சனி, 16 ஆகஸ்ட், 2014


தேவை தீவிர வெகுமக்கள் இயக்கம் – நோக்கியா சொல்லும் பாடம்.

உலகமயமாக்கலின் தீவிர அமலாக்கம் துவங்கி 20 ஆண்டுகள் முடிந்து விட்டது. 1990களின் துவக்கத்தில் மேற்படி நவதாராளமயக் கொள்கைகளின் முதல் கட்டத் தாக்குதலாக, விருப்ப ஓய்வுத் திட்டம் இருந்தது. அன்றைக்கு பணி ஓய்விற்கு மேலும் 10 ஆண்டுகள் இருந்த நிலையில், விருப்ப ஓய்வுத் திட்டத்தை, அரசுப் பொதுத் துறை நிறுவனங்களில் அறிமுகம் செய்த போது, இடதுசாரிகளின் எதிர்ப்பிற்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தரவில்லை. மாறாக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை வேறு எந்த வடிவில் உருவாக்குவது, என வினா தொடுத்தனர்.

இன்று தலைகீழ் மாற்றம் உருவாகியுள்ளது. பணி ஓய்விற்கு 10 ஆண்டுகள் இருந்த நிலையில் விருப்ப ஓய்வு என்பது, பணியில் சேர்ந்து 10 ஆண்டுகள் முடிந்தாலே விருப்ப ஓய்வு என்பதாக, வளர்ச்சி பெற்று உள்ளது. 50 வயது நிரம்பியவர்களிடம் அமலான விருப்ப ஓய்வுத் திட்டம், 23 – 26 வயது இளைஞர்களிடம் அமலாகி வருகிறது. வேலை வாய்ப்பு உருவாக்கம் குறித்து விவாதிக்க முடிந்த அரசுகளால், இத்தகைய விருப்ப ஓய்வுத் திட்டத்தைத் தடுக்கும் செயலில் இறங்க முடியவில்லை. தொழிலாளர்களுக்காகப் பரிந்து பேசும் உணர்வும் அற்ற நிலையில் அரசுகள் உள்ளன. உலகமயக் கொள்கைகளின் வளர்ச்சி என்பது, படிப்படியாக அரசுகள் தங்களின் இறையாண்மையை பன்னாட்டு முதலாளிகளிடம் இழந்து வருகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.

முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், மிக அன்மை தினங்கள் வரையிலும், வேலை வாய்ப்பிற்காக மூலதனத்திடம் வளைந்து கொடுப்பது அவசியம், என்றும், தேவைப்படின் இந்தியத் தொழிற் சங்கச் சட்டங்களின் வீரியத்தை குறைப்பது தவறல்ல, என்றும் நீட்டி முழங்கி வந்தார். இதன் மூலம் இந்தியத் தொழிலாளர்களை நிராயுதபாணியாக மாற்றும் நடவடிக்கைகளிலும் இறங்கினார். அதற்கு பல மாநில அரசுகளும் துணை நின்று சேவகம் செய்தன. அதன் ஒரு பகுதி தான் நோக்கியா இந்தியா நிறுவனம் பெற்ற சலுகைகளும் ஆகும்.

நோக்கியாவும் புரிந்துணர்வு ஒப்பந்தமும்:

2005 ஆம் ஆண்டு அதிமுக அரசுடன் நோக்கியா செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான சிறப்புப் பொருளாதார மண்டலம் தான், நோக்கியா சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகும். 1200 நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும் பல ஆயிரம் இளைஞர்களுக்கு மறை முக வேலைவாய்ப்பும் வழங்குவதாக புரிந்து உணர்வு ஒப்பந்தம் தெரிவிக்கிறது. மறைமுக வேலை வாய்ப்பு பட்டியலில் காண்ட்ராக்ட் தொழிலாளர் துவங்கி, நிறுவனம் அருகில் டீக்கடை நடத்தும் தொழிலாளர் வரை அடக்கம்.

நோக்கியா தனது உற்பத்தியை இந்தியாவில் துவக்கும் போது, கூடவே சில உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் உருவாகும் என அறிவிக்கப் பட்டது. அந்த நிறுவனங்களும் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. அப்படி ஃபாக்ஸ்கான், பி.ஒய்.டி, சால்காம்ப், லைட் ஆன் மொபைல், ஆர்.ஆர். டொனால்டி போன்ற நிறுவனங்கள் உருவானது. இவைகளில் சுமார் 5000 தொழிலாளர்கள் நிரந்தரத் தன்மையிலும், 10000 ஆயிரத்திற்கும் மேல் காண்ட்ராக்ட் அடிப்படையிலும் வேலைக்கு அமர்த்தப் பட்டனர். நோக்கியாவின் சந்தை விரிவாக்கம் பெற்றதைத் தொடர்ந்து, நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நோக்கியாவிற்குள் மட்டும் 5000 ஐத் தாண்டியது. பயிற்சி மற்றும் காண்ட்ராக்ட் அனைத்தும் சேர்ந்து சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் நோக்கியாவிற்குள் மட்டும் வேலை செய்தனர். எல்லாம் சேர்ந்து 22 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் மேற்குறிப்பிட்ட ஆலைகளில் பணிபுரிந்தனர்.

2005 ஏப்ரல் 29 அன்று, தமிழ் நாடு அரசு தொழில்துறை அரசாணை எண் 59ஐ வெளியிட்டது. அதில், ”நோக்கியா நிறுவனத்தின் கைபேசி, உலக அளவில் 32 சதம் சந்தையையும், இந்தியாவில் 50 சதம் சந்தையையும் கொண்டிருக்கிறது. இந்தியாவில் 675 கோடி ரூபாயில் துவங்கப்படும் உற்பத்தி துவக்க கட்டத்தில் 1200 நபர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும். இதற்காக சிப்காட் மூலம் 200 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்து ஏக்கர் ஒன்றுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு 99 வருட குத்தகைக்கு கொடுக்கப் படும், என்பது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கிறது,” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. சில நாள்களிலேயே புரிந்துணர்வு ஒப்பந்தம் திருத்தம் செய்யப் பட்டது. ஒரு ஏக்கருக்கு 4.5 லட்சம் ரூபாய் என்றும், பத்திரப்பதிவு கட்டணம் 4% என்பதை 0% எனவும் மாற்றம் செய்து விற்றனர், என்பதை இறுதி செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அறியலாம்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது சலுகைகளை ஒரு நிறுவனத்திற்கு உத்திரவாதம் செய்கிற ஏற்பாடு, என்பதை பொதுமக்களோ, வேலை செய்யும் தொழிலாளர்களோ அறிந்திருக்க நியாயம் இல்லை. மின்சாரம், தண்ணீர், சாலை, ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் அவசியம். இதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இதை எல்லாம் செய்வதற்கு நிறுவன உரிமையாளர்களும், அதிகமாக வருவாய் ஈட்டுபவர்களும், நடுத்தர மக்கள் மற்றும் தொழிலாளர் ஆகியோர், அரசுக்கு வரி செலுத்துவது மிக மிக அவசியம். அரசுகளோ கண்களை விற்று சித்திரம் வாங்குவது போல், நிறுவனங்களிடம் இருந்து பெறுகிற வரிகளைத் தள்ளுபடி செய்து, நிறுவனங்களுக்கான உள்கட்டமைப்பை உறுதி செய்து கொடுத்துள்ளது. அதே நேரம் தொழிலாளர்களிடம் இருந்து வசூல் செய்கிற வரியை, நிறுவனங்கள் மூலம் பிடித்தம் செய்து கறாராகப் பெற்றுள்ளது.

குறிப்பாக மாநில அரசு தனது வரி வருவாய் பங்கினை, உயர்த்த மத்திய அரசுடன் போராடுகிற இதே காலத்தில் தான், வணிக வரி, விற்பனை வரி, ஆகியவற்றை 10 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டியதில்லை என எழுதிக் கொடுத்துள்ளது. வேலை ஒப்பந்த வரி, குத்தகை வரி, நுழைவு வரி ஆகியவற்றில் இருந்தும் விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. இவை தவிர்த்து மேலும் ஊக்கமளிக்கிற வகையில், தொழிலாளர் குறித்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் பேசுகிறது.

தொழிலாளர் குறித்து 10 அம்சங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம் பெற்று உள்ளன. அதில் 6 வதாகக் 
குறிப்பிட்டுள்ள, ”தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தைக் கட்டுபடுத்தப் பொதுப் பயன் பாட்டு நிறுவனம் என அறிவிப்பது”, (The state shall declare the SEZ site to be a “Public Utility” to curb labour indiscipline) என்பதாகும். இந்த பூதத்தைக் காட்டி, நோக்கியா நிறுவனம் தொழிலாளர்களை மிரட்ட முடிந்துள்ளது. கைபேசி உற்பத்தி எந்த வகையில் பொதுப்பயன் பாட்டுக்கானது? இன்று வரை புரியாத புதிராக நீடித்து வருகிறது, இந்த கேள்வி. அரசு கொடுத்த வாக்குறுதி அடிப்படையில் தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தைக் கட்டுப்படுத்துவதே பொதுப் பயன்பாடு என்பதாகும். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற வணிக தந்திரம் போல், ”கம்பெனி துவங்கினால் தொழிலாளர்களின் உரிமைகள் பறிப்பு இலவசம்” என்று கூவி விற்றுள்ளது தமிழக அரசு.

உலகமயக் கொள்கை என்பது காலணி ஆதிக்க காலத்தில் இருந்து அமலாகி வருகிறது. அன்றைய உலகமயக் கொள்கை என்பது நேரடி காலணி ஆதிக்கம் எனக் கொண்டால் இன்றைய உலகமயக் கொள்கை நவ காலணியாதிக்கம் என்பதாக உள்ளது. அதாவது அன்று போல் நேரடி ஆட்சி அதிகாரம் என்பதாக இல்லாமல், சட்டத்தின் மூலம் மூலதனச் சுரண்டலை, இயற்கை வளச் சுரண்டலை உறுதி செய்வதற்கான கொள்கையாக உள்ளது.

1696ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியினர் வங்காளத்தின் ஹூக்ளி நதிக்கரையில் முதல் தொழிற் சாலையை உருவாக்கி உள்ளனர். அதோடு கூடவே சேர்ந்து பொருள்களுக்கான சேமிப்புக் கிடங்குகளும் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து படிப்படியாக வளர்ந்த கிழக்கிந்தியக் கம்பெனி, அவுரங்க சீப் அரசிடம் இருந்து, வரிசெலுத்தாமல் விற்பனைகளை விரிவாக்கம் செய்து கொள்வதற்கான உத்தரவையும் பெற்றுள்ளது. அப்போதே இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்ற ஏற்பாடுகள் விதைக்கப் பட்டுள்ளன. (ஆதாரம்: 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகம், மத்திய அரசு பாடத் திட்டம்) உலகமயமாக்கலுக்கான அடித்தளமாக இதை எடுத்துக் கொள்ள முடியும். முதலில் இடம் பின் சலுகை, அதன்பின் ஆதிக்கம் என்ற வரலாறை இன்றைய தலைமுறை நோக்கியா போன்ற நிறுவனங்கள் மூலம் அறிய முடியும்.

அமர்த்து பின் துரத்து கொள்கை:

உபரி மதிப்பு என்கிற லாபத்தின் பங்கு உழைப்பில் இருந்து வெளிப்படுகிறது, என்பது மார்க்சீயத்தின் கண்டுபிடிப்பு. இன்றைய நவீன முதலாளித்துவம் அதனுடைய, தொழில் நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, வேலையாள்களின் எண்ணிக்கையை குறைப்பது, அதன் மூலம் உபரி மதிப்பை அதிகரிப்பது, என்ற தன்மையில் செயல் படுகிறது. அதோடு கூடவே நிரந்தர தன்மை கொண்ட, தொழிலாளர் எண்ணிக்கையையும் கட்டுக்குள் வைப்பது, உபரியை பன்மடங்கு உயர்த்த உதவி செய்யும் பேராயுதம், என்பதைக் கண்டறிந்து செயல்படுகிறது. இந்த தேவைக்காக முதலாளித்துவத்தின் கொள்கை “அமர்த்து பின் துரத்து” என்பதாகும்.

நோக்கியாவில் மட்டுமல்ல. தமிழகத்தில் பஞ்சாலைத் தொழிலில் அமலான, விருப்ப ஓய்வுத் திட்ட அனுபவம் மிக முக்கியமான உதாரணமாகும். 1990 களின் இறுதியில் கோவை மாவட்டத்தில் பஞ்சாலைகளில் விருப்ப ஓய்வுத் திட்டம் தீவிரமாக அமலான காலம். இன்றைய நோக்கியாவைப் போல், 25 முதல் 28 வயது இளைஞர்களும் விருப்ப ஓய்வு என்ற பெயரில் வெளியேற்றப்பட்டனர். சில தொழிற்சங்க இயக்கங்கள் மற்றும் இடது சாரிகள் தவிர வேறு யாரும் குரல் கொடுக்கவோ, போராட்டங்கள் நடத்தவோ தயாரில்லை. பஞ்சாலைத் தொழில் நசிவைச் சந்தித்து வருகிறது, மீட்பதற்கு விருப்ப ஓய்வு தவிர சிறந்த அணுகுமுறை வேறு இல்லை, என்ற முதலாளித்துவத்தின் கூச்சல் அதிகரித்தது.

இன்று வரை பஞ்சாலைத் தொழில் நசிவைச் சந்திக்கவில்லை என்பதை நம்மால் உணர முடியும். சுமங்கலி, மாங்கல்யம், போன்ற பல்வேறு நாமகரணங்களில் கேம்ப் கூலி முறை அறிமுகமாகி, கடந்த 15 ஆண்டுகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அநேகமாக பஞ்சாலைத் தொழிலில் நிரந்தர வேலை வாய்ப்புப் பறிக்கப் பட்டு விட்டது. சமூக பாதுகாப்பு என்ற அடிப்படையில் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளை நிர்மூலமாக்கும் பணியை விருப்ப ஓய்வுத் திட்டம் வெற்றி கரமாக செய்து முடித்தது. சமூகவியல் அறிஞர்கள் சமூகவயமாதல் (Socialization) என்பதை விவாதிக்கிற போது, தொடர் பழக்க வழக்கம் முக்கியமானது எனக் குறிப்பிடுகின்றனர். இந்தக் கருத்தை இன்றைய முதலாளித்துவம் விருப்ப ஓய்வுத் திட்டத்தில் செயலாக்கி வருகிறது.

குறிப்பிட்ட நாள்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வது, அங்கு வேலை இல்லை என்றால் வேறு நிறுவனங்களுக்குச் செல்வது, என்பதை இந்தியா போன்ற நாடுகளில் தொழிலாளர்கள் பழக்கமாகக் கொண்டு உள்ளனர். ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளைப் போல், சமூகப் பாதுகாப்பு குறித்தோ, முதுமையில் ஓய்வு மற்றும் ஓய்வூதியம் ஆகியவை குறித்தோ, இந்தியா போன்ற நாடுகளின் பெரும்பான்மையானத் தொழிலாளர்கள் உணரவில்லை. மாறாக ஆளும் வர்க்க சிந்தனைக்கு தொழிலாளர்கள் ஆட்பட்டு உள்ளனர். குறிப்பாக சோவியத் யூனியன் போன்ற கம்யூனிஸ்ட் நாடுகள் சந்தித்த அரசியல் வீழ்ச்சி, முதலாளித்துவத்திற்கு சாதகமாக மாறி விட்டது. எந்த ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தையும் இன்றைய இளம் தொழிலாளி வர்க்கம் அனுபவிக்கவில்லை. அதற்கான தியாகம், போராட்டம் ஆகியவைக் குறிந்தும் அறிந்திருக்கவில்லை.

உலகமயமாக்கலின் மற்றொரு ஆதிக்கம், சிறிய நிறுவனங்களைப் பெரிய நிறுவனங்கள் விலைபேசி ஆக்கிரமிப்பது ஆகும். இது உலகில் பலநாடுகளில் சாதாரணமாக அமலாகி வருகிறது. ஒரு தொழிலில் ஆதிக்கம் செலுத்துகிற உற்பத்திப் பிரிவு யார் கையில் இருக்கிறதோ, அந்தப் பிரிவு உரிமையாளர் படிப்படியாக, இதர பிராண்ட்களின் உற்பத்தியை விலைக்கு வாங்கிவிட முடியும். இதற்கு சிறந்த உதாரணம் நோக்கியாவை, மைக்ரோசாஃப்ட் விலைக்கு வாங்கியது. இது போன்று நிறுவனங்கள் இணைகிற போது, வேலை இழப்பு தவிர்க்க முடியாது, என்ற கருத்தை மிக வலுவாக, முதலாளித்துவம் தொழிலாளி வர்க்கத்திடம் உளவியல் ரீதியில் ஏற்படுத்தி உள்ளது.

இத்தகைய கருத்தாக்கம் அமர்த்து பின் துரத்து என்ற கொள்கைக்கு உதவி செய்யும், என்பது கவணிக்கத் தக்கது. பேரா. பிரபாத் பட்நாயக் கூறுகையில், முதலாளித்துவம் உருவாக்கி வளர்க்கும் கருத்தாக்கங்களில் மிக முக்கியமானது, ”வறுமையும், பெருந்துன்பமும் எல்லாக் காலங்களிலும் உள்ளது, அதை எதிர்த்து போராடுவதை விட, ஒவ்வொரு தொழிலாளியையும் தனக்கான தேவை என்ற சிந்தனை மூலம், தனிமைப் படுத்தி அதை சகித்துக் கொள்ளப் பழக்குவது” எனக் குறிப்பிடுகிறார். வேலையில்லாப் பட்டாளம் என்ற ரிசர்வ் ஆர்மி, வேலையில் இருப்போரை தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது, என்ற மனநிலையுடன் வேலை செய்ய வைக்கிறது. எதிர்ப்புணர்வை மழுங்கச் செய்கிறது. இது முதலாளித்துவத்திற்கு சாதகமான நிலையை நீடித்துச் செல்ல உதவுகிறது, என்றும் பிரபாத் பட்நாயக் கூறுகிறார்.

இதையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடுகிற போது, இந்தக் கருத்தாக்கங்கள் காரணமாக, சர்வதேச அளவில் வர்க்க சக்திகளின் பலாபலன்கள் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக மாறியுள்ளது. முன்னுக்கு வந்துள்ள உலகமயமாக்கலின் காலகட்டம் மூலதனத்தின் லாபத்தை மிக அதிக அளவில் உயர்த்துவதற்கான தேடலைத் தொடர அனுமதிக்கிறது, எனக் குறிப்பிடுகிறது.

அரசுகளின் இயலாமை:

உலகமயக் கொள்கைகள் அமலாகத் துவங்கியபின் சந்தைக் கொள்கை தீவிரம் பெற்று இருப்பதைக் காணமுடியும். சர்வதேச எல்லைகளைக் கடந்ததாக சந்தை இருக்கிறது. எனவே சந்தைக்காக அரசுகள் பன்னாட்டு நிறுவனங்களிடம் தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்கும் போக்கும் வளரும் நாடுகளில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தேச பொருளாதாரத்தை நிர்வகிப்பது அரசின் கடமை என்பதை விட, நாட்டின் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கக் கூடியதாக அரசு இருந்தால் போதும் என்ற வாதம் தற்போது முதலாளித்துவத்தால் அதிகமாகப் பயன் படுத்தப் படுவதைப் பார்க்க முடியும்.

வேலைவாய்ப்பை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரு நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டு, அங்குள்ள தொழிலாளர் உரிமைகளை எழுதி அடமானம் வைத்து விட்டபின், அரசு வேறு என்ன விதமான நிர்வாகத்தை மேற்கொள்ள முடியும்? எனவே தான் இக்காலத்தில் மிக அதிகமான தலையீடுகள் தொழிலாளர் போராட்டங்களில் இருந்துள்ளதைப் பார்க்க முடியும். அதே நேரத்தில் அரசுகள் வேலை வாய்ப்பை பாதுகாப்பதிலும், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், வேடிக்கைப் பார்த்து இருப்பதையும் குறிப்பிட முடியும்.

வர்த்தக தாராளமயக் கொள்கை, உள்நாட்டு உற்பத்தியாளர்களை அகற்றி விட்டு வளர்முக நாடுகளில் தொழில் அழிவை ஏற்படுத்துகிறது. உற்பத்தியையும், தொழிற்துறை வணிக செயல்பாடுகளையும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் செல்லும் போது, வளரும் நாடுகளில் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது. வளரும் நாட்டின் உற்பத்தித் திறனுள்ள சொத்துக்களை, வெளிநாட்டின் பன்னாட்டு நிறுவனங்கள் வசப்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்கிறது. இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சியின் 20 வது அகில இந்திய மாநாட்டு தத்துவார்த்த தீர்மானங்கள் அறிக்கை குறிப்பிடுகிறது.

நோக்கியா நிறுவனம் தற்போது மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்த நிகழ்வு மற்றும் மத்திய அரசுக்குத் தர வேண்டிய 21 ஆயிரம் கோடி வரி ஆகியவற்றை நீதிமன்றம் தலையீடு செய்து, குறிப்பிட்ட சதம் தொகையைச் செலுத்த வேண்டும் என உத்திரவிட்ட பின்னரும், அதைச் செலுத்தாமல், வேலைவாய்ப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது, மார்க்சிஸ்ட் கட்சி மதிப்பீடு செய்த நிலையைத் தான் வெளிப்படுத்துகிறது. தமிழ் நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் நோக்கியா நிறுவனத்திற்கு வழங்கிய வரிச் சலுகைகளுக்குப் பின்னரும், குறைந்த பட்ச வரியை செலுத்த மறுத்து வருவதும் கூட, அரசுகளை பன்னாட்டு நிறுவனங்கள் மீறிச் செல்லும்  ஆதிக்கம் கொண்டதாக இருப்பதை உணர முடியும்.

எனவே தொழிற்சங்க போராட்டங்களைக் கடந்த அரசியல் நடவடிக்கைகள் தேவைப் படுகிறது. தொழிற்சங்களின் கூட்டுப் போராட்டம், வேலைநிறுத்தம் ஆகியவற்றைக் கடந்த தீவிர பிரச்சாரம் அரசியல் ரீதியில் தேவைப்படுகிறது. ஏனென்றால் இதைத் தவிர வேறு வழியில்லை, என்ற கருத்து ரீதியாக ஏற்றுக் கொண்டுள்ள மனநிலையை மாற்ற அரசியல் பிரச்சாரமும், அரசியல் போராட்டமும் தான் தீர்வாக இருக்க முடியும். பலவீனப் பட்டுள்ள அரசுகளை, பெரும் மக்கள் திரள் மூலமான கூட்டு செயல்பாடுகள் மூலம் (வெகுமக்கள் அமைப்புகளின் கூட்டு செயல்பாடு) அம்பலப் படுத்தும் போது, உரிமைகளை நிலைநாட்டும் நடவடிக்கையில் வெற்றி பெற முடியும். அந்த வகையில் நோக்கியா அனுபவம் புதிய போராட்டத்திற்கான திசை வழியை நிர்மானித்துள்ளது.


குறிப்பாக ஒரு ஆலைத் தொழிலாளர்கள் 4 அல்லது 5 மாவட்டங்களில் குடியிருந்து பணிக்கு வரும் நிலையில், ஏரத்தாள சிதறிக் கிடக்கும் தொழிலாளர் கூட்டமாக, அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் உள்ள நிலையில் அதன் உதிரிபாக உற்பத்தி ஆலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், பல பன்னாட்டு மூலதனத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கு கோரிக்கைகளாக, ஒன்று வேலைவாய்ப்பைப் பாதுகாப்பது. இரண்டு அரசு தனது சமூகக் கட்டுப்பாட்டை உறுதி செய்வது. மூன்று அந்நிய மூலதனத்திற்கான வரிச் சலுகைகளை வரைமுறைப் படுத்துவது. நான்கு மத்திய மாநில அரசுகள் நம்நாட்டின் இயற்கை வளம் மற்றும் மனிதவளத்தை முறையாகப் பயன்படுத்த திட்டமிடுவது ஆகியவை ஆகும். இதற்கான தீவிரமான பிரச்சாரமும் அதைத் தொடர்ந்த போராட்டங்களும் உருவாகும் போது, நோக்கியா உதாரணங்களைத் தடுக்க முடியும். இளம் தலைமுறையின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும். வலுவான எதிர்ப்பு இயக்கங்கள் உள்ள நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது, என்ற அனுபவத்தில் இருந்து இத் தேவையைத் தொழிலாளி வர்க்கம் உணரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக