வானம் முட்டும் கட்டிடம், பளிங்குத்
தரை, வண்ணப் பூச்சுகள்,
குளு குளு அறை, ஏராளமான மனிதர்களின்
நடமாட்டம்
விஷப் பூச்சிகள் அண்டாத இடம்,
என்று தான் எண்ணியிருந்தோம்.
அறிவிப்பு ஒன்று பளார் என அறைந்து
சொன்னது.
ஆட்கொள்ளி விஷம் பூச்சி உருவத்தில்
வருவது இல்லை
புதிதாய் அவதாரம் எடுத்திருக்கிறது
விருப்ப ஓய்வு என்ற பெயரில்.
ஆசிரியருக்கு படித்தவர் சொன்னார்
நோக்கியாவில் வேலை!!
அடுத்தவர் சொன்னார் ஃபாக்ஸ்கானின்
நிரந்தர வேலைக்காக
7000 ஆயிரம் ரூபாய் காண்ட்ராக்ட்
வேலையை இழந்த கதையை.
பெண்ணொருத்தி சொன்னாள், கருத்தரித்தால்
வேலை போய்விடும் என்றதால்,
கருவையே கலைத்து விட்டதாக.
சிசுக்களை அழிக்க இனி கள்ளிப்பால்
தேவையில்லை.
கம்பெனி வேலை போதும்.
அரசு சொன்னது நாங்கள் புரிந்துணர்வு
ஒப்பந்தம் செய்ததே
வேலைக்காகத் தான் என்று.
வரிச் சலுகைகளுக்கான சீசன் முடியும்
நிலையில்
பறக்கத் துவங்கி விட்டன பன்னாட்டுப்
பறவைகள்.
நண்பர் கேட்டார் வேடந்தாங்கலும்
இங்கு தானே இருக்கிறது என்று.
இயந்திரத்திற்குள் இருந்து அம்பிகாவின்
அசரீரி சொன்னது
செத்துப் போன எனக்கு 10 லட்சம்,
கருக்கொலை செய்து எஜமான சேவகம்
செய்த
உனக்கு 5 லட்சம் என்று.
எப்போதும் போல் அரசுக்கு எதுவுமே
கேட்கவில்லை.
விருப்ப ஓய்வில் கிடைத்த பணம்
நாள்களை எண்ணத் துவங்கின.
வாட்டும் பசியும், வேலை போச்சா?
கேள்வியும் துரத்துவதால்
விருப்பமே இல்லாமல் தேடுகிறார்கள்
மீண்டும் ஒரு வேலையை.
நிரந்தர ஓய்வுக்கு முன் எத்தனை
முறை தேடுவது?
நிரந்தர வேலையை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக