வெள்ளி, 13 நவம்பர், 2015

                      SEZ ல் சங்க அங்கீகாரம்

புத்தாண்டில் புதிய சிந்தனை பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு உருவானது ஆச்சரியமான விஷயம் தான். ஒரகடம் SEZ பகுதியில் அமைந்துள்ளது ஜி.கே.என் டிரைவ் லைன் என்ற ஆட்டோமொபைல் நிறுவனம். இங்கு 58 நிரந்தர தொழிலாளர்களும், ட்ரெய்னிங், அப்பரண்டிஸ், புரபேஷனரி என்ற பெயரில் 200 தொழிலாளர்களும் உள்ளனர். இவர்களை நிரந்தரப் படுத்தாத போக்கு கொண்டது தான் ஜி.கே.என் நிறுவனம். ஆனால் திடிரென ஜி.கே.என் டிரைவ் லைன் ஒர்க்கர்ஸ் யூனியனை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 31 அன்று மாலை சங்கத்தின் தலைவர்களை அழைத்து, உங்கள் அங்கீகாரம் கோரும் கடிதம் மேலிடத்தால் பரிசீலிக்கப் பட்டு, அங்கீகாரம் செய்வதென முடிவு செய்துள்ளோம், என்று சொன்னது மட்டுமல்லாமல், எழுத்துப் பூர்வமான கடிதத்தையும் கொடுத்துள்ளனர். இது சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் கிடைத்த உற்சாகம் தரும் வெற்றியாகும்.

கடந்த ஒரு ஆண்டாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு தொடர்பில் இருந்து வருகின்றனர். ஃபிப்ரவரி முதல் 5க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தி, முதலில் பொதுத் தொழிலாளர் சங்கம்(சி.ஐ.டி.யு) உடன் இனைப்பது என முடிவு செய்து பேரவை கூட்டமும் நடந்தது. அதில் நிர்வாகிகளும் தேர்வு செய்யப் பட்டனர். ஆனால் நிர்வாகம், ஜூலை மாதத்தில் தனிச்சங்கம் அமைத்து பதிவு செய்தால், அங்கீகரிக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி தொழிலாளர்களை குழப்பியது. தொழிலாளர்களும் அதில் உடன்பட்ட நிலையில் சி.ஐ.டி.யு தலைமை, தனிச் சங்கம் பதிவு செய்து முயற்சி செய்ய முடிவெடுத்தது.

சங்கம் பதிவு செய்யப் பட்டு, நிர்வாகிகள் பட்டியல், பாதுகாக்கப் பட்ட தொழிலாளர்களுக்கான தீர்மானம் ஆகியவற்றுடன் நிர்வாகத்திற்கு, அங்கீகரித்து பேச்சு வார்த்தையைத் துவக்க வேண்டுகோள் கடிதம் அனுப்பினோம். தொடர்ந்து கௌரவத் தலைவர் பொறுப்பு இல்லாமல் வந்தால் உடனடியாக அங்கீகரிக்கிறோம், என்ற குழப்பத்தை முன் வைத்தது. இம்முறை தொழிலாளர்கள், முடியாது என தெளிவாக மறுத்து விட்டனர். அதே நேரத்தில் போனஸ், ஆயுத பூஜைபரிசு ஆகிய குறித்து பேச்சு வார்த்தை நடத்த கடிதம் கொடுக்கப் பட்டது. தொழிற் சங்கத்துடன் பேசாமல், போனஸ் 8400 ரூபாய் வழங்கியது. 1500 ரூபாய் பெறுமானமுள்ள பரிசு, ஆயுதபூஜை அன்று வழங்கப் பட்டது. தொழிற் சங்கத்தை அங்கீகரிக்காமலேயே தொழிற் சங்கம் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும் நிர்பந்தம் நிர்வாகத்திற்கு ஏற்பட்டது. காரணம் தொழிலாளர்களின் உற்பத்தி அளவும், உற்பத்தி திறனும் முக்கியமானதாகும்.

இரண்டாவது ஜி.கே.என் உற்பத்தியை எதிர்பார்த்து, டொயோட்டா, ஹூண்டாய், ஃபோர்டு, பி.எம் டபுள்யு உள்ளிட்ட கார் நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனத்தின் உற்பத்தி பரிதாபாத், தார்காரா ஆகிய இடங்களில் செயல் பட்டு வருகிறது. அங்கும் தொழிற்சங்கம் அமைக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாகக் கூட நிறுவனம் தொழிற் சங்கத்தினை அங்கீகரிக்க முன் வந்திருக்கலாம்.

எப்படி இருந்தாலும் திருப்பெரும் புதூர் பகுதியில் தொழிற் சங்க உரிமைக்காக சி.ஐ.டி.யு நடத்தி வரும் போராட்டம் ஒரு சிறிய நிறுவனத்தில் பலன் தந்திருக்கிறது. தொடர் முயற்சி நிச்சயம் சில வெற்றிகளை தரும் என்ற நம்பிக்கையை இந்த அங்கீகாரம் அதிகரித்துள்ளது.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக