திங்கள், 14 ஜூன், 2010

மானுடவியல் நூல்கள் தமிழில்?


மானுடவியல் நூல்கள் தமிழில்?

‘மானுடவியல்’ என்ற வார்த்தை சமீப காலங்களில், தமிழ் எழுத்தாளர்களால் கூடுதலாக கையாளப்பட்டு வரும் வார்த்தைப்-பதம். 150 ஆண்டுகளாக வளர்ச்சி பெற்று வரும் துறை மானுடவியல் என்று கூறலாம். மனிதனின் அனைத்து விதமான பண்புக் கூறுகளையும் படிக்கிற துறை மானுடவியல் என வரையறை செய்துள்ளனர். (Comparative study of human being). சமூகவியலுடன் பல இடங்களின் ஒற்றுமை காணுகிற குணம் மானுடவியலுக்கு உண்டு. உடலியல் மானுடவியல் (Physical Antropology), சமூக மானுடவியல் (Social Anthropology), பண்பாட்டு மானுடவியல் (Cultural Anthropology), மொழியியல் மானுடவியல் (Linguistic Anthropology), உளவியல் மானுடவியல் (Psychological Anthropology), அரசியல் மானுடவியல் (Political Anthropology), பொருளாதார மானுடவியல் (Economical Anthropology) ஆகிய பிரிவுகள் முக்கியமானவை.

பிரிட்டானியா தகவல் களஞ்சியம் மானுட-வியல் குறித்து குறிப்பிட்டுள்ளது. மனித இனத்தைப் பற்றிய ஆய்வு, மானுடவியல் அறிஞர்கள் ஹேமோ சாப்பியன்களின் (Homo Sapiens) உயிரியல் மற்றும் பரிணாம வளர்ச்சி முதல், பிற விலங்கினங்-களைத் தெளிவாக வேறுபடுத்துகிற, சமுதாயப் பண்பாட்டு தனிச்சிறப்புகள் வரை மனிதர்கள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராய்கின்றனர். பல்வேறு வகையான வடிவங்களை தன்னகத்தே கொண்டுள்ளமையால், மானுடவியல் 20_ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்து மிகவும் தனித்தன்மை வாய்ந்த துறைகளின் தொகுப்பாக மாறி விட்டது. உயிரியல் மற்றும் மானுடப் பரிணாம வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிற பிரிவு, பவுதீக மானுடவியல் ஆகும். மனிதக் குழுக்களின் சமுதாய, பண்பாட்டுக் கட்டமைப்பினை ஆய்வு செய்கிற பிரிவுகள் பண்பாட்டு மானுடவியல் (அல்லது மனித இன வேறுபாட்டு ஆய்வியல்), சமூக மானுடவியல், மொழி சார்ந்த மானுடவியல்., உளவியல் மானுடவியல் என அறியப்படுகின்றன. வரலாற்றுக்கு முந்தைய பண்பாடுகளை ஆய்வு செய்யும் தொல்லியல் துறை என்பதும், மானுட-வியலின் ஒன்றிணைந்த பகுதி-யாகவே இருக்கிறது. ஏனெனில் 19_ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இது மனிதர்களைப் பற்றியே அதிகம் கவனம் செலுத்தும் ஒன்றாக மாறியுள்ளது.

ஐரோப்பியர்கள் மானுட-வியல் துறை வளர்ச்சி பெறுவதற்கு முன்னதாகவே, மானுடவியல் அணுகுமுறை தங்களின் வர்த்தகத்-திற்கும், காலனி ஆதிக்க செயல்பாட்-டிற்கும் பயன்படுத்திக் கொண்டனர். அநேகமாக ஐரோப்பியர்கள் தங்களின் காலனியாதிக்க நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளே, மானுடவியல் துறை குறித்த அறிவை வெளிப்படுத்தி-யதைப் பார்க்க முடியும். ஆப்பிரிக்க கண்டத்தின் அனைத்து நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட இனவரைவியல் மற்றும் பண்பாட்டு மானுடவியல், மனித குலத்தை, பின்னோக்கி சுயப் பரிசோதனை செய்து கொள்வதற்கான வாய்ப்பினை வெளிப்படுத்-தியது. லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் பல உட்கூறுகளை, வெளி உலகிற்கு கொண்டு வர உதவி செய்தது. ஒரு புறத்தில் அரசியல் மேலாதிக்கம் மற்றும் பொருளாதார சுரண்டலுக்கு இத்தகைய அணுகுமுறை ஐரோ
ப்பியர்களுக்கு உதவியது என்ற போதிலும் சமூகத்தின் பின்தங்கிய நிலையையும், அந்த பின்தங்கிய நிலையில் இருந்த மக்களிடம் காணப்-பட்ட சொந்த தொழில்நுட்பமும் (Indigenious Technology) பருவ நிலை மாற்றத்திற்கேற்ற அணுகு-முறையையும் வெளிக் கொணருவதில் ஐரோப்பி-யர்கள் பங்காற்றியுள்ளனர். ஐரோப்பியர்கள் மேற்கொண்ட இத்தகைய சமூக ஆய்வுகள், 19ம் நூற்றாண்டின் மிகப் பெரிய தொழில் நுட்ப வளர்ச்சியை அடைய அவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டும்.

மாலினோவஸ்கி, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மக்களுடைய வர்த்தக முறையை வெளிக் கொணருவதில் சிறந்த பங்கு வகித்தார். ரேட்கிளிப் ப்ரௌன், பொலாயினி, டெய்லர், லெவிஸ்ட்ராஸ் போன்றவர்கள் ஆப்பிரிக்காவைச் சார்ந்த நியூயர்
(Nuer) மக்களின் அரசியல் மற்றும் மேய்ச்சல் பொருளாதாரம் குறித்த அறிவை வெளிக் கொணர்ந்தனர். ஆசியாவின் இதர பகுதிகளிலும், இந்தியாவின் பல்வேறு பிரிவினரையும் ஆய்வு செய்து, இனவரைவியல் நூல்களை ஐரோப்பிய மானுடவியல் அறிஞர்கள் பலர் வெளியிட்டனர். மத்தியப் பிரதேசத்தைச் சார்ந்த முரியா கோண்ட்ஸ், அஸ்ஸாமின் காசி, இசைக் குழுவினர் (தாய்வழிச் சமுதாயத்திற்கான உதாரணம்) மற்றும் வடகிழக்கின் பல பிரிவினர் இதுபோன்ற ஆய்வுகளுக்கு உள்படுத்தப்பட்டவர்களே.

நமது மத்திய, மாநில அரசுகள் பின்பற்றுகிற இடஒதுக்கீடு கொள்கைக்கு, தற்போதைய அறிஞர்களாக கருதப்படுவோர் கே.எஸ்.சிங் மற்றும், எஸ்.சி. துபே ஆகியோர் ஆவர். இவர்களுக்கு முன்னோடியாக எட்கர் தர்ஸ்டன் என்பவர் இருந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.
பிரிட்டிஷ் நாட்டைச் சார்ந்த எட்கர் தர்ஸ்டன் 1885_ம் ஆண்டு சென்னை அருங்காட்சி-யகத்தின் கண்காணிப்பளராக பணியமர்த்தப்பட்டார். கால் நூற்றாண்டு காலம் அவர் சிறப்பாகச் பணியாற்றியதன் விளைவே, சென்னை அருங்காட்சி-யகத்தில் இன்று நாம் காணக்கூடிய பல பொருள்கள். இதே காலத்தில் தான் பிரிட்டிஷ் அரச நாட்டில் உள்ள இனவியல் குறித்த ஆய்வுக்கும் தர்ஸ்டனைத் தேர்ந்தெடுத்தனர். அவர் ஆய்வு செய்து பின் ஏழு தொகுதிகளாக 1909_ம் ஆண்டு வெளியிடப்பட்ட நூலே ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ என்ற நூல். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இதன் 5 தொகுதிளைத் தமிழில் வெளியிட்டுள்ளது. 1986_ல் துவங்கிய இப்பணி இன்னும் நிறைவு பெறவில்லை. தர்ஸ்டனின் பணி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினரையும், சாதிகளையும் ஆய்வு செய்வதாக இருந்திருக்கிறது. இன்றைக்கும் ‘சாதி’ குறித்த அதிகார வர்க்கத்தின் புரிதல், தர்ஸ்டனின் வழிகாட்டுதலில் இருந்தே கிடைக்கப்பெறுகிறது
.
தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் கள்ளர் சாதி, பண்பாடு, சமூக அமைப்பு, விவசாயப் பொருளாதாரம், அரசியல் இவை குறித்து கேத்தலீன் காஃப், மேக்கிம் மீரியட் போன்ற பெண் மானுடவியலாளர்களும், ஆந்தர பட்டேல் என்ற மானுடவியல் அறிஞரின் ஆய்வு நூல்களும் பேசு-கின்றன. மதுரை மாவட்டத்தில் லூயிஸ் டுமான்ட் என்பவர் ஆய்வு செய்து வெளியிட்ட தென்னிந்திய துணை சாதி (South Sub Caste) என்ற நூலும் மிக முக்கியமானவை. இத்தகைய ஆய்வாளர்களின் நூல்கள் வெளிவந்து பல பத்து ஆண்டுகள் ஆனாலும் தமிழ் வாசகர்களுக்கு மொழிப்பெயர்க்கப்-படாதது பலகீனமே. தமிழில் மானுடவியல் எனும் தலைப்பில் மிகக் குறைவான நூல்கள் வெளியாகி-யுள்ளன. அதில் பாண்டிச்சேரி மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர், பக்தவச்சலபாரதிக்கு கனிசமான பங்குண்டு. சமூக மற்றும் பண்பாட்டு மானுடவியல், தமிழர் மானுடவியல் ஆகியவை முக்கியமானவை ஆகும். பக்தவச்சலபாரதி மொழியாக்கம் செய்து அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட சமூக _ பண்பாட்டு மானுடவியல் மிகச் சுருக்கமான அறிமும் (ஜான் மோகனன் _ மீட்டர் ஜஸ்ட் எழுதியது) என்ற நூலும் காணக் கிடைப்பவைகளில் ஒன்று.

தமிழகத்தில் நமது சமகாலத்தில் மானுட-வியலின் முழுமையான கோட்பாட்டு அடிப்படை-யில் இல்லை என்றாலும், பேரா. ஆ. சிவசுப்பிர-மணியன், பேரா. தொ. பரமசிவன் போன்றோரின் நூல்கள், தமிழ் சமூகத்தினை மானுடவியல் அணுகுமுறையில் பார்க்க, படிக்க உதவி செய்கின்றன. கல்வி வளாகங்களுடக்குள் ஆய்வு முறையினை முறையாக கற்று ஆய்வு செய்து வெளியிடும் நூல்களுக்கு இடையில், தமிழ் நாவலாசிரியர்களின் மானுடவியல் முயற்சி சிறப்பு வாய்ந்தது. கி. ராஜ நாராயணனின் கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், கு. சின்னப்ப பாரதியின் ‘சங்கம்’, ‘சர்க்கரை’, ‘சுரங்கம்’ போன்ற நாவல்கள், எஸ். ராமகிருஷ்ணனின் ‘நெடுகுருதி’, பால முருகனின் ‘சோளகர் தொட்டி’ ஜோ.டி. குரூஸின் ‘ஆழி சூழ் உலகு’, சமீபத்தில் வெளியாகியுள்ள சு. வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ போன்ற நாவல்கள் பொன்னீலனின் ‘தெற்கிலிருந்து’ கட்டுரைத் தொகுப்பு, ஆகியவை உள்ளிட்ட பல நூல்கள், இன வரைவியல் வரையறுத்திய விதத்தில் கூறப்படவில்லை என்றாலும் குறிப்பிட்ட இனக் குழுவின் தொழில், வாழ்க்கை, மொழி, நடத்தை ஆகிய பண்பாட்டு விஷயங்களைப் பேசுகிறது. இவர்களின் எழுத்தின் ஊடே, ஒரு ஒடுக்கப்பட்ட அல்லது அதிகார வர்க்கத்தின் தாக்குதலுக்கு ஆளான மக்களின் வேதனை பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

சமூகத்தின் பண்பாட்டு கூறுகள் எப்போதும் சிதைவதும், வளர்ச்சி பெறுவதுமான முன்னேறிச் சென்று கொண்டே இருக்கும். இது குறித்த ஆய்வுக்-கான நிறுவனங்கள் தமிழகத்தில் இல்லை. பழங்குடி மக்கள் எண்ணிக்கை ஒரு சதம் என்பதாலோ, என்னவோ தமிழகத்தில் மானுடவியல் துறை மிகக் குறைவு. சென்னைப் பல்கலைக்க கழகத்தில் 60 ஆண்டு காலமாக மானுடவியல் துறை இயங்கி வருகிறது. ஆனால் அதன் ஆய்வு கட்டுரைகளின் எண்ணிக்கை சில நூறு மட்டுமே. நெல்லை புனித சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்று ஆய்வு மையம் கடந்த பத்து ஆண்டுகளாக சில முயற்சிகளை மேற்கொள்கிறது. பாண்டிச்சேரியில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறை இயங்குகின்றது. இவை கல்வி நிறுவனங்கள் சார்ந்தது. இன்னொரு புறத்தில் மத நிறுவனங்கள் நடத்துகின்ற சமூகம் குறித்த ஆய்வுகள், மானுடவியல் அணுகுமுறையில் இருக்கிறது. மத நிறுவனங்களின் முயற்சியை விட இடதுசாரிகளின் முயற்சி கூடுதலாக தேவைப்படுகிற காலம்.
எல்.எச். மார்கனின் மானுடவியல் நூலைப் படித்த பின்னரே, ஏங்கெல்ஸ்_ற்கு மனித குலம் குறித்த அடிப்படை தேடுதல்கள் எழுந்ததாக அவரே கூறியுள்ளார். வரலாற்று பொருள் முதல் வாத அடிப்படையிலான எங்செல்ஸ்_ன் படைப்புகள், குரங்கிலிருந்து மனிதன் உருவான கதை போன்றவை. மார்கனின் நூல் ஏற்படுத்திய வெளிச்சம் என்றால் தவறல்ல. இன்றைய சமூகத்தினை மார்க்சீய கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளவும் மானுட-வியல் துறை உதவி செய்யும். மைசூர் பல்கலைக்-கழகத்தில் மானுடவியல் துறையின் பேராசிரியராக இருந்த எம்.என். ஸ்ரீநிவாஸன், சமஸ்கிருதமயமாக்கல், மேற்கத்திய மயமாகுதல் குறித்த கட்டுரைகள், இன்றைய சாதீய உணர்வுகளை புரிந்து கொள்ள உதவி செய்யும்.
சமஸ்கிருத மயமாக்கல் மூலம் வகுப்புவாதமும், மேற்கத்திய மயமாதல் மூலம் ஏகாதிபத்தியமும் பண்பாட்டு சிதைவை ஏற்படுத்துவதில் தீவிரமாக செயலாற்றுகின்றன. இதை எதிர் கொள்ள மானுடவியல் நூல்கள் உதவி செய்யும். இன்றைய சமூகமயமாதல், குடும்பம், கல்வி நிறுவனம் கடந்து வாழும் சமூக நண்பர்கள் மூலமும் நடைபெறுகிறது. குழந்தைகளின் சமூகமயமாதலில் குடும்பம் மற்றும் கல்வி நிறுவனம் ஆகியவற்றின் பங்கு இன்றியமை-யாதது. மானுடவியலை கற்பதில் கல்வி நிலையங்-களுக்கு உள்ள பங்கினைப் போலல்லாமல், குடும்ப ரீதியிலான சுய முயற்சியும் சிறந்த பங்களிப்பு செய்யும். எனவே மானுடவியல் நூல்களை எல்லோரும் படிப்பது காலத்தின் தேவை என கொள்ளலாம்.


1 கருத்து:

  1. மதிப்பிற்குரிய தோழர் அவர்களுக்கு வணக்கம்.
    நான் நலம். தாங்களும் என்றே கருதுகின்றேன்........
    என் பெயர் விஜயகுமார். நான் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சார்ந்தவன். எனக்கு மானுடவியலைப் பற்றிய தமிழ் நூல்களின் பட்டியல் கிடைக்குமா?

    பதிலளிநீக்கு