வெள்ளி, 13 நவம்பர், 2015   சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஒரு எச்சரிக்கை மணி!!

பத்தாவது முறையாக விழுந்து விட்டாயா? கவலைப் படாதே நம்பிக்கை கொள். ஏற்கனவே ஒன்பது முறை எழுந்தவன் தானே, என்ற வரிகள் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக சொல்லப் பட்ட வெற்று வார்த்தை ஜாலங்கள் அல்ல. யதார்த்த போராட்ட வரலாற்றின் உண்மையான வார்த்தைகள். 58 நாள்கள் போராட்டம். 319 நபர்கள் முதல் கட்டமாக கைது. பின் தலைவர்கள் வெளிவந்து விடுவார்களோ என்ற அச்சத்தில், சி.ஐ.டி.யு தலைவர்கள் அ.சவுந்தரராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட, 12 நபர்கள் மீது பிணையில் வர முடியாத வழக்கு. விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் கை விலங்கு, என போராட்டங்களைக் கண்டு ஆட்சியாளர்கள் மிரண்டனர். அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தெரியும், என கிராமத்துப் பெரியவர்கள் சொல்வார்கள். இது உண்மை என்பதை கடந்த தி.மு.க ஆட்சியில் காண முடிந்தது.

ஃபாக்ஸ்கானில் இப்படி ஒரு போராட்டம் எனில், சான்மினா எஸ்.சி.ஐ என்ற அமெரிக்க நிறுவனத்தில் 3 ஆண்டுகளாக வழங்கப் படாத சம்பள உயர்விற்காக, 52 நாள்கள் போராட வேண்டியிருந்தது. பாதயாத்திரை பிரச்சாரத்திற்கு கூட அனுமதிக்கவில்லை. ஃபிப் 15 2011 துவங்கிய வேலை நிறுத்தம், மார்ச் 16 2011 அன்று தொழிலாளர் துறை இணை ஆணையர் வழங்கிய, இரு தரப்பும் ஏற்றுக் கொண்ட அறிவுரையுடன் 32 நாள்கள் வேலைநிறுத்தம், முடிவுக்கு வந்தது. அறிவிக்கப் பட்ட சம்பள உயர்வை தொழிற் சங்கம் ஏற்றுக் கொள்வது. இதர கோரிக்கைகளை படிப்படியாக தொழிலாளர் பிரதிநிதிகளுடன் பேசி தீர்வு காணுவது. போராட்ட காரணத்திற்காக எந்த ஒரு தொழிலாளி மீதும் நடவடிக்கை எடுக்க கூடாது, என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப் பட்டன.

சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் வேலைநிறுத்த காலத்தில் புதிய தொழிலாளர் நியமனம் கூடாது என்பதை முன்வைத்து வழக்கு தொடுத்ததில், சி.ஐ.டி.யு தடையாணை பெற்றது. இதன் காரணமாக பணிக்குச் என்ற புதிய தொழிலாளர்களை, தடை உத்தரவு அமலில் இருக்கும் போது, வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது என்ற வேண்டுகோளை, வேலை நிறுத்தத்தில் இருந்த தொழிலாளர்கள் நிறுவன அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் நிறுவன அதிகாரிகளோ தங்களின் காழ்ப்புணர்ச்சியைத் தீர்த்துக் கொள்ள, பயன்படுத்திக் கொண்டனர். JCL ன் அறிவுரையை ஏற்றுக் கொள்வதாக கூறியவர்கள் உடணடியாக தற்காலிகப் பணி நீக்கமும், பின்னர், பணிநீக்கத்தையும் செய்து உத்தரவிட்டனர்.

தற்காலிக பணிநீக்க காலத்திலேயே மீண்டும் ஒரு வேலை நிறுத்த அறிவுப்பு கொடுத்த காரணத்தால், சமரச பேச்சுவார்த்தை JCL முன் நடைபெற்று வந்தது. எனவே நிர்வாகம் 4 தொழிற்சங்க தலைவர்கள் மீதான பணிநீக்க உத்தரவை JCL டம் ஒப்புதல் பெற வேண்டிய சட்டத் தேவை வந்தது. தொழிற் தகராறு சட்டம் 33(2) பி, யின் படி வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது. கடந்த ஜூலையில் துவங்கிய வழக்குப் பணி ஜன 18 அன்று வழங்கிய தீர்ப்புடன் முடிவுக்கு வந்ததுள்ளது.

52 சான்றாவணங்களை சமர்பித்து மிகப் பெரிய திட்டமிடலுடனும், தயாரிப்புடனும் பணி நீக்க நடவடிக்கைக்காக களம் இறங்கிய சான்மினா நிறுவனத்திற்கு, தீர்ப்பு சம்மட்டி அடி வழங்கியுள்ளது. பல லட்சம் செலவழித்து நியமித்த வழக்கறிஞர்களை சி.ஐ.டி.யு தலைவர்கள் பழனிவேலு மற்றும் ஆறுமுக நயினார் ஆகியோரின் சட்டப் பணிகள் மூலம் முறியடிக்க முடிந்தது. ஒருவேளை 4 பேர் மீதான பணி நீக்க உத்தரவுக்கு ஒப்புதல் கிடைத்திருக்குமானால், உள் விசாரணை நடத்தி, தீர்ப்பை நிறுத்தி வைத்திருக்கும் 63 பேர்கள் மீதும் தனது பழிவாங்கும் வெறித்தனத்தை, நிர்வாகம் வெளிப்படுத்தி இருக்கும். மனித வள மேலாளராகப் பொறுப்புக்கு வந்தவர், கம்பெனியின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவராக உயரும் அளவிற்கு, முதலாளித்துவ விசுவாசத்தை வெளிப்படுத்தியவர்கள், பொறுப்பில் இருக்கும் நிறுவனத்தில், கிடைக்கிற வாய்ப்புகளில் எல்லாம் தொழிற்சங்க தலைவர்களை வேட்டை யாட முடியுமா? என்ற கணவில், இப்போது மண் விழுந்துள்ளது.

குற்றம் சுமத்தப் பட்டத் தொழிற் சங்கத் தலைவர்கள் தங்கள் தர்ப்பு நியாயத்தை விளக்குவதற்காக, கேட்கப்பட்ட ஆவணங்களை ஒப்படைக்காததும், 2வது சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்காததன் காரணமாகவும், நிர்வாகத்தின் குற்றச்சட்டை ஏற்க முடியாது. இரண்டாவதாக 1963ல் உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை ஒப்பிட்டு இந்த 33(2)பி மீதான தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. வங்காளத்தில் உள்ள பட்டீ நிலக்கரி நிறுவனத்திற்கும், ராம் புடபேஷ் என்கிற தொழிலாளிக்கும் இடையிலான வழக்கில், மூன்று பிரதான அம்சங்கள் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன. 1. தொடர்புடைய விதிகள், நிலையாணை மற்றும் இயற்கை நீதிக் கோட்பாடு ஆகியவை உரிய முறையில் உள்விசாரணையின் போது பின்பற்றப் படவேண்டும். 2. குற்றச்சாட்டிற்கான முகாந்திரம் சட்டப்படியான சாட்சிகளுடன் உள்விசாரணையில் முன்வைக்கப் பட வேண்டும். 3. வேலை அளிப்பவர் தொழிலாளி குற்றவாளி என்ற முடிவுக்கு வருவது தொழிலாளர்களிடையே பாரபட்ச அனுகுமுறையைக் கொண்டதாகவோ, பழி வாங்கும் நோக்கம் கொண்டதாகவோ இருக்கக் கூடாது. ஆனால் சான்மினா நிறுவனத்தில் இந்த மூன்று பிரதான கடமைகளும் மீறப் பட்டிருக்கிறது.

இதேபோல், லல்லா ராம் என்கிற தொழிலாளிக்கும், டி.சி.எம். கெமிக்கல் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்திற்கும் இடையிலான வழக்கு 1978ல் உச்ச நீதி மன்றத்தில் நடந்துள்ளது. டிட்டாகூர் பேப்பர் மில்ஸ் லிட், ஹிண்ட் கன்ஸ்ட்ரக்சன் & எஞ்சினியரிங் கம்பனி லிட், உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்திய வழக்குகள் அனைத்தும் மேற்படித் தீர்ப்பில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன. இந்தியாவில் தொழிற்சங்கத் தலைவர்களை குரோத உணர்வுடன் அனுகும் போக்கு மூலதனத்தின், லாபவெறியுடன் இனைந்திருக்கிறது, என்பதை மேலே குறிப்பிட்ட விவரங்களில் இருந்து அறியலாம்.

அதேபோல், வேலை வழங்குபவர் பணி நீக்க உத்தரவின் போது, ஒருமாத சம்பளம் வழங்குவதற்கு அல்லது வழங்க சம்மதிப்பதற்கு முன் வர வேண்டும். பிரதான தொழிற் தாவா வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் குறிப்பிட்ட கால அவகாசம் எடுத்துக் கொண்டு, நிறுவனம் தனது பணி நீக்கத்திற்கான ஒப்புதலைக் கோரும் மனுவை சமர்பிக்க வேண்டும், என்ற உச்சநீதி மன்ற வழிகாட்டுதல் இருக்கிறது. இந்த இரண்டும் திருப்தி அளிக்கும் தன்மையில் நிறுவனத்தினால் பின்பற்றப் பட்டுள்ளது, என்ற முடிவுக்கு நீதிபதி வந்தால் தான், ஒப்புதல் கொடுக்க முடியும், என்பதையும் தெளிவு படுத்தியுள்ளது.

ஜமால் மொய்தீன் என்ற தொழிற்சங்க தலைவர் மீதான பணி நீக்க உத்தரவுடன் நிர்வாகம், 8494 ரூபாய் சம்பளத்தை வங்கிக் கணக்கில் செலுத்தியதாக நிர்வாகம் குறிப்பிட்டு இருந்தது. இது ஜமால் பெறும் மாதாந்திர சம்பளத்தை விடவும் குறைவானது என்பதை சி.ஐ.டி.யு தனது வாதத்தில் முன்வைத்து நிரூபித்தது.   15 ஜூன் அன்று பணி நீக்கம் செய்து, 16 ஜூன் அன்று JCL அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தாலும், உள் விசாரணையில் தொழிலாளர் தரப்பு இயற்கை நீதியின் அடிப்படையில் கேட்ட ஆவணங்களை தரவில்லை. பேருந்தை இயக்க அனுமதிக்க வில்லை என்ற குற்றச்சாட்டில், சாட்சிகளான செக்யூரிட்டிகளை விசாரித்த விசாரணை அதிகாரி, மூலப் புகார் தெரிவித்த பேருந்து ஓட்டுனரை விசாரிக்கவே இல்லை என்பதையும் சி.ஐ.டி.யு தனது வாதத்தில் முன்வைத்தது, இதுவும் சாதகமாக தீர்ப்பு அமைவதற்கு உதவியது.

ஹூண்டாய் நிறுவனத்தில் பணிநீக்கம் செய்தவர்களை வேலையில் அமர்த்த வேண்டும் என்பதற்காக வேலை நிறுத்தம் செய்து 52 தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியது, ஒரு அனுபவம் என்றால், சான்மினா வழக்கு மற்றொரு அனுபவம். காழ்ப்புணர்ச்சியுடனும், பகையுணர்ச்சியுடனும் தொழிலாளர்களைப் பழி வாங்கத் துடிக்கும் திருப்பெரும்புதூர் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் அமைந்துள்ள நிர்வாகங்களின் சிந்தனைக்கு மேற்படித் தீர்ப்பு எச்சரிக்கையாக அமையட்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக