமத்தை மாணவர்களுக்கு குறைக்க இந்த தேர்வு முறை உதவும் என்ற பொய் காரணத்தை
ஒன்றிய பாஜக கூறுகிறது. உண்மையில் தேசிய கல்விக் கொள்கை அமலாக்கத்திற்காக சமூகத்தைப்
பதப்படுத்தும் திட்டம் இதற்குள் அடங்கி இருக்கிறது. 80 பல்கலைக் கழகங்களுக்கான தேர்வாக
இது அமையும். இதில் அந்தந்த மாநில மாணவர்களுக்கு கிடைத்து வந்த வாய்ப்புகள் சுருங்கி,
தேசம் முழுவதுமான மாணவர்கள் போட்டியிடுவதும், பெரும் தொலைவு சென்று பயிலும் சூழல் உருவாவதும்,
அதிகரிக்கும். இது உயர் கல்வி பரவலையும், ஏழை மாணவர்களின் வாய்ப்பை பறிப்பதாக உள்ளதை
உணர வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக மேற்படி
தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்கள் சிறப்பு பயிற்சிக்கு செல்லவும், அதற்காக பெரும் பொருள்
செலவு செய்ய வேண்டிய தேவையும் அதிகரிக்கிறது. இது மேலும் மேலும் வசதியானவர்களுக்கான
வாய்ப்பாகவும், அதிகார குவிப்பின் வெளிப்பாடாகவும் உள்ளது. இதன் மூலம் மாநில அரசுகள்
உரிமை இழப்பதும், மாநில மாணவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதும், மாநில அரசுகளின் சமூக
நீதி கொள்கைகளை முடக்குவதும் நடைபெறுகிறது.
என்.டி.ஏ (National
Testing Agency) இதுவும் இன்றைய பாஜக ஆட்சியினால் 2017 முதல் அமலாக்கப்பட்டு வருகிறது.
ஒன்றிய கல்வி அமைச்சகத்திற்கு கீழ், தன்னாட்சி அந்தஸ்து கொண்ட அமைப்பாக உள்ளது. இது
நடத்தும் தேர்வுகளும் அதன் முடிவுகளுமே, உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களின் எதிர்காலத்தை
தீர்மானிக்கிறது. பாஜக வழக்கம் போல் சொல்லும் வியாக்கியானம், உலக தரத்தில் உள்ள பல்வேறு
தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள இந்த தேர்வு முகமை பயன்படும் என்பதாகும். முழுக்க முழுக்க
தனியார் கோச்சிங் நிறுவனங்களை உருவாக்கவும் பயன்படுகிறது. இந்த 5 ஆண்டுகளில், பைஜு,
ஆகாஷ், போன்ற பெயர்களில் பல நூறு கோச்சிங் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. இவை அனைத்தும்
கார்ப்பரேட் தன்மை கொண்டு செய்ல்படுவதையும் காண முடிகிறது. இதிலிருந்தே பாஜக ஆட்சியாளர்கள்
முன் வைத்துள்ள நோக்கத்தை அறிய முடியும்.
மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்,
மக்கள் ஜனநாயக திட்டம் பள்ளிக்கல்வி வரை இலவச, கட்டாய கல்வி வழங்கப்படும் என்றும்,
மாநில மொழிகளில் பயிலும் வாய்ப்பை அதிகப்படுத்தப்படும் என்றும், கூறுகிறது. அரசு கட்டமைப்பு
துறையில் அனைத்து தேசிய இனங்களுக்குமான சமத்துவம், மாநில சுயாட்சி ஆகியவை உறுதி செய்யப்படும்
என கூறுகிறது. அனைத்து நிர்வாகப் பணிகளும் சம்மந்தப் பட்ட மாநிலம் அல்லது உள்ளாட்சி
கட்டுப்பாட்டில் இருக்கும். இவ்வாறு பல்வேறு வகையில் அதிகார பரவலை வலியுறுத்துகிறது.
ஜூலை 23 அன்று மதுரையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு இந்த நோக்கத்தை வலுப்படுத்தவும்,
ஒன்றிய பாஜகவின் அதிகார குவிப்பை தகர்க்கவும் நடத்தப் படுகிறது. வெல்லட்டும் மாநில
உரிமைகளுக்கான இயக்கம்.