தெலுங்கானா கோரிக்கை அவசியமா?
தெலுங்கானா தனி மாநிலம் என அறிவிக்கப்படுமா? இல்லை போராட்டங்கள் மட்டுமே தொடருமா? என்பது தான் இப்போதையக் கேள்வி. இந்தியாவில் 500க்கும் அதிகமான சிறு சிறு நாடுகள் இருந்ததாகவும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இவைகளை ஒருங்கிணைத்ததாகவும், பிரிட்டிஷாருக்கு எதிரான தேசிய எழுச்சி இந்தியா என்கிற ஒருங்கிணைந்த நாடாக அமைவதற்கு வழிகோலியது என்பதையும் நாம் அறிந்த உண்மை. ஒருங்கிணைந்த இந்தியாவிற்குள் அசமத்துவமான வளர்ச்சி காரணமாக மொழியை அடிப்படையாகக் கொண்ட போராட்டங்களும், இனத்தை அடிப்படையாகக் கொண்ட போராட்டங்களும் பிராந்தியத்தை (regional) அடிப்படையாகக் கொண்ட போராட்டங்களும் மிக அதிக அளவில் நடைபெற்றுள்ளது. உதாரணத்திற்கு தமிழ்நாடு, ஜம்மு _ காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்களை குறிப்பிட முடியும். இவைகளில் தமிழ்நாடு மிகக் குறுகிய காலத்திலும், பஞ்சாப் ஒரு குறிப்பிட்ட காலத்திலும் பிரிவினையை கைவிட்டன. ஆனால் ஜம்மு _ காஷ்மீர், அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள போராட்ட அமைப்புகள் தங்கள் பிரிவினை கோரிக்கையை கைவிட்டதாக கூறமுடியாது. ஒருங்கிணைந்த இந்திய அரசு, தனது அசமத்துவமான கொள்கை காரணமாக மேற்படி பிரிவினை கோரிக்கைகளை உருவாக்கி உள்ளது, என்பதை இன்னும் கூட உணர்ந்ததாக கூறமுடியாது.
இன்றைக்கு தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடுகிற,ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகத்தின் மாணவர்களும், தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற உணர்வையே பிரதிபலிக்கின்றனர். ஒன்றுபட்ட ஆந்திர பிரதேசத்திற்குள், “தெலுங்கானா பிராந்தியா புறக்கணிக்கப்படுகிறது. அல்லது ஆந்திரக் கடலோர முதலாளிகளோ, வேறு பிராந்திய முதலாளிகளோ மேலாதிக்கம் செலுத்துகின்றனர். இவர்களுடன் இணைந்து நடுத்தர வர்க்கமும் பலனடைந்து இருக்கிறது.’’ என குற்றம் சுமத்துகின்றனர். தெலுங்கானா அறிவு ஜீவிகள் அமைப்பின் (ஜிணிலிணிழிநிகிழிகி மிழிஜிணிலிலிசிஜிஹிகிலி திளிஸிஹிவி) பிரதிநிதி, உஸ்மானியா பல்கலைக் கழகத்தின் பேரா. எஸ். சிம்ஹாத்ரி “வேலையின்மை மாணவர்களை கவலையடையச் செய்துள்ளது இவர்களில் பெரும்பான்மையினர் படிக்கும் வாய்ப்பு பெற்றவர்களில் முதல் தலைமுறையினர் அல்லது இரண்டாம் தலைமுறையினர். எனவே, தனி மாநிலம் உருவாக்கப்பட்டால் தங்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என நம்புகின்றனர்’’ என்கிறார். 1969இல் சென்னா ரெட்டி தெலுங்கானா மாநிலத்திற்கான போராட்டத்தை துவக்கிய போதும் மாணவர்கள் பேரா. சிம்ஹாத்ரி குறிப்பிட்டதைப் போன்ற நம்பிக்கையுடன் முன்நின்று போராட்டம் நடத்தி உள்ளனர். அதே அனுபவத்தைத் தான் இன்றைய தெலுங்கானா மாநில கோரிக்கையாளர்களும் முன் வைக்கின்றனர்.
1971இல் தெலுங்கான பிரஜா சமிதி, தெலுங்கானா மாநிலத்திற்கான போராட்டதை கைவிட்ட போது, தெலுங்கானா பிராந்தியத்தைச் சார்ந்த பி.வி. நரசிம்மராவ் (முன்னாள் பிரதமர்) முதல்வராக்கப்பட்டார். தெலுங்கானா பிராந்தியத்தைச் சார்ந்த அல்லது 15 ஆண்டுகளுக்கு மேல் அந்த பிரதேசத்தில் வாழ்ந்தவருக்கு மட்டுமே வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென 1919இல் நிஜாம் மன்னன் காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறையை அமலாக்க வேண்டும், என்றும் போராட்டக்குழுவினர் வலியுறுத்தி உள்ளனர். இத்தகைய அறிவிப்புகளும் செயல்களும் சுமார் 40 ஆண்டுகளாக மேற்படி கோரிக்கை நீடிக்கிறது என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.
மேற்படி 40 ஆண்டு காலத்தில் காங்கிரஸ் 25 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்திருக்கிறது. தெலுங்கு தேசம் சுமார் 15ஆண்டு காலம் ஆட்சியில் இருந்திருக்கிறது. இன்றைய தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளில் இருந்தவர்தான் அமைச்சர் பதவி தரவில்லை என்பதால், தனிக்கட்சி துவக்கி பிராந்திய உணர்வுகளைப் பயன்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்படி மூன்று கட்சிகளும் தெலுங்கானா என்கிற பிராந்திய உணர்வை தங்களின் வாக்கு வங்கி பாதுகாப்பிற்காக பயன்படுத்தி உள்ளனர். மேற்படி உணர்வுக்கு காரணமான, வளர்ச்சியின்மையை போக்கிடவோ, வேலைவாய்ப்பை பெருக்கிடவோ எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை.
தனி மாநிலம் தான் வளர்ச்சியையும், வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என்பது ஆளும் வர்க்கம் உருவாக்கிய திட்டமிட்ட சதி. ஆளும் வர்க்கத்திற்கு எதிரான சக்திகளைப் பிரிக்க மேற்படி பிரிவினைக் கோரிக்கைகள் நீண்ட நாளாக இந்திய மண்ணில் பயன்பட்டுள்ளது. ஜார்கண்ட், சட்டிஸ்கர், உத்தர்காண்ட் போன்ற மாநிலங்களைப் பிரித்து உருவாக்கிய பெருமை பா.ஜ.க விற்கு உண்டு, என பா.ஜ.க தலைவர்கள் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்கின்றனர். சினிமாவில் சிரிப்பு நடிகர் வடிவேல் தான் செய்த செயலை தானே பாராட்டிக் கொள்ளும் விதமாக, “கைப்பிள்ளை கலக்கிட்டய்யா’’என்று பாராட்டிக் கொள்வார். அதுபோல் தான் பா.ஜ.க வின் செயலும் இருக்கிறது. மேற்படி மூன்று மாநிலங்கள் 1999இல் உருவாக்கப்பட்ட பின் வளர்ச்சியும், வேலை வாய்ப்பும் மேற்படி மாநிலங்களில் உருவாகியுள்ளது.
தெலுங்கானா கோரிக்கையை முன்வைக்கும் பலர் பிராந்திய அளவில் தனி பண்பாடு இருக்கிறது என்றும் அதைப் பராமரிக்க தனி நிர்வாகம் தேவை என்றும் வாதிடுகின்றனர். இதுவும் தவறான வாதம். ஏனென்றால் இந்தியாவில் யாரோடும் இணையாத பண்பாட்டு அடையாளங்களை பழங்குடியினர் தான் அதிகம் கொண்டிருக்கின்றனர். இந்தியாவைப் பொருத்தளவில் 600க்கும் அதிகமான பழங்குடி பிரிவுகள் (நன்கு தெரிந்தது) உள்ளன. வெளியுலகு அறியாமல் வரையறுக்க முடியாமல் 1000க்கும் அதிகமான குழுக்கள் உள்ளன. இவை நிர்வாகம் காரணமாகவே பராமரிக்கப்படும் என கருதினால் 1000க்கும் அதிகமான மாநிலங்களை உருவாக்க வேண்டிய தேவை வரும்.
தெலுங்கானாவைத் தொடர்ந்து கூர்க்காலாந்து, பண்டல்காண்ட, விதர்பா, ஹரித் பிரதேஷ் இப்படி பல்வேறு புதிய கோரிக்கைகள் உருவாகின்றன. காங்கிரஸ் கட்சியின் தவறான அணுகுமுறை மேற்படி கோரிக்கைகளைத் தூண்டி விட்டுள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க சி.பி.ஐ உள்ளிட்ட தேசிய கட்சிகளும் பல்வேறு மாநில கட்சிகளும் தனி மாநில கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பது தவறான சிந்தனைகளை மேலும் மேலும் எண்ணெய் ஊற்றி வளர்க்க மட்டுமே உதவும். ஆளும் வர்க்க அரசியல் பொருளாதார அணுகுமுறையில் எந்த மாற்றத்தையும் உருவாக்க உதவாது.
இன்றைய ஆந்திர பிரதேசம் 1951இல் பொட்டி ஸ்ரீராமுலுவும், தமிழகத்தில் சங்கரலிங்கனாரும் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்ட பின் உருவாக்கப்பட்ட மொழிவாரி அமைந்த மாநிலமாகும். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் 1956இல் இப்படி தான் உருவாக்கப்பட்டன. நிர்வாகத்தை உள்ளாட்சிகள் மூலமும், சமூக அரசியல் பொருளாதார கொள்கைகளில் மாற்றத்தை உருவாக்கி வளர்ச்சியற்ற பிரதேசங்களுக்கு முன்னுரிமை தருவதும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அணுகுமுறையை ஆளும் வர்க்கம் மேற்கொள்வதும் தான் இது போன்ற மாயைகளுக்கு தீர்வளிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக