ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக்
கொண்டாட்டம் என்பது போல், நமது ஆட்சியாளர்கள், மதம், சாதி என்ற பெயரில் உழைப்பவர்களை
துண்டு துண்டாகப் பிரிக்கும் வேலையைச் செய்து வருகின்றனர். குறிப்பிட்ட சாதியைச் சார்ந்த,
மதத்தைச் சார்ந்த தொழிலாளர் அல்லது எவராவது ஒரு பிரஜை ஒடுக்கப் படுவதற்கோ, அதன் பெயரில்
தாக்கப் படுவதற்கோ ஆளானால், அதை எதிர்த்த போராட்டத்தில், முற்போக்குத் தொழிற்சங்கங்கள்
தீவிர அக்கரை செலுத்தி வருகின்றன. தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை மூலமே தொழிலாளர்கள்
மீது அரசும், முதலாளித்துவமும் தொடுக்கும் தாக்குதல்களை எதிர் கொள்ள முடியும். ஃபிப்
28, 2012 தேசம் தழுவிய வேலை நிறுத்தம் அத்தகைய ஒற்றுமையைப் பறை சாற்றக் கூடியதே.
இந்தப் பின்னணியில் தான் கோத்ரா
ரயில் எரிப்புச் சம்பவமும், அதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்கள்
மீது நிகழ்த்தப் பட்ட கொலை பாதகங்களும், நினைத்துப் பார்க்கப் படுகிறது. ஃபிப் 27,
2012 கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் முடிந்து விட்டதை, நினைக்கத்
தூண்டும் நாள். அன்று மதியமே முதல்வர் நரேந்திர மோடியின் வீட்டில் அவசரமாக அதிகாரிகள்
கூட்டம் நடந்துள்ளது. அதில் நடக்கப் போகும் வன்முறைகள் குறித்து அவர்கள் கண்டு கொள்ளக்
கூடாது என்ற அறிவுறுத்தப் பட்டனர். இதுவரை எந்த ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மட்டுமல்ல,
சாதாரண சட்டமன்ற உறுப்பினர் கூட செய்யத் துணியாத நிகழ்வுக்கு வழி வகுத்தவர் நரேந்திரமோடி.
கொலைகளும், பாலியல் பலாத்காரங்களும்
நடந்து 10 ஆண்டுகள், முடிந்து விட்டாலும், இன்னும் குஜராத் மாநில இஸ்லாமியர்கள் தாங்கள்
குடியிருந்த வீடுகளுக்குத் திரும்ப வில்லை. அகதிகளாகவே தனித்து வாழ்ந்து வருகின்றனர்.
காணாமல் போன குழந்தைகள் 400 எனச் சொல்லப் படுகிறது. படுகொலைக்கு ஆளான குழந்தைகள்
600 எனச் சொல்லப் படுகிறது. குழந்தைகளுக்கும், ரயில் எரிப்பிற்கும் என்ன சம்மந்தம்?
ரயில் எரிப்பிற்கும் பெண்களுக்கும் என்ன சம்மந்தம்? எதுவும் தெரியாது. வெறித்தனத்திற்கு
ஆட்பட்ட இந்துத்துவா கும்பல் குஜராத்தில் அரங்கேற்றிய வன்முறை விடுதலை இந்தியா பார்த்திராத
ஒன்று. மனித உரிமைக் குழுக்கள், நீதிமன்றங்கள் ஆகியவை தலையீடு செய்திருந்த போதும்,
இன்றைக்கும் முழு நிவாரணம் கிடைக்காத தீராத வலியுடன் தான், குஜராத் மாநில இஸ்லாமியர்கள்
வாழ்ந்து கொண்டிருக்கின்றர்.
இஷான் ஜாப்ரி என்ற காங்கிரஸ் கட்சியின்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அவர் வீட்டு வாசலில் எரித்துப் படுகொலை செய்யப் பட்டார்.
அவர் மனைவி, ஜாக்கியா ஜாப்ரி வழக்கு பதிவு செய்ய முயன்றாலும் காவல் துறை காக்கி உடைக்குள்,
இந்துத்துவா காக்கியின் அடையாளத்தியும் சேர்ந்தே கொண்டிருப்பதால், வழக்கு மிகுந்த தாமதமாகப்
பதிவு செய்யப் பட்டது. இது குறித்து விசாரணையைத் துவக்கிய அதிகாரிகளிடம், முந்தைய மதக்கலவரங்களின்
போது, இஷான் ஜாப்ரி துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் குறித்து, நரேந்திர மோடி,
புலனாய்வு நடத்திக் கொண்டிருந்தார் என்பதை அறிய முடிகிறது. அதாவது, மார்ச் 2, 2002
அன்று கொல்லப் பட்ட இஷான் ஜாப்ரி படுகொலை குறித்த வழக்கு கீழ் மட்ட காவல் நிலையங்கள்
புறக்கணித்த நிலையில், 2006, ஜூன் 8 அன்று காவல் துறை இயக்குனரிடம் புகார் கொடுத்துள்ளார்
அவர் மனைவி ஜாக்கியா ஜாப்ரி. அதன் பிறகும் நடவடிக்கை இல்லை என்ற சூழலில், ஃபிப்
2007 அன்று குஜராத் மாநில நீதிமன்றத்தின் மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்
என வழக்குத் தொடுத்துள்ளார். இதையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தபின், உச்ச நீதிமன்றத்தை
அணுகியுள்ளார். சுமார் இரண்டு ஆண்டு கால தொடர் முயற்சிக்குப் பின்னர் தான், உச்சநீதிமன்ற
தலையீட்டினால் இஷான் ஜாப்ரி வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் ஒப்படைக்கப் படவேண்டும்
என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஃபிப்ரவரி 13 வரையிலும் பல கட்ட வழக்கு விசாரனை நடந்திருந்தாலும்,
இன்னும் தீர்ப்பு கிடைக்கவில்லை.
ஓரளவு விவரமான குடும்பம் என்பதுடன்
அரசியல் பின்புலம் உள்ல குடும்பம் என்ற காரணத்தினால், வழக்குப் பதிவு செய்வதற்கும்
முறையான விசாரணையைத் துவக்குவதற்கும், போராட்டத்தை நடத்த முடிந்துள்ளது. இரண்டாயிரத்திற்கும்
அதிகமான நபர்கள் படுகொலை செய்யப் பட்ட ஒரு மாநிலத்தில் எத்தனை பேர் இது போன்ற குடும்ப
பின்னணி கொண்டிருப்பார்கள். இறந்தவர்களினால் வீட்டிற்கு வந்த வருமானம் பறிபோய் அன்றாட
வாழ்க்கைக்கே மிகவும் தடுமாறிக் கொண்டிருக்கும் குடும்பங்கள் நீதிமன்றப் படிகளில்
10 ஆண்டு காலம் காத்துக் கிடக்க முடியுமா? ஆறாத வடுக்களுடன் பறிதவித்துக் கொண்டிருக்கும்
மக்கள் மத்தியில் தான் நரேந்திர மோடி சத்பவன உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி வருகின்றார்.
மற்றொரு புறம் குஜராத் அரசு நியமனம்
செய்த நானாவதி கமிஷன் தனது விசாரணையை முடித்து ஒப்படைக்காததால், மேலும் விசாரணையைத்
தொடர 16வது முறையாக அதன் காலவரம்பு நீட்டிக்கப் பட்டுள்ளது. அதே நேரத்தில் சஞ்சீவ்
பட் போன்ற நேர்மையான காவல் துறை அதிகாரிகள் கைது செய்யப் பட்டோ அல்லது வேறு வகையிலான
துன்பங்களுக்கோ ஆளாகியுள்ளனர். அதாவது மத சிறுபானமையினர் மட்டுமல்ல, மதசார்பற்ற பொதுமக்களும்,
அதிகாரிகளும் கூட இந்துத்துவா ஆட்சியாளர்களிடம் இருந்து தப்ப முடிவதில்லை, என்பதைத்
தெளிவாக அறிய முடிகிறது.
எனவே மத சிறுபான்மையினரின் உரிமைகளைப்
பாதுகாக்கவும், மதசார்பற்ற சக்திகளின் எதிர்ப்பு வலுப்பெறவும் பெறும் போராட்டங்களை
நடத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அதில் தொழிலாளி வர்க்கம் மகத்தான பங்களிப்பைச் செய்ய
வேண்டியிருக்கிறது. பிறப்பின் அடிப்படியிலான அடையாளாங்களைத் தூக்கி எரிந்து தொழிலாளர்
என்ற அடையாளத்தை முன்னிறுத்துவதன் மூலமே, தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக