தமிழகத்தில் 2006இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருவதாக முதல்வர் திரு.மு.கருணாநிதி தினமும் ஒரு அறிக்கை வெளியிட்டு வருகிறார். டிசம்பர் 31 அன்று வெளியான செய்திகளில் 2 லட்சத்து 78 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக, முதல்வரின் அறிக்கை குறிப்பிட்டு இருந்தது. துறைவாரியாக முதல்வர் வெளியிட்ட பட்டியல் 26.12.2006இன் போதே நிரப்பப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. மேற்படி தேதி அடிப்படையில் கணக்கீடு செய்தால், முதல்வர் குறிப்பிட்ட பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. முதல்வரே ஒப்புக் கொள்கிற வகையில், மாதம் சராசரி 2000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுகிறார்கள். அதன்படி 24 மாதங்களில் ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் சுமார் 48 ஆயிரம் ஆகும். முதல்வர் நிரப்பியதாகக் குறிப்பிட்ட தேதிக்குப் பின்னர் மட்டும் 48 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதையும், 2.78 லட்சம் பணியாளர்களில், அரசு சம்பளம் பெறாமல் தினக்கூலி பெறுவோரை பற்றிய கணக்கையும் தெளிவுப்படுத்த வேண்டியது, ஜனநாயக இயக்கங்களின் கடமை ஆகும்.
முதல்வர் குறிப்பிட்ட 2 லட்சத்து 78 ஆயிம் பணியிடங்களில், தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் குறிப்பிடப்படவில்லை. நமக்குத் தெரிந்து மே 2006க்குப் பின் கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு, குரூப் ஐஐ மூலம் 982 பணியிடங்கள், மிகச் சமீபத்தில் முடிவு அறிவிக்கப்பட்ட குரூப் ஐஏ மூலம் சுமார் 600 பணியிடங்கள் ஆகியவை மட்டுமே பகிரங்கத் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு உள்ளன. ஆசிரியர் பணியிடங்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் நிரப்பப்பட்ட பணியிடங்கள் பகிரங்க கலந்தாய்வுகள் மூலம் நடைபெற்றுள்ளன. இவைகளை தவிர்த்துப் பார்த்தால் சுமார் 1.5 லட்சம் பணியிடங்கள் எந்த வகையில் நிரப்பப்பட்டன என்பது புரியாத புதிர் ஆகும். பணியிட நியமனம் ஏன் திறந்த புத்தகமாக இருப்பதில்லை என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்.
அடுத்ததாக, முதல்வர் குறிப்பிட்ட 82,479 பள்ளிக் கல்வி ஆசிரியர் நியமனத்தில் சுமார் 56 ஆயிரம் பேர் தொகுப்பூதிய அடிப்படையில் வேலை செய்து வந்ததையும், முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் தொகுப்பூதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றி அறிவிப்பதாகவும், ஜுன்-1, 2006இல் வெளியிட்ட அரசாணை மறந்துவிட்டதோ? என்ற ஐயம் எழுகிறது. எனவே, தி.மு.க. பொறுப்புக்கு வந்த பின் கிடைத்த பணியிட ஆணைகள் சுமார் 26 ஆயிரம் மட்டுமே என்பதை நினைவூட்ட வேண்டியுள்ளது. அதேபோல் போக்குவரத்துத் துறை மூலம் நிரப்பப்பட்டதாக குறிப்பிட்ட 39,487 பணியிடங்கள், அரசுத் துறை சார்ந்தது அல்ல. போக்குவரத்துப் பணியிடங்களில், இடஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்படவில்லை, முறைகேடு நடந்துள்ளது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதை மகிஷா சூரியின் கதை ஓட்டத்தில் மறக்கலாமா?
ஆயத்தீர்வைத் துறையில் 13,939, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் 18,364, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் 30,614, சத்துணவுத் துறை மூலம் 28,800 என மொத்தமாக கணக்கிட்டால் 91,717 பணியிடங்கள் முழுமையாக அரசு ஊழியர் என அங்கீகரிக்கப்பட்டவை அல்ல. ஆயத்தீர்வை மூலம் டாஸ்மாக் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு காலை 10 முதல் இரவு 11 மணி வரை பணி நேரம், மாத சம்பளம் ரூ. 4000 முதல் ரூ. 5000க்குள் தான். குடிநீர் வழங்கல் துறை கொடுத்த வேலை, டேங்க் ஆப்ரேட்டர் போன்றவை. இதற்கு சம்பளம் ரூ 1000 துவங்கி ரூ 1500 மட்டுமே. சத்துணவு துறையில் நிரப்பப் பட்டவையில் பெரும்பாலும் ஆயாக்கள் மட்டுமே. இவர்களுக்கு சம்பளம் ரூ.2000. ஊரக வளர்ச்சித் துறை கொடுத்த வேலை மக்கள் நலப் பணியாளர்கள் அல்லது கிராம ஊராட்சி உதவியாளர். இவர்களுக்கும் சம்பளம் ரூ. 1000 அளவில்தான். தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தை அமலாக்கும் பொறுப்பு கொண்ட இத்தகைய ஊழியர்களுக்கு, ரூ. 80 சம்பளம் பட்டுவாடா செய்ய வேண்டிய இந்த ஊழியர்களுக்கு அரசு கொடுக்கும் சம்பளம் ரூ. 42. மேற்படி விவரங்களுடன் கொடுக்கப்பட்ட வேலை, இளைஞனுக்கான வாழ்க்கையை உத்திரவாதம் செய்யுமா? சுய மரியாதையான வேலையா? 2004இல் மத்தியிலிருந்த வாஜ்பாய் அரசாங்கம் சாலை போடும் உழைப்பாளிகளுக்கான வேலையை தனது அரசு கொடுத்ததாக பெருமையாக குறிப்பிட்டது போல் அல்லவா, முதல்வரின் அறிக்கை இருக்கிறது. தினக்கூலி வேலைகளை அரசு வேலையுடன் ஒப்பீடு செய்து அறிக்கை ளியிடுவதற்காகத்தான் தேர்தல் அறிக்கை வெளியிட்டீர்களா? மேலே குறிப்பிட்ட 1000/-, 2000/- சம்பளத்தில் வாழ்க்கை. வசந்தமாக அமைந்திடுமா?
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை சுமார் 10 லட்சம் ஆகும். மொத்தத்தில் 48 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர்.
முதல்வர் இத்தகைய புள்ளி விவரங்களுக்குள் போகாதது மட்டுமல்ல. தீக்கதிரில் குறிப்பிட்டிருந்த, உயர்கல்வித்துறை, ஓய்வு பெற்ற பேராசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்த அரசாணை எண் 274 பற்றியோ, அரசாணை எண் 177 கிராம ஊராட்சிகளில் துவங்கப்படும் நூலகப் பணியிடங்களுக்கு ஓய்வு பெற்றவர்கள் நியமிக்கப்படுவார்கள், என்ற அரசாணை குறித்தோ முதல்வர் பதில் சொல்லவில்லை. இந்த விவரங்கள் கண்டு கொள்ளப்படாததற்கு என்ன காரணம் என்பதையாவது, முதல்வர் விளக்குவாரா?
முதல்வரின் அந்த அறிக்கையின் கதை இறுதியில் ஜே! ஜே! என முடிகிறது. மார்க்சிஸ்ட் கட்சி தேர்தல் கூட்டணி அமைத்திருப்பது தான், அறிக்கையின் அஸ்த்திவாரம் என்றால், பொய் அறிக்கை மூலம் இளைஞர்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு 2008, ஜன. 8,9,10 தேதிகளில் மதுரையில் நடைபெற்ற போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று வேலையின்மை குறித்தது. அப்போது தேர்தல் கூட்டணி அமைக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 2006, செப்-10 அன்று சென்னையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய கருத்தரங்கில், மாநில தி.மு.க. அரசு வேலை நியமனம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை தேர்தல் கூட்டணியில் இருந்து முன்வருவதல்ல, மக்கள் நலனில் இருந்து முன் வைக்கப்படுவது.
எமலோகத்தில், சித்திர குப்தன் கணக்கு பட்டியல் படிக்கிற போது, நல்லவைகளையும் கணக்கில் எடுப்பார் என்கிற நம்பிக்கையில், நல்லதும் சில செய்வோம் என்ற நாடகங்கள் சொர்க்கம் மற்றும் நரகத்தில் நம்பிக்கை கொண்டோர் நிகழ்த்துவதுண்டு. அதுபோல் தேர்தல் வருகிற போது, மக்கள் என்கிற சித்திர குப்பதனின் கணக்குப் பட்டியலுக்கு முதல்வரின் புள்ளி விவரக் கணக்கு ஒத்துவராது என்பதை புரிந்து கொண்டால் சரி.
This was published at theekkathir on 2009 january 2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக