திங்கள், 11 அக்டோபர், 2010

இளைஞர்களின் அச்சத்தை முதல்வரின் அறிக்கை போக்க போவதில்லை

தமிழக முதல்வர் ஓய்வு பெற்றவர்களை மாநில அரசு மீள் நியமனம் செய்வது குறித்து, தனது நியாயத்தை முன்வைத்து இருக்கிறார். அரசின் நலத்திட்டங்கள் விரைவாக மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக தற்காலிக நியனம் செய்ததாகக் குறிப்பிடுகிறார். அரசு ஆணை 170 வழிகாட்டு நெறிமுறைகள் என 10 அம்சங்களைச்சுட்டிக்காட்டுகிறது. அதில் 3வது அம்சம் ஒப்பந்த அடிப்படையிலான இந்த நியமனம் அதிகபட்சம் ஓராண்டு மட்டுமே, தேவைப்பட்டால் புதிய ஒப்பந்தத்தை அதே நபருடன் ஒரு வார கால அவகாசத்தில் மீண்டும் செய்து முடிக்க வேண்டும் என வழிகாட்டுகிறது. தேவைப்பட்டால் என்கிற ஒரு வாத்தை, எவ்வளவு வசதியானது என்பதை அதிகாரத்தை ருசித்துப் பாத்தவர்கள் நன்குஅறிவார்கள்.

ஓய்வு பெற்ற பின் மீண்டும் பணியில் சேர்ந்து பணியாற்றும் சூழலை, முதுமை பருவம் அடைந்தவர் மீது மாநில அரசு திணிப்பது ஏன்? அரசு மற்றும் பொதுத்துறையில் பணியாற்றுவோர் மட்டுமே ஓய்வூதியம் பெறுபவராக உள்ளனர். மிக குறைவான எண்ணிக்கையில் உள்ள இந்த முதியோரை தங்கள் வாழ்நாள் முழுவதும் பணியாற்றச் சொல்வது நியாயமற்றது. இதுபோல் ஒன்றிரண்டுநியமனங்கள் எதிர்ப்பின்றி அரங்கேறினால். இதையே மூன்னுதாரணமாக்கி தொடரும் வாய்ப்பு உருவாகும். ஏற்கனவே மத்திய அரசு. ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 62 ஆக உயர்த்தப்போவதாக அறிவித்து வருகிறது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக ஒரு வார்த்தையும் கூறாமல் மௌனம் சம்மதம் என்பதாக வெளிப்படுத்தி இருக்கிறது. தற்போது ஓய்வு பெற்றவரை நியமிப்பதற்காக வெளியிட்டுள்ள அரசாணை, மத்திய அரசை பின்பற்றுவதற்கான அறிகுறி.

தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசுத்துறையில் காலியாக உள்ள 2 லட்சம் பணியிடங்களையும் ஓய்வு பெற்றோரைக் கொண்டு நியமனம் செய்யவில்லை. சில துறைகளில், சில ஆயிரம் பணியிடங்களை மட்டுமே நியமிக்க இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். இதில் முதல்வர் 2 லட்சம் காலிப்பணியிடம் இருப்பதை ஒப்புக் கொள்கிறார். 2 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாத சூழலில், எப்படி அரசின் திட்டங்கள் விரைவாக அமலாக முடியும்? மாநில அரசு நியமனம் செய்யும் சில ஆயிரம் ஓய்வு பெற்ற அனுபவஸ்தர்கள். பணிச்சுமையால் அவதிப்படுவார்களா? ஆற்றலோடு செயல்படுவார்களா? என்பதை முதல்வர் தான் விளக்க வேண்டும்.

இரண்டாவதாக மாநில திமுக அரசு 2006 மே மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின் ஓய்வு பெற்றவர்களை மீள நியமனம் செய்திடுவது குறித்து 4 அரசாணைகளைப் பிறப்பித்துள்ளது.

1. 25 அக்டோபர் 2007இல் உள்ளாட்சித் துறைக்காக அரசாணை எண் 177ஐ வெளியிட்டுள்ளது. இது, 12618 கிராம பஞ்சாயத்துகளிலும் நூலகம் அமைக்க இருப்பதாகவும் ஒரு நாளைக்கு 7 மணி நேரம் இயங்கும் எனவும், நூலகர்களாக ஓய்வு பெற்றவர்கள் மாதாந்திர சம்பளம் ரூ. 750/ க்கு நியமிக்கப்படுவார்கள் என்றும் அரசாணை குறிப்பிடுகிறது.

2. ஜூன் 2008இல் உயர்கல்வித் துறைக்காக வெளியிடப்பட்ட அரசாணை எண் 274. இந்த ஆணை அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களில் முறையான விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்படும் வரை, ஓய்வு பெற்ற அரசு கல்லூரி ஆசிரியர்களைக் கொண்டு தற்காலிகமாக பணியமர்த்துவது குறித்தது.

3. 18 மே 2009 அன்று தமிழ்நாடு தேர்வாணையத்திற்காக வெளியிட்ட அரசாணை எண் 53 இது தேர்வாணையத்தில் 103 உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அதை ஓய்வு பெற்ற பணியாளர்களிடையே தேர்வு நடத்தி தேர்ந்தெடுத்துகொள்ளும் வழிவகையை ஏற்படுத்திக் கொள்வது என தெரிவிக்கிறது.

4. டிச. 18 2009 அன்று பொதுப்பணிகள் மற்றும் காலிப் பணியிடங்களை ஓய்வு பெற்றோரைக் கொண்டு நியமனம் செய்வது குறித்த அரசாணை எண் 170 ஆகும்.

மேற்படி 4 அரசாணைகளிலும் மாநில அரசு படிப்படியாக முன்னேறி அனைத்து காலிப் பணியிடங்களுக்கும் தற்காலிக பணிநியமனம் செய்திடவும், ஓய்வு பெற்றோரைப் பயன்படுத்துவது குறித்து வழிகாட்டியுள்ளது. மேற்படி நான்கையும் ஒப்பிடும போது, மாநில முதல்வர் குறிப்பிட்ட அறிக்கை ஏமாற்றுவித்தை என்பதைத் தவிர வேறல்ல.
மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில், வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் 62 லட்சம் இளைஞர்கள் காத்திருக்கும் போது, மேற்படி அரசாணைகள் வெளியிட்டது சந்தேகத்தை உருவாக்குகிறது. தற்காலிகமாக ஓய்வு பெற்றவர்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஏன் இனைஞர்களை தற்காலிக நியமனம் செய்வது குறித்து ஆலோசிக்கவில்லை? முதல்வர் அடிக்கடி வெளியிடும், 2.54 அல்லது 3.44 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தந்த அரசு என்ற அறிவிப்பில் பல லட்சம் பேர் தினசரி கூலிகள் அல்லது சமூகப் பாதுகாப்பற்ற வேலையைக் கொண்டவர்கள் என்பதை டி.ஒய்.எப்.ஐ உள்பட பலர் அம்பலப்படுத்தி விட்டனர். எனவே, ஒய்வு பெற்றோர் மூலம் நியமனம் செய்வது என திமுக அரசு முடிவு செய்து விட்டதா? மத்தியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த 2002 இல் நாடாளுமன்றத்திலேயே வாஜ்பாய் ஆண்டுக்கு 2 சதவீதம் அரசு ஊழியர்களைக் குறைப்போம் என்று அறிவித்தார். ஓய்வு பெறுகிற, விருப்ப ஓய்வு பெறுகிற, பணியில் இறந்து விடுகிற வகைகளில் ஏற்படும் பணியிடங்களை நிரப்பாமலேயே விட்டு விடுவது. இதன் மூலம் காலப் போக்கில் காலிப் பணியிடங்கள் அழிக்கப்படுகிறது. அன்றைக்கு திமுக, வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையிலும் இடம் பெற்று இருந்தது. அப்போது திமுக மௌனமாகவே இருந்தது. தற்போது வாஜ்பாய் அரசு அறிவித்த நடைமுறையை திமுக பின்பற்றுமோ என்ற அச்சம் தமிழக இளைஞர்களுக்கு ஏற்படுவதில் வியப்பில்லை. இந்த அச்சத்தை முதல்வரின் அறிக்கை போக்கப் போவதில்லை.

உலக வங்கியிடமும், ஐ.எம்.எப் -இடமும் கடன் பெற துவங்கிய காலம் முதல் வேலை வாய்ப்பை வெட்டிச் சுருக்கும் கொள்கையை மத்திய, மாநில அரசுகள் செய்யத் துணிந்து விட்டன. இளைஞர்கள் நலனை பலி கொடுத்து, அரசு தனது சிக்கன சீரமைப்பை வெட்கம்இன்றி கடைப்பிடிக்கிறது. அதன் ஒரு பகுதி தான் திமுக அரசின் அரசாணைகள் தமிழகத்திலும், இந்தியா முழுவதிலும் அரசு வேலைக்காக விசண்ணப்பிக்கும் இளைஞர்கள் அதிகரித்து வருகின்றார்கள் என்கிற விவரம், தனியார் துறை வேலைகளின் கொடுமைகளையும், சமூகப் பாதுகாப்பின்மையையும் பறை சாற்றுகிறது. தற்போது 1084 குரூப் ஐஐ பணியிடங்களுக்கு 10 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்ததாகவும், 11 ஆயிரம் ஸ்டேட் வங்கி பணியிடங்களுக்கு 36 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்ததும், 2500 கிராம அதிகாரி பணியிடங்களுக்கு 9 லட்சம் பேர் விண்ணப்பித்ததும் வேலையின்மையை சித்தரிக்கும் உதாரணங்களாகும்.

எனவே, இளைஞர்கள் காத்திருக்கிறார்கள், அரசு வேலைக்கு அலை மோதுகிறார்கள் என்பதை புரிந்து அவர்களை நரபலி கொடுக்கும் அரசு உத்தரவுகளை திரும்பப் பெற்று காலிப்பணியிடங்களை இளைஞர்கள் மூலம் பூர்த்தி செய்வதே ஆரோக்கியமானது. அறிக்கை மூலம் சமதானப் படுத்துவது நஞ்சு பொதிந்தது.

நன்றி தீக்கதிர் feb 2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக