திமுக வால் விளிக்கப்படாத தொழிலாளர்கள்!!!
விடியட்டும் முடியட்டும் பயணத்தின் நிறைவாக ஒரு பொதுக்கூட்டம். திமுக தனது வலிமையை வெளிப்படுத்துவதற்காக நடத்திய பிரமாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று. பிப் 21 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஆப்பூரில் நடந்த திமுகவின் நிகழ்ச்சியில், அதன் பொருளாளர் 10 முழக்கங்களை முன் வைத்துள்ளார். உண்மையில் 10 முழக்கங்களும் தேவையான ஒன்று என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் திமுகவின் அடுத்த கட்ட தலைவர், கருணாநிதியின் முதுமையைத் தொடர்ந்து கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை, தலைமையேற்று முன் எடுக்கும் தலைவர், எனப் பேசப்படுபவர், பொதுக் கூட்டத்தில் பேசாததை நினைவு படுத்த வேண்டியுள்ளது.
பொதுக்கூட்டத் திடலுக்கு தெற்கே 8 கிமீ தொலைவில் சர்வதேச தரம் வாய்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலம். திடலுக்கு எதிரே 5 கிமீ தொலைவில் மறைமலை நகர் தொழில் பேட்டை. திடலைச் சுற்றி நூற்றுக்கணக்கான பன்னாட்டு ஆலைகள், ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம், ஒரு சிப்காட். வடக்கு திசையில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் இருங்காட்டுக் கோட்டை சிப்காட் வளாகங்கள். அதன் கூடவே மூடப்பட்ட நோக்கியா சிறப்புப் பொருளாதார மண்டலம். ஆகியவை அமைந்துள்ளது. அவற்றின் இன்றைய நிலை குறித்து, எந்த ஒரு வார்த்தையும் இடம் பெறவில்லை. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இந்த விவரம் தெரியாது, என மறுக்க முடியாது.
திமுக தலைவர்களின் சிறப்பு அம்சமே பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தின் வரலாறை, வளர்ச்சியை அதில் தனது கட்சியின் பங்களிப்பை எடுத்துச் சொல்லிப் பேசுவது தான். அந்த வகையில் ஸ்டாலின் அவர்களின் உரையில், ஆப்பூரை சுற்றி அமைந்த வளாகங்கள் குறித்தோ, அங்குள்ள தொழிலாளர் குறித்தோ, எந்த ஒரு வார்த்தைகளும் கட்டமைக்கப் படாதது, தற்செயல் நிகழ்வாகக் கொள்ள முடியாது. அது தனது திட்டமிட்ட, தயாரிக்கப்பட்ட உரையில் இடம்பெற வேண்டியதில்லை, என்ற முடிவுக்கு வந்ததால் கூட இருக்கலாம்.
மூடப்பட்ட ஆலைகள்:
அதிமுக புரிந்துணர்வு ஒப்பந்தம் 2005ல் செய்து கொண்டது. அன்றைக்கு மத்திய ஆட்சியில் கூட்டணியில் இருந்த திமுகவின் பங்களிப்பு இல்லாமல் நோக்கியாவுடன் அதிமுக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்க முடியாது. குறிப்பாக திமுகவின் மத்திய அமைச்சர்களின் முயற்சியே நோக்கியா என கடந்த காலங்களில், திமுக தலைவர்களின் அறிக்கை, உரை ஆகியவை அமைந்திருந்தது.
இன்று அந்த ஆலை மூடப்பட்டு, சுமார் 16 மாதங்கள் முடிந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக ஃபாக்ஸ்கான், பி.ஒய்.டி, ஆர்.ஆர். டோனல்லி, விண்டெக், என வரிசையாக ஆலைகள் மூடப்பட்டன. 25 முதல் 27 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்தனர். 30 வயதுக்குள் விருப்ப ஓய்வு என்ற கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டனர். இதில் மாநிலத்தின் ஆளும் அதிமுக தலையிட வில்லை. இன்று வரை அது குறித்து பேச, விவாதிக்க முன் வரவில்லை. மத்திய ஆட்சியும் தன் கண்களை, மூடப்பட்ட ஆலைகளை பார்க்க பயன்படுத்த தயாரில்லை. ஆனால் மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா என வார்த்தைகளில், விளையாடிக் கொண்டிருக்கும்.
இந்த ஆலை மூடல் மூலமான வேலையிழப்பு, சமூகத்தின் மீது பொருளாதார ரீதியில் மிகப்பெரிய தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. இந்த சமூக நிகழ்வு, ஒரு அரசியல் பேரியக்கத்தின் தலைவருடைய உரையில் பிரதிபலிக்கவில்லை என்பது, கவனக்குறைவு என்று மட்டும் எடுத்துக் கொள்ள முடியுமா? திமுக தனது மாற்றுக் கொள்கையை இந்தக் கண்ணோட்டத்தில் முன் வைத்து பேச ஏன் விரும்பவில்லை? அப்படி பேசினால், அது அதிமுகவையும் ,பாஜகவையும் எதிர்க்கும் பிரச்சாரத்தில் இடம் பெறும் தானே. ஆனால் விரும்பவில்லை.
எல்லாவற்றிற்கும் மேல் திமுக ஆட்சியின் போது, 2007ல் வெளியிடப்பட்ட தொழில் கொள்கை அறிவிப்பில், ஸ்ரீபெரும்புதூர் குறித்தும், அங்கு 20 லட்சம் வேலைவாய்ப்பு உருவாகும் என்பது குறித்தும் சொல்லியிருந்தது. குறைந்த பட்சம் அந்த நிகழ்வையாவது ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டு இருக்கலாம். புதிய பன்னாட்டு நிறுவனங்களின் வருகைக்காக, முயற்சிப்போம், என்றவர், வந்து வெளியேறிய பன்னாட்டு நிறுவனங்கள் குறித்து வாய் திறக்காததன் மர்மம் புரியாத ஒன்றாக உள்ளது.
தொழிலாளர்களுக்கான சுய மரியாதை:
சுயமரியாதை இயக்கதின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு உருவாக்கிய அனுபவம் திராவிட இயக்கத்திற்கு உண்டு. ஆனால் நவதாராளமய கொள்கை அமலாக்கத்திற்குப் பின் அதில் தமிழகம் பின் தங்கியுள்ளது. அன்றாட பிழைப்பிற்காக, தனது சுயமரியாதையை இழக்கும் கூட்டம் அதிகரித்து வருகிறது. கிராமப் புற விவசாயிகள், தங்களின் நிலம், வீடுகளை இழந்து நகரங்களை நோக்கி விரட்டப் படுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் பாசன சாகுபடி நிலம் சுமார் 2 லட்சம் ஏக்கர் அளவிற்கு குறைந்துள்ளது. அதே நேரம் விவசாயத் தொழிலாளர் எண்ணிக்கை 2.4 லட்சம் எண்ணிக்கையில் இருந்து 5 லட்சத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. இந்த விவரத்தை புள்ளியியல் துறையில் பெற முடியும்.
ஒரு புறம் ஆலைகளின் வருகை மறுபுறம் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்வு. இதை சரிசெய்ய, பாசனப் பரப்பில் ஏற்பட்டுள்ள சரிவை சரி செய்ய? திமுக தரப்பில் ஆலோசனை, மாற்று கொள்கை உண்டா? அல்லது அதிமுக வின் தோல்வி இந்த வகையில் திமுகவினால் அம்பலப்படுத்தப் பட்டுள்ளதா? அல்லது திமுக மேற்படி விவசாயி மற்றும் விவசாயத் தொழிலாளர் பிரச்சனைகளை முன் வைத்துப் போராடியதுண்டா? இந்த விவரங்கள் எதுவும், ஆப்பூரில் ஆர்ப்பரித்த கூட்டத்திற்கு, திமுக தலைமை எடுத்துரைக்கவில்லை.
தொழிலாளர் வருகை அதிகரித்த மாவட்டங்களில் முதன்மையானது காஞ்சிபுரம். தொழில் நிறுவனங்கள் வருகிற நிலையில் இந்த மாற்றம் ஏற்படுவது அவசியம். ஆனால் தொழிலாளர்களின் குறைந்த பட்ச சம்பள உயர்வு குறித்து, அவர்களுக்கான கூட்டு பேர உரிமை குறித்து ஒரு வார்த்தையும் திரு. ஸ்டாலின் அவர்களின் உரையில் இடம் பெறவில்லையே ஏன்? ஆப்பூரை சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். சம்பிரதாயத்திற்கு கூட, அவர் பேச்சில் இந்த மானுடர்கள் இடம் பெறவில்லை. இவர்களின் சுயமரியாதைக்காக பின்னாள்களில் திமுக குரல் கொடுக்காது என்பதை, முன் கூட்டியே தெரிவிக்கும் சூட்சுமமா?
பன்னாட்டு நிறுவனங்களும் சட்டங்களும்:
ஸ்டாலின் அவர்களின் 10 முழக்கங்களில் முதலாவது, முதலீடுகளைக் கொண்டு வந்து, தமிழகத்தை முதல் மாநிலம் ஆக்குவோம் என்பது. 5வது முழக்கம் சேவை உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும், அரசு அதிகாரிகள் மக்களைத் தேடி வருவார்கள், அதிகாரிகள் சேவை ஆற்றத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்பதாகும். இந்த இரண்டும் அதிமுக ஆட்சியில் இப்போது இல்லை. கடந்த காலத்தில் திமுக ஆட்சியிலும் இல்லை. வந்த முதலீடுகள் பன்னாட்டு நிறுவனத்தின் லாபத்தை மேம்படுத்தப் பயன்பட்டுள்ளது. ஆனால் எந்த வகையிலும் தொழிலாளர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவில்லை. காண்ட்ராக்ட், பயிற்சி என்ற பெயரில் தொழிலாளர்கள் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகிற போது, தமிழகம் எப்படி முதல் மாநிலம் ஆகும். தொழிலாளர் துறை தொழிலாளர்களுக்காக ஆற்றிய சேவை, திமுக ஆட்சியில் என்னவாக இருந்தது? இரண்டிலும் மாற்றம் இல்லை.
பன்னாட்டு நிறுவனங்களுக்கான ஓ.இ.சி.டி வழி காட்டுதல்கள் என்ற கையேடு, தொழிலாளர் உரிமைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. தொழிற்சங்கம் வைத்தால், பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். கூட்டு பேர உரிமையை பாதுகாக்க வேண்டும் என்ற சட்ட வழிகாட்டுதல் உள்ளது. இதைப்பயன் படுத்தி, ஒ.இ.சி.டி (வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு) அமைப்பின் உறுப்பினர்களான, தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் நிறுவனங்களில் தொழிலாளர் பிரச்சனைகள் வந்தது. போராட்டம் நடத்திய தொழிற் சங்க தலைவர்கள், கைது, சிறையில் அடைப்பு, அடக்குமுறை, வேலை நீக்கம் என்ற தாக்குதல் திமுக ஆட்சியிலும் நடந்தது. இன்று அதிமுக ஆட்சியிலும் நடை பெறுகிறது. எங்கே திமுக இந்த கொள்கையில் வேறுபட்டு உள்ளது என்பதை ஸ்டாலின் அவர்கள், ஆப்பூர் கூட்டத்தில் தெளிவு படுத்தவில்லையே ஏன்? பன்னாட்டு நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது?
வேலை வாய்ப்பு குறித்து 10 முழக்கங்களில் இடம் பெற்று இருக்கிறது. கடந்த திமுக ஆட்சி 2011ல் வெளியேறுகிற போது, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருந்தோர் எண்ணிக்கை, 68 லட்சம், இப்போது அதிமுக ஆட்சியில் 95 லட்சம். எனவே ஒட்டு மொத்த வேலையின்மைக்கும் அதிமுக மற்றும் திமுக கட்சிகளே பொறுப்பாக முடியும். முழக்கங்களை விட மாற்று கொள்கைகளை அமலாக்கும் அதிகார அமைப்பே இன்றைய தேவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக