அன்புமிக்க தோழனே வணக்கம், நலம். நாடுவதும் அதுவே.
சமீபத்தில் நடந்து முடிந்த மாவட்டக் குழுக்களில், சில தோழர்கள் மலை போல் வேலைகள் குவிந்து கிடப்பதாக உணர்ந்தனர். நமது இயக்கம் வேலைகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறதா? என்றும் சிலர் கேட்கின்றனர். சமூகத்தில் நாம் முடிக்க வேண்டிய பணிகள் முடியாமல், கேடு கெட்ட முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சமூகத்தின்கால நீடிப்பு இருக்கிற வரை ”வேலைகள் ஓயப்போவதில்லை.’’
தடைகள் இருக்கின்றன
தகர்க்கச் சொல்லுங்கள்!
துயரங்களும் துன்பங்களும்
தோன்றக் கூடும்
அழிக்கச் சொல்லுங்கள்!
இன்பத்தின் விலையை அறிய முடியாதவர்கள்
இன்புறவே இயலாது!
தவறு என கண்டதை
மன்னிக்காதீர் ஏனெனில்
அவை திரும்பவும்
நேர்ந்து அதிகமாகக் கூடும் பின்
நமது மாணவர்கள்
நாம் மன்னித்ததற்காக
நம்மை மன்னிக்க மாட்டார்கள்.
-யெங்கனி யெவ்டுஷென்கோ
என்ற ருஷ்ய தேசத்து கவிஞனின் வரிகள், நம்காலத்துப் பணிகளை அறிந்து எழுதப் பட்டதைப் போல் உணர முடிகிறது. ஆம். இன்பத்தின் விலை மதிப்பிடற்கரியது, உயர்ந்தது, எளிதில் கிடைக்காத ஒன்று, அதைப் பெற கடின உழைப்பு தேவை. தனி மனிதனின் இன்பமல்ல நாம் வேண்டுவது, சமூகத்தின் இன்பம், அது பெரும் கூட்டமென திரண்டு சாதிக்க வேண்டியது.காட்டாற்று வெள்ளம் யாருக்கும் பெரிதாக பயன்தராது. அழிவைத் தரும். நாம்காட்டாற்று வெள்ளமாக பெருக்கெடுக்க விரும்பவில்லை. நின்று நிலையாக ஓடி, பயிர் செழிக்க, விளைய, அறுவடையாகக் குவிய, அடுத்தடுத்த தலைமுறைக்கும் பயன்தர வேண்டுமென்ற நோக்கத்தில் ஓடுகிற பரந்த ஆறு.
எனவே, வேலைகள் குவிவது தவிர்க்க இயலாது. இன்பம் என்கிற போது, தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஊடகங்கள் நித்தியானந்தர்களையும் இதரகாவியுடையணிந்தகாமுகர்களையும் அம்பலப்படுத்துகிறது. பின் பரவசப்படுத்தி, சதை வியாபாரத்திற்கு தங்களை தயார்படுத்தி சிற்றின்பம்காண்கிறார்கள். இதில் பெண்களின் முக சுளிப்பையும், அருவருப்பையும் சம்பாதிக்கிறார்கள் நாம் சமூகத்தினையும், நமது அமைப்பையும் நேசிப்பவர்கள். எனவே, நித்தியானந்தர்களுக்கு, பிரணாப் முகர்ஜிகள் பட்ஜெட் படிக்கிறபோது, வழங்கும் சலுகைகளை அம்பலப்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது என, திமிர்வாதம் பேசும் ஆட்சியாளர்களின் செல்வாக்கை சரிக்க, நமது வேலைகள் இன்னும் அதிகப்பட வேண்டியிருக்கிறது.
“கன்னியர் கடைக்கண்காட்டி விட்டால்
காதலனுக்கு மாமலையும் ஓர் கடுகாம்’’
என பாரதிதாசன்,காதலன் எவ்வளவு பெரிய பணியையும் விரைந்து முடிக்கும் ஆற்றல் பெற்றவன் எனக் கூறினார். ஷாஜஹானின், மும்தாஜ் மீதானகாதல், தாஜ்மஹாலாக உயர்ந்தது. கலைஞர் கருணாநிதியின் சிம்மாசனம் மீதானகாதல், சென்னை நகரம், இந்திய மாநிலங்களில் எழுச்சி மிக்க சட்டமன்றமாக உயர்ந்து நிற்கிறது. இருவருமே உழைப்பை. சுரண்டியவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் பல ஆயிரம் தொழிலாளர்களின் உழைப்பு, இரவு பகலாக சிந்திய வியர்வை, மற்றும் அவர்களின் உதிரம், பிரம்மாண்டமாகியுள்ளது. நாம் பாரதிதாசன் குறிப்பிட்டகாதலர்களாக இருந்து, உழைப்பைச் சுரண்டும் சிம்மாசன மாமலைகளை சரிக்கவும், சமப்படுத்தவும் வேண்டியிருக்கிறது.
“நாளும் கிழமையும் நலிந்தோருக்கு இல்லை, ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கு இல்லை,’’ இது தமிழ்நாட்டு முதுமொழி. தனது களைப்பை, அயர்வை வெளிக்காட்ட முடியாத நமது முன்னோர் நிலப்பிரபுக்களுக்கு நியாயப்படுத்துவது போலும், பண்ணையடிமைகளுக்கு புரிய வேண்டும் என்பதற்காகவும் சொன்ன முதுமொழி. இன்னும் நம் தலைமுறைக்கும் நமக்கடுத்த இளையோருக்கும் புரியாததாகவே நீடிக்கிறது. என்ன தோழர். வேலைகள் குவிகிறது, என மலைத்து நிற்கும் தோழா, எட்டு மணி நேரத்திற்கு பின்னும் உன்னைக் கசக்கும் முதலாளித்துவப்பதரை அழிக்க கூடுதல் உழைப்பும் அடுத்தடுத்த வேலைகளும் தவிர்க்க முடியாது! என திடமாகவும், உரத்தும் சொல்.
விழுப்புரம் நகரில் 12வது மாநில மாநாடு நிறைவு பெற்றதில் இருந்து, ஓடிக்கொண்டே இருப்பதாக தோழர் ஒருவர் சொன்னார். அந்த ஓட்டத்தில் நாம் வளர்ந்து இருப்பதையும், இன்னும் வளர வாய்ப்பு இருப்பதையும் கண்டறிந்ததாகக் குறிப்பிட்டார். அது உண்மை 2008 டிசம்பரில் சைக்கிள் பிரச்சாரம், ஜனவரியில் பொங்கல் விழா, பிப் 18 இல் மறியல், மார்ச், ஏப் மாதத்தில் தேர்தல் பணிகள், ஜூன், ஜூலையில் உறுப்பினர் பதிவு, செப் அக் இல் ரேசன்கார்டுக்கான இயக்கம், டிச 25, இல் வெண்மணி தியாகிகள் தினத்தில் தீண்டாமைக்கு எதிரான நேரடி நடவடிக்கை, ஜனவரியில் மீண்டும் பொங்கல் விழா, பிப்ரவரியில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம், பிப் 12இல் 24 மணி நேரம் தலைநகர் டில்லியில் உண்ணாவிரதம் இவையனைத்தையும் சிறப்பாக்கியக் கூட்டம் நம் கூட்டம்.
உறுப்பினர் சேர்க்கைக்காக 3 நாள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்து எளிமையாக நடந்து (7.5 லட்சம் ஹெலிகாப்டர் செலவு) சென்று தற்போது இளைஞர் காங்கிரஸ் தேர்தலை சகோதரியுடன் வந்து பார்த்துச் செல்லும் ராகுல்காந்தியின் கட்சியில் கூட நாம் மேலே சொன்ன பட்டியல் சாத்தியம் இல்லை. அல்லது மாநில பட்ஜெட்டில் சலுகைகளை வாரி இறைத்திருப்பதாகச் சொல்லும் திமுக விலும் இது சாத்தியம் இல்லை.
நாம் சாத்தியப்படுத்தி இருக்கிறோம். என்றால் அதற்குகாரணம், நாம் நமது அனைத்து அமைப்புகளையும் செயல்படுத்துகிறோம். மாநிலக்குழு, மாவட்டக்குழு, பகுதிக்குழு, கிளைக்குழு ஆகிய அனைத்தையும், அனைத்தின் நிர்வாகிகளையும், ஜனநாயகப் பூர்வமாக செயல்படுத்த எடுத்த முயற்சியாகும். ஏதாவது ஓரிரு இடங்களில் இது நடக்காமல் இருக்கலாம் ஆனால், அது பொது விதி ஆக முடியாது. பொது விதியான நமது அமைப்புகளை மேலும், மேலும் செயல்படுத்துவன் மூலமே, தனிநபர் மீதான வேலைப் பளுவைக் குறைக்க முடியும். சமீபத்தில் கூடிய நமது மாநிலக்குழு, உறுப்பினர் பதிவு நடைபெற்ற அனைத்து இடங்களிலும் கிளை மாநாடுகளை நடத்துவது என முடிவு செய்துள்ளது. கிளைக் கூட்டங்கள் அல்லது மாநாடுகளை நடத்துவதும், அவற்றை செயல்படுத்துவதும், தனிநபர் மீதான வேலைப் பளுவைக் குறைப்பதுடன், நமது அமைப்பை மேலும் உறுதி கொண்டதாக மாற்றுகிறது. மேலும், மேலும் விரிவடைவதற்கான போராட்டங்களுக்கு விதையிடுகிறது. ஸ்தலப் போராட்டங்களும், நாம் திட்டமிட்ட பாதயாத் திரை பிரச்சார இயக்கங்களும் பெரும் உறுதுணையாக அமைகின்றன.
இன்னொரு அனுபவத்தையும் இங்கே பகிர்ந்து கொள்வது பலனளிக்கும் 2008 டிசம்பரில் நாம் நடத்திய சைக்கிள் பிரச்சார இயக்கம், 1052 கிளைகளில் நேரடியாக வரவேற்பைப் பெற்றதுடன், 95 ஆயிரம் தோழர்களைச் சந்திக்கவும் உதவியது. இந்தப் பிரச்சார இயக்கத்தின் அனுபவம், இரண்டு வகையில் அமைந்தது. ஓன்று நமது ஸ்தாபனத்தை உறுதி செய்யவும், விரிவாக்கம் செய்யவும் பயன்பட்டது. இரண்டு நாம் முன்வைத்த கோரிக்கைகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கும், அரசை வலியுறுத்துவதற்கும் உதவியது. இந்த அனுபவத்தை நமது இடைக்கமிட்டிகளுக்கு விரிவாக்கம் செய்திட மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. அதன் விளைவு தான் 354 இடைக்கமிட்டிகளிலும், தனித்தனியான பாதயாத்திரை பிரச்சார இயக்கம் என திட்டமிட்டு செயலாற்றி வருகிறோம்.
1. சேதுகால்வாய்த் திட்டத்தை விரைவாக அமல்படுத்து.
2. தமிழக அரசாணை எண் 170ஐ திரும்பப்பெற்று, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடு. அரசுகாலிப்பணியிடங்களைப் பூர்த்தி செய்.
3. சமூகப் பாதுகாப்புடனான வேலையை, மத்திய, மாநில அரசுகள் சட்டப்பூர்வ நடவடிக்கை மூலம் அமலாக்க வேண்டும்.
4. தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய, நாள்களின் எண்ணிக்கையையும், கூலியையும் உயர்த்து.
5. வேலை உறுதிச்சட்டத்தை நகர்புறத்திற்கும் அமலாக்கிடு.
ஆகிய 5 கோரிக்கைகளை நமது கிளைகளில், பொதுமக்களிடம் பிரபலப்படுத்துவதும், அதன் மூலம் அரசுகளை நிர்பந்திப்பதுமே, பிரச்சார இயக்கத்தின் நோக்கமாகும்.
இதைத் தொடர்ந்து. ஏப் 28 அன்று சென்னை நகரில் பிரம்மாண்டமாக உயர்ந்துள்ள சட்ட மன்றத்தை நோக்கி பேரணி நடத்திட மாநிலக்குழு முடிவெடுத்துள்ளது. சென்னை மற்றும் வட மாவட்டங்களில் இருந்து மிக அதிகமான எண்ணிக்கையிலான தோழர்களும், பிற பகுதிகளில் இருந்து, எல்லாக் கிளைகளும் பங்கேற்கும் வகையிலும் நமது தோழர்களைத் திரட்ட திட்டமிட்டு உள்ளோம்.
இந்தப் பணிகளுக்காக நமது கிளைமாநாடுகள், பகுதி மாநாடுகள் என்கிற ஸ்தானப் பணிகளும், அங்கே பங்கெடுக்கிற இளைஞர்களிடம் போர்க் குணத்தை உருவாக்குவதும் நிச்சயமாக உறுதுணையாக நிற்கும்.
வாழ்க்கை மனிதனுக்குத் தரப்பட்டதே
அவன்
எந்த நிலையில் இறக்க விரும்புகிறான்
என்பதை முடிவு செய்து கொள்ளவே!
மேலே சாம்பல் நிற ஆகாயம்!
தொங்கும் நட்சத்திரக் கூட்டங்கள்!
பூமியோ...
உன் வாய்க்குள் சோற்றுருண்டை ஆகிறது.
பென்ட்டி சாறி கோவ்ஸ்கி என்ற பின்லாந்து நாட்டுக் கவிஞனின் வரிகள் எதார்த்தத்தை மறைத்து குருட்டு நம்பிக்கையை விதைக்கவில்லை. தோழனே! முடிவு செய்தால், பூமி கூட சோற்றுருண்டையாக சுருங்கிப் போகும், எனில் மலை போன்ற வேலைகள் நமது கூட்டு உழைப்பில் பனி போல் உருகி விடும். நம்பிக்கை கொள்! செயலாற்று!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக