புதன், 11 செப்டம்பர், 2024

தீக்கதிர்

 

 

நீட் தேர்வும் -  கொள்ளை முறையும் ஒழிக்கப் பட வேண்டும்…

முதலாளித்துவம் தான் உருவாக்கிய விதிகள் அனைத்தையும், தானே மீறுகிற செயல்களை லாபத்திற்காக செய்கிறது. லாபத்திற்காக தன்னை தூக்கில் இட்டுக் கொள்ள வேண்டும் என்றால், தூக்கிலிட்டு கொள்ள சம்மதிக்கும், என முதலாளித்துவம் பற்றி, மார்க்ஸ் குறிப்பிடுகிறார். அப்படியானால் முதலாளித்துவம் பிறர் குறித்து ஒரு போதும் கவலை கொள்ளாது. அண்மையில் மருத்துவ கல்விக்கான நீட் தேர்வு முடிவுகள் அறிவிப்பில், லாபம் காரணமாக அத்தகைய குளறுபடிகள் ஏராளம் வெளிப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவம் உள்ளிட்ட தொழில் நிபுனத்துவம் கொண்ட கல்விக்கு நுழைவுத் தேர்வு உருவானது முதல் இப்போது நீட் தேர்வு வரைக்கும், முதலாளித்துவ வளர்ச்சி உருவாக்கியது. வணிக தன்மை கல்வியில் வளர வளர நுழைவுத் தேர்வுகளும் வளர்ந்தது என்பதை கல்வி வளர்ச்சியில் கான முடியும்.

40 ஆண்டுகால வரலாற்று பின்னணி:

1984 வரை தமிழ்நாட்டில் உயர் கல்வியில் சேருவதற்கு மாணவர்கள் நுழைவுத் தேர்வு எதுவும் எழுத வேண்டியதில்லை. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது 1984ல் நுழைவுத் தேர்வு முறையை, மருத்துவம், பொறியியல், வேளாண் துறை மற்றும் சட்டம் ஆகியவற்றிற்கு அறிமுகம் செய்தார். அன்றைக்கு அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தராக இருந்த வி.சி.குழந்தைசாமி அவர்கள் தலைமையில் அமைக்கப் பட்ட குழு, இதற்கான வழிமுறைகளை பரிந்துரை செய்தது. முதல் தேர்வு 1984 ஜூலை 14 மற்றும் 15 தேதிகளில் நடந்தது. அன்றைக்கு இருந்த எதிர்கட்சிகள் உள்ளிட்டு பலரும் எதிர்த்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை கோரி தொடுக்கப் பட்ட வழக்கில், நீதிமன்றம் நுழைவுத் தேர்வு சரி என்றது. அன்றைக்கு தமிழ்நாட்டில் 10 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன.

பின்னர் 2006ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது, மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு, ஆளகின்றனர். +1 மற்றும் +2 ஆகிய இரண்டும் சேர்ந்த புதிய கல்வி முறையில், மாணவர்களுக்கு +2 மட்டுமே கவனம் செலுத்தப் படுகிறது. இதன் காரணமாக டாக்டர். அனந்த கிருஷ்ணன் தலைமையிலான குழு அமைக்கப் பட்டு அவர்கள் பரிந்துரையின் படி நுழைவுத் தேர்வு உயர் கல்விக்கு ரத்து செய்யப் பட்டு, ஒற்றை சாளர முறை, மாணவர் சேர்க்கைக்கு  அறிமுகம் செய்யப் பட்டது.

கல்வி வளர்ச்சியும், வணிக வளர்ச்சியும்:

கல்வி அத்தியாவசியம், சமூக வளர்ச்சிக்கு பல வகையில் பங்களிப்பு செய்யும் மூலதனம் என்ற பார்வை படிப்படியாக குறைந்தது. தனியார் மயம் அதிகரித்தது. நுழைவுத் தேர்வு முறை 1984 அறிமுகம் செய்யப் பட்டதைப் போல், மெட்ரிகுலேசன் பள்ளிகள் உருவாக, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை 1978ல் தனி வாரியம் உருவாக்கியது. அன்றைக்கு இருந்த முதலாளித்துவம் இந்த தேவையை வலியுறுத்தியது. தமிழ்நாட்டில், பள்ளி மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளில் தனியார் கல்வி நிலையங்கள் பெருகின.

இதைத் தொடர்ந்து ஆந்திரம், கர்நாடகா, மகராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களும் கல்வியைத் தனியார்மயமாக்குவதில், தமிழ்நாட்டுடன் கடும் போட்டியைச் சந்தித்தன. 1994 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய கல்வி பெறுவது வாழும் உரிமையுடன் இணைந்தது. இந்திய அரசியல் சாசன சட்டம் பிரிவு 21 அதை வலியுறுத்துகிறது என்ற தீர்ப்பு, இந்திய கல்வி வரலாற்றில் பேசப்பட்ட ஒன்றாக மாறியது. இதற்கு அடிப்படை தனியார் கல்வி நிறுவனத்தின் கட்டண கொள்ளை ஆகும். இதை எதிர்த்த நீதிமன்ற வழக்கில் தான் மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை ஒட்டி தமிழ்நாட்டிலும் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வலுப் பெற்ற போது, டாக்டர். அனந்த கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப் பட்ட கமிட்டி கட்டண நிர்ணயிப்புகளுக்கான, வழி காட்டுதல்களை பரிந்துரைத்தது.

1992ல் சென்னை உயர்நீதிமன்றம் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியை, ராமசாமி உடையாரிடம் அளிக்க உத்தரவிட்ட தீர்ப்பு, அதைத் தொடர்ந்து ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஒப்படைத்த விதம் ஆகியவற்றிற்கு எதிரான தீவிரமான மாணவர் போராட்டத்தை, இந்திய மாணவர் சங்கம் மற்றும் இடதுசாரிகள் மட்டுமல்ல திமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆதரித்தன. தமிழ்நாட்டில் முழு அடைப்பு போராட்டம் வரை வெற்றிகரமாக நடந்தது. விளைவு கல்லூரியில் படித்து கொண்டிருந்த மாணவர்கள் வரைக்கும், அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மாறுதல் செய்யப் பட்டனர்.

நெறியற்ற முதலாளித்துவ வளர்ச்சியில் பெருகிய கோச்சிங் மையங்கள்:

தாராளமய கொள்கை முதலாளித்துவ வளர்ச்சியை தீவிர படுத்திய நிலையில், முதலாளித்துவம் தான் உருவாக்கிய விதிகளை தானே மீறவும் செய்தது. உலக அளவில் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு, முதலாளித்துவத்தை மேலும் தீவிர கொள்ளையை நோக்கி தூண்டியது. எல்லாம் சரக்கு, எல்லாம் சந்தைமயம், எல்லாம் லாபத்திற்காக என்ற முதலாளித்துவ நோக்கத்தை தீவிரமாக அமலாக்கும் வகையில், மருத்துவம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் கட்டமைக்கப் பட்டன. தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரிகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு இருந்த ஆதரவு நிலைமை மாறி, கடந்த 20 ஆண்டுகளில் தனியார் கல்லூரிகள் அவசியம் என்ற மனநிலையை நடுத்தர மக்களிடம் கட்டமைப்பதில் முதலாளித்துவம் திட்டமிட்டு செயலாற்றியது.

கடந்த 10 ஆண்டுகளாக நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் வளர்ச்சி பெற்றதும், பாஜக ஆட்சிக்கு வந்த பின் தேசிய கல்வி கொள்கை உருவாக்கப் பட்டதும், முதலாளித்துவ லாப வெறி, சேவைத் துறையான கல்வியில் புகுந்து தீவிரம் பெறுவதையும் காணமுடிகிறது. பல்கலைக் கழகங்களின் தனித்த அடையாளத்தை ஒழித்து க்யூட் தேர்வு மூலம், மாணவ்ர் சேர்க்கைக்காக, எல்லா பல்கலைக் கழகத்திற்கும் ஒரே தேர்வு என்ற முறையை அமலாக்கி, கோச்சிங் மையங்களை முன்னிலைப் படுத்தி வருகிறது.

ராஜஸ்தான், பீகார் மற்றும் குஜராத் மாநிலங்கள் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வு முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இது எப்படி சாத்தியம் ஆகிறது. ராஜஸ்தானில், 35 மருத்துவக் கல்லூரிகளும், 238 பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. பீகாரில் 155 பொறியியல் கல்லூரிகளும், 13 மருத்துவ கல்லூரிகளும் உள்ளன குஜராத்தில் 32 மருத்துவ கல்லூரிகளும், 269 பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் 74 மருத்துவ கல்லூரிகளும், 1277 பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. குறைவான கல்லூரிகள் ஆனால் அதிகமான கோச்சிங் என்ற பயிற்சி மையங்கள் ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களில் உள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் கார் தொழிற்சாலைகள் குவியலாக உள்ளது. இதை ஆட்டோமொபைல் ஹப் என சொல்கின்றனர். ஆனால் ராஜஸ்தானில் கோட்டா என்ற நகரம் கோச்சிங் என்ற பயிற்சி மையமாக உள்ளது. இதை கோச்சிங் ஹப் என கூறுகின்றனர். இந்த பின்னணியில் தான் 2024 நீட் தேர்வு குளறு படிகளில் பீகார், குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த 20க்கும் அதிகமானோர் கைது செய்யப் பட்டுள்ளனர். கோச்சிங் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு இடையே போட்டி அதிகரிக்கும் போது, தேர்வு நடத்தும் முகமை (National Testing Agency) அமைப்புகளுக்கு இடையே கள்ளத் தொடர்பு அதிகரிப்பதை காண முடிகிறது.

2024 நீட் முடிவுகளும் அம்பலமான தகிடுதத்தங்களும்:

நீட் என்ற தேர்வு முறை முற்றாக ஒழிக்கப் பட வேண்டும். அதே நேரம் இந்த ஆண்டு வெளியிடப் பட்ட முடிவுகள் நியாயமற்றது என்பதில் இருந்து அந்த முடிவுக்கு வர வேண்டும்.  டெக்கான் ஹெரால்டு என்ற ஆங்கில நாளிதழ் ஜூன் 16 அன்று வெளியிட்ட செய்தியில், 70 ஆயிரம் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டிய இடத்தில், NTA 13.16 லட்சம் மாணவர்களை தகுதி பெற்றவர்கள் என்பதை அறிவித்து உள்ளது. அடுத்து 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளிக்கப் பட்டுள்ளது. 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஏராளமானவர்கள் 719 மற்றும் 718 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவை அனைத்தும் நடைமுறையில் சாத்தியமற்றது. ஊழல் செய்யாமல் இவ்வளவு மதிப்பெண்கள், இத்தனை பேர் பெற முடியாது.  

ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண்கள், தவறாக எழுதினால் ஒரு மதிப்பெண் குறைக்கப் படும் இந்த விதிகள், வடிகட்டுவதற்காக உருவாக்கப் பட்டவை. ஆனால் விட்டாலாச்சார்யா கதாநாயகர்கள் போல், நீட் வெற்றியாளர்கள் அறிவிப்பு, நம்ப முடியாத ஒன்று. 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. பீகார் மாநிலத்தில் சுமார் 1000 கோடி ஊழல் இது சார்ந்து நடந்திருக்கலாம் என டெக்கான் ஹெரால்டு கூறுகிறது. கேள்வி தாள் வெளியானதைத் தொடர்ந்து, 30 லட்சம் ரூபாய் ஒவ்வொரு மாணவரிடமும் வசூலிக்கப் பட்டுள்ளது, என்றும் செய்திகள் வருகின்றன. எனவே தொடர்ந்து குளறுபடிகளுக்கு வாய்ப்புள்ளதால். மொத்தமாகவே நீட் ரத்து செய்யப்பட வேண்டும்.

பாஜக ஆட்சி தவறு செய்பவர்களுக்கு உடந்தை:

இந்த ஆண்டு துவக்கத்தில், பொதுத் தேர்வுகள் சட்டம் (Prevention of Unfair Means) திருத்தப் பட்டது. இந்த சட்டத்தை முன்மொழியும் போது, அமைச்சர், ஜம்மு காஷ்மீரில், மேற்கு வங்கத்தில் கடந்த கால காங்கிரஸ் ஆட்சி செய்த தவறு என பட்டியலிட்டு பல நூற்றுக்கனக்கான முறைகேடுகள் பொதுத் தேர்வுகள் மற்றும் பணி நியமனத்திற்கான தேர்வுகளில் நடந்ததாக கூறியுள்ளார். சட்டம் இயற்றப் பட்ட சில மாதங்களில், நீட் குளறுபடிகள் அம்பலமாகி உள்ளது. பாஜக தனது ஆதரவை, தவறு செய்பவர்களுக்கு சாதகமாக வெளிப்படுத்தியும் வருகிறது. உயர் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசிய தேர்வு முகமை மீது தவறில்லை என வாதாடுகிறார். 2024 தேர்வு முடிவுகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், விசாரணை செய்ய என்.டி. ஏ வின் தலைவரையே நியமனம் செய்தது, முறைகேடுகளின் உச்சமாகும்.

தற்போது உச்சநீதிமன்றம் கருணை மதிப்பெண் அனைத்தையும் ரத்து செய்துள்ளது. மீண்டும் ஜூலை8 அன்று வழக்கு விசாரணை என அறிவித்துள்ளது. இது நேர்மையான மாணவர் சேர்க்கைக்கு போதாது. மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர். டி.கே.ரங்கராஜன் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீட் தேர்வு குளறுபடிகளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் மூலம், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத் தந்தார். இப்போது மொத்தமாக ரத்து செய்வது தேவையாக உள்ளது.

நீட் ரத்து அவசியம்:

தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள மாணவர், அரசியல் மற்றும் சமூக இயக்கங்கள், நீட் தேர்வு முறை வேண்டாம் என்றும், கல்வி மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் எடுத்து வரப் பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் 20 மாணவ மாணவியர் தற்கொலை செய்து கொண்டது, இயலாமை காரணமானது அல்ல, நேரமையற்ற தேர்வு முறை ஏற்படுத்திய மன அழுத்தம் ஆகும். எனவே நீட் தேர்வு ரத்து செய்யப் பட வேண்டும்.

மாணவர் சேர்க்கை தமிழ்நாட்டில் இருந்த ஒற்றை சாளர முறை, அடிப்படையில் நீடிக்க வேண்டும். சிறந்த மருத்துவர்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவதே இதற்கு சான்று. தனியார் மற்றும் வணிகமய தேவையை ஏற்றுக் கொள்ள வைக்கும் முறையில், முதலாளித்துவ விதிகள் உருவாக்கப் பட்டது. தற்போது இந்த விதிகள் அம்பலமாகி உள்ள நிலையில், ஏற்கனவே இருந்த நடைமுறையை அனுமதிக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டம், இந்த நோக்கங்கள் நிறைவேறும் வகையில் வெற்றி பெறட்டும்.

 

தீக்கதிர்

 

பகத்சிங் பெயரை உச்சரிக்காதீர்…

ஜனநாயக முடக்கத்திற்கு துணை போகாதீர்

 

1931ல் தூக்கிலிடப்பட்ட பகத்சிங் இப்போது ஊடகங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறார். 92 ஆண்டுகள் கழித்து, அதே சித்திரிப்புகளுடன் தான் இப்போதும் விவாதிக்கப் படுகிறார். அவர் ஒரு வன்முறையாளர். எதிர்காலத்தை குறித்து எந்த ஒரு தீர்க்கமான பார்வையும் இல்லாத, தனிநபர் என்ற கண்ணோட்டத்துடன் தான், 2023 டிசம்பர் 13 அன்று நாடாளுமன்ற அசம்பாவிதங்களின் ஊடாக பேசப்படுகிறார். தேசபற்று கொண்ட ஒவ்வொருவரும், இந்திய விடுதலையை அதன் போராட்ட உக்கிரத்திலிருந்து உணரும் ஒவ்வொரு இந்தியரும், பகத்சிங்கிடம் வன்முறையை காண்பதில்லை. வன்முறையற்ற, அனைவருக்குமான சமத்துவ வாழ்க்கையை  கணவு கண்ட பகத்சிங்கும் அவரின் தோழர்களின் கொள்கைகள் தான் காட்சிப் படும்.

2023 நாடாளுமன்றத்தில் வீசப்பட்ட புகை குப்பிகள், பகத்சிங் மற்றும் பட்டுகேஸ்வர் தத் தும் 1929 ஏப்ரல் 8 அன்று வீசிய டமார் என்ற வெடிசத்ததுடன் வீசப்பட்ட குண்டுகளுக்கும் வேறுபாடுகள் அதிகம். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களால், நாடாளுமன்றத்தில் முன்மொழிய இருந்த தொழிலாளர் மசோதா குறித்து நாட்டு மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக வீசப்பட்டது, பகத்சிங் மற்றும் தத் ஆகியோரின் வெடியோசை. அது பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்தின், காலனியாதிக்க சுரண்டல் கொள்கையை எதிர்த்தது. ஏற்கனவே கொதி நிலையில் இருந்த விடுதலைப் போராட்டத்தை தீவிரப் படுத்தும் வகையில் அன்றைய செயல்களை முன்னெடுத்தனர். தங்களுக்குள் பெரும் சர்ச்சையை நடத்தி பகத்சிங் மற்றும் பட்டுகேஸ்வர் தத் ஆகியோரே பொருத்தம் என்பதை இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்மி, முடிவு செய்தது. ஆக்ராவின் யமுனை நதிக்கரையிலும், டில்லியின் கோட்லா மைதானம் அருகிலும் இதற்காக ஏராளமான விவாதங்களை அந்த புரட்சிகர இளைஞர் குழு நடத்தியது.

வெடியோசையைத் தொடர்ந்த கைதும், சிறைவாசமும், நீதிமன்ற விசாரணைகளும், நாட்டுமக்களிடையே பெரும் கிளர்ச்சியை உருவாக்கியது. சிறைக்குள்ளிருந்த பகத்சிங் மற்றும் அவரின் தோழர்கள், கம்யூனிசத்தை புரிந்து செயல்பட்டனர். பகத்சிங் தன் சகோதரன் குல்தார் சிங்கிற்கு, மார்ச் 3, 1931 அன்று  எழுதிய கடிதம், மற்றும் பிப்ரவரி 2 1931 அன்று இளம் அரசியல் ஊழியர்களுக்கு எழுதிய கடிதம் ஆகியவை, இன்றைய இளைஞர்களும் பின்பற்ற வேண்டிய, தொலைநோக்கு பார்வைகளை உள்ளடக்கியவை. அவை மாபெரும் தத்துவ விசாரணைகளை உள்ளடக்கியவை. இந்திய விடுதலை குறித்த நுட்பமான இலக்கை வெளிப்படுத்துபவை.

”இன்றைய சூழலில், எதிர்கால திட்டம் குறித்து விவாதிப்பது முக்கியம். அதன் அடிப்படையில், அமைப்புரீதியான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். புரட்சி என்பது, திடீரென, அமைப்பாக திரளாமல், அல்லது தன்னெழுச்சியாக நடக்க கூடியதல்ல. அது மூன்று கட்டமைப்புகளை கொண்டது. ஒன்று இலக்கு, இரண்டு,  இன்றைய சூழலில் எங்கிருந்து துவக்குவது என்ற புரிதல், மூன்று செயல் திட்டம் அதன் உள்ளடக்கம் மற்றும் வழிமுறை, ஆகியவை ஆகும்”, என பகத்சிங் இளம் அரசியல் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் மிக தெளிவாக கூறியுள்ளார்.

நிச்சயம் பகத்சிங் வழி நடக்கும் செயல்வீரர்கள் இவற்றை தெரிந்திருக்காமல் களத்தில் இறங்க மாட்டார்கள். எனவே ஊடகங்கள் பகத்சிங் ஃபேன்ஸ் கிளப், பகத்சிங் மாடல் ஆகிய சொல்லாடல்களால் டிசம்பர் 13 நாடாளுமன்ற நிகழ்வுகளை வர்ணிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

பாஜகவும் குண்டு வெடிப்புகளும்:

இந்திய அரசியலைப் பொருத்தளவில் பாஜக தனது கட்சியினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டாளர்கள் மூலம் குண்டுகள் வைத்து பிடிபட்டு இருப்பது உலகறிந்த உண்மை. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது இஸ்மாயில் என பரப்பியது, பின்னர் அது கோட்சே என்ற உண்மை வெளிவந்தது. அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர் என்பதும் உலகறிந்த விவரங்கள்.  தற்போது, கோட்சேக்கு சிலை வைப்பதை பெருமையாக பேசிக் கொள்ளும் துணிவு பெற்று இருப்பதில் இருந்து, சமயத்திற்கு ஏற்ப பெயர்களை சூட்டிக் கொள்வதையும், கலவரத்திற்கு ஏற்ப நிகழ்ச்சிகளை திட்டமிடுவதும் செயல்படுத்துவதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் ரத்தத்துடன் கலந்து விட்ட ஒன்று, என்பதை அறியலாம்.  2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த, மாலே கான் குண்டுவெடிப்பு நிகழ்வு குறித்து, என்.ஐ.ஏ 2013ல் பின்வரும் விவரங்களை தெரிவித்தது. அபிநவ் பாரத் என்ற வலதுசாரி அமைப்பை சார்ந்த லோகேஷ் சர்மா, தன்சிங், மனோகர் சிங், ராஜேந்திர சவுத்ரி ஆகியோர் கைது செய்யப் பட்டதாகவும் தெரிவித்தது.

அதே மாலேகானில் 2008ல் நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர், சாத்வி. பிரக்யா சிங் தாகூர். இவர் மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்த இடத்தில் இருந்தது. இவர் 2017ல் உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் பிணை வழங்கப் பட்டவர். பின் 2019ல் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். நாடாளுமன்றத்தில் காந்தியை சுட்டுக் கொண்ற கோட்சே மிகச் சிறந்த தேச பக்தர் எனக் கூறினார். கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டார். இப்போதும் மத்திய பிரதேசத்தில், வன்முறையை தூண்டும் வகையில் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார்.

2007ல் ஆஜ்மீர் தர்கா, மெக்கா மஸ்ஜித் மற்றும் சம்சவுதா எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய வெடிவிபத்துகளுடன் தொடர்புடைய வழக்குகள், ஆசாராம் பாபு என்பவர் மீது நடந்து வருகிறது.  சிறையில் இருந்த படி கேரவன் இதழில் 2014ம் ஆண்டு இவர் அளித்த பேட்டி மூலம்   மேற்படி நிகழ்வுகள் உறுதி செய்யப்பட்டதும் உலகறியும்.  வனவாசி கல்யாண் அமைப்பிற்கு முக்கிய பொறுப்புகளில் இருந்து பணியாற்றியவர். குஜராத் டங்ஸ் மாவட்டம், மத்திய பிரதேசத்தின் ஜாபுவா மாவட்த்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகள் அனைத்திலும் இவருக்கு பங்குண்டு என கூறப்படுகிறது. ஆசாராம்பாபுவே தனது பேட்டியில் கேரவன் இதழில் இது போன்றவற்றை கூறியிருக்கிறார்.

சத்யபால் மாலிக், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர், 2019ம் ஆண்டு பிப்ரவரியில் புல்வாமா ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் குறித்து அண்மையில் கூறிய விவரங்களும், பாஜக ஆட்சியின் செயல்பாடுகள் மீதான சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது. அந்த சாலையில் செல்ல வேண்டாம் என்பது தெளிவாக எடுத்துரைக்கப் பட்ட பின்னரும், அந்த பாதையில் ராணுவ வாகணம் செல்வதற்கான உத்தரவு இடப்பட்ட விவரம் சத்யபால் மாலிக் தெரிவித்தது. இதன் காரணமாக இவருடைய வீடு சி.பி.ஐ அதிகாரிகளால் சோதனையிட பட்டதும் கவனிக்கத் தக்கது. இது போல் மேலும் விவரிக்க நிகழ்வுகள் உள்ளது.

கேள்விக்குளாகும் பாஜக வின் நாடாளுமன்ற ஜனநாயகம்:

ஒரு புறம் பகத்சிங் குறித்த கதையாடல்களும், மற்றொரு புறம் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப் பட்டு இருப்பதும், தான் பாஜக அரசு மீது கூடுதல் விமர்சனத்தை தூண்டுகிறது. அதானி மீதான குற்றச்சாட்டை, ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் முன்வைத்த போது நாடாளுமன்ற செயல்பாடுகளை முடக்கியது பாஜக. இப்போது சில இளைஞர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் புகை குப்பிகளை வீசி இருப்பதும், அவர்கள் நாடாளுமன்றத்திற்குள், பாஜக எம்.பி, பிரதாப் சிம்ஹா என்பவர் அளித்த பரிந்துரை கடிதத்தை பயன்படுத்தி இருப்பதும் கேள்விகள். ஆனால் இப்போதும் விவாதிக்க அனுமதி இல்லை.

குறிப்பாக கேள்விகள் கேட்டு விவாதிக்க வேண்டும் என வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா, இது குறித்து விவாதிக்க மறுக்கிறார். பிரகலாத் ஜோஷி நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் இதை மறுக்கிறார். விவாதிக்க வேண்டாம் என்கிறார். குறிப்பாக நாடாளுமன்ற வளாகத்திற்குள் வழக்கம் போல் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல், பாஜக உறுப்பினர், பிரதாப் சிம்ஹா வளம் வருகிறார். பாஜக பிறர் மீது குத்தும் முத்திரையை வலுவாகவும், தன் மீது வரும் குற்றச்சாட்டுகளை எந்த ஒரு இடத்திலும் விவாதிக்காமல், திசை திருப்பும் அரசியல் மூலமும் சாதித்து கொள்ள நினைக்கிறது. மொத்தத்தில் அதானி விவாதிக்கப் படவே இல்லை. அது போல் இந்த நிகழ்வும் அமைந்து விடக் கூடாது.

ஊடகங்கள் நூற்றுக்கணக்கிலான காவலர் பணி இடங்கள் காலியாக இருப்பதை தீவிரமாக விவாதிக்கின்றன. அந்த இளைஞர்கள் காலணியில் மறைத்து புகை குப்பிகளை எடுத்து சென்றதாக பேசுகின்றன. ஏன் பிரதாப் சிம்ஹா பரிந்துரைத்தார் என்பதை பேச மறுக்கின்றன. இதில் தான் பாஜக வின் ஜனநாயகம் உள்ளடங்கி இருக்கிறது.

உலகம் முழுவதும் வலதுசாரி சக்திகள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தி வருவதைக் காண முடிகிறது. ஜனநாயகத்தை அழிக்க நினைக்கும் வலதுசாரி குணத்தின் வெளிப்பாடாக இவை உள்ளது. பல நாள்கள் ஆன பின்னரும் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய நபர்கள் யாரும் மேற்படி தாக்குதல் குறித்து வாய் திறக்க வில்லை. ஏன் என்ற கேள்விக்கு விசாரணையை திசை திருப்பும் வகையில் அமைந்து விடக்கூடாது என்று வியாக்கியானங்கள் செய்து வருகிறனர்.  அரசியலாக்க வேண்டாம் என பிரகலாத் ஜோஷி கூறுவதே ஒரு அரசியல் நோக்கம் கொண்டதாக உள்ளது. பாஜகவின் ஜனநாயக விரோத செயல்களுக்கு முடிவு கட்டுவதே தீர்வாக இருக்க முடியும்.