இன்றைய காலக் கண்ணாடி – சென்னைப் பெரு நகரத்
தொழிற் சங்க வரலாறு
ஒரு நூலின் பெருமை அது அன்றைய சமகாலத்திற்கு பொருந்துவதுடன் இணைந்தது. அத்தகைய பெருமைக்குரிய நூல்கள் சில மட்டுமே, அதில் ஒன்றாக, தொழிலாளர் போராட்டம் குறித்த வரலாற்றைப் பேரா. தே. வீரராகவன் எழுதியுள்ளார். தொழிலாளர் தனது போராட்டங்களைத் தங்கள் கோரிக்கைகளுக்காகத் துவக்குவதும் பின் அதில் ஒரு பகுதி வர்க்க உணர்வு பெற்று வளர்ச்சி அடைவதும், ஒருபகுதி ஆளும் வர்க்கக் கருத்தினை ஏற்று, சீர்திருத்த நடவடிக்கைகளில் திருப்தி பெறுவதும், தொடர்ந்து நடைபெறுகிறது. இதை இன்றைய தொழிற்சங்க ஊழியர்களுக்கும், கம்யூனிஸ்ட் ஊழியர்களுக்கும், வரலாற்றின் அடிப்படையில் கற்றுத் தரும் பாடமாக, ”சென்னை பெரு நகரத் தொழிற்சங்க வரலாறு”, என்ற புத்தகம், பெருமை மிகு வரலாறாக அமைந்துள்ளது. சென்னை ஐ.ஐ.டியில் பேராசிரியராகப் பணியாற்றி சமீபத்தில் மறைந்த தே. வீரராகவன், தன்னுடைய முனைவர் பட்டத்திற்காக, மேற்கொண்ட ஆய்வு, மேற்படி நூலாக வெளிவந்துள்ளது. தமிழில் இந்நூலை 2003 ல் அலைகள் பதிப்பகம், 150 ரூபாய் விலையில் 384 பக்கங்களில் வெளிக் கொணர்ந்தது. ஆங்கிலத்தில் 2013ல் லெஃப்ட் வேர்டு பதிப்பகம், The Making Of The Madras Working
Class என்ற பெயரில் வெளியிட்டு உள்ளது.
1982 முதல் 1986 வரை 500க்கும் அதிகமான நூல்களைப் பயின்று, சென்னை மற்றும் டில்லியில் உள்ள ஆவணக் காப்பகங்கள் சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட 8 நூலகங்கள் மற்றும் பல பெயர்களில் அன்று வெளி வந்த பத்திரிக்கைகள் ஆகியவற்றை தேடிப் படித்து, 1987ல் சமர்பிக்கப் பட்ட ஆய்வு நூல். பேரா. தே. வீரராகவன் பார்வையற்றவர், ஆனால் மிகக் கடுமையான உழைப்பின் மூலம் நண்பர்கள் மற்றும் தோழர்கள் படிக்க உதவியதைப் பயன்படுத்தி, ஆய்வை நிறைவு செய்தார். தொழிற்சங்க உணர்வைக் கடந்து, தொழிலாளி வர்க்கத்தின் காத்திரமான அரசியலை, புரட்சிகர வர்க்க உணர்வை நோக்கி நகர்த்துவதற்கான தேவையை முன்னுறுத்தி, ஆய்வுக்கானத் தேடல்களை நிகழ்த்தி உள்ளார். இந்த ஆய்வு இந்தியா பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் காலணி நாடாக இருந்த 1918 முதல் 1939 வரையிலான காலத்தில் சென்னை நகரில் நடைபெற்ற தொழிற்சங்கப் போராட்டம் பற்றியது. அன்றைய சூழலில் இருந்த அரசியல், அடக்குமுறை, சங்க அங்கீகாரம் குறித்த வாதங்கள் மற்றும் தேசியத் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் பங்கேற்பு குறித்து, இன்றைய தலைமுறை புரிந்து கொள்வதற்கான தன்மையில், ஆய்வு செய்யப் பட்டுள்ளது.
ஆங்கில மூலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கும் பணியினை, ச.சீ. கண்ணன் மற்றும் புதுவை ஞானம் ஆகியோர் சிறப்பாக செய்துள்ளனர். இந்நூல் மொழிப் பெயர்ப்பைத் தொழில் ரீதியாகச் செய்யாமல், தொழிலாளி வர்க்கத்திற்கு செய்ய வேண்டிய கடமையாகச் செய்துள்ளனர். ஆகவே மிக இயல்பான முறையில் தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளது. இந்த ஆய்வுப் பணியில் வீரராகவன் ஈடுபட்டிருந்த நாள்களில், தமிழகத்தின்
தொழிற் சங்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் ஆகியவற்றில் சிறந்த முறையில் செயல்பட்டு வந்த தோழர்கள். பி. ராமமூர்த்தி, வி.பி. சிந்தன் ஆகியோர் தமிழில் இந்த ஆய்வு, நூலாக வெளிவர விரும்பினர் என்பதை, ச.சீ. கண்ணன் தனது மொழிப்பெயர்ப்பாளர் குறிப்பில் எழுதி உள்ளார். இன்றைய உலகமயமாக்கல் சூழலில், தொழிலாளி வர்க்கம் கடந்த காலத்தில் போராடிப் பெற்ற உரிமைகளை எல்லாம் பறிக்கப் பட்டு வருகிறது. எனவே இந்நூல் இன்றைய தலைமுறைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய போராட்ட வரலாற்றை நினைவு படுத்துகிறது. அதே வேளையில் புதிய போராட்டத்திற்கான உந்து சக்தியாகவும் அமைந்துள்ளது.
சென்னை நகரில் தொழிலாளர் வளர்ச்சி:
சென்னைப் பெரு நகரத் தொழிற்சங்க வரலாறு குறிப்பிடும் காலம் 1918 – 1939, பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சி இந்திய மண்ணில் அமலில் இருந்தது. நேரடி காலணித்துவம்
கோலோச்சியது. எனவே இந்தியாவில் இருந்து எவ்வளவு அதிகமான அளவிற்குச் சுரண்டிச் செல்ல முடியும் என்பதைத் திட்டமிட்ட முறையில் அமலாக்கினர். என்ன பயிரிட வேண்டும். என்ன தொழில்கள் செய்ய முடியும், என்பதை ஏகாதிபத்தியம் நேரடியாகத் தீர்மாணித்தது. உணவுப் பயிர்களைப் பயிரிடுவதை விட பருத்தி, அவுரி, சணல் போன்ற பணப்பயிர்களின் வேளாண்மை அதிகரித்து இருந்த நிலை அடுத்த கட்டத்திற்கு உயர்ந்தது. அதாவது இந்தியாவிலேயே, மேற்கூறிய வேளாண் உற்பத்தியைப் பயன்படுத்தி பஞ்சாலைகளில் துணி உற்பத்தி செய்வது அதிகரித்து இருந்தது. சென்னையில் பின்னி முதலாளி உருவாக்கிய பக்கிங்காம் மற்றும் கர்நாட்டிக் ஆகிய இரண்டு பஞ்சாலைகளில் பல்லாயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். சுரண்டல் காரணமாக தொழிலாளர்கள் சொல்லொனா துயரங்களைச் சந்தித்து வந்தனர்.
இயல் ஒன்றிலேயே சென்னை நகர தொழில் வளர்ச்சி குறித்த ஏராளமான புதிய தகவல்களுடன்
துவங்குகிறது. கிழக்கிந்திய கம்பெனியைச் சார்ந்த பிரான்சிஸ் டே துவங்கி, அதன் தொடர்ச்சியான அனைத்து கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகிகளும், நிர்வாக ஏற்பாடும், கோட்டையை மையப் படுத்தியதாகவே அமைந்தது. மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் எப்போதும் சென்னை யாருக்கும் தலைநகரமாக இருந்ததில்லை. மதுரை, தஞ்சை, திருச்சி, காஞ்சிபுரம் போன்ற எந்த வரலாறும் சென்னைக்கு இல்லை. அல்லது மற்ற பல நகரங்களைப் போல் சுரங்கம் அல்லது மிகப் பெரிய உற்பத்தி ஆலைகளைக் கொண்டு சென்னை தொழில் வளர்ச்சி பெறவில்லை. சென்னையில் துறைமுகம் இருந்ததால், அது நிர்வாக நகரமாக வளர்ச்சி பெற்றது. எனவே டிராம், அச்சகம், மெட்டல், நகராட்சி நிர்வாகம், மற்றும் பஞ்சாலை என்பது தொழிலாளர்களைப் பெரும் அளவில் கொண்டிருந்த நிர்வாகங்கள் ஆகும். இது போன்ற விவரங்கள் சென்னையின் விரிவாக்கம் குறித்து ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைத்துள்ளது.
சென்னை துறைமுகம் 1913 – 14 காலத்தில் ஆண்டு ஒன்றுக்கு 8 லட்சம் டன் சர்க்குகளைக் கையாண்டு வந்த நிலை அடுத்த 5 ஆண்டுகளில் முதல் உலகப் போர் முடியும் தருவாயில் 10 லட்சம் டன் சர்க்குகளை கையாளும் திறனை உருவாக்கியது. 3000 க்கும் மேற்பட்ட உடல் உழைப்புத் தொழிலாளர்களுடன் கூடிய தொழிலாளர் எண்ணிக்கைத் துறைமுகத்தில் வளர்ந்தது. அதேபோல் ரயில்வே பட்டறையை மதராஸ் – தென்மராத்தா கம்பெனி பெரம்பூரில் அமைத்தனர். இங்கு 1914ல் 5500 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். டிராம், மண்ணெண்ணை மற்றும் பெட்ரோலிய பொருள்கள் விற்பனையில் 2000 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். சின்னது பெரியதுமான 60 அச்சகங்களில் 5000 தொழிலாளர்கள் வேலை செய்தனர்.
1910 ல் குரோம்பேட்டையில் தோல் பதனிடும் தொழிற்சாலை அமைக்கப் பட்டு அதில் 5000 தொழிலாளர்கள் தங்களை வேலையில் ஈடுபடுத்திக் கொண்டனர். பக்கிங்காம் மற்றும் கர்நாட்டிக் மில்களில் 8976 தொழிலாளர்களும், சூளை மில்லில் 2000 தொழிலாளர்களும் பணி செய்தனர். இது தவிர திருவொற்றறியூரில் விம்கோ போன்ற ஆலைகள் மூலமும் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் வளர்ச்சி பெற்றனர். பீடித்தொழிலில் திருவல்லிக்கேணி மற்றும் ராயபுரம் பகுதிகளில் 4000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இவர்கள் காண்ட்ராக்ட் காரர்களில் வீடுகளில் அமர்ந்து பீடி சுற்றும் வேலைகளைச் செய்து வந்தனர். இவையன்றி கைத்தறி உள்ளிட்ட சிறு மற்றும் பாரம்பரியத் தொழில்களிலும் ஏராளமானோர் பணியாற்றினர். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் வேளாண் தொழிலில் இருந்து ஆலைத் தொழிலாளர்களாக மாறும் நிலை ஏற்பட்டதையும், இத்தகையத் தொழிலாளர்கள் மிகக் கடுமையான சுரண்டலுக்கு ஆளானதையும் அறிய முடிகிறது. தொழிற்சங்கம் உருவாவதற்கான காரணத்தையும் மதிப்பிட முடிகிறது.
உருவானத் தொழிற்சாலைகளின் நிர்வாகிகள், மேற்பார்வையாளர், தொழில் நுட்பர், ஆகியோர் பெரும்பாலும் ஆங்கிலேயர்களாக இருந்துள்ளனர். பயிற்சியும், தேர்ச்சியும் கொண்ட தொழிலாளர்களிலும் குறிப்பிடத்த அளவிற்கு, ஆங்கிலேயர் மற்றும் ஐரோப்பியர் இடம்பெற்று இருந்தனர். மற்ற அனைத்து வகை உழைப்பைச் செலுத்துவோரும் இந்தியர்களாக இருந்தனர். இவர்கள் பெரும்பாலும் சென்னையைச் சுற்றிய மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் ஆவர். கைவினைஞர்கள், விவசாயம் சார்ந்தோர், நிலமற்ற விவசாய கூலிகள் (பெரும்பாலும் தலித்துகள்) என, சொந்த கிராமங்களில் வறுமைக்குத் தள்ளப் பட்ட அனைவரும், சென்னைக்கு வந்தனர். தலித்துகளில் பெரும் பகுதியினரைத் தவிர்த்து, மற்றவர்கள் சொந்த கிராமத்துடன் தொடர்பு கொண்டு வந்தனர். ஆனால் தலித்துகள் கிராமத்தில் ஏதும் இல்லை என்ற காரணத்தினாலும், நகர வாழ்க்கையில் உழைப்பாளிகளாக ஐக்கியமாகி விட்டனர். என்பதை வீரராகவன் தொகுத்த ஆய்வு குறிப்பிட்டு உள்ளது.
1871ம் ஆண்டு சென்னையில் 4 லட்சம் பேர் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 1921ல் இது 5 லட்சமாக உயர்ந்தது. ஆனாலும் வேலையின்மையும் தலைவிரித்து ஆடிய நிகழ்வுகளும் குறிப்பிடப் பட்டுள்ளது. இதன் மூலம் முதலாளித்துவ தொழில் வளர்ச்சியுடன் வேலையின்மை ஒட்டிப் பிறந்தது, என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
தொழிற்சங்கம் அமைவதற்கான சூழல்:
1870 களில் ஆலைகள் உருவான பின்னணியில் வேலைத்தளத்தில் கொடுமையான சுரண்டல் முறைகள் இருந்து வந்தது. உதாரணத்திற்கு, இந்தியாவில் வேலை நேரம் குறித்த வரம்பு தீர்மானிக்கப் படவில்லை. குழந்தைகள் பெண்கள் குறைவான கூலிக்கு வேலை வாங்கப் பட்டனர். இதனால் இங்கிலாந்தின் லங்காக்ஷயரை விட குறைவான செலவில் கூடுதலான உற்பத்தி நடைபெற்றது. எனவே சந்தையில் இந்திய உற்பத்தி மலிவான விலையில் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. இதன் காரணமாக, லங்காக்ஷயர் முதலாளிகளின் ஆதரவும், மனிதாபிமான முறையில் மேற்படி உழைப்புச் சுரண்டலை இந்தியாவில் எதிர்த்து வந்தவர்களுக்குக் கிடைத்தது. இதன் காரணமாகவே இந்தியாவில் 7 வயதுக்குக் குறைவான சிறுவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது, என தடை விதிக்கப் பட்டது. 12 வயதுக்கு குறைவான சிறுவர்களின் வேலை நேரம் 9 மணி நேரம் என வரையறுத்து பின்னர் படிப்படியாக மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. 1908 ல் தான் மாரிசன் என்பவர், ஆண்களுக்கு 12 மணி நேரம் வேலை நேரம் என வரையறை செய்தார். இது பின்னர் சட்டமாக்கப் பட்டது. இதைத் தொடர்ந்த போராட்டங்களின் காரணமாக 1934ல் இந்தியத் தொழிற்சாலைகள் சட்டத்தில் ஒருவாரத்தின் அதிகபட்ச வேலைநேரம் 54 மணி நேரம் எனத் தீர்மாணிக்கக்கப் பட்டது.
வாழ்விடங்கள் கொடிதிலும் கொடியதாக இருந்துள்ளது. குறிப்பாக, சென்னை நகரின் குடியிருப்பு குறித்து, ராயல் கமிஷன் சமர்பித்த அறிக்கை, சென்னை நகரின் மக்கள் தொகையில் கால்வாசி 150000 பேர், 25000 ஓரறை இருப்பிடங்களில் வசித்தனர். இதுவும் இல்லாதவர்கள் சாலையோரங்களிலும், கிடங்குகளின் திண்ணைகளிலும் படுத்துறங்கினர்”, எனக் குறிப்பிட்டு உள்ளார். அதாவது ஒரு வீட்டில் 3 அல்லது 4 குடும்பங்களைச் சார்ந்த 15 முதல் 20 நபர்கள் அடைபட்டு வாழ்ந்துள்ளனர். பல வீடுகள் மண் சுவர்களுக்கு மேலே மண்ணெண்ணெய் தகரக் கூரைகள் வேய்ந்த குடிசைகளில் வாழ்ந்துள்ளனர். இக்குடிசைகளுக்குள் காற்று போவதற்கும் வாய்ப்பில்லை. 1934 ல் மேற்கொண்ட கணக்கெடுப்பின் படி, வேலைக்குச் சென்ற, மாதாந்திர ஊதியம் பெற்ற 4736 நபர்களும், அன்றாடக் கூலிகளில் 3358 பேரும் வீடற்றவர்களாக, படுக்க இடமற்றவர்களாக வாழ்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பான்மையோர் துறைமுகத்திலும், கொத்தவால் சாவடியிலும் வேலை செய்தனர்.
இது குறித்தும் சில பிரிட்டிஷார் கவலைப் பட்டுள்ளனர். சர். நார்மன் வொயிட் என்பவர், 1918 ம் ஆண்டிலேயே, “ அடைபட்டுக் கிடக்கும் சூழ்நிலை, நெரிசலும் அசுத்தமும் மிக்க வசிப்பிடங்கள், ஓடியாடி விளையாடிப் பொழுது போக்க வாய்ப்பின்மை இவை அனைத்தும், தொழிலாளியின் உடல் நலத்தை மிகவும் பாதித்தது. பல நோய்கள் தொற்றவும், கிருமிகளை அழிக்கும் சக்தியற்ற பலவீனம் கொண்டவராகவும் மாற்றியது. நகரத்தின் தொழிலாளிகள் ஏராளமானோர், மலேரியா, கொக்கிப் புழு நோய், காச நோய்களால் பாதிக்கப் பட இத்தகைய நிலையே காரணம். இந்தியத் தொழிலாளியின் உழைப்புத் திறன் ஒரு சுகாதாரப் பிரச்சனையே”, என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் குறைவான ஊதியத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் தங்கள் சம்பளத்தில் பிடித்தம் என்ற தண்டனையை அனுபவித்தனர். இது டிராம்வேயில் பணிபுரிந்த தொழிலாளர்களை மிகப் பெரிய மன உலைச்சலுக்கு ஆளாக்கியது. பல்வேறு காரணங்களுக்காக அபராதம் என்பது சாதரணமாக மலிந்து போயிருந்தது. இதற்கு மேலாக நியாயவிலைக் கடை பாக்கி, ஆயுத பூஜை, தீபாவளி ஆகிய பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கான கட்டாய நன்கொடை பறிப்பு, போன்ற பிடித்தங்கள் போக தொழிலாளர் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளம் மிக சொற்பமாக இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஆலைக்குள்
வேலை வாங்கப் பட்ட விதம் மிகக் கொடியதாக இருந்தது. 1917ல் நடந்ததாக வீரராகவன் சேகரித்து
பதிவு செய்த தகவல் மொடிதிலும் கொடியதாக இருக்கிறது. ஒரு தொழிலாளிக்கு அவசரமாக கழிப்பறைக்குச்
செல்ல வேண்டிய இயற்கை அழைப்பு நெருக்கடி கொடுத்துள்ளது. ஆனால் மேலாளர் அனுமதிக்கவில்லை.
ஒரு கட்டத்தில் தாங்கிக் கொள்ள முடியாத தொழிலாளி, வேலைத் தளத்திலேயே மலங்கழித்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மேலாளர், அந்தத் தொழிலாளியை அவ்விடத்தைச் சுத்தம் செய்யச் சொல்லி
செய்த கொடுமை தாங்க முடியாததாக இருந்துள்ளது. இது போல் வேலைத்தளத்தில் தரக் குறைவாக
தொழிலாளர்கள் நடத்தப் பட்டுள்ளனர், வேலையும் வாங்கப் பட்டுள்ளனர்.
வாழ்க்கைத் தேவை, வீட்டு வாடகை, மருத்துவம், கட்டாய நன்கொடை என பலவழிகளில், குறைவான சம்பளம் பெற்று வந்த தொழிலாளர்கள் அவதிப்பட்டனர். இது பல இடங்களில் மோதல்களையும், தொடர்ந்து அமைதியற்ற நிலையையும், தொழிற்சாலைகளுக்குள் உருவாக்குகிறது. இந்நிலையில் தான் சம்பளம் எப்படித் தீர்மானிக்கப் பட வேண்டும் என்பதற்கான ஆய்வு தேவை என பிரிட்டிஷார் கவலைப் பட்டனர். 1917, 1920 ஆகிய ஆண்டுகளில் கெல்லட் இன்ஸ்ட்டிட்யூட் சார்பில் துவக்க கட்ட ஆய்வும், முழுமையாக சென்னை நகரத் தொழிலாளரின் வாழ்க்கை நிலை குறித்த ஆய்வு 1935லும் செய்யப் பட்டுள்ளது. இந்த ஆய்வாளர்களின் மதிப்பீடு தரம் கெட்ட தன்மையில் இருந்துள்ளது. உணவுக்கான செலவை மதிப்பீடு செய்கையில், சிறையில் கைதிகளுக்கான உணவுச் செலவைக் கொண்டு தீர்மாணித்தனர். உடை உள்ளிட்ட பொருள்களுக்கு ஆகும் செலவினத்தை குறைவாக கணக்கீடு செய்தனர். சமூகப் பொறுப்பு மற்றும் சமயச் சடங்குகளைக் கணக்கில் சேர்க்கவே இல்லை.
மேற்படி மதிப்பீடுகள் காரணமாக தொழிலாளி கடன் வாங்குவது தவிர்க்க முடியாததாக மாறியது. குறிப்பாக சமூக கடமைகளான, திருமணம், மருத்துவம் போன்றவைகளுக்காக கடன் வாங்குவது தொழிலாளிகளிடம் அதிகரித்தது. இந்த கடனைத் திரும்ப செலுத்துவதும் ஒரு கடமையாக அதிகரிக்கிற போது, தொழிலாளர்கள் ஏராளமான தகராறுகளுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலை ஒருபுறம் ஆலைக்குள் நிர்வாகத்தினருடன் தகராறு, மற்றொரு புறம், கடன் கொடுத்தவர்கள் இழுக்கும் தகராறு என அதிகரித்து உள்ளது. அன்றைக்கே 12 விழுக்காடு முதல் 150 விழுக்காடு வரை வட்டி வாங்கி உள்ளனர், என்பதை வீரராகவன் மிகுந்த வருத்ததுடன் பதிவு செய்துள்ளார். எனவே தொழிலாளி தன் வாழ்நாளில் கடனைத் தீர்க்க முடியாதவனாக வாழ வேண்டி இருந்துள்ளது.
இவைகளை எல்லாம் கணக்கிட்டு தொழிலாளி சம்பள உயர்வு கேட்கிற போது, இந்தியத் தொழிலாளியின் திறனுக்கு இது போதும் என்ற வாதமே முன்வைக்கப் பட்டதாகத் தெரிகிறது. இந்த வாதம் பொய் என்பதை, அரசு அச்சக கண்காணிப்பாளர் கிரீன் என்பவர் தெரிவித்து உள்ளார். “ அமெரிக்க அச்சக ஊழியரைவிட, அதிக அளவு வேலை முடித்து தருபவராக இந்திய ஊழியர் இருக்கிறார். இந்தியத் தொழிலாளியின் உற்பத்தி திறன் பற்றி குறை கூற முடியாது”, எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே அப்பட்டமான சுரண்டல் முறை மேற்படி பிரிட்டிஷாரின் ஆலைகளிலும், அச்சகங்களிலும், டிராம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிலும் நடைபெற்றுள்ளது. இதை எதிர்ப்பதற்கான சூழலும் இருந்துள்ளது. ஆங்காங்கு மோதல்களும் நடைபெற்றுள்ளது. தீர்வு கிடைக்காத நிலையிலேயே சங்கம் அமைக்கும் நிர்பந்தம் தொழிலாளிக்கு ஏற்பட்டுள்ளது.
அன்றைய தலைமையும் – அரசியலும்:
சென்னை
மாநகரிலும், தமிழகத்திலும் முறையானத் தொழிற்சங்கம் உருவாகும் முன்னரே, ஆங்காங்கு தொழிலாளர்கள்
ஒன்றுபட்டு போராட்டத்தைத் துவக்கியுள்ளனர். தூத்துக்குடியில் கோரல் பஞ்சாலைப் போராட்டத்தில்
ஒரு ஒப்பந்தம், பஞ்சாலைத் தொழிலாளர்களின் தலைவர் வ.உ.சியுடன் 1908 காலத்திலேயே நடந்துள்ளது.
நூலாசிரியர் இதுகுறித்து பதிவு செய்கிற போது, ”தேசிய இயக்கத்தின் தீவிரவாதப் பிரிவின்
தலைவர்களான, வ.உ.சிதம்பரம், சுப்பிரமணிய சிவா, 1905லிருந்தே கேந்திரமானவையாகக் கருதப்
படும், தொழில்களில் உள்ள தொழிலாளர்களைத் தேசிய இயக்கத்திற்கு ஆதரவாகத் திரட்டி, மாபெரும்
பொது வேலைநிறுத்தத்தை நடத்தினால், ஆங்கில அரசு வீழ்ந்து விடும் என நம்பியுள்ளனர். பி.பி.
வாடியா போன்ற மிதவாத காங்கிரஸ் தலைவர்களும், 1917 காலகட்டத்தில், “தொழிலாளர் இயக்கம்
தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை உணரவேண்டும். இந்தியத் தொழிலாளர் வர்க்கம்
தன் சக்தியை ஒன்று திரட்டி, தனிப்பெரும் சக்தியாக உருவாகி உதவாவிட்டால், தேசிய இயக்கம்
சரியான திசையில் சென்று வெற்றி பெற முடியாது” எனக் கூறிய வரலாறு இந்நூலில் கோடிடப்
பட்டுள்ளது.
ரஷ்யாவில்
1917 அக்டோபர் புரட்சி வெற்றி சில தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் பதிவு செய்யப் பட்ட முதல் தொழிற்சங்கமான, மதராஸ்
லேபர் யூனியன் ஏப்ரல் 27 1918ல் துவங்கியது. இச்சங்கத்தைப் பதிவு செய்வதில் முன்னின்று
பணியாற்றியவர், திரு.வி. கல்யாணசுந்தரம். இவர் ரஷ்யப் புரட்சியின் வெற்றியைக் கொண்டாடியவர்களில்
ஒருவர். அன்று தொழிலாளர்களுக்கு சட்டரீதியில் உதவவும், தங்கள் கோரிக்கை வெற்றி பெற,
பொதுமக்களின் ஆதரவும் தேவை. அதற்கு தேசிய இயக்கத் தலைவர்கள் உதவ முடியும், என்பதை உணர்ந்திருந்த
காரணத்தாலும், பொதுவாக நாடுமுழுவதும் தொழிலாளர்கள், தேசிய இயக்கத் தலைவர்களையே தங்கள்
தலைவர்களாகக் கொண்டிருந்தனர். ஜஸ்டிஸ் கட்சி உருவாகி தங்கள் செல்வாக்கை வளர்த்துக்
கொள்ள, தொழிலாளர்களின் ஆதரவுத் தேவை என புரிந்து முயற்சித்த போது, பெரிய வரவேற்பு இல்லை.
சென்னைத் தொழிலாளர்கள், படிப்படியாக தேசியத் தலைவர்களை ஏற்றுக் கொண்டதாலும், போராட்டங்களில்
பங்கேற்று அதன் அரசியலில் ஆர்வம் கொண்டதாலும், ஜஸ்டிஸ் கட்சி எடுத்த முயற்சிக்கு ஒத்துழைப்பு
கொடுக்கவில்லை.
ஆனாலும்,
சென்னையின் ஒரு பகுதித் தொழிலாளர்களிடம் நீதிக்கட்சிக்கான ஆதரவு இருந்தது. மாவட்டங்களில்
அமைக்கப் பட்ட முதல் தொழிற்சங்கம் மதுரைத் தொழிற்சங்கமாகும், இதில் நீதிக்கட்சி தலைவர்
வெற்றி கண்டார். ஆனாலும் சென்னையில் பஞ்சாலைத் தொழிலாளர்களின் கோரிக்கைக்காக, மதராஸ்
லேபர் யூனியன் போராடிய போது, நிர்வாகம் கதவடைப்பு செய்தது. நெடிய போராட்டத்தைத் தொடர்ந்து,
சில கோரிக்கைகள் வெற்றி பெற்றன. இக்காலத்தில், மதராஸ் மெயில், மதராஸ் டைம்ஸ் போன்ற
ஐரோப்பிய பத்திரிக்கைகளும், நீதிக்கட்சியின் ஏடான திராவிடனும், தொழிலாளர் போராட்டங்களைக்
குறை கூறியவைகளாகும். திராவிடன் ஏடு தொழிலாளர் போராட்டத்தில் அரசியல்வாதிகள் தலையிட
கூடாது என்றும், தொழிலாளர்கள் தாங்களே நிர்வகிக்கும் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும்
எழுதியது.
இதே காலத்தில்
டிராம்வேத் தொழிலாளர் போராட்டமும் சென்னையில் எழுந்தது. காந்தி, ஒரு முறை போராட்டத்தை
வாழ்த்திச் சென்றார். ராஜாஜி உள்ளிட்ட ஏராளமான தேசிய இயக்கத் தலைவர்கள், மற்றும் பல
தனி நபர்கள் இப்போராட்டங்களின் போது உடன் இருந்தனர். பல பத்திரிக்கைகள் எதிர்ப்பையும்,
சில நடந்த விவரங்களையும் பதிவு செய்திருந்தன. கிளமண்ட் சிம்ப்ஸன் தலைமையிலான நிர்வாகத்துடன்
நடந்த பேச்சு வார்த்தையில், வெளியாள் இல்லாத சங்கத்தை ஏற்கத் தயார், என சிம்ப்ஸன் கூறினார்.
இதன் காரணமாக சங்க அங்கீகாரம் முதல் பிரச்சனையாக உருமாறியது. அதேபோல் ஏப் 14 1919ல்
தமிழ் புத்தாண்டு தினம் எனவே அன்றைய தினம் விடுமுறை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி
அச்சகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். இதற்கான பொதுப் பேரவைக் கூட்டத்தை
நடத்தியதுடன் சங்கத் தலைமையையும் தேர்ந்தெடுத்தனர். மகாத்மா. காந்தி இந்த சென்னை அச்சகத்
தொழிலாளர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
இக்காலகட்டத்தில்
தான் (1920) அமிர்தசரஸ் காங்கிரஸ் மகாசபை, ”தொழிலாள மக்களின் சமூக, பொருளாதார, அரசியல்
நிலைகளை மேம்படுத்துவதற்காகவும், அவர்களுக்கு ஒரு நியாயமான வாழ்க்கைத் தரத்தை உருவாக்குவது.
இந்திய அரசியல் அமைப்பில் அவர்களுக்கு உரிய இடத்தை வழங்குவது, ஆகிய தேவைகளுக்காக நாடெங்கும்
தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு அளித்து ஊக்குவிக்குமாறு, காங்கிரஸ் தன் மாநிலக் குழுக்களையும்,
காங்கிரஸ் உடன் இணைந்துள்ள இதர அமைப்புகளையும் வற்புறுத்துகிறது”, என்று தீர்மானம்
இம்மாநாட்டில் நிறைவேற்றப் பட்டது. இத்தீர்மானத்தை அன்றைய காங்கிரஸ் தலைவர் அண்ணிபெசண்ட்
அம்மையார் கடுமையாக எதிர்த்தார். அவர், “ முதலாளிக்குப் பதிலாக அரசியல்வாதியே தொழிலாளரைச்
சுரண்டப் புதிதாக வந்துள்ளான். முதலாளியை விட இவன் மிக ஆபத்தானவன். முதலாளியாவது, உயிர்
வாழ அவசியமான, பிச்சைக் காசைத் தருகிறான், அரசியல்வாதி எதுவும் தருவதில்லை” என்று நியு
இந்தியா பத்திரிக்கையில் தலையங்கம் எழுதினார்.
ஒருபுறம்
தொழிலாளர் போராட்டம் தேசிய அரசியலில் செலுத்திய பங்களிப்பும், மற்றொருபுறம் தேசிய அரசியலில்
சீர்திருத்தவாத தலைமையாக செயல்பட்டவர்களால், தொழிலாளர் போராட்டங்களை ஏற்க முடியாமல்
இருந்ததையும் பார்க்க முடிகிறது. இந்தப் பின்னணியில் தான் டிராம்வே தொழிற் சங்கத்தலைவர்களிடம்,
வெளி ஆட்களிடம் பேச்சு வார்த்தை நடத்த முடியாது, என சிம்ப்ஸன் மறுத்த தகவலைப் பார்க்க
முடியும். எப்படி இருந்தாலும் சென்னை மற்றும் இதர மாநகரங்களில் நடைபெற்ற தொழிலாளர்
போராட்டங்கள், காங்கிரஸ் கட்சியின் ஆண்டு மகாசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற
வேண்டும் என்ற நிர்பந்தத்தை அளித்துள்ளது. அதுமட்டுமல்ல, அன்றைய இந்து நாளிதழ் ஆசிரியர்,
கஸ்தூரி ரங்க ஐயங்கார், போலீஸ் கான்ஸ்டபிள்களின் சங்கத்திற்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்
பட்டுள்ளார். இது இரண்டு விதப் புரிதல்களை ஏற்படுத்துகிறது. ஒன்று, நூறு ஆண்டுகளுக்கு
முன்பாகவே காவல்துறையினர் சங்கம் வைக்க முடிந்துள்ளது. இன்று முடியவில்லை என்பது. இரண்டாவது,
அவர்களுக்கு ஒரு பத்திரிக்கையாளரும், முதலாளியுமான ஒருவர் தலைவராகச் செயல்பட முடியும்
என்பது.
மிகமுக்கியமான
செய்தியாக இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டியது, 1920 மார்ச் 21 அன்று நடைபெற்ற
சென்னை மாகாணத் தொழிற்சங்க மாநாடு ஆகும். இதில் திரு.வி.கல்யாணசுந்தரம், ராஜாஜி, எம்.சி.ராஜா,
பாலாம்பாள், சர்க்கரைச் செட்டியார், குருசாமிநாயுடு, ராமாராவ், சுப்பிரமணிய ஐயர் என
அனைத்து வித தலைவர்களும் பங்கேற்று பேசியுள்ளனர். அன்றைக்கே பெண் தொழிலாளர் குறித்த
பணி நிலை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். தொழிற் சங்கத் தலைவர்கள்
தங்கள் இடையே அரசியல் அல்லது வேறு காரணங்களால் வேறுபாடுகள் கொண்டிருந்தாலும், தொழிலாளர்
பிரச்சனையில் ஒன்றுபட்டு நின்றனர். இந்நிலையில் தான் அன்றைய ஆளுநர் வெலிங்டன், இந்த
பிரச்சனைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்க ஒரு அமைப்பு இருந்தால், அது தொழிலாளர்களிடம்
கொந்தளித்துக் கொண்டிருக்கும் அதிருப்தியைத் தணிக்க உதவும் என எண்ணினார்.
அதன் காரணமாக
உருவானதே, தொழிலாளர் விவகாரத் துறை ஆணையம். அதன் ஆணையர் தலைவராகவும், உறுப்பினர்களாக
ஜே.எஃப். சிம்ப்ஸன் உள்ளிட்ட சில நிர்வாகத் தரப்பினரும், ராஜாஜி உள்ளிட்ட சில தொழிற்சங்கத்
தலைவர்களுமாக இணைந்து 9 பேர் கொண்ட குழு உருவாக்கப் பட்டுள்ளது. இன்று வரை இந்த தொழிலாளர்
விவகாரத் துறை, தொழிலாளர்களின் கொந்தளிப்பைத் தனிக்க தான் பயன்பட்டு வருகிறது. இது
வரை ஒன்றூ பட்டு இருந்த தலைமை, 1924 மற்றும் அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் அரசியல்
மற்றும் தனிப்பட்ட காரணங்களை முன்னுறுத்துகிற போது, அது தொழிற் சங்க தலைமையிலும் பிரதிபலித்தது.
பிரிட்டிஷ் அரசாங்கமும் தொழிற் சங்கத் தலைவர்களாக இருந்த கம்யூனிஸ்டுகளை வேட்டையாடத்
துவங்கியது, என்பது போன்ற விவரங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள சென்னைப் பெரு நகரத்
தொழிற் சங்க வரலாறு பேருதவி செய்கிறது.
பொருந்திப் போகும் அனுபவம் அன்றும் – இன்றும்:
தொடர்
போராட்டங்கள் காரணமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே, இந்தியத் தொழிற்சங்க சட்டம்
உருவாக்கப் பட்டுள்ளது. ஆனால் அதை அங்கீகரித்து பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்பது,
உறுதி செய்யப் படவில்லை. இதையே இன்று வரை அனைத்து அரசுகளும், தொழிற் சங்க அங்கீகாரச்
சட்டம் இயற்ற விரும்பாததைப் பார்க்க முடியும். அன்று சிம்ப்சண் வெளியாட்களுடன் பேசமுடியாது,
எனக் குறிப்பிட்டதைப் போலவே, இன்று இந்தியாவில் தொழில் துவங்கியுள்ள எண்ணற்ற பன்னாட்டு
நிறுவனங்கள் குறிப்பிட்டு வருகின்றன. அன்று 1926ல் பக்கிங்காம் கர்நாட்டிக் மில்லில்
வேலை நிறுத்தப் போராட்டம் பெருமளவில் நடைபெற்ற போது, நிர்வாகத்தின் ஆதரவு பெற்ற தொழிற்
சங்கம் உருவாக்கப் பட்டு, அவற்றுடன் பேச்சு வார்த்தை நடத்துகிற அநாகரீகம் இருந்ததை
நூல் வெளிப்படுத்துகிறது. எக்ஸ்பிரஸ் அச்சகத்தில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தின் போது,
ராம்நாத் கோயெங்கா, போட்டி சங்கத்தை உருவாக்கி, போராட்டத்தைச் சிதைக்க முயற்சித்து
உள்ளார்.
அது இன்றளவும்
இந்தியாவில் நீடித்து வருகிறது. ஹூண்டாய் நிறுவனத்தில் UUHE என்ற தொழிற் சங்கத்தைப்
போராடிக்கொண்டுள்ள HMIEU விற்கு எதிராக உருவாக்கி அதை அங்கீகரித்துள்ளனர். பல ஆலைகளில்
வெல்ஃபேர் கமிட்டி என்ற பெயரிலும், வேறு பெயரிலும் தொழிற் சங்கத்திற்கு போட்டியான குழுக்கள்
உருவாக்கப் பட்டு, தொழிலாளர் ஒற்றுமை சிதைக்கப் படுகிறது. நோக்கியா சீமென்ஸ் போன்ற
நிறுவனம் ஒன்னரை ஆண்டுகள் தொழிற் சங்கத்துடன் பேசி ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்கியபின்,
சங்கத் தலைவர்கள் என கையொப்பம் இடக் கூடாது. தேவை எனில் தொழிலாளர்களாக கையொப்பம் இடுங்கள்
என வலியுறுத்தி, தொழிற் சங்கத்தை அடக்க முயற்சித்தனர்.
அன்று
3000 க்கும் அதிகமான, சென்னைக் கார்ப்பரேசன் தொழிலாளர்கள் ஒரு ரூபாய் சம்பள உயர்விற்காக
வேலை நிறுத்தப் போராட்டம், நடத்திய போது, தொழிலாளர்களிடையே இருந்த மாலா, மாடிகா, எரிக்கலா,
ஒட்டா போன்ற சாதிய வேறுபாடுகளைப் பயன் படுத்தி, போராட்டத்தை உடைக்க முயன்றுள்ளனர்.
இத்தனைக்கும் மேற்படி சாதிகளில், தொழில் ரீதியிலோ, சமூக ஒடுக்குமுறை ரீதியிலோ எந்த
வித்தியாசமும் இல்லை. ஆனாலும் பிளவு படுத்தப் பட்டனர். இதில் அன்றைய தொழிலாளர் துறை
ஆணையத்திற்கும் பங்குண்டு. இன்று வரையிலும் தமிழகத்தில் சாதிய அடையாளங்களை முனவைத்து
அல்லது அரசியல் கட்சி வேறுபாடுகளை மையப் படுத்தி, தொழிலாளர் போராட்டங்களை முடிவுக்கு
கொண்டு வருகிற ஏற்பாடுகள் உள்ளது. இதை ஆளும் கட்சிகளின் துணை கொண்டு, கார்ப்பரேட் நிறுவனங்கள்
செய்து வருகின்றன.
வரலாறு
100 ஆண்டுகளைக் கடந்து பயணித்து வந்தாலும், சுரண்டலும், ஒடுக்கு முறையும், புதிய வடிவங்களில்
தொடருகின்றன. புதிய நிறுவனங்களும், சமூகத்தில் உள்ள அடையாளங்களை கூடுதலாக முன்னுறுத்தி,
தொழிலாளி வர்க்க குணத்தைப் பின்னுக்குத் தள்ள முயற்சிக்கும் இன்றைய சூழலில், இடதுசாரி
ஊழியர்களும், ஒவ்வொரு தொழிற் சங்க ஊழியரும், தொழிலாளியும் வாசிக்க வேண்டிய, மிகமுக்கியமான
புத்தகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக