திங்கள், 1 மே, 2017

மே தினம்

மே தினம்.  இந்தியத் தொழிலாளர்களை  ஆற்றல் படுத்தப் பயன்படும் ஆயுதமாகும்!!

மே தினம் உலகத் தொழிலாளர்கள் கொண்டாடுகிற உன்னதமான நாள். தங்களின் உழைப்பு நேரத்தைக் குறைக்க நடத்திய மகத்தான போராட்டத்தில் உயிர்பலி தந்த நாள் தொழிலாளர் தமக்காக தங்களின் முன்னோர் சிந்திய ரத்தத்தை நினைத்துப் பார்த்து அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள்.

முதலாளியின் உயிர் லாபம், அந்த லாபம் உறைந்து இருக்கும் இடம் தொழிலாளர்களின் உழைப்பு நேரம். ஜனநாயகம், தொழிலாளர்களுக்கான உரிமைகளைப் பேசாத நாள்களில், 14 முதல் 18 மணிநேரம் வேலைவாங்கப்பட்டனர். ஓய்வு இன்றி உழைக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். ஓய்வின் அவசியத்தை உணர்ந்த தொழிலாளி, எழுப்பிய முதல் கோரிக்கை தான் வேலை வாங்கும் நேரத்தைக் குறைக்க வேண்டும் என்பதாகும். வேலைநேரம் குறைக்கப்பட்டால், உற்பத்தி குறையும், உற்பத்தி குறைந்தால், லாபம் குறையும் என்பதால் முதலாளிகள் இந்த கோரிக்கையை ஒத்துக்கொள்ளவில்லை. மாறாக தொழிலாளர் மீது தாக்குதல் நடத்தி, 14 முதல் 18 மணிநேர வேலையை கட்டாயப்படுத்தினர். எனவே தொழிலாளர் தங்களுக்குள் ஒன்றினைந்து போராடத் துவங்கினர்.  எந்த ஒரு போராட்டமும் ஒருசில நாள்களில் முடிந்ததாக வரலாறு இல்லை. நெடிய போராட்டமாக 8 மணி நேர வேலைக்கான போராட்டம் மாறியது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பியக் கண்டத்தின் தொழிலாளர்கள் இந்த நீடித்த போராட்டங்களை நடத்தினர். இறுதியில் 1886 மே மாதத்தில் சிகாகோவில் நட்ந்த தொழிலாளர் போராட்டம், அதைத் தொடர்ந்த கைது, தூக்குத் தண்டனை ஆகியவையே மே தினத்தின் வரலாறு.

இந்தியாவின் நிலை:

அமெரிக்கா மற்றும் ஐரோப்பியக் கண்டத்தின் தொழிலாளர்கள் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்ற போராட்டம், நடத்திய 19 ம் நூற்றாண்டின் துவக்கத்தில், இந்தியாவில் ஆலைத் தொழில் வளர்ச்சி பெறவில்லை. அப்போது விவசாய உற்பத்தியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், பண்ணை அடிமைகளாக நடத்தப்பட்டனர். 18 ம் நூற்றாண்டின் இறுதி காலங்களில் தான் குறிப்பாக இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என அழைக்கப்பட்ட 1857 க்கு பின் இந்தியாவை நேரடியாக பிரிட்டிஷ் மகாராணி ஆட்சி செய்யத் துவங்கிய காலத்தில் தான் ஒருசில ஆலைகள் உருவாகின.

அப்படி உருவான ஆலைகளில் தொழிலாளர்களுக்கு எந்த விதமான உரிமையும் இல்லை. வேலை செய்த இடங்களில் உயிரிழப்பும், கொலைகளும் கேள்வி இல்லாமல் அரங்கேறியது. இந்தப் பின்னணியில் தொழிலாளர்கள் ஐஸ் ஹவுஸ் மற்றும் பஞ்சாலைகளில் வேலை நிறுத்தப் போராட்டம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

எல்லாக்காலங்களிலும் தொழிலாளர் வேலை நிறுத்தம் அல்லது போராட்டம் யாராலும் தூண்டப்பட்டு நடப்பதில்லை. ஒரு அளவை மீறி கொடுமையை அனுபவிக்கிற போது, அந்தக் கொடுமையில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான ஜனநாயகத்திற்கான முயற்சியே போராட்டமாகும். இதை ஆளும் வர்க்கம் அல்லது தொழிலாளியின் உழைப்பை தனது லாபத்திற்குப் பயன்படுத்தும் முதலாளிகள் கொச்சைப்படுத்துகின்றனர். போராட்டக்காரர்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கின்றனர். இந்த அணுகுமுறையை, இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷாரும் மேற்கொண்டனர். இன்றுவரையும், இந்த தொழிலாளர் விரோத பிரச்சாரம் தொடர்கிறது.

8 மணிநேர வேலைக்கான சட்டம்:

8 மணிநேர வேலை, 8 மணிநேர ஓய்வு, 8 மணிநேர உறக்கம் எந்த முழக்கத்தை, சிக்காகோ போரட்டக்காரர்கள் முன்வைத்தாலும், சட்டபூர்வமாக அதை முதன்முதலில் அமலாக்கியது, கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் புரட்சி செய்து, ரஷ்யாவில் ஆட்சியமைத்தவர்களே ஆவர். லெனின் தலைமையிலான ஆட்சி தான் 8 மணிநேர வேலை என்பதை உலகில் முதன்முதலாக சட்டமாக்கியது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் உற்பத்தி வளர்ச்சி காரணமாக சோவியத் அரசு, வேலைநேரத்தை ஒரு நாளைக்கு 6 மணிநேரமாகக் குறைத்தது.

இதன்காரணமாகவும், இதர பல சட்ட நடவடிக்கைகள் காரணமாகவும், உலகம் முழுவதும் முதலாளித்துவத்திற்குப் பின் இருந்த இளைஞர்கள், சோவியத் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பால் ஈர்க்கப்பட்டனர். இதை தடுக்க முதலாளித்துவம் செய்த உத்திகளில் ஒன்றாக நலத்திட்ட அரசு என்பதாகும். இதை கெயின்ஸ் என்ற முதலாளித்துவ பொருளாதார அறிவு ஜீவி, வடிவமைத்தார். அதன் விளைவாக, அமெரிக்கா வேலை நேரத்தை வாரத்திற்கு 40 மணிநேரமாகக் குறைத்தது. ஃபிரான்ஸ் 35 மணிநேரமாகக் குறைத்தது. பல நாடுகளும் இத்தகைய நிர்பந்தத்திற்கு ஆளாகின.

இந்த நிகழ்வு தொழிலாளிவர்க்கம் தனது உரிமைகளைப் பாதுகாக்க வலுவான போராட்டங்களை கொண்டிருப்பதுடன், இடதுசாரிகளின் எழுச்சியும், ஆட்சியமைப்பும் அவசியம் என்பதை இன்றைய தொழிலாளி வர்க்கம் உணரவேண்டியுள்ளது. இன்றைய நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளின் தாக்குதல் அதிகரிக்கவும், சுரண்டல் மூன்றாம் உலக நாடுகளில் மிக அதிகமாக நடைபெறவும், கம்யூனிஸ்ட்டுகளின் ஆட்சி அதிகாரம்
பின்னடைவை சந்தித்தது ஆகும்.

இன்றைய பொருத்தப்பாடு:

கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சி அதிகாரம்  பலநாடுகளில் தோல்வியுற்ற நிலையில், முதலாளித்துவம் கடந்த காலங்களைவிடவும், சட்டரீதியில் தங்களின் சுரண்டலைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. அதற்காக உலக வர்த்தக ஒப்பந்தம், மாற்றி அமைக்கப்படுகிறது. புதிய விதிகள் நாடுகளிடையே எல்லைகளற்ற உற்பத்திக்காக மேற்கொள்ளப் படுகின்றன.  இந்தியா போன மனிதவளம் நிறைந்த நாடுகளில், குறைவான கூலிக்கான உழைப்பாளர்கள் அதிகமாகக் கிடைப்பதை வளர்ந்த நாடுகள் பயன்படுத்தின.

இன்றைக்கும் இந்தியா போன்ற நாடுகளில், தொழிலாளர்கள் தங்கள் தேவைக்காக 12 மணிநேரம் உழைக்கும் கட்டாய நிலையில் உள்ளனர். இது மிகப்பெரிய சுரண்டலுக்கு வழிவகுக்கிறது. விழிப்புணர்வு பெற்ற தொழிலாளர்களின் கூட்டுபேர உரிமையைப் பறித்திட விழிப்புணர்வு இல்லாத தொழிலாளர்களை முதலாளித்துவம் பயன்படுத்துகிறது. படித்த நவீன தொழிலாளி வர்க்கத்திடம் கூட, வளர்ந்த நாடுகளில் உள்ள விழிப்புணர்வு, பிரதிபலிக்கவில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இந்தியாவில் உள்ள பிரதான காரணம் வேலை இல்லாத் திண்டாட்டம் ஆகும்.

பொறியியல் பட்டம் பெற்ற தகவல்தொழில் நுட்ப ஊழியர், வாரம் 60 மணிநேரம் வேலை செய்வதைப் பார்க்க முடிகிறது. டிப்ளமோ பட்டம் பெற்ற பல்வேறு ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொழிற்சங்க உணர்வும் அதைத் தொடர்ந்த செயல்பாடுகளும் மிகப் பலவீனமாக உள்ளன. மே தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட வேண்டும், என்பது ஐ.டி துறைகளில் பின்பற்றப்படவில்லை..

மென்பொருள் உற்பத்தியில் ஈடுபடும் பொறியியல் பட்டம் பெற்றோர், தங்களை உற்பத்திப்பிரிவு ஊழியர்களாகப் பார்க்கவில்லை. மாறாக தங்களை வெள்ளைக் காலர் என்ற நிர்வாகப் பிரிவினராகக் கருதும் பலவீனம் உள்ளது. எனவே தாங்கள் கோரிக்கைகள் வைப்பதே இழிவானதாகக் கருதுகின்றனர்.

இன்றைய மூலதனம் வளர்ந்த நாடுகளில் இருந்து வளரும் நாடுகளை நோக்கிப் பாய்வதற்கான காரணங்களில், பிரதானமாக வேலையின்மை, கூட்டுபேர விழிப்புணர்வு இன்மை, தொழிற்சங்க ஜனநாயக சக்திகளின் வளர்ச்சியின்மை ஆகியவை ஆகும். இவற்றை இந்தியா போன்ற நாடுகளில் உருவாக்குவது, இடதுசாரி சக்திகளின் மிக முக்கியமான கடமையாகும். 131 வது மேதினத்தில் அத்தகைய சூளுரையை உருவாக்குவது ஆகப்பெரிய கடமையாகும். ந

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக