ஞாயிறு, 2 மே, 2010

உங்களுக்கு இருக்கிறதா வேலை?

உங்களுக்கு இருக்கிறதா வேலை?
வேலை இல்லை என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? சென்னையில், கோவையில் இதர பெரு நகரங்களில் வேலைக்கு ஆள் இல்லை எனச் சொல்-கிறார்கள். இந்தியாவின் அனைத்துப் பெரு நகரங்களிலும் “வேலைக்கு ஆள் தேவை” என்கிற வாசகங்களைக் கொண்ட சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. எது உண்மை, வேலை இல்லை என்பது உண்மையா? வேலைக்கு ஆள் தேவை என்பது உண்மையா?

மத்திய அரசின் நிறுவனம் NSSO(National Sample Survey Organization) எடுத்த 52வது சுற்று சர்வே, தேசிய அளவில் வேலையின்மையில் இருப்போர் 7 சதம் என்றும், தமிழகத்தில் 3 சதம் என்றும் சொல்கிறது. 2008ஆம் ஆண்டு கணக்குப்படி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 5.52 கோடி, தமிழகத்தில் 58 லட்சம் பேர். இந்த இரண்டு அரசு விவரங்களும் வேலையின்மை இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. NSSO ஆய்வுப்படி எண்ணிக்கை குறைவாகவும், வேலைவாய்ப்பு அலுவலகக் கணக்குப்படி எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது.

நமது தேசத்தில், “நிரந்தர வேலை கிடைக்கும் வரை, வேறு வேலைக்கு செல்லமாட்டேன்”, என யாரும் சும்மா இருக்க வாய்ப்பில்லை. உலகின் பல நாடுகளில், வேலையில்லாக் காலத்தில் நிவாரணம் வழங்குகிற சமூகப் பாதுகாப்பு இருக்கிற காரணத்தால் நல்ல வேலை கிடைக்கும் வரை நிதானமாக காத்திருக்கும் பழக்கம் உள்ளது. ஆனால், இந்தியாவில் அப்படி இருந்தால், பட்டினிச்சாவு பட்டியல் அதிகரித்து விடும். வேலையில்லாக் கால நிவாரணம் தரப்படும் மாநிலங்-களிலும் மிக சொற்பத் தொகை தான் தரப்படுகிறது. ஆகவே தான் ழிஷிஷிளி கணக்குப்படி வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.
அட்டவணை-1

எண் நோய் ஆண்டு ஒன்றுக்கு இறப்பு எண்ணிக்கை
1. டி.பி 4.5 லட்சம் மனிதர்கள்
2. காலரா 15 லட்சம் குழந்தைகள்
3. நிமோனியா 75 லட்சம் குழந்தைகள் 5 வயதுக்கு கீழ்

ஆதாரம்: உலக சுகாதார மையம்

அட்டவணை 1-இன் படி காசநோய், காலரா, நிமோனியா உள்ளிட்ட நோய்கள் அதிகம் இருப்பது உலகிலேயே இந்தியாவில் தான் அதிகம் என சொல்லப்படுகிறது. நல்ல போஷாக்கான உணவு உண்கிற வசதியானவர்களுக்கு, இத்தகைய நோய்கள் வருவது இல்லை. மாறாக ஏழைகள், உழைப்பாளிகள் தான் இது போன்ற நோய்களுக்கு இரையாகின்றனர். எனவே, நமது நாட்டு உழைப்பாளிகள் போஷாக்கான உணவு உண்டு வாழ, வருமானம் இடம் தரவில்லை என்பது தெளிவாகிறது.

அட்டவணை - 2

சரியான எடை இல்லாமல் எடை குறைவாக உள்ள குழந்தைகள்
5 வயதுக்கு கீழ்.

எண் நாடுகள் சதவீதம்

1 பாகிஸ்தான் 5%
2 பங்களாதேஷ் 5%
3 நைஜீரியா 5%
4 இந்தியா 42%
5 இதர நாடுகள் 43%

ஆதாரம் WHO- 2009

அட்டவணை - 3

இந்தியக் குழந்தைகள் உட்கொள்ளும் போஷாக்கான உணவு நிலை

எண் 3வயதுக்கு கீழானகுழந்தைகள் நகரம் கிராமம் அகில இந்திய அளவில்

1 குறைவான உயரம் உடையவர்கள் 37% 47% 45%
2 புரதச் சத்தற்ற எலும்பும்
தோலுமானவர்கள் 19% 24% 23%
3 எடை குறைந்தவர்கள் 30% 44% 40%

“வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்” என்றே வாழ்ந்து வருகின்றனர். அட்டவணை 2 மற்றும் 3 இதையே குறிப்பிடுகிறது.

ஆகவே தான், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், எல்லோருக்கும் வேலை என்று முழங்கினாலும், சமூகப் பாதுகாப்புடனான வேலை என்ற கோரிக்கையையும் இணைத்தே முன்வைக்கிறது. வேலையில் இருப்போரின் ஊதியம், விடுப்பு, பஞ்சப்படி, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட தொழிலாளர் நலச் சட்டங்கள் உரிய முறையில் கண்காணிக்கப்படவில்லை என்ற குற்றச் சாட்டை முன்வைக்கிறது.
2001 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி இந்தியாவின் சராசரி இறப்பு வயது 61 என சொல்கிறார்கள். திருப்பூர் போன்ற பனியன் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளிலும், பஞ்சாலைகளிலும் 40 அல்லது 45 வயதில் வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர். மத்திய அரசு ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்தத் தொடர்ந்து ஆலோசித்து வருகிறது. தமிழக திமுக அரசு ஓய்வு பெற்றோரை பணியில் அமர்த்தி இளைஞர்களின் கனவை சிதைக்கிறது. அதாவது தனியார் நிறுவனங்கள் இளைஞர்களின் உழைப்பை கரும்பைப் பிழிவது போல் பிழிந்து விட்டு 45 வயதில் கரும்பு சக்கையைப் போல் எறிந்து விடுகிறார்கள். அரசு இளைஞனுக்கு வாய்ப்புத் தரவே மறுக்கிறது. இந்தியாவில் சுமார் 54 கோடிப்பேர் 15 முதல் 25 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள் என்று விவரம் தெரிவிக்கிறது. இளம் மனித வளம் நிறைந்திருக்கும், நமது நாட்டில் இளைஞர்களை தனியார் நிறுவனங்கள் சுரண்டி, கொள்ளை லாபம் சம்பாதிப்பதும் அரசு முற்றாக நிராகரிப்பதும் அநியாயத்திலும் அநியாயமானது.

அட்டவணை - 4

குற்றம் குறித்த விவரம் தமிழ்நாடு.

எண் ஆண்டு கொலைகள் கொள்ளைகள் கூலிப்படை (எல்லாவிதமும்) கொலைகள்
1 2005 1365 20,099 74
2 2006 1273 17,496 89
3 2007 1521 17,517 102
4 2008 1630 19,630 105
5 2009 1644 21,174 123

ஆதாரம்: தமிழ்நாடு காவல்துறை 2009

தமிழகக் காவல்துறை அளித்திருக்கும் தகவல் படி நாட்டில்
கொலைகள், கொள்ளைகள் குறையவில்லை. மாறாக உயர்ந்திருக்கிறது. இதில் படித்த படிக்காத இரண்டு தரப்பு இளைஞர்களும் ஈடுபடுகிறார்கள். ஆனால், பெரும்பாலும் வேலையில்லாத அல்லது சமூகப் பாதுகாப்பு இல்லாத பணிகளில் ஈடுபடும் இளைஞர் கூட்டம் இது போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். சட்டம் மூலம் தண்டித்து ஒழுங்கு செய்வது ஒருபுறம், அரசு மீதும், சமூகத்தின் மீதும் நம்பிக்கை ஏற்படுத்தி திருத்துவது மற்றொரு புறம். அரசு தண்டிக்கும் செயலை மட்டும் செய்கிறதே ஒழிய நம்பிக்கை ஏற்படுத்துகிற வழியைச் செய்ய வில்லை.

அதே நேரத்தில் நவீன தாராளமயமாக்கல் கொள்கைக்கு பட்டுக் கம்பளம் விரித்து, பணிவிடைகள் செய்கிற மத்திய, மாநில அரசுகளின் கொள்கை, நுகர்வுக் கலாச்சாரத்தை, நுகர்வு வெறிக் கலாச்சாரமாக வளர்த்திருக்கிறது. சமீபத்தில் சென்னையில் தச்சு (கார்பெண்டர்) பணியில் ஈடுபட்டு வந்த இளைஞன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். காரணம் அவன் ஏராளமான திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டான் என்பதாகும். தச்சுப் பணி செய்யும் இந்த இளைஞனுக்கு எந்த வகையில் பணம் வருகிறது? எப்படி விலை உயர்ந்த செல் போன், வாகனம், அணிகலன்களைப் பயன்படுத்த முடிகிறது? என்ற கேள்விகள் எழுந்தாலும், பலரும் கேட்கவில்லை. விளைவு சிறையில் அடைக்கப்பட்டான் என்ற செய்தி.

இந்த நிகழ்வு இரண்டு உண்மைகளை சமூகத்திற்கு சொல்கிறது. ஒன்று நுகர்வுக் கலாச்சாரத்தினால் சம்பாத்தியம் போதாத இளைஞன் கொள்ளை அடித்து, பன்னாட்டு நுகர் பொருளை விலை பேசுகிறான். இரண்டு, இளைஞன் சம்பாத்தியம் அனைத்தையும், நுகர்வுக் கலாச்சாரத்தினால் பன்னாட்டு நிறுவனத்தின் கையில் கொடுத்து விட்டு, வெறும் கையோடு வீட்டிற்கு செல்கிறான். இரண்டின் மூலமும் லாபம் பன்னாட்டு நிறுவனங்களுக்கே. இந்த வகையில் தான், நமது ஆட்சியாளர்கள் நவீன தாராளமயமாக்கல் கொள்கை மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவைபுரிகிறார்கள். இதே கொள்கை விவசாயத்துறையை நாசப்படுத்தியதால் இடம்பெயர்தல் அதிகரித்து, நகர்மயமாதலில் தமிழகம் இரண்டாவது பெரிய மாநிலமாக வளர்ந்து நிற்கிறது. கிராமத்தையும், வாழ்க்கை முறையையும் பல்வேறு வடிவங்களில் வளர்ச்சி என்ற பெயரில் சிதைத்து வருகிறது.


II


“எங்கே வாழ்வது என்பதைத் தீர்மானிப்பது
மனித குலத்தின் அடிப்படை அறிவு”

என்று 2009இல் வெளியிடப்பட்ட மனித வள மேம்பாட்டு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பிறந்த ஊர், உறவினர், நண்பர் ஆகிய மிக நெருக்கமாக, நேசித்த அனைவரையும் உதறிவிட்டு பிழைப்பிற்காக, பொருளீட்டுவது என்ற பெயரில் இடம் பெயர்ந்து செல்வது, சமீபத்தில் அதிகரித்து வருகிறது. தொழில் நுட்பம் கற்றவர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்வதை புலம் பெயர்தல் எனச் சொல்லுகிறார்கள். பழங்குடியினர், மேய்ப்பர், தோல்பொருள் கலைஞர், மண்பொருள் வினைஞர் நெசவாளர், சலவையாளர் போன்ற பழங்கால தொழில் நுட்ப வல்லுனர்களும், விவசாயிகளும் தங்கள் ஊரில் பிழைக்க முடியாமல் இடம் பெயர்கின்றனர். இந்த உழைப்பாளர் கூட்டம் அறிவியலும், தொழில் நுட்பமும் வளருவதற்கு முன்னே, தங்களின் மூளையைப் பயன்படுத்தி தொழில் நுட்பத்திற்கும், அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கும் விதையிட்டவர்கள் அன்றைய அறிவியல் விஞ்ஞானிகள்.
ஆனால், நமது சமூகத்தின் அல்லது அரசியல் அமைப்-பின் கொள்கைகள், மேற்படி அறிவியல் விஞ்ஞானிகளை வெறும் உழைப்பாளிகளாக மட்டுமே வைத்திருந்தது. இத்த-கைய தொழில்களில் ஈடுபட்டவர்களை, இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி கட்டத்தில், திறனற்றவர்கள் என சொல்லி நிராகரிக்கவும் செய்கிறது. இன்றைக்கு கிராமங்களில் பிழைக்-கும் சூழல் இல்லாத போது இடம் பெயரும் நிர்பந்தம் இந்த உழைப்பாளிகள் மீது திணிக்கப்படுகிறது. எனவே, தமிழ்-நாட்டின் உழைக்கும் மக்கள் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும், இதர வட மாநில உழைப்பாளிகள் தமிழகத்தின் சென்னை, கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளுக்கும் இடம் பெயர்கின்றனர்.

பசியும், குழந்தைகளின் மரண ஓலங்களும் உழைக்கும் மக்களை இடம் பெயரத் தூண்டுகிறது. சென்ற இடத்தில் ஏற்படும் நெருக்கடிகளை, கொடுமைகளை சகித்துக் கொள்ளவும் சம்மதிக்கிறது. ஒரு நாடு வளர்ச்சி பெறுகிற போது இது போன்ற சமூக அவலங்களை கடந்து தான் முன்னேற முடியும் என சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் ஏன் முதலாளிகளுக்கும், பணக்காரர்களுக்கும் பொருந்துவதில்லை? ஒரு நாடு வளர்ச்சி பெறும் போது ஏழைகளையும், உழைக்கும் வர்க்கத்தையும் மட்டுமே பாதிக்குமானால், அந்த வளர்ச்சி ஏழைகளை நிராகரித்த வளர்ச்சியாக மட்டும் தான் இருக்க முடியும். இன்று நமது நாடு அடைகிற வளர்ச்சியும், ஏழைகளை புறக்கணிக்கிற வளர்ச்சி தான்.
இன்னொரு வாதத்தையும் இடம்பெயர்தலின் போது முன் வைக்கிறார்கள். அதாவது இடம் பெயர்தல் காரணமாக, சாதிய பாகுபாடுகள் குறைகிறது என குறிப்பிடுகின்றனர். இது மிக மிகக் குறைவான பலனைத் தந்திருக்கலாம். படித்தவர் அல்லது தொழில் நுட்பத்திறன் பெற்றவர் வேண்டுமானால், இத்தகைய சாதிய பாகுபாடுகளில் இருந்து தப்பியிருக்கலாம். ஆனால், இந்திய சமூகத்தின் தற்போதைய இடம்பெயர்தல் குறித்து ஆய்வு செய்தால், சாதியத்தை தக்க வைக்கிற முறையில் இடம் பெயர்தல் நடைபெறுவதை அறியமுடியும். நன்கு அறிமுகமான ஒருவரின் தொடர்பை பயன்படுத்தி குடும்பம் குடும்பமாகவும், கும்பலாகவும் இடம்பெயர்வது அதிகரித்து வருகிறது. இடம் பெயர்ந்த இடத்தில் சில புதிய தகவல்களை அல்லது விவரங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் பழைய அழித்தொழிக்க வேண்டிய சாதிய வேர்களை பாதுகாக்கின்றனர்.

உலகமயமாக்கலுக்குப் பின் இடம்பெயர்தல்:

உலகமயமாக்கல் என்பது நவீன தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் கொள்கைகளின் விளைவு ஆகும். சுதந்திரச் சந்தை அல்லது கட்டுப்பாடற்ற சந்தை முறையை உரமிட்டு வளர்க்கும் செயலை உலகமயமாக்கல் கொள்கை திட்டமிட்டு அமலாக்குகிறது. இந்தியா போன்ற பெரும் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் வளர்ந்து வரும் நாடுகள், உலகமயமாக்கலின் இறக்குமதிக் கொள்கைக்கு கட்டுப்பட வேண்டி இருப்பதால், உள்நாட்டு உற்பத்தியில் சரிவை சந்திக்கிறது. வேளாண்துறை துவங்கி, எல்லாத் துறைகளிலும் உற்பத்தி சரிவு ஏற்படுவதால், கிராமப்புற வேலை வாய்ப்பு மற்றும் சிறு தொழில்கள் மூலம் கிடைத்து வந்த வேலைகளில், மிகப் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பிழைப்பிற்கும், உணவிற்கும் வழியின்றி தவிக்கும் நிலைக்கு, உழைக்கும் மக்கள் தள்ளப்படுகிறார்கள். இதன் காரணமாக இடம்பெயர்ந்து காலத்தை ஓட்டுகிற தேவைக்கான சூழல் உருவாகிறது.

இன்னொருபுறம் இடம்பெயரும் தொழிலாளிகளை வேலைக்கு வைப்பதன் மூலம் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் முதலாளிகள் பெரும் லாபம் ஈட்ட முடிகிறது. இடம் பெயரும் தொழிலாளிகள் உள்ளூர் தொழிலாளிகளை விட, குறைவான ஊதியம் பெருகின்றனர். கேள்வி கேட்காமல் அதிக நேரம் உழைக்கின்றனர். இதன் காரணமாக உழைப்பாளிகள் மீதான சுரண்டல் மிகக் கொடுமையாக அரங்கேற்றப்படுகிறது.“உள்ளூரில் வேலைக்கு ஆள்கள் கிடைப்பதில்லை” என்ற பிரச்சாரம் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பிரச்சாரத்திற்குள் அடங்கிக் கிடங்கும், “சுரண்டல்,” என்கிற கொள்ளையை யாரும் வெளிப்படுத்துவதில்லை. சமீபத்தில் சென்னை நகரில் தொழிலாளர் முகாம்கள், திடீர் திடீரென உருவாவதைக் காண முடியும். தகரக் கொட்டகைகளைக் கொண்ட இந்த முகாம்களில் தங்கி வேலை செய்யும் தொழிலாளர்கள், அதிகாலையில் வேலையைத் துவங்கி இரவு 10 மணி வரை கடுமையாக உழைக்கின்றனர். இந்த அகதி முகாம்களில் அடைக்கப்பட்டு இருக்கும் தொழிலாளர்கள் மூலம் ஒப்பந்தக்காரர்களும், பணக்கார முதலாளிகளும் அடைகிற கொள்ளை லாபத்தை யாரும் வெளிப்படுத்துவதில்லை.

தனியார் நிறுவனங்கள் மட்டும் இது போன்ற கொள்ளைகளில் ஈடுபடவில்லை. அரசுத் துறைகளும் கூட இது போன்ற கொள்ளைகளுக்கு துணை போகின்றன. உதாரணத்திற்கு கடந்த 2010 மார்ச்சி-ல் திறக்கப்பட்ட தமிழக சட்டமன்றத்தின் புதிய கட்டடம். இதில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளிகளுக்கு முதல்வர் பகிரங்கமாக விருந்து கொடுத்த போது அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சுரண்டலை ஒரு வார்த்தையில் கூட குறிப்பிடவில்லை. மாறாக, வேறு மொழி பேசுபவருக்கு கூட இரக்கப்பட்டு வேலை தரும் கொள்கை, என சுய பீற்றல் வார்த்தைகளை வெளிப்படுத்தினார்.

சாலைகள், தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டன. இதில் தனியார் ஈடுபடுத்தப்பட்டனர். மிகக் கொடுமையான அந்தப்பணிகளில், ஒப்பந்த அடிப்படையில் கிராமப்புற உழைப்பாளிகள் மிகக் குறைந்த ஊதியத்துக்கு ஈடுபடுத்தப்பட்டனர். புது டில்லியிலும், தற்போது சென்னையிலும் மெட்ரோ ரயில் போக்குவரத்திற்கான கட்டுமானப் பணியாளர்கள் கிராமங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள். இதன் மூலம் கிடைக்கும் கூலியால் உயிர் வாழும் நிலையை “வேலை” என அரசு பெருமைப் பட்டுக் கொள்கிறது.
தமிழகத்தில் இருந்து இடம் பெயரும் தொழிலாளர்கள் கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இது போன்ற அவலங்களும், துன்பங்களும் நிறைந்த பணிகளிலேயே ஈடுபடுகின்றனர். ஆக மொத்தத்தில், இடம் பெயரும் தொழிலாளர் கூட்டம் சாலைகள் போடுவது, கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது, செங்கல் சூளைப் பணிகளில் ஈடுபடுவது, கரும்பு வெட்டுவது, கல்குவாரி பணிகளில் ஈடுபடுவது போன்ற மிகக் கடுமையான உழைப்பை செலுத்த வேண்டிய துறைகளில் மட்டுமே பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் கூடுதலாக பஞ்சாலை, கார்மெண்ட்ஸ், உணவுப் பதப்படுத்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

திறனற்ற தொழிலாளர்களுக்கு (Unskilled labour) வேறு என்ன வேலை தர முடியும் என கேள்வி எழுப்புகின்றனர். மிகப் பெரிய தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்பட்டு இருந்தாலும், கடுமையான உடலை வருத்தும் பணிகளுக்கு, திறனற்ற தொழிலாளரைப் பயன்படுத்துவது என்ற கொள்கை, லாபத்திற்காக உருவானது. ஆம் திறன் கொண்ட இயந்திரங்களை விட, மனித உழைப்பு மலிவாக இருக்கும் காரணத்தால் உருவானது. என்பதை யார் அம்பலப் படுத்துவது? இரண்டாவதாக, உலகமயமாக்கல் கொள்கை கிராமப்புற உழைப்பாளர்களின், திறனை அபகரித்து நிராயுதபாணியாக நகர்புறத்திற்கு விரட்டியுள்ளது என்பதை யார் பேசுவது?

தொழிலாளருக்கு எதிராக தொழிலாளர்:

பெண்களுக்கு எதிராக பெண்களே கொடுமைக்காரர்கள் என சொல்லப்படுவது ஆணாதிக்க சிந்தனை எனக் குறிப்பிடப்படுகிறது. அதேபோல், வேலையின்மையை பயன்படுத்தி, தொழிலாளருக்கு எதிராக தொழிலாளியை நிறுத்துவது, முதலாளித்துவச் சுரண்டல் சமூகத்தின் சிந்தனையே. லண்டன், பாரீஸில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய தொழிலாளருக்கு எதிராகப் போராட்டம் நடைபெறுவது உலகளவிலான உதாரணம். இந்தியா வில், அஸ்ஸாம், மகாராஷ்ட்ரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் நீண்ட நாள்களாக இருந்து வரும் பிரச்சனை. இதன் மூலம் இனப் பிரச்சனை உரு-வாக்கப்படுவதும், நீண்ட பகையாக வளர்க்கப்படுவதும், இந்திய முத-லாளித்துவ ஆட்சியாளர் களால் திட்டமிட்டு உருவாக்கப்படும் பிரச்-சனை ஆகும்.

III


மறுபுறம் இடம் பெயர்ந்த தொழி-லாளி, குறைந்த கூலிக்கு உழைக்க சம்மதிப்பது நிகழ்கிறது. எனவே, உள்ளூர் தொழிலாளியை விட வெளி-யூர் தொழிலாளி சுரண்டலை மேம்-படுத்த பயன்படுவார் என்பதால் முத-லாளித்துவம் திட்டமிட்டு வளர்க்கிறது.
உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதற்கும், நோய்களில் குழந்தைகள் மடிவதற்கும், கொலைகளும், கொள்-ளைகளும் அதிகரிப்பதற்கும், இடம்-பெயர்தலுக்கும் அடிப்படைக் கார-ணம் வேலை இல்லை என்பதாகும். 2004இல் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியை தோற்கடித்து காங்-கிரஸ் தலைமையிலான மாற்றுக் கூட்டணி ஆட்சியில் அமர்ந்த போது, இடதுசாரிகளின் ஆதரவு தேவைப்பட்டது. அதன் காரணமாக உருவாக்கப்பட்ட குறைந்த பட்ச பொதுத்திட்டம், தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தை கொணர்ந்-தது. இந்தியாவின் பல்வேறு மாநி-லங்-களில், இந்த திட்டம் ஓரளவு இடம்பெயர்தலை தடுத்துள்ளது. வாங்கும் சக்தியை சற்று உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் இத்திட்டம் 50 சதமான கிராம ஊராட்சிகளில் மட்டுமே, ஓர-ளவு அமலாகியுள்ளதாக தேசிய ஊரக வளர்ச்சி துறை தெரிவித்துள்ள விவரங்கள் குறிப்பிடுகிறது. 21.03.2010 வரை 1.5 லட்சம் குடும்பங்கள் மட்டுமே தமிழகத்தில் நடப்பு ஆண்டில் வேலை பெற்றுள்-ளனர்.

அட்டவணை - 5

தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்
எண் நாள்கள் வேலை பெற்றோர் எண்ணிக்கை
1 10 நாள்கள் 10,55,990
2 20 நாள்கள் 7,09,754
3 30 நாள்கள் 5,55,357
4 40 நாள்கள் 4,37,184
5 50 நாள்கள் 3,43,389
6 60 நாள்கள் 2,70,699
7 70 நாள்கள் 2,15,514
8 80 நாள்கள் 1,80,306
9 90 நாள்கள் 3,35,307

ஆதாரம்: ஊரக வளர்ச்சி - இணையதளம்

அட்டவணை 5இன் படி 90 நாள்கள் வேலை பெற்றவர்கள் 3,35,307 பேர். ஆனால், தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்தோர் சுமார் 66 லட்சம் குடும்பங்கள். இவர்களில் 42 லட்சம் குடும்பங்கள் வேலை கோரியதாகவும் 41,03,500 குடும்பங்களுக்கு வேலை கொடுத்ததாக மாநில அரசு விவரம், 2009--_2010 நிதியாண்டு குறித்த விவரங்களைத் தெரிவிக்கிறது. கூலி 50 ரூபாய்க்கு கீழ் வழங்கப்பட்ட ஊராட்சிகளும் இருக்கிறது. மத்திய அரசு 2009-_10 ஆம் ஆண்டு தேவைக்காக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய தொகை சுமார் 230 கோடி ரூபாய் மட்டுமே என சொல்லப்படுகிறது, இதற்குள்-ளேயே முடிந்து விட்டது. காரணம் கூலியை குறைத்தும், அட்டவணைப்-படி வேலை நாள்களை குறைத்தும் மாநில அரசு மக்களுக்கு துரோகம் செய்-கிறது. எனவே தான் தேசிய கிராமப்புற உறுதி சட்டத்தை முறையாக அம-லாக்கு என வலியுறுத்த வேண்டியுள்ளது.

நகர்புற வேலை உறுதி சட்டம்:

மத்திய அரசு நகர்புற மக்களுக்காக வறுமையை ஒழிக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. அட்டவணை 3 நகர்புறத்தில் வசிக்கிற, 3 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின், பரிதாப நிலையை சுட்டிக் காட்டுகிறது. சோமாலியா, எத்தியோப்பியா நாடுகளில், பட்டினியில் வதைப்படும் குழந்தைகளின் படத்தை பார்த்த போது, நமது நாட்டில் உள்ள பரிதாப நிலையை நாம் அறிய-வில்லை. நமது நாட்டில், நகர்புறத்தில் உள்ள குழந்தைகளில் 19 சதமான குழந்தைகள், சும்மா உயிரை மட்டும் சுமந்து கொண்டிருக்கும் அவலத்தை நாம் அறியவில்லை. 30 சதமான குழந்தைகள் 3 வயதில் இருக்க வேண்டிய எடையுடன் இருப்பதில்லை. 30 சதமான குழந்தைகள் எடை குறைவாக வாழ்கின்றனர். 37 சதமான குழந்தைகள் உரிய உயரத்துடன் இருப்பதில்லை என்பதை அட்டவணை 3 சுட்டிக் காட்டுகிறது.

நகர்புறத்தில் நிரந்தர வேலைகள் இருப்பதில்லை. போதிய ஊதியம் கிடைப்பதில்லை. விலைவாசி உயர்வு காரணமாக வரவை மிஞ்சிய செலவு போன்ற காரணங்களால், மேலே குறிப்பிட்ட நோய்களுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். எனவே, நகர்புற மக்களுக்கும், குறைந்த பட்ச ஆண்டு வருமானத்தை உருவாக்கித் தருவது அரசின் கடமையாகும். நகர்புற வேலை உறுதிச்சட்டமும், அதற்கு முறையான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதும் அவசியம்.
மாநில அரசும் சில முயற்சிகளை மேற்கொள்ள முடியும். இடதுமுன்னணி ஆட்சியில் உள்ள கேரளா, திரிபுராவில் தற்போது நகர்ப்புற வேலை உறுதிச்சட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். இதை தமிழ்நாடு அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமூகப் பாதுகாப்புடனான வேலை:

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு 92 சதமான உழைப்பாளிகள், முறைசாரா தொழில்களைச் செய்பவர் என குறிப்பிடுகிறது. கட்டுமானம், ஹோட்டல், சாலை போடுபவர், கடை ஊழியர், வீட்டு வேலை, செங்கல் சூளை போன்ற கடுமையான உடலுழைப்பு பணியில் ஈடுபடுவோரும் மற்றவர்களும் இதில் அடங்குவர். தொழிலாளர்களில் 8 சதமானோர் மட்டுமே வார விடுமுறை, மருத்துவ விடுப்பு, கடன்வசதி, பென்சன், கிராஜீவிடி, உரிய காலத்தில் சம்பள உயர்வு, ஓய்வூதியம் ஆகியவற்றைப் பெற முடிகிறது. 92 சதமான தொழிலாளருக்கு இவை எதுவுமே இல்லை. தமிழில் சமீபத்தில் வெளிவந்து ஓடிக் கொண்-டிருக்கும் “அங்காடித் தெரு” படத்தின் நாயகியைப் போல், நாயகனைப் போல் உழைக்கும் இளைஞர் கூட்டம் தமிழகத்தில் பல லட்சம். அந்த நாயகிக்கு ஏற்படுகிற அவமானம், பாலியல் துன்புறுத்தல் என்பது நடிப்பு. ஆனால், பலர் அனுபவிக்கிற கொடுமையைச் சொன்ன உண்மை படபிடிப்பு.

நமது ஆட்சியாளர்கள் 20 ஆண்டுகளாக பின்பற்றும் பொருளாதாரக் கொள்கை, சிறு தொழில்களை படிப்படியாக மூடு விழா நடத்தி அழித்து வருகிறது. அங்கே பணியாற்றிய தொழிலாளிகள், இன்று ரிலையன்ஸ் ஃபிரெஷ், மோர் ஃபார் யூ, ஸ்பென்சர் எக்ஸ்பிரஸ், பிக் பஜார் உள்ளிட்ட பெரும் முதலாளிகளின் கடைகளில் ஊழியராகி உள்ளனர். ஒன்று இல்லை என்றால் இன்னொன்று, என 50 வயதுவரை தான் ஓடலாம். அதன் பிறகு? எனவே தான் சமூகப் பாதுகாப்புடனான வேலை என்ற தேவையை சட்ட வடிவம் கொடுத்து அமலாக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாகியுள்ளது. சிலர் முதி-யோர் பென்-ஷன் நலவாரிய நடவடிக்கைகளில் திருப்தி கொள்கின்றனர். முழு நடவடிக்கை இதன் மூலம் இல்லை என்-பதை தாலுகா அலுவலகங்களுக்கு சென்றால் அறிந்து கொள்ளலாம்.

சேதுகால்வாய் திட்டம்:

தமிழ்நாட்டு மக்களின் 150 ஆண்டுக் கால கனவு, 13 கடலோர மாவட்டங்களில் சிறியதும், பெரியதுமாக 13 துறைமுகங்கள் அமையும் என்ற எதிர்பார்ப்பு, உட்புற மாவட்-டத்து இளைஞர்களுக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கை, சில லட்சங்களில் திட்டமிடப்பட்ட செலவு, இப்போது பல ஆயிரம் கோடி ரூபாய் ஆகும் என சொல்லப்படுகிறது. தோண்டுவது, கட்டுவது என்ற திட்ட முன்மொழிவுகள் வந்தால், உலகிலேயே அதிக மகிழ்ச்சி கொள்வது நமது ஆட்சியாளர்களாகத்தான் இருப்பார்கள். திட்ட மதிப்பீடும், துவக்கமும் இருந்தால் போதும் என நினைக்கிறார்கள். அதன் பின் திட்டத்தின் முழுமை குறித்து ஆட்சியாளர்கள் ஒரு போதும் கவலை கொள்வதில்லை. அப்படி கவலை-யளிக்காத திட்டமாக, தமிழகத்தில் சேது கால்வாய்த் திட்டம் இருந்து வருகிறது. சுமார் 2400 கோடி ரூபாய் கடலில் கொட்டி செலவிடப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் போட்ட வழக்கினால், உச்சநீதி மன்றத் தடையினால், சேது கால்வாய் திட்டம் முடங்கிக் கிடக்கிறது.

துறைமுகங்கள், மீன்பிடித் துறைமுகங்கள், ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள், அவை சார்ந்த உப தொழில்கள் மற்றும் வாணிபம் ஆகியவை செழிக்க விடாமல் தடுக்கப்பட்டுள்ளது. பண்டைய தமிழகம் 1. கிழக்குக்கரை 2. கொல்லத்துறை 3. எயிற்பட்டினம் 4. அரிக்கமேடு 5. காவிரி பூம்பட்டினம் 6. தொண்டி 7.மருங்கூர்பட்டினம் 8. கொற்கை 9. குமரி ஆகிய துறைமுகங்களை வங்காள விரிகுடாவில் கொண்டிருந்ததாக குறிப்பிடப்படுகிறது. தமிழன் யார் தெரியுமா? என்று அடிக்கடி கேள்வி கேட்டு, விளக்கம் சொல்லும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், சேது கால்வாய் திட்டம் முடக்கப்பட்டிருப்பது, வேலைவாய்ப்பை முடக்கும். இடம் பெயர்தலில் சிறு தடுப்பு அரணாக இருக்கும் சேது கால்-வாய் திட்டத்தை நிறைவேற்றுவது மிக அவசியம். தமிழகத்தின் பரவலான வளர்ச்சிக்கும் இது பயன்படும்.

அரசு வேலையும் _- கொள்கைகளும்:

அரசு எப்படி எல்லோருக்கும் வேலை தர முடியும்? சுய வேலைவாய்ப்பு, தனியார் துறை இவற்றை பயன்படுத்த வேண்டியது தானே? என்று நமது நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் கேட்கிறார்கள். இந்தியா விடுதலை பெற்ற பின், உருவாக்கப்பட்ட பொரு-ளாதாரக் கொள்கை, சுரங்கம், இரும்பு, மின்சாரம், ரயில்வே, சாலை, கப்பல், விமானம் ஆகிய அதிக முதலீட்டை கொண்ட துறைகளை அரசு துவக்குவது என்றும், சிறிய தொழிற்சாலைகளை தனியார் நடத்தலாம் என்றும் முடிவெடுத்தது. இதன் காரணமாக அரசு முதலீட்டின் அவசியத்தை அன்றைய முதலாளிகளும், நிலப்பிரபுக்களும் வலியுறுத்தினர். இன்று அதே முதலாளிகளும், நிலப்பிரப்புகளும் பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுக்கு உரிமையாளர்களாக மாறிய பின் அரசு நிறுவனங்களை “என்னிடம் கொடு” என்கிறார்கள் அது போல் தான் நடுத்தர வர்க்கம், அரசு வேலை குறித்து முன் வைக்கிற வாதமும் உள்ளது.

அரசு நிர்வாகம் என்பது நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றம், காவல்துறை, ராணுவம் என்பதாக சுருக்க வேண்டும் என பலர் எதிர்பார்க்கின்றனர். இவைகளைத் தாண்டி நிர்வாகம் மிக முக்கியமானது. எளிய மக்களைச் சென்ற-டைகிற வகையில் நிர்வாக ஏற்பாடுகள் அமைய வேண்டும்.
ரேசனில் வரிசை, மின்சாரக் கட்டணம் செலுத்த, ரயிலில் டிக்கட் எடுக்க, வங்கியில் பணம் எடுக்க, போட, பேருந்துகளில் உள்ள நெருக்கடி என அனைத்திலும் வரிசை அல்-லது கூட்டம் அலைமோதுகிறது. இது பெருகிய மக்கள் தொகைக்கு ஏற்ற நிர்வாக ஏற்பாடு இல்லை, என்பதனால் உருவான அவலம். ஆனால், நமது தனியார்மயமாக்கல் பிரியர்கள், தனியாரிடம் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டால், இந்த வரிசைகள் இருக்காது என குறிப்பிடுகின்றனர். நிர்வாகத்தை அரசு முன்வந்து மேம்படுத்துவதன் மூலம்தான் பல லட்சம் பணியிடங்கள் புதிதாக உருவாகும்.

மத்திய இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி 2 லட்சத்-திற்கும் அதிகமான பணியிடங்கள் ரயில்வேயில் காலியாக இருப்பதாக அறிவித்தார். மிக சமீபத்தில் இரவு 12 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலுக்கு காத்திருந்த போது, பிளாட்பாரத்தில் ஒரே ஒரு பெண் காவலர், நவீன ஆயுதங்கள் இன்றி, கையில் ஒரு தடியுடன் பாதுகாப்பு பணியில் நின்றிருந்தார். இவரால் யாரைப் பாதுகாக்க முடியும்? இவரைப் பாதுகாப்பதே பெரிய விஷயமாக இல்லையா?
ரயிலிலேறி, சைதாப்பேட்டை நிறுத்தத்தை அடைந்தால் ஒரே ஒரு பெண் அதிகாரி, கையில் சமிக்ஞை (signal) காட்டும் கருவியுடன் நின்றிருந்தார். ஒரு உதவியாளர் கூட இல்லை. இத்தகைய அவலங்களை கணக்கில் சேர்க்காமல் தான் மம்தா 2 லட்சம் என குறிப்பிட்டிருந்தார். நமக்கு கிடைத்த தகவல் படி அகில இந்திய அளவில் சுமார் 38 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கிறது.
தமிழகத்தில் சுமார் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. 2 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கிறது என முதல்வர் ஒப்புக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் 2010 ஏப்_11 அன்று நடைபெற்ற TNPSC தேர்வில், 1231 பணியிடங்களுக்கு 4.19 லட்சம் இளைஞர்கள் தேர்வு எழுதி உள்ளனர். எனவே, சிறந்த நிர்வாகத்திற்கு காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதே போல் புதிய வேலை வாய்ப்புகள் திட்டமிட்டு உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களின் தேவைகள் அதிகமாகும். அது உற்பத்தியை அனைத்து துறையிலும் அதிகரிக்கும். அது மேலும் வேலை வாய்ப்பை உருவாக்கும். எனவே, அரசு உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை காரணமாக அரசுப் பணிகளில் ஆட்குறைப்பு செய்யாமல் காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்வதும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும் அவசியம்.
இதற்கு நிதி வேண்டாமா? என்ற கேள்வி புரிகிறது. மத்திய அரசு, மாநில அரசு பட்ஜெட்டில் மறைமுக வரி வருவாய் அதிகமாகவும், நேரடி வரிவருவாய் குறைவாகவும் முன்மொழியப்பட்டது. நித்தியானந்தர் போன்ற காவியுடை காமுகர்களுக்கும் கூட வரி சலுகைகள் வழங்கப்பட்டது, நிலம் ஒதுக்கப்பட்டது. வங்கிகள் வாராக்கடன் என்ற பெயரில் ஒன்னரை லட்சம் கோடி ரூபாய் என அறிவிப்பு செய்-துள்ளது. கடன் பெற்றோர் அனைவரும் பணக்காரர்கள். இவை குறித்து கேள்வி கேட்காதது ஏன்? மத்திய அரசு பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகளுக்கு சுமார் 4 லட்சம் கோடி ரூபாயை சலுகையாக அறிவித்துள்ளது. இதை ஏன் யாரும் கேட்கவில்லை?

மக்களுக்கான கல்வி, வேலை, சுகாதாரம் குறித்து பேசினால், நிதிப் பற்றாக்குறை முன்னிறுத்தப்படுகிறது. இத்தகைய போலித்தனமான பற்றாக்குறைக்கு முடிவு கட்டவும் கூட சிறந்த நிர்வாகம், மக்களுக்கான நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும்.


IV

காலம் காலமாக நடைபெறும் இத்தகைய அவலங்-களுக்கு முடிவு கட்ட முடியுமா? பணக்காரனை ஏழை என்ன செய்து விட முடியும்? என்ற நம்பிக்கையற்ற கேள்விகள் நமது இளைஞர்களின் பெரும்பான்மையோரை அமைதி காக்கச் செய்கிறது. அமைதி காக்கவும், அடங்கிக் கிடக்கவும் மானுடம் பிறக்கவில்லை. பிறந்த ஒவ்வொருவரும் ஒரு வரலாறை உருவாக்குகிறோம். அமைதியாக இருந்தால் அடிமை வரலாறு, எழுச்சி கொண்டு போராடினால் போராட்ட வரலாறு. போராட்ட வரலாற்றிற்கு சொந்தக்-காரர்-களாகவே இளைஞர் கூட்டம் இருக்க விரும்புகிறது. மாற்றுக் கொள்-கையை முன்வைத்த அரசியல், பொருளாதார சமூக ஒடுக்கு முறைகளை மாற்றுகிற போராட்டம் இன்றைய தேவை.

நாம் மேலே விவரித்த துன்பங்களும், கொடுமைகளும் நிறைந்த உழைப்பாளிகள் வாழ்க்கை நிலை மாற வேண்டும். அதற்கு

1. நிலச்சீர்திருத்தத்தை அமலாக்குவது, பாசன வசதியை மேம்படுத்தி - விவசாய உற்பத்தியை பெருக்குவது.

2. மத்திய, மாநில அரசுகள் தற்போது இருக்கிற காலிப் பணியிடங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து , இட ஒதுக்கீடு பயன்தரும் வகையில் பின்னடைவு பணியிடங்களையும் நிரப்புவது.

3. பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை அரசு தலையிட்டு நிரப்புவது. பொதுத்துறைகளின் பங்கு விற்பனையை தடுத்து நிறுத்துவது.

4. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப புதிய மற்றும் தேவையான அரசு நிர்வாக அலுவலகங்களை உருவாக்குவது.

5. சமூகப் பாதுகாப்புடனான பணியினை உறுதி செய்யும் விதத்தில் மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்றுவது.

6. தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டத்தை மேலும் விரிவு செய்ய நாள்களையும் கூலியையும் உயர்த்துவது.

7. நகர்புற மக்களும் பயன்பெறும் வகையில் வேலை உறுதி சட்டத்தை உருவாக்கி அமலாக்குவது.

8. சேதுகால்வாய்த் திட்டம் போன்ற வளர்ச்சிப் பணிகளை, நூற்றி ஐம்பது ஆண்டுகளாக முடக்கி வைத்து இருப்பதை விரைந்து அமலாக்குவது.

9. வேலையில்லாக் கால நிவாரணத்தை படித்த இளைஞர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கூட்டாக வழங்குவது, வழங்குகிற மாநிலங் களில் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது.

10. உழைக்கும் மக்களின் துன்பத்திற்கு காரணமான, உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளை முற்றாக விலக்கிக் கொள்வது.

11. முறைசாரா பணிகளில் ஈடுபட்டுவரும் தொழிலாளிகளின் திறனை வளர்க்க பயிற்சி மையங்களை உருவாக்கி பயிற்சி அளிப்பது.

12. கேம்ப் கூலி, சுமங்கலித் திட்டம் உள்ளிட்ட பெண்களை உழைப்பு ரீதி யாகவும், பாலியல் ரீதியாகவும் சுரண்டுகிற திட்டங்களை, தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழ், கேம்ப் கூலி முறையில் இல்லாமல் செயல்படுத்துவது.

ஆகிய செயல் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றினால் எல்லோருக்கும் சமூகப் பாதுகாப்புடனான வேலை சாத்தியம். கொடுமை-களுக்கும், சுரண்டல் மூலமான கொள்ளை லாபத்திற்கு முடிவு காண முடியும்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இத்தகைய மாற்றுக் கொள்கைகளுடன், இளைஞர்களைத் திரட்டிப் போராடி வருகிறது. அரசை நிர்பந்திக்க அல்லது கொள்கையை உருவாக்கும் மாற்றத்தை உருவாக்கிட, அனைத்துப் பகுதி இளைஞர்களும் ஒன்று சேராமல் முடியாது. காலமும் கடமையும் அழைக்கிறது. ஒன்றிணைவோம்! போராடுவோம்!! வெற்றி பெறுவோம்!!!
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மே 3இல் சட்டமன்றம் நோக்கிப் பேரணி நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக