வெள்ளி, 17 ஏப்ரல், 2020

Letter to Prime Minister

மாண்புமிகு. பிரதமர் அவர்களே,
வணக்கம்.
நீங்கள் தொலைக்காட்சியில் பேசுகிறீர்கள் என்று சொன்னாலே, மக்கள் வயிற்றில் புளியை கரைக்க துவங்குகிறது. நவம்பர் 8, 2016 போல் அன்மையில் இல்லை. இருந்தாலும் பயமாக தான் இருக்கிறது. நண்பர்களுடன் பேசும் போது, பிரமதமர் மாலை 8 மணியைத் தேர்ந்தெடுக்கிறாரே, என்ன காரணம்? ஏதோ ஒரு நோக்கம் இருக்கிறது என சந்தேகித்தனர். ஆனால் இன்று காலை 9 மணியைத் தேர்ந்தெடுத்து, நீங்களும் மாற்றத்திற்குரியவர் என்பதைத் தெளிவு படுத்தி விட்டீர்கள். ஆனால் உங்கள் உரையில் மாற்றம் இல்லை. 19 ம்தேதி தொலைக்காட்சியில் தோன்றி, 22 ம்தேதி, மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க சொன்னாலும், அது அறிவிப்பாகத் தான் இருந்தது. 22 மாலை 5 மணிக்கு 10 நிமிடம், கைதட்ட சொன்னீர்கள். நாங்களும் செய்தோம். அதன் பின் 24ம் தேதி காட்சியளித்து, 21 நாள் ஊரடங்கு என அறிவித்தீர்கள். இன்று (03.04.2020) காலை 9 மணிக்கு காட்சியளித்து, 05.04.2020 அன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடம் மின்விளக்கை அணைத்து, டார்ச் அல்லது விளக்கு ஏற்ற சொன்னீர்கள். 

கைதட்ட 3 நாள்கள் அவகாசம், மின்விளக்கை அணைத்து, விளக்கேற்றிட 3 நாள்கள் அவகாசம் அளித்துள்ளீர்கள். ஆனால் எங்கள் தினக்கூலித் தொழிலாளர்களும், சாதாரண மக்களும், ஏன் எல்லோருக்கும் தான் வேலை இருக்கிறது. மொத்த நாட்டு மக்களும், 21 நாள்கள் ஊரடங்கைப் பின்பற்ற நீங்கள் அளித்த அவகாசம் வெறும் 4 மணிநேரம். அடேங்கப்பா இது என்ன மாதிரி கணக்கீடு அல்லது உளவியல் ரீதியாக தயார் செய்யும் முறை என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமல், 23 ம் புலிக்கேசியும், முகம்மது பின் துக்ளக்கும் ஏன் நெப்போலியனும் கூட திணறிக்கொண்டு இருக்கிறார்களாம். ஒரு வேளை உங்களின் நண்பர்களான அம்பானி, அதனை போன்றோருக்கு, கைதட்டவும், விளக்கணைக்கவும் தயாராக, மூன்று தினங்கள் அவகாசம் தேவைப்படுகிறதோ?

உங்களிடத்தில் 32 லட்சம் சமூக வலைத்தளப் போராளிகள் இருப்பதாக, நண்பர் ஒருவர் சொன்னார். நாட்டில் நீங்கள் ஏதாவது ஒன்றைச் சொல்லி, மக்கள் அதற்கு எதிர்மறையாக சிந்திக்கத் துவங்கினால், இந்த 32 லட்சம் பேரும் “தீயா வேலை செய்யனும் குமார்” போல் வேலை செய்கிறார்களாம். மகா சிவராத்திரி, ஜக்கியின் ஆட்டம், ராம்லீலா விழா, ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா போன்ற இடங்களில் எல்லாம், பரவாத கொரானா தொற்று தப்ளி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு மட்டும் தொற்றியுள்ளது. அவர்களும் அதைத் தவிர்த்திருக்கலாம் அல்லது உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் கலந்து கொண்டு இருக்கலாம் என்ற கருத்து, எனக்கும் உண்டு. ஆனால் ஒரு வழிபாட்டு முறையை ஊதி பெரிதாக்கும், உங்கள் வலைத்தள போராளிகள், மற்றொன்றில் ஒன்றுமே இல்லை என்பது, அதீத இந்துத்துவா நெடி. 

அப்புறம் உங்கள் உ.பி. முதல்வர் யோகி, இருக்காரே, டிரெம்ப்பை விட கூடுதலாக பேசுகிறார். டிரெம்புக்கு இவர் தான் உடல்மொழியைக் கற்றுக் கொடுத்தார் என்று சொல்லும் அளவிற்கு பிரமாதம். இந்த கொரானாவுடைய முதல் கட்டம் வெளிநாட்டில் இருந்து வருவது. விமான பயணிகளுக்கு அல்லது விமான நிலையத்தில், கிருமி நாசினி தெளிப்பது குறித்து, நீங்கள் எந்த ஒரு தொலைக்காட்சியிலும் சொல்லவில்லை. யோகி, உங்களுக்கு மேலே செல்ல முயற்சிப்பதன் வெளிப்பாடு, டில்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்தே சென்ற மக்களுக்கு தண்ணீர் கூட கொடுக்காமல்,  ஊருக்கு வெளியில் நிறுத்தி கிருமி நாசினி தெளித்ததை, நாடே காறி துப்பியது. நீங்கள் அந்த நாள்களில் உங்களின் தொகுதியான வாரனாசிக்கு சென்றீர்கள் நல்லவேளை,உங்கள் மீது, கிருமி நாசினி தெளிக்கவில்லை. அதுவரையிலும், யோகி உங்கள் மீது மரியாதை வைத்திருக்கிறார். 


ஒரு நாவலை நீங்கள் படிக்க வேண்டும். வெள்ளையாணை எனப் பெயர், எழுத்தாளர் உங்கள் சங்கி குடும்பம் தான், பெயர் ஜெயமோகன். 1880 களில் சென்னை நகரில் தொழிலாளர் துயரத்தை, குறிப்பாக ஐஸ் கட்டி ( அதுதான் இன்றைய ஐஸ் ஹவுஸ்) உடைக்கும் தொழிலில் ஈடுபட்ட மக்களை பேசுகிற நாவல் அது. எய்டன் என்ற காவல் அதிகாரி ஸ்காட்லாந்து பகுதியில் இருந்து, அன்றைய சென்னை காவல் அதிகாரியாக நியமனம் செய்யப் பட்டவர். நாட்டில் நிலவிய பஞ்சம் கண்டு, பரிவுணர்ச்சி கொண்டவர். செங்கல்பட்டில் இருந்த மாவட்ட ஆட்சியரை பார்த்து, மக்களின் துயரங்களைப் பேசுவதற்காக, குதிரைகள் பூட்டிய சாரியட் வாகனத்தில் சென்னையில் இருந்து செங்கல்பட்டு பயணம் செய்வார். அன்றைய நிலையில், செங்கல்பட்டை ஒட்டிய இதர பகுதிகளில் இருந்து மக்கள் சாரை சாரையாக அணி வகுத்து வருவர். உணவில்லாமல், பஞ்சைகளாய், பராரிகளாய் வருவர். அய்யோ இப்படி பசியில் பரிதவித்து வருகின்றனரே, என்ற பரிவுணர்ச்சியில் தன்னிடம் உள்ள ரொட்டி பாக்கட்டுகளை அள்ளி வீசுவார். பலனாக  பட்டினியால், நாவும், நெஞ்சுக்குழியும் வறண்டு வந்த மக்கள் ரொட்டியைத் தின்று, தொண்டைக்குழி அடைத்து செத்து போவார்கள். 

உங்கள் பரிவுணர்ச்சியும் அப்படித்தான் இருக்கிறது, ஈரமே இல்லாமல், உங்கள் உரையைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் நா வறட்சி இருக்கிறது. அதுவும் கொரானாவின் அறிகுறிபோலவே. மக்களுக்கு தர மனது இல்லை. தொழில் முடங்கிய போது தாராளம் காட்டினீர்கள். முதலாளிக்கு வந்தால் ரத்தம், தொழிலாளிக்கு வந்தால் தக்காளி சட்டினி கதையை, அமெரிக்காவிலும் கிழித்து தொங்க விட்டு வருகின்றனர். கொரானா எதிர்ப்பு நடவடிக்கைக்கு, தமிழகத்திற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும், துவக்க கட்டமாக 3 ஆயிரம் கோடியை அளித்தால் கூட போதுமானது, என எங்கள் முதல்வர் எடப்பாடி வீடியோ கான்ஃபரஸில் உங்களிடம் கேட்டதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்தனர். இன்று காலை 9 மணிக்கு அது பத்தி ஏதாவது இருக்கும் என்று தான் எதிர்பார்த்தோம். ஆனால் எங்களை நிரந்தரமாக இருட்டில் தள்ளுவதற்கான ஒத்திகை போல், அந்த 9 நிமிட அறிவிப்பு உள்ளது. மக்கள் நடந்தே டில்லியில் இருந்து புறப்பட்டவர்கள், டில்லியை நோக்கியும் நடப்பார்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள். 

கொரானா எதிர்ப்பில் எல்லாதரப்பு அறிஞர்களும் ஈடுபட வேண்டும், கலந்துரையாடப்பட வேண்டும். மக்களுக்கு அச்சம் இல்லாத ஊரடங்கு வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியுடன் மக்கள் இருந்தால், தனித்திருக்க நீங்கள் கொடுத்த அழைப்பு நிறைவேறும். வைட்டமினை உயர்த்திக் கொள்ள இல்லையென்றாலும், வயிற்றுப் பசி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக