பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர்
வாங்சுக் திருமணத்திற்கும், பிரிட்டிஷ் இளவரசர், வில்லியம்ஸ் திருமணத்திற்கும் கொடுத்த
முக்கியத்துவத்தைக் கூட, பல லட்சம் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு, தமிழக ஊடகங்கள் தரவில்லை. உலகம் இதுவரை கண்டிராத, தொழிலாளர்களின்
தொடர் போராட்டத்தை சந்திக்கிறது. ஊடகங்களின் விளம்பரத்தை எதிர்பார்த்து, அமெரிக்காவின்
வால்தெருவில் தொழிலாளர்கள் பங்கெடுப்பது திட்டமிடப் படவில்லை. தொழிலாளர்கள் மீதான சுரண்டலுக்கு
எதிரான அரசியல் அவர்களை வால்தெருவில் நிறுத்தியுள்ளது.. ஆயிரம் பேருடன் துவங்கிய போராட்டம்
பல லட்சங்களாகவும், பல பெரு நகரங்களிலும் திரளும் உழைக்கும் வர்க்கத்தின் கூட்டமாக,
வால் தெரு ஆக்கிரமிப்பு போராட்டம் வளர்ச்சி பெற்றிருக்கிறது
.
முதலாளித்துவத்தின் லாபவெறியால்
அதுவே உருவாக்கிக் கொண்ட நெருக்கடியில் இருந்தே இந்த போராட்டங்கள் நடைபெறுகிறது. ஒபாமா
அரசு, 2300 பக்கங்களில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை 2010ல் திருத்தி வெளியீடு செய்திருக்கிறது.
அதில் 99 சதமான மக்களுக்கு எந்த விதமான பலனும் இல்லை. மாறாக, மூலதனத்தைப் வலுப்படுத்துவதற்கான
தேவையை, கொண்டிருக்கிறது. வால்த்தெருவில் அமைந்துள்ள வங்கிகளுக்கு மிக அதிக அளவிலான
சலுகைகளை வாரி இரைத்திருக்கிறது. எனவே தான் தொழிலாளர்கள் வால் தெருவை ஆக்கிரமிப்போம்
என்ற முழக்கத்தையும், நாங்கள் 99 சதம் என்ற முழக்கத்தையும் முன் வைத்துள்ளனர். ஒபாமா
அரசு, வங்கிகள் திவாலானதற்குக் காரணமான அதே பாதையில் தொடர்ந்து பயணிக்க, பொது மக்களின்
சேமிப்புப் பணத்தை வைத்து விளையாடுகிறது. ரோம் நகரம் தீப்பிடித்து எரிகிறபோது நீரோ
மன்னன் பிடில் வாசித்துக் கொண்ண்டிருந்த கதையை
நினைவு படுத்துகிறது இச்செயல். பெரும்பான்மையான மக்களுக்கு வேலையிழப்பை ஏற்படுத்தியுள்ள
கொள்கைகளை மாற்ற முயற்சிக்காமல், அதற்கு காரணமான
பங்கு சந்தை வர்த்தகத்தை பலபடுத்த நடவடிக்கை எடுக்கிறது.
இது அமெரிக்காவில் மட்டும் நடைபெற
வில்லை. உலகில் அமெரிக்காவுடன் நெருக்கமாக இருக்கும், இதர நாடுகளிலும், இதுதான் நிலை.
பெல்ஜியம் நாட்டின் வங்கிகள் சந்தித்துள்ள நெருக்கடி காரணமாக, வங்கிகளைத் தேசியமயமாக்கு
என்ற குரல், அந்நாட்டில் அதிகரித்து வருகிறது. இந்த நிலை கிரீஸ், போர்ச்சுக்கல், ஸ்பெயின்,
இத்தாலி ஆகிய நாடுகளிலும் உள்ளது. வங்கிகள் திவாலாவதைத் தொடர்ந்து, சந்தையில் 10 முதல்
12 சதம் சரிவு ஐரோப்பிய முதலீட்டில் ஏற்படும். சரிவைத் தடுக்க, ஐரோப்பிய நிதிமூலதனத்தை
ஸ்திரப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. ஸ்திரப்படுத்துவதற்கான நிதியை ஸ்லோவாக்கியா
போன்ற சிறிய நாடுகளில் இருந்து கைப்பற்ற முயற்சி நடைபெறுகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப
விகிதம் எந்த இடத்திலும் குறைய வில்லை. மாறாக ஆடம்பர பொருள்கள் மூலமான லாபத்தை,
2008 பொருளாதார மந்த நிலை துவங்குவதற்கு முன்பிருந்த நிலையிலேயே கார்ப்ப்ரேட் நிறுவனங்கள்
சம்பாதிக்கின்றன.. சூப்பர் சுரண்டல் மற்றும் சூப்பர் லாபம் மூலம், பெருமுதலாளிகள் செல்வ
வளத்தை பெருக்கிக் கொள்வது புதிய தாராளமயமாக்கல் என்ற இக்காலத்தில் அதிகரித்து உள்ளது.
உலகில் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் வரிசையில் முதல் நிலையில் உள்ள நாடு, அமெரிக்கா என,
ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அறிக்கை கூறுகிறது. சிங்கப்பூர், ஹாங்காங்
மற்றும் ஐரோப்பிய நாடுகள் இதற்கு அடுத்த நிலையில் உள்ளன.
மொத்தத்தில் பெரு முதலாளிகளை காப்பாற்றுவதற்காக,
உலகின் வளர்ந்த நாடுகள், சிறிய நாடுகளையும், உலகின் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களைச்
சுரண்டுவதையும் பகிரங்கமாக நியாயப்படுத்த துவங்கியுள்ளது. எனவே முதலாளித்துவத்தின்
தாக்குதலை எதிர்கொள்ள சமூக விதிப்படி, மார்க்ஸ் சொன்ன, வளர்ந்த முதலாளித்துவ நாடுகளுக்கு
எதிரான சிறிய நாடுகளின் ஒற்றுமையும், பெரும் தொழிலாளி வர்க்கத்தின், ஒற்றுமையும் கட்டமைக்கப்
படுவது தவிர்க்க இயலாதது.
உதாரணம், மினோப்பலிஸ் நகரத்தில்
நடைபெற்று முடிந்த, இளம் தொழிலாளர்களின் மாநாடு. ஆப்பிரிக்க தொழிலாளர்களால் துவக்கப்
பட்ட இந்த அமைப்பு, படிப்படியாக, பெரும் வளர்ச்சி பெற்ற இயக்கமாக வளர்ந்துள்ளது. அமெரிக்காவில்
உள்ள இளம் கம்யூனிஸ்ட் லீக் என்ற அமைப்பு, சிலரின் கையில் சிக்கியிருக்கும், செல்வ
வளத்தையும், அதிகாரத்தையும், பெரும் பான்மையோருக்கு கிடைக்கும் வகையில் மறுபங்கீடு
செய்திடு, என்ற முழக்கத்துடன், வால் தெரு போராளிகளுடன் கைகோர்த்துள்ளனர்.
சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்த கம்யூனிஸ்ட்
ஆட்சிகளின் பின்னடைவைத் தொடர்ந்து, இனி சோசலிசத்திற்கு வாய்ப்பில்லை. கம்யூனிசம் முடிந்து
விட்டது. முதலாளித்துவம் மட்டுமே தீர்வு. மார்க்ஸ் செய்த வியாக்கியானம் அனைத்தும் பொய்த்து
விட்டது என்று, நீட்டி முழங்கினர். முதலாளித்துவம் செய்த சூழ்ச்சிகளால், மனித சமூகத்தின்
பிரச்சனைகள், சமூக மாற்றத்திற்கு மாற்றாக, முதலாளித்துவதிற்குள்ளேயே, தீர்வு காணுவதை
நோக்கி திசை திருப்பப் பட்டது.
தன்னார்வக் குழுக்கள் பல திட்ட
மிட்டு உருவாக்கப் பட்டது. மனித சமூகம், இனம், மொழி, நிறம், பாலினம் என்ற அடிப்படையில்
நுணுகி ஆராயத் தலைப் பட்டது. வர்க்கப் போரை விடவும், அவரவர் சார்ந்த பிரச்சனைக்கான
போராட்டமே உடனடித் தேவை என்ற முழக்கங்களின் மூலம் அடையாள அரசியலை முன்னெடுக்க மார்க்சீயம்
பேசிய சிலரும் தீவிரம் செலுத்தினர். இச்செயல்கள் ஒருவகையில் மறைமுகமாக முதலாளித்துவத்துவத்திற்கு
சேவை செய்ய உதவியது. வர்க்கப் போராட்டம், திசை திருப்பல்களுக்கு, ஆளாகும் நிலையைத்
திட்டமிட்டு முதலாளித்துவமும் உருவாக்கியது.
ஆனால் இப்போது நிலைமை மாறியிருக்கிறது.
அமெரிக்காவில் நடைபெறும், வால்த்தெரு ஆக்கிரமிப்பு போராட்டத்திற்கான ஆதரவு, பல மாற்றுக்
கருத்துக் கொண்ட சமூகப் போராட்ட காரர்களையும், ஓரணியில் நிறுத்தும் வேலையை, அதாவது
தொழிலாளி வர்க்கப் போராட்டம் என்பதை அங்கீகரித்துள்ளது. உதாரணம் 50 லட்சம் உறுப்பினர்களைக்
கொண்ட அமெரிக்காவிற்கான கனவு இயக்கம், 40 லட்சம்
உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க மானவர் இயக்கம், மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்டு
200 அமைப்புகள் ஒன்றினைந்துள்ளன. எனவே தான் இந்த போராட்ட அமைப்பைச் சார்ந்தவர்கள் தங்கள்
அமைப்பின் சார்பிலான பிரகடனத்தில், சோசலிசமே மேற்படி பெரும்பான்மைத் தொழிலாளர்களின்
பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கமுடியும் என குறிப்பிட்டுள்ளனர்.
அரசியல் ரீதியிலும், தீவிரவாதத்திற்கு
எதிரான போர், மனித உரிமைகள் பறிக்கப் படுவதற்கு எதிரான போர், என்ற தன்மையில் அமெரிக்க
செய்த அராஜகங்களும் இக்காலத்தில் அம்பலப்பட்டுள்ளது. எகிப்தில் ஹோஸ்னி முபாரக், டுனீசியாவில்
பென் அலி, லிபியாவில் முகம்மது கடாஃபி, என்று அமெரிக்கா வளர்த்த அதிபர்களை மக்கள் விரட்டியடித்துள்ளனர்.
இந்த நாடுகளில் அமெரிக்கா தனது இரட்டை வேடத்தை, அப்பட்டமாக அரங்கேற்றியது, வெளிச்சத்திற்கு
வந்துள்ளது. இப்போது சிரியாவின் அதிபர், பாஷர் அல் அகம்மதுவை ராஜினாமா செய்யச் சொல்லி
நிபந்தம் தரத் துவங்கியுள்ளது. எனவே இஸ்லாமிய நாடுகளிலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான
மனநிலை வளர்ந்திருப்பதை அறிய முடியும்.
துனீசியா, எகிப்து, அரபு நாடுகளில்
துவங்கிய மல்லிகை புரட்சிக்கும் இந்த தொழிலாளர் போராட்டத்திற்கும், சிறு அரசியல் வித்தியாசம்
இருக்கிறது. மல்லிகைப் புரட்சியில் ஜனநாயகத்திற்கான தேவை பிரதானமாக இருந்தது. தொழிலாளர்
போராட்டத்தில் ஜனநாயகத்திற்கான அவசியத்துடன், சுரண்டலுக்கு எதிரான ஆவேசமும் உள்ளடங்கியிருக்கிறது.
குறிப்பாக வேலையிண்மை தீவிரம் பெற்றுள்ள முதலாளித்துவ நாடுகளில் நடைபெறும் இந்த போராட்டங்கள்,
கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் நடைபெற்ற வர்க்க எழுச்சியை நினைவு படுத்துகிறது.
பாரிஸ் கம்யூன் போல், ஃபிரஞ்சு
புரட்சி போல், புரட்சிகர சிந்தனைகளை துறக்க துணிந்த 1955 களின் நிலையைப் போல் அல்லது
வரலாற்றில் நடந்த சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களைப் போல் இந்தப் போராட்டத்தை
முதலாளித்துவம் ஒடுக்கி விட முடியாது. ஏனென்றால் மார்க்ஸ் சொன்னதை போல், “முதலாளித்துவத்தின்
இயல்பு அது நெருக்கடியில் சிக்கும் போது வெளிப்படுகிறது. மொத்த அமைப்புமே மக்களின்
தேவைகளை அல்ல லாபத்தை மையமாகக் கொண்டு செயல் படுகிறது”. எனவே எதிர்ப்பியக்கங்களும்
தவிர்க்க முடியாமல் பேரெழுச்சியாக வளர்கிறது.
அமெரிக்காவில் கலிஃபோர்னியா நர்ஸ்களின்
வேலைநிறுத்தம், கார்களை சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் போராட்டம், பிரிட்டனில் நடைபெறும்
விவசாயத் தொழிலாளர்களின் போராட்டம், பல மாதங்களாக நடைபெறும், கஜகஸ்தான் ஆயில் ஒர்க்கர்ஸ்
போராட்டம், எகிப்து நாட்டில் நடைபெறும் சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டம், ஃபிஜித்
தீவில் நடைபெறும் தொழிலாளர் போராட்டம், கனடா மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஆசிரியர்களின்
போராட்டம், இந்தோனேசியாவில் நடைபெறும் சுரங்கத் தொழிலாளர் போராட்டம், மற்றும் ஐரோப்பாக்
கண்டத்தில் நடைபெறும் பல தரப்பு மக்களின் ஒருங்கினைந்த போராட்டம், இந்தியாவில் மாருதி
சுசுகி தொழிலாளர் போராட்டம், தமிழகத்தில் வளர்ந்து வரும் பன்னாட்டு நிறுவன சுரண்டலுக்கு
எதிரான மனநிலை ஆகிய அனைத்தும் தொழிலாளி வர்க்க உணர்வே. மேற்படிப் போராட்டங்கள் அனைத்தும்,
சகோதர ஆதரவை பெற்று முன்னேறி வருவது உண்மை.
சுரண்டல் மூலமான லாபத்தை அடிப்படையாகக்
கொண்ட முதலாளித்துவம், தன் செயல்களைத் தீவிர படுத்தியுள்ள நிலையில், சுரண்டலற்ற சமூகத்திற்கான
எழுச்சி தவிர்க்க முடியாது. சோசலிச சமூகம் மட்டுமே சுரண்டலற்ற சமூகத்திற்கு வழிவகை
செய்ய முடியும். ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்த்திய நவம்பர் புரட்சியின் நீரு பூத்த
நெருப்பு, இன்றைக்கும் கணன்று கொண்டே இருக்கிறது. போராட்ட ஆவேசத்தில் சுழன்றடிக்கும்
காற்று, போராட்ட நெருப்பைப் பரப்புவதும், சமூக மாற்றத்தைக் கொணருவதும் உறுதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக