நேர்மை உறங்கும் நேரம்
தமிழ் நாடு தேர்வானையக் குழு உறுப்பினர்கள்
வீடுகளில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர், நடத்திய திடீர் சோதனைகள்
மக்களிடையே எந்த வித சலனத்தையும் ஏற்படுத்த வில்லை என ஒரு சிலர் வாதிடுவது, விரக்தி
சார்ந்தது. சோதனைகள் நடந்து என்ன செய்ய? என்பது போன்ற உணர்வுகள் தலையெடுக்காமல், ஊழல்
மற்றும் அரசுத் துறைகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிரான சமூக உணர்வை அதிகரிக்க
வேண்டியுள்ளது. வேலை தேடும் இளம் தலை முறை மேற்படி முறைகேடுகளால் தீவிரமாகப் பாதிக்கப்
பட்டிருப்பதைக் கணக்கில் கொண்டு, விவாதிக்க வேண்டிய ஒன்று.
தமிழகத்திலும், இந்திய அளவிலும்
ஏராளமான அனுபவங்கள் குவிந்து கிடக்கின்றன. ஒரு துறையில் சிறிய அளவில் முறைகேடு வெளிப்படுவதும்
பின்னர் அதுவே கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, பெறும் ஊழல் குற்றச்சாட்டாக மாறுவதுமே,
மேற்படி அனுபவம். அந்தப் பட்டியலில் தமிழ் நாடு தேர்வாணையமும் சேருமா? அல்லது திடீர்
சோதனைகளுடன் முடிந்து விடுமா? என்பதை பொறுமையாக கவணிக்க வேண்டியுள்ளது.
தேர்வாணையத்தின் தலைவர் உள்ளிட்டு
தேர்வுக்குழு உறுப்பினர்கள் 13 பேர் வீடுகளிலும் சோதனைகள் நடத்தியதில், ஒருவர் வீட்டில்
26 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப் பட்டுள்ளது. மற்றொருவர் வீட்டில், 9.6 லட்சம் ரூபாயுடன்,
இந்தியாவில் தயாரிக்கப் பட்ட வெளிநாட்டு மது புட்டிகள் 23ம் கைப்பற்றப் பட்டதாக செய்திகள்
வந்துள்ளன. மேலும் ஒரு வீட்டில் சோதனையிடுகிற போது, இரண்டு பிளாஸ்டிக் பைகளில் 17 லட்சம்
ரூபாய், அருகில் உள்ள வீட்டில் வீசி எறியப் பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
TNPSC குரூப் 1 க்கான தேர்வு முடிந்து
பல் மருத்துவர் நியமனம் நடைபெற உள்ள நிலையில் இந்த சோதனைகளும் செய்திகளும் வெளி வந்திருப்பதில்
இருந்து, சோதனையில் பிடிபட்ட பணம், பல்மருத்துவர் நியமனத்துடன் இனைந்தது என்பதை மறுக்க
முடியாது. கடந்த காலத்தில் இரண்டாம் பிரிவு மோட்டார் வாகண ஆய்வாளர் நியமனத்திலும் லஞ்சம்
பெறப் பட்டிருக்கலாம், என்றும் காவல் துறை சந்தேகத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.
மிக அதிக அளவில் தேவைப்படும் பணியிடங்களுக்கு
குறைவான மருத்துவர்களை நியமனம் செய்வது என, கடந்த காலங்களில் அரசுகள் எடுத்த முடிவு,
போட்டியைத் தீவிரப் படுத்தியுள்ளது. ஏற்கனவே
பல் மருத்துவம் படிப்பதற்காக, தனியார் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்காக பல
லட்சம் செலவிட்ட ஒரு இளம் மருத்துவர், வேலைக்காக
சிறிது காலம் காத்திருப்பதற்கான பொறுமை கொண்டவராக இருக்க வேண்டும், என எதிர்பார்க்க
முடியாது. படிப்பிற்காக செலவிட்டதை தொழில் முதலீடாகப் பார்ப்பதும், அதை வட்டியுடன்
திருப்பி எடுப்பது குறித்த கவலையும் அதிகரித்துள்ள காலம் இது. எனவே குறுக்கு வழி தேடும்
மருத்துவர்களை தரகர்கள் அணுகுவதும், அதன் ஏற்பாட்டில் பல லட்சங்கள் கைமாறுவதும், போட்டித்
தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றோர் தேர்வாவதும் நடந்தேறுகிறது.
கடந்த 2010 ம் ஆண்டில் கேத்தன்
தேசாய், என்ற இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவர் கைது செய்யப் பட்டு, அவருடைய வீட்டை
சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை செய்த போது, 1800 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப் பட்டது. பாட்டியாலாவில்
உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் புதிய பாடப் பிரிவு துவங்குவதற்கான அனுமதியை, இந்திய
மருத்துவக் கவுன்சிலில் பெறுவதற்காக, தேசாயிடம் 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த போது,
கையும் களவுமாக பிடிபட்டார்.
இதைவிட சிறந்த காட்சிகளும், சாட்சிகளும்
இனி விசாரணையில் கிடைக்குமா? என்பது தெரிய வில்லை. ஆனாலும், நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்து பயணிக்கிறது. 18 மாதங்களுக்கும் மேலாகத் தொடரும் இந்த வழக்கு நடவடிக்கைகள்
மக்கள் கவணத்திற்கு செல்வதில்லை. ஏனென்றால், நாட்டில் அதை விடவும் பெரிய, ஊழல் குற்றச்சாட்டுகள்
அதிகரித்து உள்ளன. CWG, 2G மற்றும் KG ஆகியவை, கேத்தன் தேசாயை சின்ன ஊழல் செய்தவராக
மாற்றி விட்டது. கார்கில் போரில் மாண்டு போன தியாகிகளின் பெயரில் கட்டப் பட்ட ஆதர்ஷ்
அமைப்பு வீடுகளிலும், ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. தியாகங்களின் ஆணிவேரையும் அசைத்துப்
பார்க்கும், இந்த மனிதர்கள், மண்ணில் தலைக் குணிவு இல்லாமல் வாழ்வது, ஆசை வெட்கம் அறியாது
என்ற முது மொழியை நினைவூட்டுகிறது.
இப்படி இரக்கமற்ற ஊழல்கள் ஒருபுறம்,
தீவிரம் பெறுகிறது. மற்றொரு புறம், ஊழல் குற்றச்சாட்டு குறித்த விவரங்கள் யதேட்சையாக
நடந்த தீ விபத்துகளில் அழிக்கப் படுகிறது. ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் நடந்த
தீ விபத்து, சமீபத்திய உதாரணம் ஆகும். இச்சம்பவங்களை இங்கு குறிப்பிடுவதற்கு காரணம்,
தமிழ் நாட்டில் இப்போது முன்னுக்கு வந்துள்ள, TNPSC முறைகேடுகள் விசாரணை நடைபெறும்
போது, அந்த அலுவலகத்தில் தீ விபத்து எதுவும் நடைபெற்று விடக் கூடாது என்பதே ஆகும்.
இத்தகைய தொடர் ஊழல்கள் குறிப்பாக,
கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் துறைகளில் நடைபெறும் முறைகேடுகள், நேர்மை குறித்த கருத்தாக்கத்தை,
கேலிப் பொருளாக மாற்றி வருகிறது. இளம் தலைமுறையை மிகவும் பாதிக்கக் கூடியதாக வளர்ந்து
வருகிறது, என்பதை ஆட்சியாளர்கள் உணரவில்லை. தங்கள் குடும்பத்திற்குப் பதவி, வீடு, நிலம்
ஒதுக்கீடு செய்வது, ஆகிய துர்குணங்களால் அலங்கரித்துக் கொண்டுள்ள ஆட்சியாளர்களுக்கு,
உடந்தையாக அதிகாரிகளில் பலரும் இருப்பதன் விளைவு தானே, மேற்படி உதாரணங்கள். இவர்கள்
எப்படி எதிர்கால சந்ததியினருக்கு, நேர்மையைக் கற்றுக் கொடுப்பார்கள். எனவே சொல்லகராதியில்
நேர்மை என்ற வார்த்தையைக் காப்பாற்றும் பொறுப்பும் சமூகத்திற்கு அதிகரித்துள்ளது.
இந்தியா போன்ற நாட்டில், கொள்ளை,
தீவிரவாதம், சாதி, மதக் கல்வரங்கள் அதிகரித்ததற்கு அடிப்படைக் காரணம் வேலையின்மை என்பதை,
அரசு அமைத்த பல்வேறு குழுக்கள், பல கட்டங்களில் சுட்டிக்காட்டியுள்ளன. பிரதமர், ஒவ்வொரு
தேசிய வளர்ச்சிக் மன்றக் கூட்டத்திலும் குறிப்பிடும் வார்த்தையாக, அதிதீவிரவாதம் அல்லது
பயங்கரவாதம் இருக்கிறது. ஆனால் செயல் வடிவம் எதுவும் இடம் பெறுவதில்லை.
கடந்த காலத்தில் வங்கிகளுக்கான
தேர்வாணையம் கலைக்கப் பட்டது. பா.ஜ.க தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்,
2002 பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆண்டுக்கு 2 சதம் அரசு வேலைகள் வெட்டப் படும் என்று அறிவிக்கப்
பட்டது. விளைவு சுமார் 34 லட்சம் பணியிடங்கள் அரசுத் துறையில் நாடு முழுவதும் காலியாக
இருக்கிறது. இதன் காரணமாக அரசு வேலை என்பது குதிரை கொம்பு போன்று கனவானது. விளைவு படித்தவர்கள்
செய்கிற, குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, இக்காலத்தில் கூடுதல் விகிதாச்சாரத்தில்
இருப்பதை, காவல் துறை விவரங்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
இந்நிலையில் வாராது வந்த மாமழை
என்பது போன்ற வேலை வாய்ப்பிற்காக, தமிழ்நாடு தேர்வாணயம் நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள்
நடைபெறுகிறது, என்ற செய்தி, மேலும் நிலமையை மோசமாக்கும். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில்
நடந்த மனநல மருத்துவம் குறித்த ஆய்வு, நமது நாட்டிற்கும் பொருந்துவதாக இருப்பதைக் காணமுடியும்.
மனநிலை பாதிக்கப் பட்டவர்களில், வேலையில்லாதவர்
அல்லது சம்பளம் இல்லாமல் உழைக்க கட்டாயப் படுத்தப் படுபவர்கள் 26 சதமானம் என்பதைக்
கணக்கிட்டு உள்ளனர்.
வாராந்திர வருமானம் 580 டாலருக்கு
குறைவாக உள்ள குடும்பங்களிலும் மனநலம் பாதிக்கப் படுகிறது. குறிப்பாக 18 முதல் 24 வயதுக்குட்பட்ட
பிரிவினரே இந்த பாதிப்பில் மிக அதிகமாக உள்ளனர், என்பதையும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நமது நாட்டில் அதிதீவிரவாதம் மற்றும் பயங்கரவாத செயல்களில், ஈடுபடுவோரின் வயதும்
18 முதல் 24 தான். இவர்களே அதிக அளவில் படித்து முடித்து வேலை வாய்ப்பை எதிர் பார்த்திருப்போராக
உள்ளனர். வேலைக்கான வாய்ப்பு இல்லாததும், கிடைப்பதாக எதிர்பார்க்கும் வேலையை முறைகேடு
மூலம், வேறொருவர் தட்டிப்பறிப்பதும், உளவியல் ரீதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்திகளாகும்.
தமிழ்நாடு தேர்வாணையத்தில் நேர்மை
குறித்து, இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்த சோதனைகள்
நடந்ததாக சொல்லப் படுகிறது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போருக்கு
நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் இதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
அப்போது தான் விரக்தி காரணமாக, சமூகத்திடம் இருந்து அந்நியப் படும் இளைஞர் கூட்டத்தைத்
தடுக்க முடியும்.
விடுதலைக்கு முன், இன்று பாகிஸ்தனில்
உள்ள நகரமான குவெட்டா என்ற ஊரில், சவுக்கத் அலி என்பவருக்கு 1941 செப்- 8 அன்று 6 மாத
காலம் கடும் தண்டனையும் 100 ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டிருக்கிறார். காரணம் ஒரு
ரூபாய் லஞ்சம் வாங்கும் போது, கையும் களவுமாக பிடிபட்டார், என்பதாகும்.
தற்போது தமிழ்நாடு தேர்வாணைய அதிகாரிகள்
மீது, ஊழல் தடுப்புச் சட்டம் 1988ன் படி, 13(2)r/w, 13(1)(d), மற்றும் 15 ஆகிய பிரிவுகளிலும்,
IPC படி 120(B), 175, 186 பிரிவுகளிலும் பதிவாகியுள்ள வழக்குகள், சரியான தீர்ப்பை பெறுவதன்
மூலம், தமிழக இளைஞர்களுக்கு நாட்டுப் பற்றையும், நம்பிக்கையையும் அளிப்பதாக அமையட்டும்.
நன்றி தினமணி
தோழர் கண்ணன்! கட்டுரையை காலையில் தினமணியில் படித்தேன். எனது இணையிடம் காண்பித்தேன்.
பதிலளிநீக்கு//பிரதமர், ஒவ்வொரு தேசிய வளர்ச்சிக் மன்றக் கூட்டத்திலும் குறிப்பிடும் வார்த்தையாக, அதிதீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் இருக்கிறது. ஆனால் செயல் வடிவம் எதுவும் இடம் பெறுவதில்லை//
அநேகமாக ஊழலுக்கும் இது பொருந்தும் என்றே நினைக்கிறேன். குண்டு துளைக்காத மேடையில் என்றைக்கு நின்று பயங்கரவாத்த்தை எதிர்த்து பேசுகிறார்களோ அன்றே அவர்களும் ரூபம் உண்மையை விட்டு வெளியேறி விட்டது எனக்கொள்ளலாம்.