செவ்வாய், 15 ஜூன், 2010

ஆட்சியாளர்களின் கொள்கை-பல போபால்களை உருவாக்கும்


ஆட்சியாளர்களின் கொள்கை-பல போபால்களை உருவாக்கும்!
எஸ்.கண்ணன்
உலகம கடும் துயரங்களைச் சந்திக்கும்
கொடிய மக்களின் வன்முறைகள் காரணமாக அல்ல,
நல்ல மனிதர்களின் மௌனம் காரணமாக.
-பிரெஞ்சு ஆட்சியாளராக இருந்த நெப்போலியன்
2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம், 7ம் தேதி, போபால் நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்த போது, நெப்போலியனின் வரிகள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை. 25 ஆயிரத்திற்கும் அதிகமான மனிதர்கள் இறந்தது, ஏதோ அறியாமையில் நடந்த விபத்து அல்ல. அமெரிக்காவைச் சார்ந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருந்தவர்களின் அலட்சியத்தினால் நடந்தது என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.
மீதைல் ஐஸோ சயனைட் வாயுவின் கசிவு, மனித உயிர்களைக் குடிக்கும் என்பதற்கான சம்பவங்கள், மேற்படி நிறுவனத்தில் ஏற்கெனவே இரண்டு முறை நிகழ்ந்துள்ளது. ஒன்று டிச-25, 11981 ல் அஸ்ரப் கான் என்ற தொழிலாளி கசிவின் காரணமாக இறந்துள்ளார். இரண்டு, 11982, ஜன-9 அன்று மிக மோசமான நிலையில் 25 தொழிலாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவை இரண்டையும், சிபிஐ தனது விசாரணையில் பதிவு செய்துள்ளது (தி இந்து 09.06). இதன்பிறகு, 30 விதமான பிரச்சனைகள், யூனியன் கார்பைடு நிறுவனத்தின், இயந்திர செயல்பாடுகளில் இருப்பதாக கண்டறிந்து, அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும், என்ற ஆலோசனையும், நிறுவனத்தின் உயரதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நிறுவனமும், அதன் அதிகாரிகளும் மேற்படி ஆலோசனைகளை உதாசீனப்படுத்தியுள்ளனர். 1984, டிச.2 அன்று இரவு யூனியன் கார்பைடு தொழிற்சாலை செயல்பட்ட போது, மேலே குறிப்பிட்ட இயந்திர கோளாறுக்ள் சரிசெய்யபடவில்லை, அபாயச் சங்கு கூட செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. எனவே தான் விபத் நடந்ததை அறிவிக்க முடியாமல், பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள், படுக்கையிலேயே மரணத்தைத் தழுவும் உலக மகா கொடுமை நிகழ்ந்துள்ளது.

இந்த உறைய வைக்கும் கொடூர உண்மையை ஆதாரமாகக் கொண்டு தான், 8 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர். ஆனால், குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை இந்திய மக்களையும், மக்கள் இயக்கங்களையும் ஏளனம் செய்வதாக அமைந்துள்ளது. 225ஆயிரத்திற்கும் அதிகமான மனித உயிர்களின் இழப்பை, 5லட்சம் மக்களின் உடல் உபாதையை, ஒரு பஸ் விபத்துபோல் நீதிமன்றம் கையாண்டு உள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களும்- அரசின் பின்புலமும்

போபால் விஷவாயு கசிவு ஏற்பட்ட போது, உலகமயமாக்கல் கொள்கை, தீவிரம் காட்டவில்லை. உலகின் பன்னாட்டு நிறுவனங்களுக்கான சுதந்திர மற்றும் தாராள அனுமதி தலை தூக்கவில்லை. இந்திய அரசின் தொழிலாளர் சட்டங்களும், கம்பெனி சட்டங்களும், பெரும் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்துடன் இருந்தது. அப்படி இருந்த போதும் வெளிவந்துள்ள தீர்ப்பு, மனித உரிமையை மிகக் கீழ்த்தரமாக மதிப்பிட்டு அமைந்துள்ளது.
ஆனால், இன்றைய நிறுவனங்கள் இந்திய மண்ணில் கால் வைக்கும் போதே, புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் தான் கால் பதிக்கின்றன. அரசு வைக்கும் நிபந்தனைகளை விட, நிறுவனங்கள் முன்வைக்கும் நிபந்தனைகளே அதிகம். நிறுவனங்களுக்கான அதிகாரங்களும், சலுகைகளும் அதிகரித்துள்ள சூழலில் போபர்ஸ் விஷவாயு பலி, குறித்த தீர்ப்பானை கணக்கு சொல்லாமல் இருந்தால் எதிர்காலம் வேதனையைத் தவிர வேறு எதையும் தருவதாக அமையாது.

உதாரணத்திற்கு, யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர், வாரென் ஆண்டர்சன் பாதுகாக்கப்படுவதை மக்கள் இயக்கம் மௌனமாக வேடிக்கை பார்க்க முடியாது, வாரென் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது,"வாரென் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது", என்ற அமெரிக்க அரசின் அறிவிப்பை, இதுவரை இந்திய ஆட்சியாளர்கள் கண்டிக்கக்கூட செய்யவில்லை. 2008 நவம்பர் 26 அன்று மும்பையில் நடைபெற்ற தீவிரவாதிகளின் செயலுக்கு திட்டமிட்டு கொடுத்த, ஹெட்ஸ் விவகாரத்திலும் அமெரிக்கா இதே வரிகளைத்தான் பயன்படுத்தியது.

இவ்வளவு மனித உயிர்களைப் பலி கொண்ட, கொலைகார நிறுவனத்துடனும் அதன் அதிகாரிகளுடனும் இந்திய அரசு 26 ஆண்டுகளாக சமரசத்திற்கு மட்டுமே முயற்சி மேற்கொண்டுள்ளது. லால் என்கிற முன்னாள் சிபிஐ அதிகாரி, தீர்ப்பு வெளிவந்தபின் அரசும், அதிகாரிகளும் சிபிஐ விசாரணையில் குறுக்கீடு செய்தார்கள் என்பதை தெரியப்படுத்தி உள்ளார். அப்பட்டமாக, உலக முதலாளிகளை பாதுகாக்கும் தன்மையுடன் செயல்பட்டுள்ளது.
மக்கள் இயக்கங்களின் போராட்டம் காரணமாகவே வழக்கு நீடித்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தொகையை வழங்கக் கோரி, 2004,அக்.25 வரை மக்கள் இயக்கங்கள் போராட்டம் நடத்தி உள்ளன. இதன் பிறகு இந்திய உச்சநீதிமன்றம் 2004 அக்.26 அன்று பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு தொகையை, நவ.15ம் தேதிக்குள் வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்து. நீண்ட நெடிய போராட்டத்தின் கிடைத்த, இழப்பீட்டுத் தொகை ரூ.15 ஆயிரத்தை தாண்டவில்லை என்பது அதிர்ச்சியான தகவல். மொத்தத்தில் 47 கோடி டாலர் அதாவது சுமார் ரூ.200 கோடி மட்டுமே இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது
.
அணூ உலை ஒப்பந்தமும்- போபால் தீர்ப்பும்

யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே, என்ற பழமொழியைப் போல், போபால் விஷவாயு கசிவின் அழிந்து போன மனிதர்களை, இந்திய அரசு கருணை கொண்டு பரிசீலிக்காது என்பதை அமெரிக்காவுடனான அணு உலை ஒப்பந்தத்தினை வெளியிட்ட போதே அறிய முடிந்தது. அணு உலை விபத்து தடுப்பு மற்றும் இழப்பீட்டு மசோதா ஒன்றை மன்மோகன் சிங் தலைமையிலான அரசாங்கம், 2009 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தது. மசோதாவின் 2வது பாகம், 6வது பிரிவு,
"ஒவ்வொரு அணு விபத்து ஏற்படுகிறபோதும், அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை ரூ.2,208 கோடியாக மட்டுமே இருக்கவேண்டும்.(300 மில்லியன் டாலர் அல்லது 471.38 மில்லியன் டாலர்) அதில் அணு உலையை செயல்படுத்தும் நிறுவனத்தின் சட்டபூர்வமான பங்கு ரூ.300 கோடியைத் தாண்டாது. ஒரு வேளை ரூ.300 கோடியைத் தாண்டுமானால் மத்திய அரசு அந்தத் தொகையைத் தர முன்வர வேண்டும்". என்று குறிப்பிடுகிறது. இது குறித்த விவரம் பிரகோட்டி இணையதளத்தில் 2009 டிசம்பர் 21 அன்று வெளிவந்துள்ளது.

மேற்படி ஆபத்து நிறைந்த மசோதா, இந்திய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் எதிர்ப்பு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது போபால் விஷவாயு படுகொiடில மீதான தீர்ப்பு, இந்திய அரசின் அமெரிக்க ஆதரவு கொள்கையின் வெளிப்பாடே ஆகும். அமெரிக்கா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் உரிமைக்காக, குரல் கொடுக்கிற ஆட்சியாளர்களாக, இந்திய ஆட்சியாளர்கள் உள்ளனர் என்பதற்கு, இப்போது வந்திருக்கிற தீர்ப்பை தவிர வேறு சம்பவங்கள் தேவையில்லை.

அணு உலை குறித்த-இழப்பீட்டு மசோதாவை முன்மொழிவதற்கு சட்ட வரைவு தயாரிக்கப்பட்ட நேரத்தில், முன்னாள் அரசு அட்டர்னி ஜெனரல், சோலி சொராப்ஜி தனது ஆட்சேபனையை பதிவு செய்துள்ளார். இது போன்ற சட்டமுன் மொழிவுதான், இந்திய அரசியல் சட்டம் இந்திய மக்களுக்கு வழங்கியுள்ள மனித உரிமைகள் மற்றும் வாழும் உரிமை குறித்த அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு ஒப்பாகும். எந்த ஒரு நாகரீக சமூகத்தின் ஜனநாயக அரசும், மக்களின் பாதுகாப்பு குறித்த அடிப்படை அக்கறையை விட்டு கொடுக்க முன்வராது" என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி மத்திய அரசை முன் எச்சரிக்கை செய்திருக்கிறார். ஆனாலும் மத்திய அரசு மேற்படி மசோதாவை முன்மொழிந்து பின் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக, நிறுத்தி வைத்துள்ளது.

தொழில் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில், நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுப்பதை, உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கைகள், அடிப்படை கடமையாகக் கொண்டுள்ளன. அமெரிக்காவைச் சார்ந்த ஜான் பெர்க்கின்ஸ், என்ற மனிதர், ஒரு பொருளாதார அடியாரின் வாக்குமூலம், மற்றும் அமெரிக்கப் பேரரசின் ரகசியம் ஆகிய புத்தகங்கள் மூலம் ஊழல் நிறைந்த அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடையிலான மூலம் ஊழல் நிறைந்த ஒப்பந்தங்களை குறிப்பிட்டு இருக்கிறார். இன்றைய காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசின் ஒப்பந்தங்களும் ஜான் பெர்க்கின்ஸ் குறிப்பிட்ட தன்மையில் தான் நடைபெறுகிறதோ? என்ற சந்தேகங்கள், போபால் தீர்ப்பின் மூலம் உண்மையாகிக் கொண்டிருக்கிறது.
போபால் கொடூரத்தின் மீது அரங்கேற்றப்பட்டுள்ள ஆட்சியாளர்களின் கொள்கைகளை நல்லவர்கள் மௌனமாக வேடிக்கை பார்ப்பது தொடர்ந்தால் நாட்டின் துயரங்கள் அதிகரிக்கத்தான் செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக