சனி, 16 ஆகஸ்ட், 2014

புரிந்துணர்வு ஒப்பந்தமும் – புரியாத கொள்ளையும்


கனெக்டிங் பீப்பிள் (Connecting people) என்ற நோக்கியா வாசகம் டிஸ்கனெக்டிங் பீப்பிள் (Disconnecting people) என மாறி 5 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் இளைஞர்களை வீட்டிற்கு அனுப்பி உள்ளது. இதற்கு நோக்கியா நிறுவனம் சூட்டிய பெயர், விருப்ப ஓய்வுத் திட்டம். அதிகமாக தமிழ் குரல் எழுப்பிய இயக்கங்களோ, தேசியக் குரல் எழுப்பிய ஆளும் வர்க்க கட்சிகளோ இந்த வேலைப் பறிப்பு குறித்து வாய் திறக்க வில்லை. காரணம் உலகமயமாக்கல் கொள்கைக்குப் பின், ஒப்பந்தம் செய்வது கொள்ளைக்குப் பின் திரும்பிச் செல்வது என்பதாகப், பன்னாட்டு நிறுவனங்கள் அதிகாரம் பெற்று இருக்கிறது.
இதில் இடதுசாரிகளைத் தவிர, ஏதோ ஒரு வகையில் மற்ற கட்சிகள் உலகமயமாக்கல் கொள்கைகளுடன் சமரசம் செய்து கொண்டுள்ளன. அரசுகளால் தடுக்க முடியவில்லை என்பது, அரைக் காலணியத்திற்கு அடிமையாகி விட்டதையே வெளிப்படுத்துகிறது. பொருள்களின் சந்தை, மூலதனச் சந்தையாக வளர்ச்சி பெற்று உள்ளது. மூலதனச் சந்தைக்கு கட்டுப் பட்டு அரசுகளின் ஆட்சியதிகாரம் மாறியுள்ள நிலையை நோக்கியா வெளிப்படுத்துகிறது.

நோக்கியா – இதர நிறுவனங்கள்:

2005 ஆம் ஆண்டு அதிமுக அரசுடன் நோக்கியா செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான சிறப்புப் பொருளாதார மண்டலம் தான், நோக்கியா சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகும். 1200 நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும் பல ஆயிரம் இளைஞர்களுக்கு மறை முக வேலைவாய்ப்பும் வழங்குவதாக புரிந்து உணர்வு ஒப்பந்தம் தெரிவிக்கிறது. மறைமுக வேலை வாய்ப்பு பட்டியலில் காண்ட்ராக்ட் தொழிலாளர் துவங்கி, நிறுவனம் அருகில் டீக்கடை நடத்தும் தொழிலாளர் வரை அடக்கம்.

நேரடி வேலைவாய்ப்பில் உள்ளவர்கள் மட்டுமே ஓரளவு பணிப் பாதுகாப்பு கொண்டவர்கள் ஆவர். ஆகவே தான் நோக்கியா நிறுவனம் விருப்ப ஓய்வுத் திட்டத்தில் வெளியேறும் தொழிலாளருக்கு, இழப்பீடாக சில லட்சம் ரூபாய் வழங்கும் நிர்பந்தம் உருவானது. நோக்கியாவிற்குள் பணி புரிந்த காண்ட்ராக்ட் அடிப்படையிலான பல ஆயிரம் தொழிலாளர், எந்த இழப்பீடும் இல்லாமல், சத்தமே இல்லாமல் வெளியேற்றப்பட்டனர், என்பது கொடூரமான உண்மை. ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப் படும் காண்ட்ராக்ட் தொழிலாளர் கதியும், வெளி உலகம் அறியாத ஒன்று..

நோக்கியா தனது உற்பத்தியை இந்தியாவில் துவக்கும் போது, கூடவே சில உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் உருவாகும் என அறிவிக்கப் பட்டது. அந்த நிறுவனங்களும் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. அப்படி ஃபாக்ஸ்கான், பி.ஒய்.டி, சால்காம்ப், லைட் ஆன் மொபைல், ஆர்.ஆர். டொனால்டி போன்ற நிறுவனங்கள் உருவானது. இவைகளில் சுமார் 5000 தொழிலாளர்கள் நிரந்தரத் தன்மையிலும், 10000 ஆயிரத்திற்கும் மேல் காண்ட்ராக்ட் அடிப்படையிலும் வேலைக்கு அமர்த்தப் பட்டனர். நோக்கியாவின் சந்தை விரிவாக்கம் பெற்றதைத் தொடர்ந்து, நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நோக்கியாவிற்குள் மட்டும் 5000 ஐத் தாண்டியது. பயிற்சி மற்றும் காண்ட்ராக்ட் அனைத்தும் சேர்ந்து சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் நோக்கியாவிற்குள் மட்டும் வேலை செய்தனர். எல்லாம் சேர்ந்து 22ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் மேற்குறிப்பிட்ட ஆலைகளில் பணிபுரிந்தனர்.

2005 ஏப்ரல் 29 அன்று, தமிழ் நாடு அரசு தொழில்துறை அரசாணை எண் 59ஐ வெளியிட்டது. அதில், ”நோக்கியா நிறுவனத்தின் கைபேசி, உலக அளவில் 32 சதம் சந்தையையும், இந்தியாவில் 50 சதம் சந்தையையும் கொண்டிருக்கிறது. இந்தியாவில் 675 கோடி ரூபாயில் துவங்கப்படும் உற்பத்தி துவக்க கட்டத்தில் 1200 நபர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும். இதற்காக சிப்காட் மூலம் 200 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்து ஏக்கர் ஒன்றுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு 99 வருட குத்தகைக்கு கொடுக்கப் படும், என்பது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கிறது,” என்பது குறிப்பிடப்பட்டு உள்ளது. பின்னர் ஒரு ஏக்கருக்கு 4.5 லட்சம் ரூபாய் என்றும், பத்திரப்பதிவு கட்டணம் 4% என்பதை 0% எனவும் மாற்றம் செய்து விற்றனர், என்பதை புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அறியலாம்.

சலுகைகளும் – வரி ஏமாற்றமும்:

புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது சலுகைகளை ஒரு நிறுவனத்திற்கு உத்திரவாதம் செய்கிற ஏற்பாடு, என்பதை அறியமுடியும். மின்சாரம், தண்ணீர், சாலை, ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் அவசியம். இதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இதை எல்லாம் செய்வதற்கு வசதி படைத்தவர்களும், அதிகமாக சம்பாதிப்பவர்களும், நடுத்தர மக்கள் மற்றும் தொழிலாளர் ஆகியோர், அரசுக்கு வரி செலுத்துவது மிக மிக அவசியம். அரசுகளோ கண்களை விற்று சித்திரம் வாங்குவது போல், நிறுவனங்களிடம் இருந்து பெறுகிற வரிகளைத் தள்ளுபடி செய்து, நிறுவனங்களுக்கான உள்கட்டமைப்பை உறுதி செய்து கொடுத்துள்ளது.

குறிப்பாக மாநில அரசு தனது வரி வருவாய் பங்கினை, உயர்த்த மத்திய அரசுடன் போராடுகிற இதே காலத்தில் தான், வணிக வரி, விற்பனை வரி, ஆகியவற்றை 10 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டியதில்லை என எழுதிக் கொடுத்துள்ளது. வேலை ஒப்பந்த வரி, குத்தகை வரி, நுழைவு வரி ஆகியவற்றில் இருந்தும் விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. ஆனாலும் குஜராத்திற்கும், தமிழகத்திற்கும் இடையில் பன்னாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதற்கான போட்டி நிலவுவதாகப் பத்திரிக்கைச் செய்திகள் கூறுகின்றன. வருவாயை இழப்பதற்கு இப்படி ஒரு போட்டி தேவையா?

1696ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியினர் வங்காளத்தின் ஹூக்ளி நதிக்கரையில் முதல் தொழிற் சாலையை உருவாக்கி உள்ளனர். அதோடு கூடவே சேர்ந்து பொருள்களுக்கான சேமிப்புக் கிடங்குகளும் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து படிப்படியாக வளர்ந்த கிழக்கிந்தியக் கம்பெனி, அவுரங்க சீப் அரசிடம் இருந்து, வரிசெலுத்தாமல் விற்பனைகளை விரிவாக்கம் செய்து கொள்வதற்கான உத்தரவையும் பெற்றுள்ளது. அப்போதே இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்ற ஏற்பாடுகள் விதைக்கப் பட்டுள்ளன. (ஆதாரம்: 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகம், மத்திய அரசு பாடத் திட்டம்) உலகமயமாக்கலுக்கான அடித்தளமாக இதை எடுத்துக் கொள்ள முடியும். முதலில் இடம் பின் சலுகை, அதன்பின் ஆதிக்கம் என்ற வரலாறை நமது தலைமுறை மறக்கக் கூடாது.

தொழிலாளர் குறித்து 10 அம்சங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம் பெற்று உள்ளன. அதில் 6வதாகக் குறிப்பிட்டுள்ள ”பொதுப் பயன்பாட்டுக்கான நிறுவனம் எனத் தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தைக் கட்டுபடுத்த அறிவிப்பது”, (The state shall declare the SEZ site to be a “Public Utility” to curb labour indiscipline) என்பதாகும். இந்த பூதத்தைக் காட்டி, நோக்கியா நிறுவனம் தொழிலாளர்களை மிரட்ட முடிந்துள்ளது. கைபேசி உற்பத்தி எந்த வகையில் பொதுப்பயன் பாட்டுக்கானது என்பதை, அரசு கொடுத்த வாக்குறுதி அடிப்படையில் தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தைக் கட்டுப்படுத்துவதாகும். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற வணிக தந்திரம் போல், ”அரசுகள் கம்பெனி துவங்கினால் தொழிலாளர்களின் உரிமைகள் இலவசம்” என்று கூவி விற்றுள்ளது தமிழக அரசு.

இவ்வளவு தாராளங்களுக்குப் பின் தான் நோக்கியா நிறுவனம், சாப்ட்வேர் இறக்குமதி செய்த வகையில் 21 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசிற்கும், மதிப்புக் கூட்டு வரி என்ற பெயரில் மாநில அரசிற்கு 2400 கோடி ரூபாயும், நோக்கியா நிறுவனம் தரவேண்டியுள்ளது. இதைக் கேட்ட நிலையில் தான், நீதி மன்றங்கள் குறைந்த பட்ச தொகையைச் செலுத்தினால் போதும், என வழிகாட்டிய பின்னர் தான், விருப்ப ஓய்வு என்ற நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது.

25 வயதில் ஓய்வு என்றால்?:

23 வயது துவங்கி 28 வயதிலான தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு என்ற சூது மூலம் கட்டாய ஓய்விற்கு தள்ளப் பட்டுள்ளனர். ஒரு வேளை வேறு நிறுவனத்தில் பணிக்கு சேர வாய்ப்பிருந்தாலும், அந்த நிறுவனமும் 8 ஆண்டுகள் கடந்து விருப்ப ஓய்வு அளித்தால், 35 வயதிற்கு மேல் எந்த நிறுவனமும் வேலைக்கு விரும்புவதில்லை, என்பதை உணராவிட்டால், எதிர் காலம் புதை குழியாகத் தான் இருக்க முடியும். இந்தியாவில் 25 வயதிற்கு உள்பட்ட இளைஞர்கள் 50 சதம், 30 வயதிற்கு உளபட்டோர் 60 சதம், 35 வயதிற்கு உள்பட்டோர் 70 சதம், நோக்கியாவின் கொள்கை, நாடுமுழுவதும் பின்பற்றப் பட்டால், இளைஞர்களின் எதிர்காலத்திற்கே விருப்ப ஓய்வு தான் பரிசாகும்.


மாநில அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிட்ட படி, இன்றைக்கும் இந்தியச் சந்தையில் நோக்கியா கைபேசி கோலோச்சுகிறது. ஆனால் வேலைவாய்ப்பில் மட்டும் வெட்டு விழும் என்பது, கொள்ளை லாபத்தின் கொள்கை என்பது வெள்ளிடைமலை. அரசுகள் தொழில் கொள்கை குறித்து தம்பட்டம் அடித்து, தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பதை நிறுத்தி, நேர்மையான விவாதத்திற்கு முன்வர வேண்டும். முதலில் அரசியல் அதிகாரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். நவகாலணி ஆதிக்கத்திற்கு முடிவுரை எழுதாமல், தாராளமயத்தைக் கட்டுப்படுத்தாமல், தீர்வு கிடைக்காது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக